கல்வி நிலையங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள், வன்கொடுமைகள் போன்றவை நடப்பதற்கு அந்த குற்றங்களை செய்யும் “வக்கிர புத்தியுடைய தனிநபர்கள்” மட்டுமே காரணம் என்று மேலோட்டமாக பார்க்க முடியாது. கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் நிறுவனமயமாக்கப்பட்ட அதிகாரத்தின் பின்னணியில் ஒளிந்து கொண்டுதான் இதுபோன்ற பாலியல் குற்றங்களை செய்கிறார்கள்.
எளிமையான ஒரு கேள்வியை கேட்டுக்கொள்வோம். ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒருவன் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் பேசுகிறான் அல்லது செயல்படுகிறான், பாலியல் துன்புறுத்தல்கள், உருவக்கேலி போன்றவற்றை செய்கிறான் என்றால் அங்கே பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். அந்த குற்றவாளியை செருப்பால் அடிப்பார்கள்.
ஆனால், ஒரு நிறுவனத்தில் மேலாளராக உள்ள ஒருவர் சக ஊழியர்களிடம் அல்லது ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் தவறாக நடக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார். அங்கே என்ன நடக்கும்? அந்த உயர்நிலை அதிகாரத்தில் உள்ளவர்களை பாதிக்கப்பட்டவர்களால் கேள்வி கேட்க முடியாது. அப்படி கேள்வி கேட்டால் வேலை போகும் அபாயம் உள்ளது. பயிலவிடாமல் செய்யும் அபாயம் உள்ளது.
ஒன்று, நம் மீது யாரும் குற்றம் சுமத்த மாட்டார்கள், மற்றொன்று அப்படியே குற்றம் சுமத்தப்பட்டாலும் நிறுவனம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்ற துணிச்சலில்தான் இந்த வக்கிர புத்தியுடைய குற்றவாளிகள் தைரியமாக தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்களை செய்து வருகின்றனர். இந்தப் பின்னணியில்தான் சென்னை கலாஷேத்ராவில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய விவகாரத்தை நாம் பார்க்க வேண்டும்.
படிக்க : கலாஷேத்ரா: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே! | மக்கள் அதிகாரம் கண்டனம்
சென்னை கலாஷேத்ரா நிறுவனத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பாலியல் தொல்லைகள் நடந்து வருவது தற்போதுதான் ஊடகத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. ஆனால், இதற்காக பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த டிசம்பர் மாதம் முதலே, இதை நிறுவனத்தின் கவனத்திற்கும் பொது சமூகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்ல, போராடி வந்திருக்கிறார்கள்.
பரதநாட்டிய நடனம் மற்றும் கர்நாடக இசைக்கான இந்தியாவின் முதன்மையான நிறுவனமான கலாஷேத்ரா அறக்கட்டளை அறியப்படுகிறது. மேலும் இது மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குவது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் ஊழியர்களும் மாணவர்களும் பரீட்சைகளைப் புறக்கணித்து, மார்ச் 30 (வியாழக்கிழமை) அன்று நிறுவனத்தின் வளாகத்தில் இரவு முழுவதும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
நிறுவனத்தின் நான்கு ஆசிரியர்களான ஹரி பத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராடினார்கள்.
இதற்கிடையில், கலாஷேத்ரா அறக்கட்டளையின் உள் புகார்கள் குழு (Internal Complaints Committee) பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொடுமைகள் தொடர்பாக மேலும் மூன்று புகார்களைப் பெற்றுள்ளது. இந்த முறை புகார் கொடுத்த பாதிக்கப்பட்டவர் அனைவரும் ஆண்கள்.
ஆனால், இந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி புகார்களில் இருந்து ஹரி பத்மனை பாதுகாக்க இந்த கலாஷேத்ரா நிறுவனம் அனைத்து வழிகளிலும் செயல்பட்டுள்ளது.
மாணவர்களால் கொடுக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய புகாரை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது கலாஷேத்ரா நிறுவனத்தின் உள் புகார்கள் குழு. அதுபற்றி, கலாஷேத்ரா கூறும்போது, “கடந்த சில மாதங்களாக, கலாஷேத்ரா அறக்கட்டளையை இழிவுபடுத்தும் நோக்கில், சமூக ஊடகங்கள் மூலம் பெரும்பாலும் வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுகளைப் பரப்ப ஒரு ஒருங்கிணைந்த மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலாஷேத்ரா அறக்கட்டளையை பாதுகாப்பற்ற சூழல் என்று பொய்யாகக் காட்டுவதன் மூலம் கலாஷேத்ரா அறக்கட்டளையை அவமதிப்பதை நோக்கமாகக் கொண்டு அவை பெரும்பாலும் தயாரிக்கப்பட்டதாகத் தோன்றியது. நிறுவனத்தின் உள் புகார்கள் குழு விசாரணையை சுயமாக எடுத்து, முழுமையான விசாரணைக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழு குற்றச்சாட்டுகளில் தகுதியைக் காணவில்லை” என்கிறது.
அதவாது, அந்த நபர் மீது வைக்கப்பட்ட குற்றம்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என கூறி கலாக்ஷேத்ரா நிறுவனத்தின் உள் புகார்கள் குழு ஹரி பத்மனுக்கு “உத்தமர் பட்டம் (Clean Chit)” வழங்கியிருக்கிறது.
மேலும், கலாஷேத்ரா தனது இணையதளத்தில் தங்கள் குறிப்பில் இந்த விவகாரத்தைப் பற்றி பேசுவதற்கு எதிராக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. “கிசுகிசுக்கள், வதந்திகளைப் பரப்புதல் ஆகியவை கற்றல் சூழலில் நம்பமுடியாத அளவிற்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப் படுகிறது” என்று குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தங்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி புகார் தெரிவிப்பவர்கள் மீதே சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் தொனியில் இருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செய்யபடும் படி ஒரு சில மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
“அவரது [குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரின்] முன்னிலையில் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று அறிவிக்கும் கடிதங்களில் கையெழுத்திட மூத்த மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு ஊழியர் கூறினார்.
இவையெல்லாம் குற்றவாளியை காப்பாற்ற கலாஷேத்ரா நிறுவனம் செயல்பட்டதன் சமீபத்திய உதாரணங்கள்தான். ஆனால் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய புகார்கள் டிசம்பர் மாதமே விவாதம் பொருளாக மாறிவிட்டது.
கிறிஸ்துமஸுக்கு ஒரு நாள் முன்பு, கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன், பத்தாண்டுகளுக்கும் மேலாக மாணவர்களை துன்புறுத்தியும், தொல்லைகள் கொடுத்தும் வந்த ஒரு ஆசிரியரைப் பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதினார்.
“மிக உயர்ந்த கலை மற்றும் சிந்தனையின் புகலிடமாக உள்ள ஒரு பொது நிறுவனம், இப்போது இளம் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றி கண்களை மூடிக்கொண்டதாக இருக்கிறது. அந்த இளம் பெண்கள் பாதிக்கப்படக் கூடியவர்கள். அவர்கள் இன்னும் பெரியவர்களாகவில்லை. ஊழியர்களில் ஒரு ஆண் உறுப்பினர் அவர்களை அச்சுறுத்துவதும் துன்புறுத்துவதும் அறியப்பட்டிருக்கிறது” என்ற லீலா சாம்சன் பதிவிட்டிருந்தார்.
லீலா சாம்சன் அந்த பதிவை விரைவில் நீக்கிவிட்டார், ஆனால் அது ஏற்கனவே ஒரு சலசலப்பான விவாதங்களை ஏற்படுத்திவிட்டது. அந்தப் பதிவு ஸ்கிரீன் ஷாட்கள் எடுக்கப்பட்டு மாணவர்களாலும் முன்னாள் மாணவர்களாலும் பிற சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டது. இது பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களை, தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளத் தைரியம் கொடுத்தது.
மேலும் இதை பற்றி விவாதிக்கவே மாணவர்கள் மத்தியில் செயல்படாமல் இருந்த வாட்ஸ்அப் குழுக்கள் மீண்டும் உயிர்த்தெழுந்தன. ஏனெனில் மாணவர்கள் இந்த விஷயம் இந்த விவாதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சரியாக உணர்த்திருந்தனர். இதனால் இணையத்தில் இதற்கென ஒரு குழுவை உருவாக்கி நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பதிவு செய்தனர்.
ஒவ்வொருமுறை தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து நிறுவனத்திடம் புகார்கள் அளித்த மாணவர்கள் நிறுவனம் கண்டு கொள்ளவில்லை. நிறுவனம் தொடர்ந்து ஹரி பத்மனுக்கு ஆதரவாக இருந்ததாலும், இந்த புகார்களை வெளியில் சொன்னால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டிருக்கும் என்று நிறுவனம் மாணவர்களை மிரட்டியதாலும் தான் மாணவர்கள் இணையத்தில் தங்களது புகார்களை பதிவு செய்தனர். ஆனால் இதைத் தான் கலாஷேத்ரா நிறுவனத்தின் பெயரை கெடுக்க சதி நடப்பதாக சொல்லி நீலிக்கண்ணீர் வடிக்கிறது நிறுவனம்.
கலாஷேத்ரா 8 மார்ச் 2023 அன்று மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூத்த ஆசிரியர் ஒருவரை மகளிர் தினத்தன்று கல்லூரியின் இயக்குனரால் கௌரவிக்கப்பட்டது தான் மாணவர்களை நாம் எப்படிப்பட்ட பாதுகாப்பற்ற இடத்தில் இருக்கிறோம் என்று உணரச் செய்தது. இதுதான் மாணவர்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய கதைகள் இணையதளத்தில் அநாமதேயமாக எழுதி எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
ஆனால் இந்த எதிர்ப்புணர்வுனை மழுங்கடிக்கதான் நிறுவனத்தின் உள் புகார்கள் குழு விசாரணையை நடத்தி குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது “தவறில்லை” என பாராட்டு பத்திரம் வாசித்தது.
இதனை தொடர்ந்து தான் மார்ச் மாத இறுதியில் சென்னை கலாஷேத்ராவில் மாணவர்களால் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. ஆசிரிய உறுப்பினர் மற்றும் மூன்று கலைஞர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், உடலை ரீதியாக அவமானப்படுத்துதல் மற்றும் வாய்மொழி வழியாக அவமானப்படுத்துதல் ஆகியவற்றைக் கண்டித்து சுமார் 200 மாணவர்கள் போராட்டம் நடத்திய பிறகு, உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது சென்னை போலீசுத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சுமார் 90 மாணவிகள் தங்கள் மீது ஏவப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெள்ளிக்கிழமை (மார்ச்-31) தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவரிடம் எழுத்துப்பூர்வ புகார்களை அளித்துள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய புகார்கள் எழுந்தபோதிலும், தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை செவ்வியல் கலைகளுக்கான நாட்டின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனத்தை இழிவுபடுத்தும் வகையில் செய்யப்படும் தவறான பிரச்சாரம் என்று கூறியது.
படிக்க : சுவர் விளம்பரத்தை அழித்த ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலும் அதற்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசும்!
கலாஷேத்ராவில் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் மற்றும் இனப் பாகுபாடுகளை எதிர்கொண்டதாக, வாய்மொழியாக புகார் அளித்தும், நிறுவனம் அலட்சியமாகவும் பதிலளிக்காமலும் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிறுவனத்தின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், கொடுக்கப்பட்ட புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமலும், குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்டதற்காகவும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹரி பத்மன் மற்றும் பிற மூன்று பேர் மீதுதான் பாலியல் துன்புறுத்தல்கள் செயத்தாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் ஒட்டுமொத்த கலாஷேத்ரா நிறுவனமும் அதற்கு மேலாக தேசிய மகளிர் ஆணையமும் இந்த புகார்கள் பொய்யானவை என திசைதிருப்பப் பார்க்கிறது.
ஹரி பத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவரை இன்னும் கைது செய்யவில்லை. ஏப்ரல் 03-ஆம் தேதி செய்தியின் படி, அவர் ஹைதராபாத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார். மீண்டும் 03/04/23 மதிய வேளையில் சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறான். ஓட்டுனர் உரிமம் இல்லாமல், தலைக்கவசம் இல்லாமல் வண்டி ஓட்டும் அப்பாவிகளை பிடிப்பதில் காட்டும் அக்கறையை போலீசுத்துறை இதுபோன்ற பெரிய விஷயத்தில் காட்டுவதில்லை என்பது தற்செயலானது அல்ல.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாலியல் துன்புறுத்தல்கள் கலாஷேத்ராவில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனை அம்பலப்படுத்தி நூற்றுக்கணக்கான நபர்கள் போராடுகிறார்கள். 90-க்கு அதிகமான எழுத்து பூர்வ புகார்கள் வந்துள்ளன. அந்த ஒற்றை நபர் மீது வழக்கு பதியவும் கைது செய்யுமே இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது. இதில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டு மாணவர்களுக்காக பாதுகாப்பான கல்விச் சூழல் உருவாக்கித் தரப்படும் என்பது நாம் எப்படி உறுதியாக நம்ப முடியும். நம்முடைய போராட்டத்தை தவிர இந்த கட்டமைப்பில் வேறு எதுவொன்றாலும் நமக்கான தீர்வை கொடுக்க முடியாது என்பதற்கு இந்த கலாஷேத்ரா விவகாரம் மற்றுமொரு சாட்சியம்.
ராஜன்