திவால் நிலையில் வோடஃபோன் – ஐடியா : பங்குகளை வாங்கும் மோடி அரசு !

நட்டமடைந்த பொதுத்துறை நிறுவனமான ஏர்-இந்தியாவை விற்ற மோடி அரசு, நட்டமடைந்த தனியார் தொலைதொடர்பு நிறுவனமான வோடாஃபோன்-ஐடியா நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது ஏன் ?

1
ர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து தினமும் சுமார் ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், பொதுப் பணத்தை வீணடிக்க அனுமதிக்க முடியாது என்று பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பனை செய்வதற்கான காரணமாக ஒன்றிய அரசின் வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2020-2021-ல் ஏர் இந்தியா நிறுவனம் ரூ.7,000 கோடிகளுக்கு மேல் இழப்பை சந்தித்துள்ளது. எனவே வரி செலுத்துவோரின் சுமையை குறைக்க வேண்டும் என்று அந்நிறுவனத்தை தனியார்மயமாக்க காரணங்களாகக் கூறியிருக்கிறது, மோடி அரசு.
நாளொன்றுக்கு ரூ.20 கோடி நட்டம் ஏற்படுத்தும் ஏர்-இந்தியாவை காப்பாற்ற முடியாது என்று கூறிய மோடி அரசு, 2020-2021-ல் ஒரு நாளைக்கு ரூ.120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் வோடஃபோன் – ஐடியா நிறுவனத்தின் 35 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியாவை விற்பதற்கும் – வோடஃபோன் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கும் எதிர்மறையான கருத்துக்களை கூறுகிறது மோடி அரசு.
வங்கிகளுக்கு ரூ.48,000 கோடி கடன் செலுத்த வேண்டிய வோடஃபோன் – ஐடியா நிறுவனத்தை மோடி அரசு ஏன் மிகப்பெரிய பங்குதாரராக மாற்றுகிறது? ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகை உள்ளிட்டு வோடஃபோன் – ஐடியா நிறுவனம் ரூ.1,50,000 கோடியை ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது. அதற்காக செலுத்த வேண்டிய ரூ.16,000 கோடி வட்டி நிலுவைத் தொகையை ஒரு பங்குக்கு ரூ.10-க்கு நிறுவனத்தின் பங்குகளாக மாற்ற மோடி அரசு முடிவு செய்துள்ளது.
படிக்க :
வோடஃபோன் வரி ஏய்ப்புக்கு அருண் ஜெட்லி வக்காலத்து ! கேலிச்சித்திரம்
ஜியோவுக்காக மூடுவிழா காணவிருக்கிறது பி.எஸ்.என்.எல். ! மோடி அரசின் சாதனை தொடர்கிறது !
வோடஃபோன் நிறுவனத்தை புதுப்பிக்க முடியாது என்று கருதி பல நிறுவனங்கள் தன் முதலீடுகளை நிறுத்திவிட்டன. இந்நிலையில் வோடஃபோன் – ஐடியாவுக்கு பங்கை வாங்குவதற்கு மோடி அரசு ஆர்வமாக இருப்பது ஏன் என்பதுதான் தற்போது கேட்க வேண்டிய கேள்வி.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவற்றின் கட்டுப்பாட்டிற்குள் தொலைத்தொடர்புத் துறை இருப்பதால், இனி வோடஃபோன் – ஐடியா நிறுவனத்திற்கு எதிர்காலம் இல்லை என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஐடியாவுடன் இணைந்த பிறகு வோடஃபோன் மிகப்பெரிய சந்தாதாரர்கள் தளத்தைக் தக்கவைத்து கொண்டது. இருப்பினும் 2017-ல் ரிலையன்ஸ் ஜியோ ஒரு மலிவு விலைப் போரை தொடங்கிய பிறகு அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிந்தது.
2016-ல் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்த பிறகு, தொலைத்தொடர்பு கட்டணங்களை கட்டுப்படுத்தி அடிமட்டத்தில் கொண்டு சென்றது. ஜியோ அதன் பங்கில் உலகெங்கும் மலிவானதாக மாற்றுவதன் மூலம் தரவு புரட்சியை (Data Revolution) கொண்டு வருவதாக கூறியது. ஜியோவின் இச்செயல்பாடுக்கு பிறகு பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டன. தற்போது கட்டணங்களை படிப்படியாக உயர்த்தத் தொடங்கியுள்ளது அம்பானியின் ஜியோ நிறுவனம்.
எஞ்சியிருக்கும் பெரிய நிறுவனங்கள் ஜியோ – ஏர்டெல் ஆகியவை 20 சதவீதம் கட்டண உயர்வை பெரிதும் பயன்படுத்திக் கொண்டது. 200 மில்லியன் இயங்கும் சந்தாதாரர்கள் இருந்தபோதிலும் இந்த கட்டண உயர்வால் பயனடைய முடியாத அளவுக்கு கடனில் மூழ்கிவிட்டது வோடஃபோன் – ஐடியா.
வோடஃபோனில் 35 சதவீதம் பங்குகளை வாங்கிக் கொள்வதாக மோடி அரசு அறிவித்த நாளில் கூட அந்த நிறுவனத்தின் பங்கு விலை 20 சதவீதம் சரிந்தது. திவால் நிலையில் இருக்கும்போது அரசு ஏன் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்கிறது என்று நமக்கு தோன்றலாம். தனியார் முதலாளிகளின் நஷ்டங்களை சாதாரண மக்களின் தலையில் கட்டுவதே இதன் நோக்கம்.
டாடாவிடமிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை அரசு வாங்கி மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அதை இயக்கியது ஒன்றிய அரசு. தற்போது பெரும் சொத்துக்களை உரிமையாகக் கொண்ட ஏர் இந்தியா நிறுவனத்தை மிகக் குறைவான பணத்திற்கு மீண்டும் டாடாவிடம் ஒப்படைத்திருக்கிறது ஒன்றிய மோடி அரசு. தற்போது வோடஃபோன் – ஐடியா நிறுவனத்தின் 35 சதவீத பங்குகளை வாங்கி அந்நிறுவனத்தின் நட்டத்தை மக்கள் தலையில் கட்டி மிளகாய் அரைக்க முடிவெடுத்துவிட்டது மோடி அரசு.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க