மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் புத்தளம் சேரக்குழி பிரதேசத்தில் கொழும்பு குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக, புத்தளம் பிரதேச மக்கள் பெப் 13,14,15-ம் திகதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் சில மர்ம கொள்கலன்கள் குப்பை போடப்படுவதற்காக கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்திருக்கிறது.

கொழும்பு குப்பைகள் மட்டுமல்லாமல், சிங்கப்பூருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி சிங்கப்பூர் உட்பட இன்னும் 62 நாடுகளின் மருத்துவ மற்றும் இலத்திரனிய கழிவுகளை புத்தளம் களப்பிற்கு 200 M தூரத்தில் களஞ்சியப்படுத்த இருப்பதாக பிரதேசவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

புத்தளத்தைக் காப்போம் – இலங்கையில் தொடரும் போராட்டங்கள் !

கட்டுமானப்பணிகள் நடைபெற்ற போதே, சிறிய மழை ஒன்றிற்கு அந்த இடத்திலிருந்து சேற்றுத் தண்ணீர் வழிந்தோடி களப்பு பிரதேச கடல் செந்நிறமாக காட்சியளித்தது.
இந்த கழிவு நீர் வழிந்தோடி களப்பில் கலந்தால், இதனால் ஏற்படும் விபரீதங்களை இட்டு அப்பிரதேச மக்கள் பெரும் பீதியடைந்திருக்கிறார்கள்.

*இலங்கையின் இரண்டாவது பெரிய உப்பளத்தை கொண்டிருக்கும் புத்தளம் களப்பு பிரதேசமானது மீன்பிடி, இறால் வளர்ப்பு என சுமார் 5000 குடும்பங்கள் வேலையிழந்து அநாதரவாக வேண்டிய நிலை ஏற்படலாம்.

*சிங்கப்பூர் ஓர் உலக சந்தை. மருத்துவமும் அங்கே வியாபாரச் சந்தையே. உலகெங்கிலுமிருந்து அறுவை சிகிச்சை உட்பட நவீன மருத்துவத்திற்காக சிங்கப்பூர் வரும் மக்களின் தொகை அதிகம். அந்த மருத்துவ கழிவுகளை களப்பை அண்டிய பிரதேசங்களில் தேக்கி வைப்பதானது புத்தளத்திற்கு மட்டுமல்லாமல் முழு இலங்கைவாழ் மக்களினதும் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஆகும்.

படிக்க:
♦ இலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை !
♦ இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !

*உலகெங்கிலுமுள்ள விசித்திர நோய்களுக்கான கிருமிகளை மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக இலங்கைக்கு இறக்குமதி செய்கிறார்.
இதனால் களப்பு பிரதேசத்திலுள்ள மீன்கள் தொற்றுக்குள்ளாகும். உப்பளங்கள் நஞ்சாகும். இவை முழு இலங்கையினரதும் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகும்.

* ஏற்கனவே , நுரைச்சோலை அனல் மின் நிலையம் காரணமாக கற்பிட்டி , நுரைசோலை பெண்களின் உடலில் மெர்க்குரி எனும் நஞ்சினால் பாதிக்கப்ட்டிருப்பதாக சமீபத்திய ஆய்வொன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த நஞ்சினால் கருச்சிதைவுகள் அதிகளவில் நடைபெறுவதாகவும் முன்னெப்போதையும் விட புற்றுநோய் , சுவாச நோய்கள், கருச்சிதைவுகள் அதிகரித்திருப்பதாகவும் பிரதேசவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

*இவ்வாறான நிலைமையில் அமைச்சர் சம்பிக ரணவக பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் , கொழும்பில் முஸ்லீம் மக்களே வியாபார நோக்கத்திற்காக அதிகம் வாழுகின்றனர். அப்படியிருந்தும் புத்தளம் மக்கள் இந்த குப்பை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று இனவாதம் கக்கும் விதத்தில் பேசியிருந்தார்.

* சமீபத்தில் புத்தளம் பிரதேச ஆர்ப்பாட்டத்தில் இனவாதத்திற்கு தூபம் போடும் விதமாக சிலர் சம்பிக வின் புகைப்படம் தாங்கிய பதாகைக்கு செருப்பால் அடித்தும் உதைத்தும் காணொளி ஒன்றை பதிவேற்றியிருந்தனர். அது ஊடகவியலாளர் இர்பான் என்பவரின் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு cleanputtalam உட்பட 26 பேரினால் பகிரப்பட்டிருக்கிறது. மேலும் புத்தளத்தான்டா என்று சிறுபிள்ளைத்தனமான ஹீரோயிச வீடியோக்களும் பகிரப்படுகின்றன.

*குப்பை கொண்டுவரும் கண்ட்ரைனர்களை கொளுத்துவோம் என்று பலர் பதிவேற்றுகின்றனர். இவ்வாறான சிறுபிள்ளைத்தனமாக கோசங்கள் புத்தளம் முஸ்லீம்களை மேலும் தனிமைப்படுத்தி இது அந்தப் பிரதேசத்திற்கான பிரச்சினை என்பதாக காட்டமட்டுமே துணை போகும்.

*மேலும் புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் சமீபத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டிருப்பதுடன் இணைத்து போராட்டத்தில் ஈடுபடும் சாதாரண இஸ்லாமிய சிவில் சமூகத்தை தீவிரவாதிகளாக கட்டமைக்கும் அபாயத்தை போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக அத்தியாவசியமானதாகும். முஸ்லீம்களை தீவிரவாதிகளாக்கி போராட்டத்தை தனிமைப்படுத்த இந்த திட்டத்தை முன்னெடுப்பவர்கள் முனையலாம், அப்படி நடந்தால் அது புத்தளம் பிரதேச மக்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள முஸ்லீம் சமூகத்தின் இருப்பிற்கு அச்சுறுத்தலாகும்.

*முஸ்லீம் புத்திஜீவிகள் , சமூக ஆர்வலர்கள் இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு தமது போராட்ட நடவடிக்கைகளின் நியாயத்தையும் அது முழு இலங்கைக்குமான் ஆபத்து என்பதையும் சிங்கள மக்களிடம் கொண்டு செல்வதும் அவர்களின் துணையுடன் இந்த நோக்கங்களை வென்றெடுக்க போராடுவதும்தான் இந்த போராட்டத்தை வெற்றிகொள்ள உதவுமே ஒழிய , சிறுபிள்ளைத்தனமான இவ்வாறான நடவடிக்கைகள் புத்தளம் மக்களை தனிமைப்படுத்திவிடும் அபாயத்தை உணருங்கள்.

*முழு இலங்கை மக்களின் இருப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிரான இந்த குப்பை திட்டத்தை நிறுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம். #CleanPuttalam

நன்றி: முகநூலில் : மோகனதர்ஷினி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க