லகை ஆட்டிப் படைக்கும் முதலாளித்துவமே மண்டியிடும் ஒரே இடம் பங்குச் சந்தை தான். அந்தப் “பங்குச் சந்தையின் அடித்தளத்தையே உலுக்கிய” முறைகேடு ஒன்று சமீபத்தில் இந்தியாவில் அம்பலமாகியிருக்கிறது.
இந்தியாவில் இரண்டு மிகப்பெரிய பங்குச் சந்தைகள் இருக்கின்றன. அவை மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE). இதில் மும்பையின் தலால் வீதியில் அமைந்திருக்கும் மும்பை பங்குச் சந்தை தான் நாட்டிலேயே பழமையான பங்குச் சந்தை.
1992-ம் ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய ஹர்சத் மேத்தா பங்குச் சந்தை மோசடி நடைபெற்றது, இந்த மும்பை பங்குச் சந்தையில் தான். அதன் தொடர்ச்சியாக பங்குச் சந்தையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படத் துவங்கிய சமயத்தில் உருவாக்கப்பட்டதுதான் தேசிய பங்குச் சந்தை (NSE). கணிணிமயப் படுத்தப்பட்ட சேவைகளை அறிமுகப்படுத்தி படிப்படியாக உலக அளவில் கவனிக்கப்படத்தக்க பங்குச் சந்தையாக உருவெடுத்தது இந்நிறுவனம்.
தேசிய பங்குச் சந்தையில் அன்றாடம் நடைபெறும் வர்த்தகம், இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாள் செயல்பாடு முடங்கினாலே, இந்தியப் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிடும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பங்குச் சந்தையை ஒரு இமயமலைச் சாமியார் கட்டுப்படுத்தினார் என்று சொன்னால் அதனை நம்ப முடிகிறதா?  யார் அந்த இமயமலைச் சாமியார்?
இந்த விவகாரம் எப்படி அம்பலமானது என்பதன் ஊடாக இந்தச் சாமியாரைப் பற்றி பார்க்கலாம்.
படிக்க :
திவால் நிலையில் வோடஃபோன் – ஐடியா : பங்குகளை வாங்கும் மோடி அரசு !
40000 ஆண்டுகளாக இந்தியர்களின் மரபணு மாறவில்லையாம் – மோகன் பகவத்தின் அண்டப் புளுகு
தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பங்குச் சந்தைகளையும் உள்நாட்டு வெளிநாட்டு மூலதனங்களையும் கண்காணிக்கும் அமைப்பான செபி (SEBI) நிறுவனத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் ஆனந்த் சுப்பிரமணியன் என்ற ஒரு அதிகாரிக்கு தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தில் பணியமர்த்தியது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளது. செபியின் வழிகாட்டுதல்களை மீறி, தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் ஆலோசனை அதிகாரியாக ஆனந்துக்கு பணி நியமன ஆணை வழங்கியது மற்றும் பாரதூரமான அளவிற்கு சம்பள உயர்வு அளித்ததற்கு விளக்கம் கேட்டு விசாரணையை துவங்குகிறது செபி.
நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் பங்குச் சந்தை நிறுவனங்கள் இருப்பதால், செபியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு தான் பணி நியமனம் முதல் சம்பள உயர்வு வரை அனைத்தும் செய்யப்பட வேண்டும்.
ஆனால், அந்த நியமன வழிமுறைகளை மீறி தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு தனிச் சலுகை வழங்கி பணி நியமனம் முதல், பதவி உயர்வு, சம்பள உயர்வு வரை கொடுத்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு, தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் மூன்றாவது தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட அதே காலகட்டத்தில்தான் ஆனந்த் சுப்ரமணியன் எனும் ஒரு அதிகாரி தேசிய பங்குச் சந்தையின் ஆலோசகராக நியமிக்கப்படுகிறார்.
ஆண்டுக்கு வெறும் ரூ.15 இலட்சம் சம்பளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஆனந்த் சுப்பிரமணியன், கிட்டத்தட்ட 1000% ஊதிய உயர்வுடன் ஆண்டுக்கு ரூ.1.68 கோடி சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சித்ரா ராமகிருஷ்ணன் தலைமைச் செயலதிகாரியாக தொடர்ந்த காலகட்டத்தில் ஆனந்த் சுப்பிரமணியனின் சம்பளம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி, 2.3 கோடி என படிப்படியாக அதிகரித்து 2016-ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தில் இருந்து ஆனந்த் சுப்பிரமணியன் வெளியேற்றப்படும்போது அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஆண்டுக்கு ரூ.4 கோடி.
மேலும், ஏப்ரல் 2013 அன்று நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஏப்ரல் 2015-ல் மொத்த தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் குழும செயல்பாட்டு அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
இப்படி அதிகமான சம்பளமும், பதவி உயர்வும் ஏன் கொடுக்கப்பட்டது என்பது குறித்த விசாரணையோடு, மற்றொரு புகார் தொடர்பான விசாரணையும் கடந்த 2018-ம் ஆண்டு முடுக்கிவிடப்படுகிறது.
அதாவது தேசிய பங்குச் சந்தையில் பங்குகளை வர்த்தகம் செய்யும் தரகர்கள் இணையம் மூலமாக, தேசிய பங்குச் சந்தையின் விற்பனைப் புள்ளிகள் குறித்த விவரத்தைப் பெறுவதற்கான இணைப்பை எடுப்பதில், சில தரகர்களுக்கு மட்டும் விற்பனைப் புள்ளி வேகமாகப் போய்ச் சேரும் வகையில் தில்லுமுல்லுகள் நடப்பதாகவும், அதற்கு தேசிய பங்குச் சந்தையின் உள்ளிருக்கும் அதிகாரிகள் சிலர் உடந்தை என்பதையும் கடந்த 2015-ம் ஆண்டு அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் மூன்று எழுத்துப் பூர்வமான புகார்களை மறைமுகமாக செபிக்கு அனுப்பியிருந்தார்.
அந்த விசாரணையையும் சேர்த்து கடந்த 2018-ம் ஆண்டு சித்ரா ராமகிருஷ்ணனின் கடிதப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விசாரித்த செபிக்கு அதிர்ச்சியே பதிலாகக் கிடைத்தது.
தனது பதவிக் காலகட்டத்தில் தனது அதிகாரத்துக்கு உட்பட்ட முடிவுகள் எடுப்பதற்கான விவகாரங்களில், குறிப்பாக, பங்குச் சந்தை நிதி தொடர்பான விவகாரங்கள், தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் கட்டமைப்பு தொடர்பான விவகாரங்கள், பணி நியமன விவகாரங்கள் ஆகியவை குறித்து மின்னஞ்சல் மூலம் ஒரு ஆசாமியிடம் கருத்து கேட்டு முடிவு எடுத்திருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன்.
“ரிக்யஜூர்சாம” என்ற பெயரிலான (rigyajursama@outlook.com) ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு இரகசிய விவரங்களை எல்லாம் அனுப்பி கருத்து கேட்டிருக்கிறார். அந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்த உத்தரவுகளை எல்லாம் செயல்படுத்தியிருக்கிறார். அந்த அடிப்படையில் தான் ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, கூடுதல் சலுகைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். இந்த கடிதப் பரிமாற்றம் 2014-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு சித்ரா ராமகிருஷ்ணன் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வரையில் தொடர்ந்திருக்கிறது.
இதைத்தான் செபி நிறுவனம், “பங்குச் சந்தையின் அடித்தளத்தையே உலுக்கிய செயல்” என்று அதிர்ச்சி தெரிவித்திருந்தது. இது குறித்து கடந்த 2018-ம் ஆண்டிலேயே சித்ரா ராமகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டது.
அந்த கேள்விகளுக்கு சித்ரா ராமகிருஷ்ணன் அளித்த பதில்களைப் படித்தால் இவரை நம்பியா தேசத்தின் பொருளாதாரத்தை தீர்மானிக்கக் கூடிய ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட்டது என ஆச்சரியம் ஏற்படும் அளவிற்கு அந்தப் பதில்கள் இருந்தன.
தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் விவகாரங்களை வெளியில் இருப்பவர்களுடன் பகிர்ந்து கொண்டது நிறுவன மற்றும் செபியின் விதிமுறைக்கு எதிரானது என்பது குறித்து செபி கேள்வி எழுப்பியுள்ளது. அதற்குப் பதிலளித்துள்ள சித்ரா ராமகிருஷ்ணன், தலைமையில் இருப்பவர்கள் முடிவெடுப்பதற்கு முன்னர், தங்களது பயிற்சியாளர்களிடமோ, ஆதர்ச நாயகர்களிடமோ கலந்தாலோசிப்பது வழக்கமானதுதான் என்று கூறியிருக்கிறார். மேலும், இயற்கையாகவே ஆன்மிக ரீதியாக இருப்பதால் நிறுவனத்தின் இரகசியம் மற்றும் மதிப்பினை விட்டுக்கொடுப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறியிருக்கிறார்.
இங்கு இயற்கையாகவே ஆன்மிக ரீதியில் இருப்பதாக அவர் குறிப்பிடுவது அந்த ரிக்யஜூர்சாம என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து தமக்கு வழிகாட்டும் அந்த இமயமலை சித்த புருஷர் / யோகியின் அருள்வாக்கைத் தான்.
அந்த நபரின் இருப்பிடம் குறித்து செபி எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள சித்ரா ராமகிருஷ்ணன், இமயமலை முழுவதும் எங்கும் நிறைந்திருக்கும் அவருக்கு இருப்பிடம் என ஒன்று அவசியமில்லை என்று கூறியிருக்கிறார்.
சித்ரா ராமகிருஷ்ணனுக்கும் இமயமலை சாமியாருக்கும் இடையிலான மின்னஞ்சல் போக்குவரத்தில் ஆனந்த் சுப்பிரமணியத்துக்கும் நகல் இணைக்கப்பட்டிருந்தது.
இதனை ஆய்வு செய்ய, செபியின் வழிகாட்டுதலின் அடிப்படையில், எர்ன்ஸ்ட் அண்ட் யங் எனும் நிறுவனத்தை தேசிய பங்குச் சந்தை நிறுவனம் பணியமர்த்தியது. அந்நிறுவனத்தின் ஆய்வின் படி ரிக்யஜூர்சாம என்ற மின்னஞ்சலை இயக்கியது ஆனந்த் சுப்பிரமணியன் தான் என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பொறுப்பு மற்றும் அதன் முக்கியப் பொறுப்புகளில் இருந்து செய்யப்படும் சிறு சிறு தகிடுதத்தங்கள் கூட, முதலீடு செய்யும் பல இலட்சம் நடுத்தர வர்க்கத்தினரின் பேரிழப்பிற்கு வழிவகுக்கக் கூடியவையே.
1980-களின் இறுதியில் செபி நிறுவனத்தின் நிறுவன அமைப்பு விதிகளை உருவாக்கும் கமிட்டியில் இடம்பெற்று, தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவராக இருந்து அதன் தலைமைச் செயலதிகாரியாக வெற்றிகரமாக செயல்பட்ட ஒரு பெண், ஏதோ ஒரு சாமியாரின் அருள்வாக்கை“முட்டாள்தனமாக” நம்பி இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா என்ற கேள்விதான் மற்றெல்லாவற்றையும் விட விஞ்சி நிற்கிறது.
படிக்க :
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் !
புருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி
சித்ரா இராமக்கிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் இணைந்து நடத்திய நாடகமாகவே இது தெரிகிறது. 2018-ம் ஆண்டு வெளியான இந்த விசயங்கள் அனைத்துமே சுமார் மூன்றாண்டுகளுக்கும் மேலாக கமுக்கமாக மூடி மறைக்கப்பட்டுள்ளன. செபி நிறுவனம், தேசிய பங்குச் சந்தை நிறுவனம் ஆகியவற்றோடு, சி.பி.ஐ.-யும் சேர்ந்து சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் உள்ளிட்ட இந்தக் கூட்டுக் களவானிகளைப் பாதுகாத்து வந்துள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணன் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர இதனை மூடி மறைக்க வேறு ஒரு நல்ல காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. பார்ப்பனக் கும்பலின் களவானித்தனங்கள் என்றுமே நீர்த்துப் போகச் செய்யப்படுவதுதானே காலங்காலமாக இந்தியா கண்டுவந்துள்ள நியதி.
இந்த முறைகேடுகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற உத்தியையும் மிகச் சரியாகவே, இந்திய அரசியல் மற்றும் நீதித்துறையின் நடைமுறையில் இருந்து கற்றுத் தேர்ந்திருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன். 2018-ம் ஆண்டில் செபியின் விசாரணைக்கு அவர் அளித்துள்ள பதிலே அதற்குச் சாட்சி.
நிறுவனத்தின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரணாக அந்நியர் ஒருவரின் மின்னஞ்சலுக்கு அலுவலக விவகாரங்களைப் பகிர்ந்தது பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள சித்ரா ராமகிருஷ்ணன், “இயற்கையாகவே ஆன்மிகரீதியாக இருப்பதால் நிறுவனத்தின் இரகசியம் மற்றும் மதிப்பினை விட்டுக்கொடுப்பது என்ற கேள்விக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், மசூதிக்கு நடுவே நள்ளிரவில் “தானாகத் தோன்றிய” ஒரு சிலை தொடுத்த வழக்கை ஏற்றுக் கொண்டு மசூதி இடிப்புக்கு வித்திட்ட நீதிமன்றம், முதலாளித்துவத்தின் சித்தத்திற்கு அப்பாற்பட்ட பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் “இயற்கையான ஆன்மிக ரீதியான” சக்திதான் தன்னிடம் பேசியதாக சித்ரா ராமகிருஷ்ணன் ஏன் கருதியிருக்கக் கூடாது என்ற வாதத்தையும் ஏற்றுக் கொள்ளாமலா போகும்?

சரண்
செய்தி ஆதாரம் : அவுட்லுக் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க