மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கட்டணமில்லா சிகிச்சை வழங்குவதை அரசு உறுதி செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 16 அன்று சென்னையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS) அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியபடி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், 2021 ஆம் அண்டு முதல் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்தும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும், இந்த நிறுவனத்திடம் மூன்றாம் நபர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள எம்.டி. இந்தியா மற்றும் மெடிஅசிஸ்ட் ஆகிய நிறுவனங்களும் அரசாணையை மதிக்காமல் செயல்படுகின்றன. சிகிச்சைக் கட்டணத்தில் 20 முதல் 40 விழுக்காடு வரை மட்டுமே வழங்கி மோசடி செய்கின்றன. எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு மருத்துவத்துக்கான காப்பீட்டு தொகையையும் காப்பீட்டு நிறுவனமே ஏற்க வேண்டும்.
அதேபோல், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின்படி அவர்களின் சம்பளத்தில் இருந்து நேரடியாக, மாதந்தோறும் வருமான வரி பிடிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையைக் கைவிட்டு, ஊழியர்கள் விருப்பப்படி வருமானவரி பிடித்தம் செய்யும் பழைய முறையை செயல்படுத்த வேண்டும்.
இந்த இரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படிக்க: தொடக்கக் கல்வி ஆசிரியர்களை போராடவிடாமல் கைது செய்யும் திமுக அரசு
இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில், “இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ஊழியர்களிடம் இருந்து 1,440 கோடி ரூபாயை பிடித்தம் செய்கின்றனர். அரசாணைப்படி சிகிச்சைக் கட்டணத்தை முழுமையாக தராமல் மிகப் பெரிய மோசடி செய்கின்றனர். எனவே, காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்” என்றார்.
உலகின் பல நாடுகளை ஒப்பிடுகையில், மருத்துவத் துறைக்கு மிகக்குறைவான நிதியையே (1.5 சதவிகிதம்) இந்திய அரசு ஒதுக்குகிறது. ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் 60 சதவிகிதத்தை மக்கள் தங்கள் சொந்தக் காசிலிருந்தே செலவழிக்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் சீரழித்ததன் விளைவாக, தனியார் மருத்துவமனைகள் ஏழை மக்களின் உயிரைப் பணயம் வைத்து கொள்ளையடித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் தற்போதோ, காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் எம்.டி.இந்தியா, மெடி அசிஸ்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் துணைகொண்டு கொள்ளையடித்து வருகின்றன.
எல்லாத் துறைகளையும் போல கார்ப்பரேட்மயமாக்கம் என்பதை மருத்துவத்துறையிலும் அரசு படிப்படியாக அமல்படுத்திக் கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாகவே அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. அந்த வகையில், அரசு ஊழியர்களின் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்க வேண்டியது நம் கடமை.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube