ஏப்ரல் 11 : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கோட்டை முற்றுகைப் போராட்டம் வெல்லட்டும்!

இன்று உலகளாவிய அளவிலும் பல நாட்டு அரசாங்கங்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வூதியங்களை கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கேற்ற திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, முடக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு உடனே வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வரன் முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் ஏப்ரல் 11 அன்று சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் 84-வது பக்கத்தில் 309–வது வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் நெருங்கும் நிலையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதேபோல் பணிநிரந்தரக் கோரிக்கைகளும் முன்னேற்றமில்லாமல் தேங்கிக் கிடக்கின்றன.

படிக்க : என்.சி.இ.ஆர்.டி (NCERT)-யின் பாடத்திட்ட நீக்க அறிவிப்பு! காவி பாசிஸ்டுகளின் பாய்ச்சல் நடவடிக்கை!

தனியார் மயத்தை தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம் கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிக்கவும், அதன் அடுத்த கட்டமாக கார்ப்பரேட் கும்பல் அரசுத் துறைகளை கைப்பற்றி கொள்வது என்ற அடிப்படையில் இருந்தே மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அதிகப்படியான நிதி செலவாகிறது, அரசிடம் நிதி பற்றாக்குறை உள்ளது என்ற காரணத்தைக் காட்டி வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசு 2004-ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது. இதைக் காரணம் காட்டியே தமிழக அரசும் பேசுகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதியத்திற்கு அரசு பொறுப்பு என்ற விதி தளர்த்தப்பட்டு, தனியார் காப்பீடு நிறுவனங்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்களின் சேமிப்பை பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் சூதாடி கொள்ளையடிக்கவே வழிவகை செய்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசின் எல்லாத் துறைகளுக்கும் அவுட்சோர்சிங் முறையில்தான் வேலைக்கு எடுக்கிறார்கள். உலகின் பல நாடுகளிலும் இந்த அவுட்சோர்சிங் வேலைமுறையே பெருமளவில் கோலோச்சுகிறது. கார்ப்பரேட் கும்பல்களின் நரவேட்டைக்காக தொழிலாளர்கள் எந்த உரிமையும் இன்றி வரைமுறையற்று சுரண்டப்படுவதற்கே இந்த அவுட்சோர்சிங் முறை.

புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி ஓய்வூதியத்திற்கு அரசு பொறுப்பு என்ற விதி தளர்த்தப்பட்டு தனியார் காப்பீடு நிறுவனங்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. ஓய்வூதியத்தில் பங்களிப்பு செலுத்துவதிலிருந்து அரசு ஒதுங்கிக் கொண்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி தொழிலாளர்களின் வருமானத்திலிருந்து ஓய்வூதியத்திற்கான தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்களின் சேமிப்பை பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் சூதாடி கொள்ளை அடிக்கவே வழிவகை செய்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் போராடி வரும் நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் அதானியின் ஊழல் அம்பலப்பட்ட பிறகும், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி(EPF)-யை அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட் ஆகியவற்றின் பங்குகளில் அதிகளவு முதலீடு செய்துள்ளது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO). நாட்டை வரைமுறையற்று சூறையாடி வரும் ஒரு கிரிமனலுக்கு 27.73 கோடி ஊழியர்களின் சேமிப்பைத்  தூக்கிக் கொடுக்கும் இந்நடவடிக்கை கிரிமனல் தன்மையானது.

இன்று உலகளாவிய அளவிலும் பல நாட்டு அரசாங்கங்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வூதியங்களை கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கேற்ற திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. இதை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் எழுச்சியாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, பிரான்சில் ஓய்வூதியத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதாக கூறி, பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தையே மறுக்கும் வகையில் புதிய திட்டத்தை அந்நாட்டு அதிபர் மக்ரோன் கொண்டு வர முயல்கிறார். இப்புதிய திட்டத்தின்படி ஓய்வூதியம் பெறுவதற்கான வயது 62-ல் இருந்து 64-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

படிக்க : பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்த கலாஷேத்ரா நிர்வாகம்!

பல்வேறு அடக்குமுறைகளை மக்ரோன் அரசு ஏவிவிட்ட போதும் லட்சக்கணக்கான பிரான்சின் தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகளை முடக்கியுள்ளனர். சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து எரிபொருள் வெளியேறாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பேரணிகளில் பங்கேற்கின்றனர்.

இந்தப் போராட்டங்களில் பங்கேற்கும் சிஜிடி சங்கத்தின் தலைவர் லாரென்ட் பெர்ஜெர், ‘ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக இருக்கும் நாட்டின் அனைத்து ஊழியர்கள், குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களை போராட்டக்களத்திற்கு வந்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று அழைக்கிறேன். மிகப்பெரிய சமூக இயக்கம் இன்று உருவாகியுள்ளது. இதற்கு அரசியல் ரீதியான பதிலை எதிர்பார்க்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

நம் நாட்டில் நடக்கும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள், கோரிக்கைகளுக்கான போராட்டங்களாக மட்டுமல்லாமல் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் சூறையாடலுக்காக ஒன்றிய, மாநில அரசுகள் அமல்படுத்தி வரும் தனியார்மயக் கொள்கைகளை வீழ்த்துகின்ற அரசியல் போராட்டங்களாக பரிணமிக்கும் பொழுது தான் சரியான தீர்வை நோக்கி நகர முடியும்.

சிவக்குமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க