privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாபாட நூலிருந்து திப்பு சுல்தான் வரலாற்றை 101% நீக்கியே தீருவோம் : எடியூரப்பா !

பாட நூலிருந்து திப்பு சுல்தான் வரலாற்றை 101% நீக்கியே தீருவோம் : எடியூரப்பா !

“வரலாற்று பாட நூல்களிலிருந்து திப்பு சுல்தான் குறித்த பாடங்களை நீக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற தலைப்புகளுக்கு பாடநூலில் இடமில்லை.” என எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.

-

திப்பு சுல்தானை மகிமைப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள பாட நூல்களை 101% நீக்கியே தீருவோம் என தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா. இந்த ‘நீக்குதல்’ பணியை அம்மாநிலத்தின் முதன்மை மற்றும் இடைநிலை கல்வித் துறை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பெங்களூருவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய எடியூரப்பா இதைத் தெரிவித்தார். “வரலாற்று பாட நூல்களிலிருந்து திப்பு சுல்தான் குறித்த பாடங்களை நீக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற தலைப்புகளுக்கு பாடநூலில் இடமில்லை. 101% இதை நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை” என அவர் தெரிவித்திருக்கிறார்.

பாஜக முதலமைச்சரே இப்படி கூறிவிட்டபின் அவரது அமைச்சர்களும் கட்சியின் தலைவர்கள் திப்பு சுல்தான் மீதான வெறுப்பு அரசியலை தூசி தட்டியுள்ளனர். கல்வியமைச்சர் எஸ். சுரேஷ் குமாரும் பாஜகவைச் சேர்ந்த ரஞ்சன் அப்பாசுவும் மாநிலத்திலிருந்து திப்பு சுல்தான் முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழாவை காங்கிரஸ் கொண்டாடிவரும் நிலையில், சர்ச்சையை கிளப்பும் வகையில் பாஜக அரசாங்கம் இந்த அறிக்கைகளை விட்டு வருகிறது.

18-ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான், ஆங்கிலேயர்கள் எதிர்ப்பு போரிட்டு மாண்டவர். முசுலீம் என்பதாலேயே இந்துத்துவ கும்பல் அவர் மீதான வெறுப்பை உமிழ்ந்து வருகிறது.

கர்நாடக பாஜக அரசாங்கத்தின் பாட நூல் நீக்க முடிவு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள திப்புவின் வாரிசுகள், இதில் அரசியல் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

படிக்க :
♦ திப்பு : காவிக் கும்பலின் குலைநடுக்கம் !
♦ இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !

திப்பு சுல்தானின் வழிதோன்றல்களில் ஒருவரான ஷாகித் ஆலம், “திப்பு ஒரு விடுதலை வீரர். அவரை ஏன் பாடநூலிலிருந்து ஒருவர் நீக்க வேண்டும்? நாங்கள் வருத்தப்படுகிறோம். மேலும், திப்பு சுல்தானின் தகுதியை எவராலும் கீழிறக்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த ‘வரலாற்றில் திப்பு சுல்தானின் இடத்தை எவ்வாறு படிப்பது?’ என்ற கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “திப்பு சுல்தானை பாடநூல்களிலிருந்து நீக்குவது, ஆரம்பகால நவீன இந்தியாவின் வரலாற்று அடிப்படையை மாற்றும்.

மேலும் 18-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டனின் காலனியாதிக்க தடத்தை இந்தியா முழுவதும் வேகமாக பரப்பிக் கொண்டிருந்த வேளையில், தென்னிந்தியாவின் சமூக மற்றும் அரசியலின் முக்கியமான தனிநபரை மறையச் செய்துவிடும்”.

திப்புவின் வழித்தோன்றல்களில் மற்றொருவரான அன்வர் அலி ஷா, தன்னுடைய சொந்த நலனுக்காக திப்புவின் பெயரை அரசு பயன்படுத்த நினைப்பதாக விமர்சித்துள்ளார்.

“காந்தியை கொன்ற போதிலும் அவர்கள் அரசியல் ஆதாயங்களுக்காக நாதுராம் கோட்சேவை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் காந்தி ஜெயந்தியையும் கொண்டாடுகிறார்கள். கர்நாடக அரசு எடுக்கும் முடிவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதன் மூலம் சிறந்த ஆட்சியாளரான திப்புவை இழிவுபடுத்த நான் விரும்பவில்லை. பாடப்புத்தகத்திலிருந்து அவரது பெயரை நீக்குவதன் மூலம் அவருடைய பங்களிப்பு ஒன்றுமில்லை என ஆகிவிடாது” என தெரிவித்துள்ளார் ஷா.

ஆங்கிலேயர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு, எப்போதும் விசுவாசமான ஆளாக இருப்பேன் என பத்திரம் எழுதிக்கொடுத்த சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டும் என காவிகள் துடிக்கிறார்கள். அதே சமயம் முசுலீம் என்ற காரணத்தாலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற ஒரு வீரரை வரலாற்றிலிருந்து நீக்க வேண்டும் என்றும் சபதமேற்கிறார்கள். மொத்தத்தில் நாடு வேகமாக காவி மயமாகிக்கொண்டிருக்கிறது.


அனிதா
நன்றி : த வயர்.