Wednesday, December 11, 2024
முகப்புசெய்திஇந்தியாதன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் !

தன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் !

லடாக் மக்களை நம்பவைத்து கழுத்தறுக்கும் செயல் இது. லே மாவட்ட மக்கள் யூனியன் பிரதேசம் என்ற பெயரில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தற்போது உணர்ந்துள்ளார்கள்.

-

ம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து லடாக் பகுதியை தனியாகப் பிரித்ததைத் தொடர்ந்து லடாக் மக்களின் உரிமையைப் பாதுகாக்க பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கார்கில் பகுதியில் கடந்த அக்டோபர் 29 முதல் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து லடாக் பகுதியைத் தனியாகப் பிரித்து ஜம்மு காஷ்மீரையும், லடாக்கையும் இரு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆகஸ்ட் 5 அன்று அறிவித்தது மத்திய பாஜக அரசு.

காஷ்மீரின் லடாக் பகுதி, கார்கில் மற்றும் லே ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் கார்கில் மாவட்டத்தில் முசுலீம்கள் அதிகமாக வாழ்கின்றனர். லே மாவட்டத்தில் புத்த மதத்தைத் தழுவியவர்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.

படிக்க :
♦ காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் !
♦ இந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் ! | படக் கட்டுரை

லே மாவட்டத்தில் வாழும் மக்கள் 1949-ல் இருந்தே லடாக் பகுதி இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர். இம்மக்கள் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட போது அதனை வரவேற்றனர்.

ஆனால் வேலைவாய்ப்பு மற்றும் சொத்து வாங்கும் உரிமை உள்ளூர் மக்களுக்கு மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் கார்கில் மற்றும் லே மாவட்ட மக்கள் இருவரும் உறுதியாக இருந்தனர்.

லே மாவட்ட மக்களைப் பொருத்தவரையில் புதிய யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள லடாக் பகுதியில் ஒரு சில வடகிழக்கு மாநிலங்களைப் போல, அரசியல்சாசனப் பிரிவு 6-ன் படி தன்னாட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கட்ந்த 3 மாதங்களாக முன்வைத்து வருகின்றனர். இதனை கார்கில் பகுதி மக்களும் ஆதரித்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மக்கள்

பல்வேறு சமூக, மத மற்றும் அரசியல் நிறுவனங்கள் கூட்டிணைந்த ”ஒன்றுசேர்ந்த கார்கில் போராட்டக் குழு”வினர் (Joint Action Committee of Kargil) இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் பிரதிநிதிகளைச் சந்தித்து தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.

ஆனால் இது தொடர்பாக மாநில நிர்வாகமோ, மத்திய அரசோ எவ்வித பதிலும் அளிக்காத சூழலில் தற்போது அவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.

வேலை மற்றும் நில உரிமையைப் பாதுகாப்பது, “தன்னாட்சி மலை கமிட்டிக்கு” சட்டமன்றத்திற்கான அதிகாரம் வழங்கப்படுதல், லடாக் யூனியன் பிரதேசத்தின் பெயரை லே- கார்கில் யூனியன் பிரதேசம் என மாற்றுவது ஆகியவையே அவர்களது பிரதான கோரிக்கைகள் ஆகும்.

படிக்க :
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !
♦ பாட நூலிருந்து திப்பு சுல்தான் வரலாற்றை 101% நீக்கியே தீருவோம் : எடியூரப்பா !

இந்தக் கோரிக்கையை ஆகஸ்ட் 5-க்குப் பிறகு பலமுறை முன்வைத்த இம்மக்களிடம் அக்டோபர் 31-க்குள் செய்து தருவதாகக் கூறியுள்ளனர் அதிகாரிகள். ஆனால் எதுவும் செய்யப்படவில்லை. கடைசி சந்திப்பில் இந்த மாற்றங்களைச் செய்ய இன்னும் 2 ஆண்டுகளோ அதற்கு அதிகமாகவோ கூட ஆகலாம் எனத் தெரிவித்திருக்கின்றனர்.

“இது லடாக் மக்களை நம்பவைத்து கழுத்தறுக்கும் செயல். லே மாவட்ட மக்கள் யூனியன் பிரதேசம் என்ற பெயரில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தற்போது உணர்ந்துள்ளார்கள். அதிகாரிகளின் இந்த வெற்று வாக்குறுதிகளை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் எங்களது ஒவ்வொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்று கூறுகிறார் ஒன்றுபட்ட கார்கில் போராட்டக் குழுவின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் கார்கில் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்கர் அலி கரபலை.

வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்ற பெயரிலான காவிகளின் நயவஞ்சகத்தைப் புரிந்துகொள்ளத் தவறிய லே மாவட்ட மக்கள் தற்போது உண்மையை உணர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்.


நந்தன்

நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க