நன்றி: Artigala Awantha

தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்பாட்டை நிராகரிக்கின்றோம் !

புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ மகேந்திரன்

தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஓப்பந்தம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்று வந்த இழுத்தடிப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில், கடந்த 2015 -ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தப்பட்டு வந்த 1,000 ரூபா கோரிக்கை புறந்தள்ளப்பட்டு 700 ரூபா அடிப்படை சம்பள உடன்பாடு மேற்கொள்ளப்பட்டமையானது, மீண்டும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று துரோகமாகும். என புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

நன்றி: Artigala Awantha

கடந்த முன்று வருடங்களாக 1000 ரூபா சம்பள கோரிக்கையை முன்னிறுத்தி பல்வேறு அரசியல் கபட நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில் கடந்த முன்று மாதங்களில் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டுமென கோரி பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. எனவே, தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தேசிய போராட்டமாக எழுச்சிபெற்று வந்த நிலையிலேயே அப்போராட்டங்களை மலினப்படுத்தும் வகையிலும் தொழிலாளர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையிலும் எட்டப்படிருக்கும் உடன்பாடு முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.

படிக்க :
♦ இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !
♦ இலங்கை : தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலியை ரூ.1000 ஆக உயர்த்து | போராட்டம்

பேச்சு வார்த்தைகளின் போது கொடுப்பனவுகளுடன் 940 ரூபா வரை உடன்பாடு எட்டபட்டதாகவும் தாம் 1000 ரூபா அடிப்படை சம்பள நிலைப்பாட்டில் இருந்து தாம் பின்வாங்க போவதில்லை என கூட்டு ஒப்பந்ததில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தெரிவித்து வந்தன. மறுபுறதில் ஏனைய மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகள் இவ்விடயம் தொடர்பில் முன்னுக்கு பின் முரணான நிலைப்பாட்டையை வெளிப்படுத்தி வந்தன. இந்த பின்னணியில் நாட்டின் முற்போக்கு ஜனநாயக இடதுசாரி சக்திகளும் ஏனைய தொழிற்சங்கங்களும் இனைந்து முன்னெடுத்து வந்த எதிர்ப்பு இயக்கம் நாடளாவிய ரீதியில் வலுப்பட்டு வந்த நிலையில் அரசாங்கமும் தொழிற்சங்களும் இனைந்து இந்த துரோகத்தனமான சூழ்ச்சியை செய்திருக்கின்றன.

எனவே, தோட்டத்தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத, நாட்டில் இருந்து வரும் அடிப்படை சம்பள கொள்கைக்கு முரணாகவும் எந்த வகையிலும் வாழ்க்கை செலவுக்கு போதுமானதுமல்லாத இந்த தீர்மானத்தை எமது கட்சி முற்றாக நிராகிக்கிறது.

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராட முன்வரவேண்டும் எனவும் இடது சாரி முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஏனைய தொழிலிற்சங்கங்கள் தோட்டத்தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை வென்றெடுப்பதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதுடன். அதேவேளை, மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகள் தமது சுயநல மக்கள் விரோத அரசியலை கைவிட்டு தொழிலாளர்கள் சார்பாாக செயற்பட வேண்டும் எனவும் வலிறுத்துயுள்ளார்.

__________________

வரலாற்றில் மீண்டும் ஒரு மாபெரும் காட்டிக்கொடுப்பு அரங்கேறியுள்ளது.

தொண்டா, வடிவேல் இணைந்து இதனை நடத்தியுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்திற்காக போராடி வந்துள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி முழுமையாக ஆதரித்ததோடு எமது நேச சக்திகளான சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி, பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு போன்றவற்றுடன் இணைந்து அடிப்படை சம்பளம் ரூ 1000/- ஜ வென்றெடுப்பதற்காக போராடி வந்திருக்கின்றோம்.

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கூட்டு ஒப்பந்தம் காலாவதியானதற்கு பிறகு தோட்டத் தொழிலாளர்கள் ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி சக்திகள், இளைஞர்கள் என ஒன்றிணைந்து அடிப்படை சம்பளத்திற்காக போராடி வந்த போதும் தோட்டத் தொழிலாளர்களின் சந்தாவை பெற்று கம்பெனிகளுக்கு விலைபோகும் பிற்போக்கான தொழிற்சங்கங்கள் தாம் கூறிவந்த ஆயிரம் ரூபாய் கோரிக்கையை முதலாளிமாருக்காகவும் அரசாங்கத்துக்காகவும் விட்டுக் கொடுத்துள்ளனர். வெறும் 20 ரூபாய் சம்பள அதிகரிப்பே நடந்துள்ளது எனவும் இதனை மிக வன்மையாக கண்டிப்பதாகவும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையகப் பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் கூட்டு ஒப்பந்த காட்டிக்கொடுப்பிற்கு எதிராக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதிக்கும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கும் வைப்பிலிடப்படும் தொகையையும் சேர்த்து சம்பளம் அதிகரிக்கப்படுள்ளது என காட்டும் மாபெரும் துரோகத்தனம் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரமே நடந்துள்ளது.

இதற்கான முழுப் பொறுப்பையும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் மத்தியஸ்தம் வகித்த அரசாங்கமும் ஏற்க வேண்டும். 28.01.2019 அன்று அலரிமாளிகையில் வைத்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருட்டுக் கூட்டத்தின் தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தோட்ட தொழிலாளர்கள் இவ்வளவு போராடியும் வாய் திறக்காத ஜனாதிபதி யார் பக்கம் என்பதை காட்டியிருக்கின்றார்.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது பற்றி முன்னாள் மனித உரிமைப் போராளி மனோ கணேசன் என்ன சொல்லப் போகிறார்? நாங்கள் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுபவர்கள் இல்லை. கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் மட்டும் தான் காட்டிக் கொடுத்து விட்டார்கள் எனக் கூறி தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து தப்பிக்க போகிறாரா அமைச்சர் திகாம்பரம்? மைத்திரி, ரணில், தொண்டா, திகா, வடிவேல் சுரேஸ் தொழிலாளர் பக்கம் இல்லை நாங்கள் என்றுமே முதலாளிமார் பக்கம் என்று அடித்து கூறியுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறான அரசியல் பாதையை தெரிவுச்செய்ய போகிறார்கள் என்பது பற்றி பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், காணி, வீட்டுரிமை மற்றும் நிர்வாக சிவில் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி என்றுமே பயணிக்கும் எனவும் தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து போராடும் எனவும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் மலையகப் பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் தெரிவித்துள்ளார்.

தகவல் :
ஃபேஸ்புக்கில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி, இலங்கை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க