அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா? மாநில உரிமை பறிப்பா?

ந்திய உயர்கல்வி நிறுவனங்களை குறிவைத்து மோடி அரசு கொண்டுவந்துள்ள Institute of Eminence – IoE திட்டம் குறித்தும்; குறிப்பாக தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலை தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்தும் விளக்கி தொடர்ச்சியாக கருத்தரங்குகளை நடத்திவரும் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவினர் (Coordination Committee for Common Education – CCCE) சிறு நூல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

இத்திட்டம் மற்றும் அதன் அபாயங்கள் குறித்து அடிப்படையான புரிதலை வழங்குகிறது, இச்சிறுநூல். கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட வெகுமக்களிடம் இவை குறித்த விழிப்புணர்வு சென்றடைய வேண்டுமென்ற நோக்கில்,  CCCE அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அந்நூலின் மொத்தப் பகுதியையும் இங்கே பதிவிடுகிறோம். படியுங்கள்! பகிருங்கள்!!

பி.டி.எஃப் கோப்பாக தரவிறக்கம் செய்ய :

அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா? மாநில உரிமை பறிப்பா?

ண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் (Institute of Eminence – IoE) என்ற சிறப்புத் தகுதியைப் பெறுவதையொட்டி பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு ‘கல்வியாளர்களான’ ஐந்து அமைச்சர்கள் மற்றும் மூன்று செயலாளர்களை கொண்ட ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது . இக்குழு அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களை (CEG, ACT, SAP, MIT) மட்டும் தனியாக பிரிப்பது மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க புதிய பல்கலைக்கழகத்தை தொடங்குவது தொடர்பான பரிந்துரைகளை தமிழக அரசுக்கு வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தர வரிசைப் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டுமென்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு IoE என்ற திட்டத்தை 2016 ஆம் ஆண்டு மோடி அரசு அறிவித்தது. அதன்படி இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில், 10 அரசு மற்றும் 10 தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் என 20 உயர்கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவைகளை உலகத்தர வரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் இலக்கு. இதற்கென புதிய விதிமுறைகளை 2017 ஆம் ஆண்டு, UGC (Institutions of Eminence Deemed to be Universities) Regulations, 2017, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டது. அத்திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக்கழகமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசிடமிருந்து நிதிப்பங்களிப்பு தொடர்பான ஒப்புதல் கிடைத்த உடன் உயர் சிறப்புத் கல்வி நிறுவனம் (Institute ofEminence – IoE) என்ற சிறப்புத் தகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் என மனிதவள மேம்பாட்டு

அமைச்சகம் அறிவித்தது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கி இரண்டாகப் பிரித்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் என்று கல்வியாளர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் அச்சம் தெரிவிக்கிறனர். ஆனால், இதுகுறித்து எந்தவித கவலையும் இன்றி ஐந்து அமைச்சர்களைக் கொண்ட குழுவை அமைத்து சிறப்புத் தகுதி பெறுவதற்கான வேலைகளை முடுக்கியுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் அண்ணா பல்கலைக்கழகம்

IoE – இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 உயர்கல்வி நிறுவனங்களையும் நிர்வகிப்பதற்கு Empowered Expert Committee – EEC என்ற குழுவை மோடி அரசு உருவாக்கியுள்ளது. இக்குழு loE – இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பல்கலைக்கழகங்களின் ஆண்டு வரவு-செலவு கணக்கை பார்வையிடுவது; ஒவ்வொரு வருடமும் இப்பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்துள்ளனவா எனச் சோதித்தறிவது; இதில் தவறுகின்ற பல்கலைக்கழகங்களுக்கு அபராதங்களை நிர்ணயிப்பது போன்ற பணிகளை செய்யும். இதில் மாநில அரசுக்கோ பல்கலைக்கழக மானியக் குழுவிற்கோ எவ்வித அதிகாரமும் கிடையாது. EEC உறுப்பினர்கள் உயர் பதவிகளுக்கான நியமனம் தொடர்பான கேபினட் கமிட்டியினால் (Appointment Committee of Cabinet – ACC) நியமிக்கப்படுவார்கள். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை உறுப்பினர்களாக கொண்ட ACC கமிட்டியானது இந்திய அரசின் உயர் பதவிகளுக்கான அதிகாரிகளை பரிந்துரைக்கும் அமைப்பாகும். உதாரணமாக ரிசர்வ் வங்கியின் கவர்னர், பாதுகாப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (DRDO) தலைவர் போன்றவர்கள் இக்குழுவாலே நியமிக்கப்படுகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகம் மோடி மற்றும் அமித்ஷா – வின் கட்டுப்பாட்டின் கீழ் செல்கிறது என்றே சொல்லலாம். EEC – இன் தற்போதைய தலைவராக RSS ஆதரவாளரான முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் சமஸ்கிருதத்தையும் வேத-புராண குப்பைகளையும் கல்லூரிகளில் கட்டாய பாடமாக வைக்க பரிந்துரைத்தவர். மேலும் இரு அமெரிக்க பேராசிரியர்கள் உறுப்பினராக உள்ளனர்.

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் 1978-ல் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசினுடைய பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிதியுதவிகளின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் உயர்நிலையை எட்டியுள்ளது. மேலும் தமிழ்நாட்டினுடைய சமூக – பொருளாதார வளர்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். தற்போது மத்திய அரசு ‘உலகத் தரம்’ என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பறித்துக்கொள்ள முயற்சிக்கிறது. இது பற்றி எவ்விதக் கவலையும் கொள்ளாத அடிமை எடப்பாடி அரசோ அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்ப்பதற்கான வேலைகளை மறைமுகமாக செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல், நீட் தேர்வு பற்றிய உண்மைகளை மறைத்ததைப் போல அண்ணா பல்கலைக்கழக விசயத்திலும் உண்மைகளை மறைத்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் பல்கலைக்கழகம் இருக்கும் என்று மக்களிடம் பொய் சொல்லிவருகிறது.

எங்கிருந்து 1,750 கோடியை ஒதுக்குவது?

சிறப்புத் தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 8 மத்திய அரசினுடையது 2 மாநில அரசினுடையது. ஒன்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றொன்று மேற்கு வங்காளத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம். மாநில பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை பல்கலைக்கழக தர மேம்பாட்டிற்கு மாநில அரசும் நிதி பங்களிப்பு செய்ய வேண்டுமென்ற புதிய நிபந்தனையை மத்திய அரசு விதித்துள்ளது. இவ்விரு பல்கலைக்கழகங்களும் IoE – இல் சொல்லப்பட்டுள்ள இலக்கை அடைய 2000 கோடிக்கு மேல் நிதி தேவை என இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டது (ஆகஸ்டு 11, 2019). எனவே, மத்திய அரசு தருகின்ற 1000 கோடிக்கு மேல் செலவாகும் தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது பெரும் நிதிச் சுமை என்பதால் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வேண்டாம் என மேற்குவங்க அரசு அறிவித்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தினை மேம்படுத்த 2750 கோடி நிதி தேவை. மத்திய அரசின் நிதியுதவி போக மீதமுள்ள 1750 கோடியை தமிழக அரசுதான் வழங்க வேண்டும். அதாவது வருடத்திற்கு 300 கோடியிலிருந்து 400 கோடி ரூபாய் தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே நிதி ஒதுக்க வேண்டும்.

தமிழக உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் 98 அரசு கலைக் கல்லூரிகள் 39 உறுப்புக் கல்லூரிகள் 161 அரசு உதவி பெறும் கல்லூரிகள் என 300-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவைகளை நிர்வகிக்கும் உயர்கல்வித் துறைக்கு கடந்த ஆண்டு 4584.10 கோடியை தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது.

இதில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம், புதியக் கட்டிடங்கள் மற்றும் ஆய்வக செலவினங்கள் போக பல்கலைக்கழக மேம்பாட்டிற்காக வழங்கப்படும் தொகுப்பு நல்கைத் தொகையாக (Block grant) 13 பல்கலைக்கழகங்களுக்கும் சேர்த்து 538.10 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மிகக்குறைவானதாகும். தற்போதைய நிலையில் பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதாக தமிழக அரசே ஒப்புக்கொள்கிறது. திவாலாகும் நிலையில் உள்ள சென்னை பல்கலைக்கழகமே இதற்கு சிறந்த உதாரணம். அரசு ஒதுக்குகின்ற நிதிப் போதாமையால் மாணவர்களிடமிருந்து அதிக கல்விக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் வசூலிப்பதன் மூலமே பல்கலைக்கழகங்கள் தங்களின் செலவை ஈடுகட்டுகின்றன.

மேலும் கடந்த நான்கு வருடங்களாக தமிழக அரசு அறிவித்த புதிய அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் புதிய பாடப்பிரிவுகளுக்கான கட்டிடங்கள், ஆய்வகங்கள் மற்றும் பேராசிரியர்கள் நியமனங்கள் போன்ற அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் சிறப்புத் தகுதி என்ற பெயரில் 1750 கோடிக்கு மேல் நிதி வழங்க தமிழக அரசு ஆர்வம் காட்டிவருகிறது. இதற்கான நிதி எவ்வாறு திரட்ட முடியும்? மற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைப்பதன் மூலமும் மாணவர்களின் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலமுமே இந்த நிதியை திரட்டப் போகிறார்கள் என்பதே உண்மை .

நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை

IoE தகுதி பெற்ற பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு மாணவர் எண்ணிக்கையில் 30% வெளிநாட்டு மாணவர்களை அனுமதித்துக் கொள்ளலாம். பேராசிரியர் நியமனங்களில் 25% வரை வெளிநாட்டு பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம்; மாணவர் சேர்க்கை முற்றிலும் திறமை அடிப்படையிலேயே (merit based system) இருக்க வேண்டும் அதற்கான முறையை பல்கலைக்கழகமே தீர்மானித்துக் கொள்ளலாம் என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

IoE இன் நோக்கமே இருபது பல்கலைக்கழகங்களும் உலகத் தர வரிசைப்பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் வரவேண்டும் என்பதுதான். எனவே தமிழகம் மட்டுமில்லாது பிற மாநிலங்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதித்தாக வேண்டும். ஆனால் தமிழகத்தில் 69% இடதுக்கீடு உள்ளது. மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது. இந்நிலையில் மற்ற மாநிலத்தவர்களையும் அனுமதித்தால் எதனடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவார்கள்? நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதே மத்திய அரசு கடைபிடித்துவரும் நடைமுறை. எனவே அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களில் உள்ளது போல இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மேலும் நீட் தேர்வை போல பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என மோடி அரசு கூறிவருவதை பொருத்திப் பார்த்தால் இந்த அபாயம் புரியும்.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. படிக்கின்ற மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கிராமப்புற, சமுதாய பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மற்றும் விவசாய குடும்ப சூழலில் இருந்து வந்தவர்கள். நீட் தேர்வைப் போல நுழைவுத்தேர்வு முறை அமல்படுத்தப்பட்டால் பயிற்சி வகுப்புகளுக்கு பல இலட்சங்களை கட்டி படிக்கக்கூடிய வசதி உல்ளவர்கள் மட்டுமே வருங்காலங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க முடியும். இந்த “சிறப்புத் தகுதி” வாயிலாக ஏழை, கிராமப்புற மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். திறமை என்ற போர்வையில் ஐ.ஐ.டி.களைப் போல பணம் உள்ளவர்களுக்கே அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி என்ற நிலை உருவாகும். மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு எவ்விதமான அநீதியை தமிழக மாணவர்களுக்கு செய்ததோ அதுபோன்றதொரு அநீதியை தற்போது ‘சிறப்புத் தகுதி’ என்ற பெயரில் பொறியியல் படிப்பிற்கும் மோடி – எடப்பாடி அரசுகள் செய்ய முயல்கிறது.

69% இடஒதுக்கீட்டுக்கு வேட்டு

மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் பணிநியமனங்களில் 69% இடஒதுக்கீடு தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இது மற்ற மாநிலங்களிலுள்ள இடஒதுக்கீட்டு அளவை விட அதிகமாகும். மேலும் உள் இடஓதுக்கீடும் தமிழகத்தில் உள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலோ 49.5% இடஒதுக்கீடு மட்டுமே நடைமுறையில் உள்ளது. சிறப்புத் தகுதியின் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செல்வதாலும் பிற மாநில மாணவர்களை அனுமதிப்பது கட்டயம் என்பதாலும் முழுமையாக 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது. மொத்த மாணவர் எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதியை தமிழகத்திற்கு ஒதுக்குவார்கள். அல்லது மொத்தமாக மத்திய அரசினுடைய 49.5% இடஒதுக்கீட்டையே நடைமுறைப்படுத்துவது என்ற வகையில் இடஒதுக்கீடு இருக்கும்.

பேராசிரியர் பணிநியமனத்தில் 69% இடஒதுக்கீட்டை பின்பற்றுவதற்கும் வாய்ப்புகள் குறைவாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது. (THE CENTRAL EDUCATIONAL INSTITUTIONS (RESERVATION IN TEACHERS’ CADRE) ACT, 2019). அதன்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் அல்லது Potential for Excellence மற்றும் சிறப்புத் தகுதி வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்த இடஒதுக்கீடு திருத்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனங்கள் தங்களின் இலக்கை அடைய ‘திறமை’ அடிப்படையில் பணிநியமனம் செய்துக் கொள்ளலாம். அதனால்தான் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது இன்றுவரை சவாலாக உள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு IoE என்ற சிறப்புத் தகுதி வழங்கப்படுவதினால், உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்குள் வருவதற்கு ‘திறமை’ அடிப்படையில் பேராசிரியர்களை நியமிப்பது கட்டாயமாக்கப்படும். ஆகவே பேராசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை நீக்கப்பட்டு ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களைப் போல ‘திறமை’ என்ற போர்வையில் பார்ப்பனர்களோ, வெளிநாட்டு வாழ் இந்தியர்களோ (NRI) அல்லது தொழிற்சாலையில் அனுபவம் பெற்றவர்களோதான் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். உண்மை இப்படி இருக்க தமிழக உயர்கல்வித்துறை செயலாளரோ 69% இடஒதுக்கீட்டுக்கு சிக்கல் வராது என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக சொல்லி நயவஞ்சக நாடகமாடுகிறார்.

பல மடங்கு உயரும் கல்விக் கட்டணம் சிறப்புத் உயர்நிலை பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அக்கல்வி நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் அதில் அரசு தலையிடாது என விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசே தீர்மானிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் 29,000 ரூபாயாகவும், முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான ஆண்டு கல்விக் கட்டணம் 50,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கப்படுவதினால் கல்விக் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படும். இக்கல்லூரிகளுக்கு முழுமையான நிதி தன்னாட்சி (Financial autonomy) வழங்கப்படுவதினால் அக்கல்வி நிறுவனங்களே தங்களுக்கு தேவையான நிதியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒருமுறை வழங்கக்கூடிய நிதியை தாண்டி மத்திய மாநில அரசுகள் நிதி உதவி செய்யாது. இதுவே நிதி தன்னாட்சிக்கான அடிப்படையாகும். சிறப்பு உயர்நிலை பெறும் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் நிதியைக் கொண்டு புதிய கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேராசிரியர்களுக்கான சம்பளம், பேராசிரியர்களுக்கான ஊக்கத்தொகை, பல்கலைக்கழக பராமரிப்புச் செலவுகள் மற்றும் கடனை செலுத்துவது (HEFA loan) ஆகியவற்றுக்கான நிதியை மாணவர்களின் கல்விக்கட்டணம் மற்றும் ஆராய்ச்சிலிருந்து பெறப்படும் வருமானம் ஆகியவற்றிலிருந்து திரட்டிக்கொள்ள வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு.

இதனை தேசிய முக்கியத்துவம் கொண்ட கல்லூரிகளான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்.- களில் அமல்படுத்தி வருகின்றன. உதாரணமாக கடந்த பத்து வருடங்களில் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.களில் B.Tech படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் 25,000 லிருந்து 2 இலட்சமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் M.Tech படிப்பிற்கான கல்விக்கட்டணம் 20,000 இலிருந்து 2 இலட்சமாக IT Council உயர்த்தியது. கடந்த ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட 2019-2024 ஆண்டிற்கான செயல்திட்ட அறிக்கையில் B.Tech கல்விக்கட்டணத்தை 4 இலட்சமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.சிறப்புத் தகுதி பெற்ற கல்லூரிகளுக்கு நிதி தன்னாட்சி கட்டாயம் என்பதால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் கல்விக்கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகும். தற்போது 30000 ரூபாயாக உள்ளகல்விக்கட்டணம் சில வருடங்களுக்குள் 3 இலட்சமாக உயரும் அபாயம் உள்ளது.

யார் நலனுக்காக ‘சிறப்புத் தகுதி’?

சிறப்புத் தகுதியின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படுவதினால் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகம் பயனடைவார்கள் என்று ஆட்சியாளர்கள் வாதாடுகின்றனர். இந்த வார்த்தைகளுக்கு சிலர் பலியாகின்றார்கள்.

ஆனால் பொது நுழைவுதேர்வு, 69% இடஒதுக்கீடு நீக்கப்படுவது, அதீத கல்விக்கட்டணம், மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவது போன்ற பேராபத்துகள் எந்த வகையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நன்மை செய்யும். அரசு சொல்வதைக் கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கின்றனர். தரமான இலவச உயர் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இங்கே ‘தரம்’ என்ற போர்வையில் கிராமப்புற, சமுதாய – பொருளாதார நிலைகளில் பிந்தங்கிய சூழலில் இருந்து வரக்கூடிய மாணவர்களை பொறியியல் கல்வியில் இருந்தே வெளியேற்றுக்கின்ற சதித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உலகத் தரம் என்ற போர்வையில் யாருடைய நலனுக்காக இது கொண்டு வரப்படுகிறது?

கடந்த பத்து வருட காலமாகவே இந்திய பல்கலைக் கழகங்களை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவது என்ற பெயரில் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக மோடி ஆட்சியில் அந்நடவடிக்கைகள் எல்லாம் (GAIN, IDE, NIRF, SWAYAM, Study in India, SPARC, PMRF, IMPRINT) செயல் வடிவம் பெற்றுவருகின்றன. அதில் ஒன்றுதான் சிறப்புத் தகுதி எனும் IOE  திட்டமும். இந்திய பல்கலைக்கழகங்களை வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கக் கூடிய சந்தையாக மாற்றுவதும் அதன் மூலம் கொள்ளை இலாபமீட்டுவதுமே இவர்களின் நோக்கம்.

உலக தரவரிசைப் பட்டியலில் முதல் 100 பல்கலைக் கழகங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. இப்பல்கலைக்கழகங்களில் இலட்சக்கனக்கான வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். இம்மாணவர்களின் மூலம் பல்லாயிரம் கோடிகளை அப்பல்கலைக்கழகங்கள் வருவாயாக ஈட்டுகின்றனர். உதாரணமாக அமெரிக்காவில் மட்டும் 10 இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி படிக்கின்றனர். இதன் மூலம் 44.7 பில்லியன் டாலர் (3.19 லட்சம் கோடி) வருவாய் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கிடைக்கிறது (பிஸினெஸ் டுடே, நவம்பர் 18, 2019). இதில் 2 இலட்சம் இந்திய மாணவர்களும் அடக்கம். கல்விக்கட்டணங்கள் மற்றும் இதர செலவுகள் மூலம் இந்திய மாணவர்கள் மட்டும் ஒவ்வொரு வருடமும் 30 ஆயிரம் கோடிக்கு மேல் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கின்றனர்.

இவ்வருவாயின் பெரும் பகுதி அமெரிக்காவிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரி முதலாளிகளின் பைகளுக்கே செல்கின்றன. தரமான உயர்கல்வி என்ற போர்வையிலேயே அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் பின்தங்கிய நாடுகளிலிருந்து மாணவர்களை ஈர்ப்பதன் மூலம் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. இதற்காகவே பல்கலைக்கழகங்களுக்கான தரப்பட்டியலும் தயாரிக்கப்படுகிறது. இப்பல்கலைக்கழக உலக தரவரிசையை தனியார் தரமதிப்பீட்டு நிறுவனங்களே (TIMES Ranking, QS Ranking) நிர்ணயிக்கின்றன. இந்நிறுவனங்கள் நிதிமூலதனங்களோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவை. உதாரணமாக TIMES நிறுவனமானது அமெரிக்காவிலுள்ள TPG Capital என்ற தனியார் முதலீட்டு (private equity) நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். பல்கலைக்கழகத்தின் தரத்தினை நிர்ணயிப்பதற்காக இந்நிறுவனங்கள் வகுத்துள்ள அளவுகோல்கள் பெரும்பாலும் ஆராய்ச்சிக் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஆராய்ச்சி கட்டுரை வெளியிடும் பதிப்பகத்தார், பன்னாட்டு கல்வி முதலாளிகள், தனியார் முதலீட்டு நிறுவனங்கள் ஆகியோரின் நலன்களில் இருந்தே வகுக்கப்படுகிறது.

இந்தியாவிலும் உயர்கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அவற்றை உலகத்தர வரிசை பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சார்க் நாடுகளிலிருந்து மாணவர்களை இந்தியாவில் உயர்கல்வி படிக்க ஈர்ப்பதன் வாயிலாக அதிக லாபம் ஈட்டமுடியும் என்ற நோக்கத்திலிருந்தே பல்கலைக்கழக சிறப்புத் தகுதி (IoE) திட்டம் முன்வைக்கப்படுகிறது. இதற்காக Study in India என்ற திட்டத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் படிக்க வரும் 1000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க 300 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் நம்முடைய மாணவர்களுக்கான (தாழ்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புகளுக்காக வழங்கப்படும் தொகை) கல்வி உதவித்தொகையை படிப்படியாக குறைத்து வருகிறது மோடி அரசு. பார்ப்பனியத்தால் பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ள இந்திய சமூகத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய முதலாளிகளின் இலாப வெறிக்காக அந்நாடுகளில் அமல்படுத்தப்படும் திட்டத்தை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்துவது எவ்விதத்தில் சரி?

படிக்க:
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !
தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !

IoE திட்டத்தில் தேர்ந்தெடுப்பட்டுள்ள 10 தனியார் பல்கலைக்கழகங்களில் 5 பல்கலைக்கழகங்கள் அம்பானி, மிட்டல் உள்ளிட்ட பெரு முதலாளிகளுக்கு சொந்தமானது. கடந்த 15 வருடங்களுக்குள்ளாக ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகங்கள் நூற்றாண்டைக் கண்ட பல அரசு பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளை விட சிறந்தவைகளாக மோடி அரசால் அறிவிக்கப்படுகின்றன. அதன் உச்சமாக கட்டிடமே கட்டப்படாத அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகத்திற்கும் மிட்டலின் பாரதி பல்கலைக்கழகத்திற்கும் மத்திய அரசு உயர் சிறப்புத் தகுதியை கொடுத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 அரசு பல்கலைக்கழங்களைத் தவிர உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஜாமியா மில்லியா, டில்லியில் உள்ள அலிகார், தமிழகத்தில் உள்ள பாரதியார், சென்னை பல்கலைக்கழகம், ஆந்திரா பல்கலைக்கழகம் மற்றும் ஐந்து ஐ.ஐ.டி.கள், இரண்டு என்.ஐ.டி.கள் உட்பட 48 அரசு உயர்கல்வி நிறுவனங்களை IOE திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முன்பே குறிப்பிட்டது போல இப்பல்கலைக்கழகங்கள் அரசின்கட்டுப்பாட்டின்கீழ் வராது, ஏறத்தாழ தனியார் பல்கலைக்கழங்களை போலவே செயல்படும். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி இவர்கள் தங்களுக்கான நிதியை உயர்கல்வி நிதி ஆணையத்திடமிருந்து (HEFA) கடனாகவோ அல்லது கார்ப்பரேட்டுகளிடமிருந்து நன்கொடையாகவோ (Philontharphy) பெற்றுக்கொள்ளவேண்டும். IoE, உயர்கல்வியை சர்வதேசியமாக்கல் (Internationalization of Higher Education) என்ற திட்டங்களின் மூலம் இந்திய முதலாளிகள் பெரும் கொள்ளையடிப்பதை உத்திரவாதப்படுத்துவதோடு முன்னணியான அரசு பல்கலைக்கழகங்களையும் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பதற்கான வேலையையும் மோடி அரசு செய்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான சிறப்புத்தகுதி எனும் IOE திட்டம், உயர் கல்வியை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாகும். தரமான மற்றும் இலவச உயர் கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமை. அதற்கு கோத்தாரி குழு பரிந்துரைத்ததை போல GDP-இல் 6% கல்விக்காக மத்திய அரசு ஒதுக்க வேண்டும். ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக 3% க்கும் குறைவாகவே மத்திய மாநில அரசுகள் ஒதுக்கியுள்ளன. மேலும் மோடி ஆட்சியில் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிபடியாக குறைக்கப்பட்டும் வருகிறது. உலகவங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் வழிகாட்டுதல்படி கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட வரும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையின் விளைவாக 70 சதவிகித உயர்கல்வி நிறுவனங்கள் தனியாரிடம் உள்ளன. எஞ்சியுள்ள அரசுப் பல்கலைக்கழகங்களையும் உலகத்தரம் என்ற போர்வையில், கார்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கான ஒரு முயற்சியாக IOE திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

69% இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகைகள் போன்ற சமூகநீதி கொள்கைகளினால் பின்தங்கிய சமூக-பொருளாதார நிலைமைகளில் இருந்து வந்த லட்சக்கனக்கான மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அரசு பல்கலைக் கழகங்களின் மூலம் உயர்கல்வி பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் உயர்கல்வி பெற்றவர்கள் (Gross Enrollment Ratio-49%) உள்ளனர். ஆனால் தற்போது உயர் சிறப்புத் கல்வி நிறுவனம் என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்வதும் அதை மறைமுகமாக தனியார்மயப்படுத்துவம் அரங்கேற்றப்படுகிறது. மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை முறியடிக்க மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து போராடுவது மிக  அவசியமாகும்.

நன்றி :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – சென்னை,
Coordination Committee for Common Education – CCCE, Chennai,
தொடர்புக்கு : 94892 35387, 7299361319.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க