தரம் தகுதி பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !

“5-ம் வகுப்புக்கும், 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த வருடம் மட்டுமல்ல, எந்த வருடமும் கிடையாது” என்று 2019 பிப்ரவரியில் திட்டவட்டமாகச் சொன்னார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அதே நபர், அதே வாய், அதே பிரச்சினை. ஆனால், இப்போது 2019 செப்டம்பரில், “5 மற்றும் 8- வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு” என்கிறார்.

இந்த அறிவிப்பு வந்து இவ்வளவு நாட்களாகியும் இப்போது வரை, பள்ளிக்கூடங்களுக்கோ ஆசிரியர்களுக்கோ இது குறித்த அரசாணை, அறிவுறுத்தல் எதுவும் அளிக்கப்படவில்லை. அப்படியே வந்தாலும், “1 முதல் 8 வகுப்புகளுக்கு முப்பருவத் தேர்வுமுறையை வைத்துக்கொண்டு பொதுத் தேர்வை எப்படி நடத்துவது?” என்று எத்தனை யோசித்தாலும் ஆசிரியர்களுக்கு விளங்கவில்லை. மேலும், இந்தக் கல்வியாண்டில் முப்பருவத்தின் முதல் பருவத் தேர்வு ஏற்கெனவே முடிந்துவிட்டது. “அது பொதுத் தேர்வின் ஓர் அங்கமா? மீதமுள்ள இரு பருவத் தேர்வுகளும் பொதுத் தேர்வாகக் கருதப்படுமா?” என்பதும் ஆசிரியர்களுக்கு விளங்கவில்லை.

ஏற்கெனவே 10, 12- வகுப்புகளுக்கு நடைபெற்று வரும் பொதுத் தேர்வு; கடந்த கல்வியாண்டிலிருந்து இதனுடன் சேர்ந்துள்ள 11 வகுப்புக்கான பொதுத் தேர்வு. இரண்டுக்கும் கல்வியாண்டின் இரு மாதங்களை ஆசிரியர்கள் ஒதுக்க வேண்டியுள்ளது. இதில் புதிதாக 5, 8-ம் வகுப்புகளும் சேரும்போது, அதுவும் முப்பருவத் தேர்வு முறையே பொதுத் தேர்வு என்றானால், ஆண்டு முழுவதும் ஆசிரியர்கள் தேர்வு மட்டுமே நடத்திக் கொண்டிருக்க வேண்டிய சூழல் ஏற்படும். பாடம் நடத்த முடியாது. இவையெல்லாம் நிர்வாகம் சார்ந்த நடைமுறைச் சிக்கல்கள்.

இவற்றைக் கடந்த முதன்மையான சிக்கல் என்பது, அவ்வளவு இளம் வயதில் பொதுத் தேர்வு என்பது மிகப்பெரிய உளவியல் வன்முறை. கல்வியின் மீதும் படிப்பின் மீதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது. நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட கட்டமைப்புடன் இயங்கும் பின்லாந்து போன்ற முதலாளித்துவ நாடுகள் 7 வயதில்தான் குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வியைத் தொடங்குகின்றன. 10 வயது வரை தேர்வு என்பதே கிடையாது. ஆனால், இங்கு 4 வயதில் பள்ளிக்கு அனுப்பப்பட்டு, 5 வயதில் முறைப்படியான தேர்வுகள் தொடங்குகின்றன. அது போதாதென்று, 10 வயதில் பொதுத் தேர்வு என்பது நினைத்துப் பார்க்க முடியாத மன நடுக்கத்தைக் குழந்தைகளிடம் உருவாக்கும். தரமான கல்விமுறையில் தேர்வுகள் குறைவாக இருக்க வேண்டும். இவர்களோ தரம் என்ற பெயரில் மேலும், மேலும் தேர்வுகளை அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.

இந்தத் தேர்வு வன்முறைக்கு இலக்காகப் போகும் குழந்தைகள் யார் என்ற கேள்வி முக்கியமானது. கடந்த 30 ஆண்டுகளாக இங்கே ஊதி உருப்பெருக்கப்பட்டிருக்கும் தனியார் கல்வி மோகத்தின் விளைவாக, மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். அடகுவைக்க ஒரு குண்டுமணி தங்கம் இல்லாதவர்கள்தான் அரசுப் பள்ளிகளை நோக்கி வருகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட உதிரித் தொழிலாளிகள், வீட்டு வேலைக்குச் செல்லும் கைம்பெண்கள் –  இப்படிப்பட்ட வர்க்கப் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்தான் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் கணிசமானோர் தாழ்த்தப்பட்ட குழந்தைகள். அரசுப் பள்ளிகளுக்கே உரிய அனைத்து வசதிக் குறைவுகளையும், தடைகளையும் எதிர்கொண்டு இவர்கள் கல்வியின் கரம் பற்றி மேலெழும்பி வந்தாக வேண்டும். இவர்களின் தலையில்தான் தரம் என்ற பெயரில் புதிய பொதுத் தேர்வுகளை சுமத்துகிறது அரசு.

படிக்க :
♦ திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்
♦ தன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் !

2009-ம் ஆண்டு, அப்போது இருந்த காங்கிரஸ் அரசு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தது. இதன்படி நாடு முழுவதும் 1 முதல் 8 வகுப்புகள் வரையிலும் யாரையும் “ஃபெயில்” ஆக்கக்கூடாது, அனைவரும் தேர்ச்சி என்பது நடைமுறைக்கு வந்தது. இந்த முறையானது, கல்வியின் தரத்தை அதிகரித்துள்ளதா, குறைத்துள்ளதா என்பது ஆய்வுக்குரியது. ஏனெனில், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களால் உயிர் எழுத்துக்களைக்கூட வாசிக்க, எழுத முடியாத சூழல் நிலவுகிறது. நாம் படிக்காவிட்டாலும் “பாஸ் ஆகிவிடுவோம்” என்ற மனநிலை மாணவர்களிடமும், “பாடம் நடத்தினால் என்ன, நடத்தாவிட்டால் என்ன? எல்லோரையும் பாஸ் போடத்தானே போகிறோம்?” என்ற மனநிலை ஆசிரியர்களிடமும் கணிசமாக உருவாகியிருக்கிறது. இதை மாற்றிக் கல்வித் தரத்தின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும்; தேர்வுகளற்ற முறையிலும் தரமான கல்வி சாத்தியம் என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஆனால், இதற்கான வழிமுறை புதிய பொதுத் தேர்வுகள் அல்ல. அதேநேரம், இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறையானது, பள்ளி இடைநிற்றலை மிகக் கணிசமாகக் குறைத்திருக்கிறது என்பதும் உண்மை. 2009-ல் இச்சட்டம் அமலுக்கு வந்தபோது 11.21 சதவீதமாக இருந்த தேசிய இடைநிற்றல் விகிதம், 2017-ம் கல்வி ஆண்டில் 3.61% ஆகக் குறைந்துள்ளது.

மரத்தடியில் பாடம் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் அவலநிலை. இவர்களுக்குத் தேவை வகுப்பறையா, பொதுத்தேர்வா ?

2019 பிப்ரவரியில் கட்டாயத் தேர்ச்சி சட்டத்தில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டது மத்திய பா.ஜ.க. அரசு. அப்போதே இதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தாலும், அடுத்து வந்த தேர்தல் பரபரப்பில் அது அத்தோடு அமுங்கிப்போனது. பின்னர் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., தேசியக் கல்விக் கொள்கை 2019 அறிமுகப்படுத்தியது. அக்கொள்கையோ 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்துத் திட்டவட்டமாக எதையும் சொல்லாத தமிழக அரசு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது. எட்டையும் ரெண்டையும் கூட்டினாலும், ரெண்டையும் எட்டையும் கூட்டினாலும் விடை என்னவோ பத்துதான். மொத்தத்தில் சின்னஞ்சிறு பிஞ்சுகளை பொதுத் தேர்வு என்னும் சித்திரவதைக் கூடத்துக்குள் அனுப்பி வைப்பதில் மோடி அரசும், எடப்பாடி அரசும் போட்டிப் போடுகின்றன.

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். ஆனால் முதல் மூன்று ஆண்டுகளுக்கு “ஃபெயில் இல்லை” என்பது தமிழக அரசின் அறிவிப்பு. அதாவது, முதலில் பொதுத் தேர்வு என்ற பழக்கத்துக்குப் பயிற்றுவிப்பது; பின்னர், இறுக்கிப் பிடிப்பது.

நமது கல்விமுறையில் அடிப்படையிலேயே உள்வாங்கும் தன்மை இல்லை. வடிகட்டுவதே இதன் பண்பு. 100 பேர் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தால் 10-ம் வகுப்பில் வெளிவரும்போது, அது 60 பேராகச் சுருங்கிவிடுகிறது. மீதமுள்ள 40 பேர் வெவ்வேறு காரணங்களால் கல்வியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

படிக்க :
♦ 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE
♦ திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !

ஒரு வறிய குடும்பத்தின் பெற்றோர், “நாம்தான் இப்படி லோல்படுகிறோம். பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்துவிடுவோம்” என்றெண்ணிப் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்றால், அவன் படிப்பில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பும் ஊக்கத்தை பெற்றோர் பெறுவர். மாறாக, 5-ம் வகுப்பில் பொதுத் தேர்வு வைத்து அவனை ஃபெயில் ஆக்கினால், “நீ படித்துக் கிழித்தது போதும், வேலைக்குப்போ” என்றுதான் யோசிப்பார்கள். இது ஒரு யதார்த்தம். பெண் குழந்தைகள் ஃபெயிலானால் சர்வ நிச்சயமாக அத்தோடு அவர்களின் கல்வி காலி.

மொத்தத்தில் இந்தப் புதிய பொதுத் தேர்வு அறிவிப்பானது, பெரும் தொகையிலான மாணவர்களைப் பள்ளியில் இருந்து வெளியேற்றும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. “அனைவருக்கும் கல்வி தேவையில்லை” என்பதே இந்த அரசின் மறைமுகச் செயல்திட்டம். அப்படிப் பள்ளியில் இருந்து வெளியே வருவோரை என்ன செய்வது?

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்து பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டால், குழந்தைகள் போய் விழும் இடம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

அதற்குத்தான் பள்ளிக்கூடத்திலேயே தொழிற்கல்வியைப் பரிந்துரைக்கிறது தேசியக் கல்விக் கொள்கை. 2015-ல் மத்திய அரசு கொண்டுவந்த திறன் இந்தியா (Skill India) திட்டத்துக்குத் தேவையான உடல் உழைப்புத் தொழிலாளர்களை அணிதிரட்டும் நோக்கமும் இந்தப் பொதுத் தேர்வின் பின்னே இருக்கக்கூடும். மேலும், இப்படி கீழ் மட்டத்திலேயே ஏழைகளையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் கொஞ்சம், கொஞ்சமாக வடிகட்டுவதன் மூலம் உயர் கல்வி என்பதை உயர்சாதியினருக்கு மட்டும் பாத்தியப்பட்டதாக மாற்றிக்கொள்ள முடியும். இடமும் இருக்கும், ஒதுக்கீடும் இருக்கும், படிக்க ஒடுக்கப்பட்ட சாதி-யை சேர்ந்த மாணவர்கள்தான் இருக்க மாட்டார்கள். அப்படியொரு மீண்ட சொர்க்கத்தை சனாதன ராஜ்ஜியத்தை அரசியல் சாசனச் சட்டத்தின்படியே நம் கண் முன்னே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேநேரம், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கும் பெற்றோர், இந்தச் சுழலில் இருந்து தப்பித்துவிட முடியும் என்று கனவு காண முடியாது. 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்பது தனியார் பள்ளிகளையும் சேர்த்துதான். ஏற்கெனவே 10-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பிலும் அதிக தேர்ச்சி விகிதம் காட்டவேண்டும் என்பதற்காக 9-ம் வகுப்பிலும் 11-ம் வகுப்பிலும் சுமாராக படிக்கும் மாணவர்களை வெளியேற்றுகிறார்கள். இனிமேல் அதை 4-ம் வகுப்புக்கும் 7-ம் வகுப்புக்கும் நீட்டிப்பார்கள். தங்கள் பள்ளியின் ‘தரத்தை’க் காப்பாற்றிக்கொள்ள இதை நிச்சயமாக செய்வார்கள். இத்தகைய “மறைமுக இடைநிற்றலில்” இருந்து தமது பிள்ளைகள் தப்பிக்க நடுத்தர வர்க்கப் பெற்றோர் தனிப் பயிற்சியை நோக்கி ஓடுவது இன்னும் விரிவாகும், தவிர்க்க முடியாததாக மாறும். அந்த வகையில் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் இந்தப் புதிய பொதுத் தேர்வு அறிவிப்பு கூடுதல் தலைவலிதான்.

மொத்தத்தில் மைய அரசும், மாநில அரசும் அனைவரும் படித்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. ஏற்கெனவே பல தலைமுறையாகக் கல்வி பெற்ற உயர்வர்க்கப் பிரிவினர் மட்டும் படிக்கும் வகையில் கல்விமுறையை மாற்றி அமைப்பது, மற்றவர்களை வடிகட்டி வெவ்வேறு உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபடுத்துவது, குலத்தொழில் நோக்கிச் செல்வதற்கு ஊக்குவிப்பது என்பதுதான் இந்த இந்துத்துவக் கும்பலின் சிலபஸ்.

 பி.டி.

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க