சுவர் விளம்பரத்தை அழித்த ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலும் அதற்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசும்!

சம்மனில் சுமோட்டாவாக வழக்கு பதிவு செய்துள்ளேன் என வெட்கமே இல்லாமல் எழுதி உள்ளார்கள். இவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் அரசு சுவர்களிலும் பல்வேறு தனியார் சுவர்களிலும் ஏராளமான விளம்பரங்கள் கொட்டிக் கிடக்கிறது. அங்கெல்லாம் இவர்கள் இதுவரை எதுவும் கிழித்ததாக தெரியவில்லை.

05.04.2023

சுவர் விளம்பரத்தை அழித்த ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலும்
அதற்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசும்!

ஜனநாயக சக்திகளே!
உழைக்கும் மக்களே!

மே 1 தொழிலாளர் தினத்தன்று ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க, அம்பானி -அதானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிச படை வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!   என்ற தலைப்பில் மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதை மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,மக்கள் அதிகாரம்  ஆகிய தோழமை அமைப்புகள் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாடு பல்வேறு ஜனநாயக சக்திகளும் மக்களும் பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைந்து களத்தில் இறங்க வேண்டிய  தேவையை வலியுறுத்தும் விதமாக நடக்கவுள்ளது.

இந்த மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் சுவர் விளம்பரங்கள் செய்துள்ளோம். சுவர் விளம்பரங்களும் முழக்கங்களும் தமிழ்நாட்டு மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்து உள்ளது. பலரும் வரவேற்க துவங்கியுள்ள இந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி கும்பலுக்கும் அவர்களின் அடியாள் படையாக வேலை செய்யும் போலீசுக்கும் எரிச்சலும் பயமும் மேலோங்கி உள்ளது. அதனால் சுவர்களை பல இடங்களில் அழிக்கும் வேலைக்கு  ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.கவும் போலீசும் இணைந்தே களத்தில் இறங்கி உள்ளது.

படிக்க : மதுரை: மே 1 மாநாடு சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு மீது நடவடிக்கை எடுத்திடுக! | ம.க.இ.க மனு

குறிப்பாக மாநாடு நடக்கக்கூடிய மதுரையில் 30 சுவர்கள் வரை விளம்பரம் செய்திருந்தோம். அதில் இன்று வரை 15 சுவர்களை அழித்துள்ளார்கள். மற்ற மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! என்ற முழக்கத்தை மட்டும் அழித்துவிட்டு போவது  என நடந்துள்ளது. ஆனால் மதுரையில் அளிக்கப்பட்ட 15 சுவர்களும் முழுமையாக வெள்ளையடிக்கப்பட்டு தடம் கூட தெரியாத அளவிற்கு செய்ய வேண்டும் என வன்மமாக செய்துள்ளார்கள். இந்த வன்மத்திற்கு பின்னால் உள்ளது மக்களிடம் இந்த விஷயங்கள் சென்று விடக்கூடாது என்று பாசிஸ்டுகளிடம் இயல்பாகவே இருக்கக்கூடிய அதீத பயம் தான்.

சுவர்கள் அழிக்கப்பட்ட இடங்களை சுற்றியுள்ள போலீசு ஸ்டேஷனில் புகார் மனு அளித்துள்ளது ஆர்.எஸ். எஸ்-பிஜேபி கும்பல். அனைத்து இடங்களிலும் வழக்கு பதிவு செய்துள்ளது போலீசு. கூடுதலாக சுண்ணாம்பு வைத்து சுவர்களையும் அழித்துள்ளது போலிசு. ஏன் அழித்தீர்கள் என போலீசை கேள்வி கேட்டால்  ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி என அமைப்பை குறிப்பிட்டு பேசினால் அது தவறு என பேசுகிறார்கள். இதே கருத்து தான் ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பலினுடைய கருத்தும்.

இந்த ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல் கொடுத்துள்ள புகாரில் மூன்று விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள். அதில் ஒன்று மிகவும் நகைக்கத்தக்கது ஆனால் மிகவும் வன்மமானது. மாநாடு நடத்தக்கூடிய நாம் தான் மதக் கலவரங்களை தூண்டுகிறோமாம். இன்று பீகார்,மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலால் வீடுகள் தீக்கரையாக்கியதை அனைவரும் பார்த்திருப்போம் . இப்படிப்பட்ட கேடுகெட்ட இந்த கிரிமினல் கும்பல் சொல்வதை தான் போலீசு செய்கிறது.  பல இடங்களிலும் இதே கருத்தை போலீசு வேற வார்த்தைகளில் நம்மிடம் பேசுகிறது. இப்படி எழுதினீர்கள் என்றால் பிரச்சனை ஆகிவிடும்  அதனால் தான் அழித்தோம் என பேசுகிறார்கள்.

இரண்டாவதாக வீழாது தமிழ்நாடு!துவளாது போராடு!  என்ற முழக்கம் பிரிவினை வாதமாம். தமிழ் நாடு என்ற பெயரையே பிரிவினை வாதமாக பார்க்கும் இந்த கேடுகெட்ட கும்பல் ஒரு பக்கம் என்றால், இதற்கெல்லாம் போலீஸ் ஏன் ஒத்து ஓத வேண்டும்? தமிழ்நாடு என சட்டமன்றத்தில் முதல்வர் முழங்கவில்லையா? இல்லை ஆளுநர் ரவி தமிழ்நாடு என்ற பெயர் தான் சரியானது என பின்வாங்கவில்லையா? இருந்தும் போலீசு ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பலின் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு  வழக்கு போடுவது எவ்வளவு அபாயகரமானது. பல்வேறு போலீஸ் அதிகாரிகளும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக-வின் கையாட்களாக மாறிவிட்டார்கள் என்ற நிதர்சனமான உண்மை பகிரங்கமாக அம்பலப்படுகிறது.

மூன்றாவதாக ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! என்ற முழக்கத்தை பற்றி ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பல் கொடுத்துள்ள புகாரில் ஆர்.எஸ்.எஸ் பாசிசம் ஒழிக என சொல்லிவிட்டதாக கதறுகிறார்கள். இதையே போலீசும் அப்படியே பிடித்துக் கொண்டு பேசுகிறது. தனி நபரையோ அமைப்பையோ ஒழிக என்று சொல்லக்கூடாது அல்லவா என போலீஸ் பேசுகிறது. பாசிசம் ஒழிக என சொல்வதோ முழக்கம் இடுவதோ புதிதானதல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இதை பயன்படுத்தி தான் வருகின்றனர்.இதில் போலீசுக்கு உடன்பாடு இல்லை என்றால் அவர்களும்  ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பலின் பாசிச நடவடிக்கைக்கு உடன்படுகிறார்கள் என்றே அர்த்தம்.

இதுபோக சுவர் விளம்பரம் அழிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஏழு போலீஸ் ஸ்டேஷனிலும் வழக்குப்பதிவு செய்து மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கத்திற்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு கூப்பிட்டார்கள். அந்த சம்மனில் சுமோட்டாவாக வழக்கு பதிவு செய்துள்ளேன் என வெட்கமே இல்லாமல் எழுதி உள்ளார்கள். இவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் அரசு சுவர்களிலும் பல்வேறு தனியார் சுவர்களிலும் ஏராளமான விளம்பரங்கள் கொட்டிக் கிடக்கிறது. அங்கெல்லாம் இவர்கள் இதுவரை எதுவும் கிழித்ததாக தெரியவில்லை. மக்களுக்கு எதிரான பல்வேறு கிரிமினல் குற்றங்களுக்கு சுமோட்டாவாக எவ்வளவு வழக்குப்பதிவு செய்துள்ளது போலீசு.

படிக்க : டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்! தமிழ்நாட்டை சூறையாட வரும் பாசிசக் கும்பலை முறியடிப்போம்! || மக்கள் அதிகாரம்

இதையெல்லாம் பேசினால் போலீசின் உண்மை முகத்திரை கிழியும். அது என்னவோ தெரியவில்லை ஆர்எஸ்எஸ் பிஜேபி அம்பானி அதானி பாசிசத்தை பேசினால் போலீசுக்கு ரத்தக் கொதிப்பு வருகிறது. சம்மன் அழைப்பின் பேரில் 03/04/2023 அன்று கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்க்கும்போது  வழக்கமாக போடுவது தான் என சர்வ சாதாரணமாக பேசினார். மக்கள் பணத்தில் கஷ்டப்பட்டு செய்த சுவர் விளம்பரங்களை அழித்துவிட்டு  நயவஞ்சகமாக பேசுகிறது போலிசு.

இப்படியாக 7 இடங்களில் வழக்குப் போட்டு வைத்து கொண்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

இதையெல்லாம் கடந்து மாநாட்டு பணிகள் ஊக்கமுடன் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பளுக்கு மிகப்பெரிய சவுக்கடி!

02/04/2023 அன்று நடந்த பாசிசை எதிர்ப்பு  மக்கள் முன்னணி நடத்திய கூட்டத்தில், பல்வேறு ஜனநாயக முற்போக்கு சக்திகளும் மேடையில் தங்களது கருத்துக்களை பதிவு செய்யும்போது பாசிசத்திற்கு எதிரான சுவர் விளம்பரங்களை அழிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி ,போலீஸ்  நடவடிக்கையை கண்டித்து பேசினர். பாசிசத்திற்கு எதிரான இந்த ஒற்றுமை உணர்வு தான் எதிரியை கலங்கடிக்கிறது. எதிரி நாம் செய்யும் விஷயத்தை தொடர்ந்து முடக்க நினைக்கிறான் என்பது நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதற்கான அங்கீகாரம் தான்.

காசுக்கு விலை போகாத கெத்தான ஒரு கூட்டம் உண்டு. அதனிடம் மண்டியிடுவீர்கள் பாசிஸ்டுகளே!

வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகரமாணவர் இளைஞர் முன்னணி
மக்கள் அதிகாரம், மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க