ந்தக் கால்கள் யாருடையது ? இந்த கால்களைக் கொண்ட மனிதரை சமீபத்தில் கிளினிக்கில் சந்தித்தேன். இந்த கால்களைக் கண்ட மாத்திரத்தில் இவரது கதையை கேட்க வேண்டும் என்று தோன்றினால், இவரது கதையைப் பகிர்கிறேன்.

இதில் நமக்கும் படிப்பினைகள் உண்டு;

இந்த கால்களைக் கண்டதும்… என்ன வேலை செய்கிறீர்கள் ஐயா என்றேன் ?

முதலில் எதுவும் சொல்லாமல் மழுப்பிய அவர் பிறகு “சாக்கடை அள்ளுற வேலை பாக்குறேன் ஐயா…” என்று மிகவும் குறுகிய குரலில் கூறினார்.

நான் கூறினேன் “ஐயா.. துப்புறவுப்பணியாளர்னு சொல்லுங்க. தூய்மைக் காவலர்னு சொல்லுங்க.. சங்கடப்படாதீங்கய்யா” என்றேன்.

50 களில் உள்ள அந்த மனிதர் கடந்த முப்பது வருடங்களாக நகராட்சி துப்புறவு பணியாளராக பணிபுரிகிறார். முப்பது ஆண்டுகள் ஆகியும் நிரந்தர வேலை இல்லாமல் தற்காலிக ஒப்பந்த முறை ஊழியராகவே இருக்கிறார்.

தினமும் 200 ரூபாய்க்குள்ளாகவே வருமானம். ஞாயிறு உட்பட வேலை உண்டு. வேலைக்கு செல்லாவிட்டால் கூலி கிடையாது.

அவரது பிள்ளைகள் பற்றி விசாரித்தேன்.

பையன்கள் மூன்று பேர், பெண்கள் இருவர்..

படிக்க:
அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download
♦ என்ன குற்றம் செய்தாள் இச்சிறுமி ?

அனைவருக்கும் திருமணம் நடந்து பேரன் பேத்திகள் பார்த்து விட்டார். ஆனாலும் தனது பிள்ளைகளில் யாரையும் படிக்க வைக்க முடியவில்லை என்ற கவலை அவருக்கு.

இப்போது பேரன் பேத்திகள் அரசு பள்ளியில் பயில்வதாக கூறினார்.

இதற்கு முன்… அதாவது முப்பது வருடங்களுக்கு முன் என்ன செய்தார் என்று கேட்டேன்.

தனது தாய், தந்தையை தான் நேரில் பார்த்தில்லை என்றும் தான் ஏழு வயதில் இருந்து மைசூரில் உள்ள ஒருவர் தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வருவதாகவும் கூறினார்.

சிறிது காலம் கோலார் தங்க வயல்களில் வேலை என அடுத்து தப்பியோடி தமிழகம் வந்து சேர்ந்துள்ளார்.

நான் கேட்டேன்?

ஏன் உங்கள் பிள்ளைகள் படிக்கவில்லை ஐயா?

என் பிள்ளைங்க படிக்குற காலத்துல சோத்துக்கே வழியில்லய்யா.. அதுனால அவய்ங்கல சீக்கிரம் வேலைக்கு போகச்சொல்ல வேண்டியதா போச்சு..

இப்ப என் பேரன் பேத்திக காலத்துல ஓரளவு சோத்துக்கு குறையில்லாம இருக்கோம். அதுனால படிக்க போகுதுங்க. அங்கயே சோறும் போடுறாங்கள்லய்யா.. அதுவும் தான் காரணம்..

“சரிங்கய்யா.. உங்க பேரன் பேத்திகள பனிரென்டாம் வகுப்பு வரை படிக்க வைப்பீங்களா? ”

“ஏனுங்கய்யா.. அதுக்கு மேலயும் படிக்க வைப்பேன். என் பேத்தி ஒன்னு நம்ம கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல மேற்படிப்பு படிக்குதுங்க”

“அருமைங்கய்யா… படிச்சா கொஞ்சம் கொஞ்சமா நம்ம கஷ்டம்லாம் போய்டும்.. தொடர்ந்து பேரன் பேத்திகள படிக்க வைங்க.. அவுங்க படிக்கற வரைக்கும் படிக்கட்டும்.. அதான் சரி”

“கண்டிப்பா படிக்க வைப்போம்யா.. எத்தன நாளைக்கு தான் இந்த வேலையே பாக்குறதுங்கய்யா…”

“…………”

நான் நினைத்துக்கொண்டேன்

படிக்க:
WHO : இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கு பத்தாண்டு ஊதியத்தை ஒதுக்க வேண்டும் !
♦ நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

நீட் மட்டும் இல்லாமல் இருந்தால் இவருடைய பேரன் பேத்திகளில் கூட ஒருவர் மருத்துவராகியிருக்க முடியும்…

மீண்டும் நினைத்தேன்

நீட் ஒருநாள் இல்லாமல் போனால்
இவருடைய பேத்திகள் பேரன்களில் யாரோ ஒருவர் மருத்துவர் ஆகக் கூடும்.

நீட் ஒழிந்தது என்ற நாள்
என் வாழ்வில் கொண்டாட்டத்துடன் இருக்கும்.

நீட் ஒரு சமூக நீதிக்கொல்லி

விடை தேடும் வினாக்களாய்
நம்முடன் நிற்கின்றன
நனவாகும் கனாக்கள்….

கனவுடன் 😌

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

1 மறுமொழி

  1. மருத்துவர் பரூக் அப்துல்லாவுக்கு எனது சில சந்தேகங்கள். நீட் தேர்வு சமூகநீதி கொல்லி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பிளஸ் டூ மார்க் அடிப்படையிலான தேர்ந்தெடுப்பு எந்தவகையில் சரி என்பது எனது கேள்வி. மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகள் அதிக நுண்ணறிவு தேவைப்படக்கூடியவை. இவற்றுக்கு நுழைவுத்தேர்வு இல்லாமல் எங்குமே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நான் கேள்விப்படவில்லை. மேலும் பிளஸ் 2 தேர்வானது அடிப்படையில் தகுதிகாண் தேர்வு. அதில் விரிவாக விடை எழுதும் ஒரு கேள்விக்கு இரண்டு மாணவர்கள் மிகச்சரியாக ஒரே மாதிரியான பதிலை தங்களது விடைத்தாளில் எழுதியிருந்தாலும் திருத்தக் கூடிய ஆசிரியரை பொருத்து ஒரு மாணவருக்கு பத்துக்கு ஒன்பது மார்க்கும் இன்னொருவருக்கு பத்துக்கு எட்டு மார்க்கும் கிடைக்கக்கூடும். ஆக மற்ற மாணவரை போலவே தானும் சரியாக விடை எழுதி இருந்தாலும் ஒரு மார்க் வேறுபாட்டில் இந்த மாணவர் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை இழக்கிறார். இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு?

    மருத்துவம், பொறியியல் ஆகியன மற்ற படிப்புகளை விட அதிக நுண்ணறிவு தேவைப்படக்கூடிய படிப்புகள். மேலும் சேருவதற்கு போட்டி கடுமையாக இருக்கக்கூடிய படிப்புகளும் கூட. நுண்ணறிவை சோதிப்பதற்கு நுழைவுத்தேர்வு தேவை அதுவும் multiple choice question answers முறை தான் சரி என்பது உலகளாவிய கல்வியாளர்களின் கருத்து. இதற்கு உங்கள் பதில் என்ன?
    அப்புறம் நாமக்கல் பிராய்லர் பள்ளிகளின் உற்பத்திகள் பிளஸ் டூவில் அதிக மார்க் எடுத்து சேர்ந்து வந்தது குறித்து என்ன கருத்து?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க