காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் !

தென்ன காஷ்மீருக்கு மட்டும் தனிச் சட்டம்? அவனுக்கு மட்டும் கொம்பா முளைத்திருக்கிறது?  இதுதான் சட்டப்பிரிவு 370 பற்றி ஒரு பாமரனின் பார்வை. காஷ்மீரில் வெளியாள் யாரும் சொத்து வாங்க முடியாதாம்” என்று பா.ஜ.க.வினர் பேசினால், சொந்த ஊரில் சென்ட் நிலம் வாங்க முடியாதவன்கூடப் பெரிதும் அதிர்ச்சி அடைகிறான்.

தற்போது 370-ஐ செயலற்றதாக்கி, காஷ்மீரில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டார், மோடி. இதனால் உடனே மகிழ்ச்சி அடைபவர்கள் யார் என்று பார்ப்போம். விடுமுறை நாட்களுக்கு இரண்டாவது வீடு ஒன்று வேண்டும் என்று விரும்புகிறவர்களை ஜம்மு காஷ்மீர் ஈர்க்கும்” என்கிறார் மும்பையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தும் பங்கஜ் கபூர். அதாவது, கொடநாடு எஸ்டேட் போன்ற சொத்துகளை வாங்க முடிந்தவர்களுக்கு மகிழ்ச்சி என்பது இதன் பொருள்.

பல பத்தாண்டுகளாக காஷ்மீரில் வீட்டு மனை விலை உயரவே இல்லை. இந்தியாவின் சிறு நகரங்களில்கூடச் சதுர அடி 3000 ரூபாய் வரை விற்கும்போது, ஸ்ரீநகரின் மையப்பகுதியிலேயே சதுரஅடி 2300 ரூபாய்க்கு மேல் போகவில்லை” என்று வருத்தப்படுவது ஸ்ரீநகரில் உள்ள ஒரு வீட்டு உரிமையாளர் அல்ல, பிசினஸ் டுடே பத்திரிகை.

அம்பானி, அதானி முதல் எடப்பாடி, சசிகலா வரையிலான தேசபக்தர்களுடைய அடிப்படை உரிமையான சொத்து வாங்கும் உரிமையை ஒரு சட்டப்பிரிவு தடுத்து நிறுத்தியிருக்கிறது என்றால், அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?


ந்திய அரசியல் சாசனத்தின் 19 பிரிவு சொத்துரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கிறது. இந்தச் சட்டப்பிரிவு வழங்கியுள்ள உரிமைகளின் பின்னேதான் பெரும் நிலப்பிரபுக்கள் ஒளிந்து கொண்டு, இந்தியாவில் நிலச் சீர்திருத்த சட்டங்களை நீர்த்துப் போகச் செய்தனர். பெரும் பண்ணையார்கள் குவித்து வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இப்படித்தான் சட்டப்பூர்வமாகவே பாதுகாக்கப்பட்டன.

ஆனால், காஷ்மீர் மாநிலத்தில் பெரும் நிலப்பிரபுக்களும் மன்னர் குடும்பத்தினரும் தங்களுக்குச் சொந்தமாக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இவ்வாறு பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. காரணம், சட்டப்பிரிவு 370 வழங்கியிருந்த அதிகாரம். ஜம்மு காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி சொத்துரிமை அடிப்படை உரிமையாக அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் இந்தியாவின் எந்த மாநிலத்தை விடவும் ஓரளவு குறிப்பிடத்தக்க முறையில் காஷ்மீரில் நிலச்சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் தேசிய
மாநாட்டுக் கட்சியின் கொள்கை
அறிக்கையான புதிய காஷ்மீர்
வெளியீட்டின் முகப்பு அட்டை.
(கோப்புப் படம்)

இந்தியாவின் பிற பகுதிகளில் காலனியாதிக்கத்தை எதிர்த்த போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது, காஷ்மீரில் அதனுடன் மன்னராட்சிக்கு எதிராகவும், உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கோரிக்கைக்காகவும் போராட்டங்கள் நடந்தன. காஷ்மீரி தேசியத்தின் மிக முக்கியமான உள்ளடக்கமாக நிலத்திற்கான கோரிக்கையும் மன்னராட்சி ஒழிப்பும் இருந்தன. இந்தப் போராட்டங்களின் முன்னணியில் இருந்தது ஷேக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி.

இக்கட்சி 1931 மன்னருக்கு எதிராகத் தொடங்கிய இயக்கத்தில் நிலவுரிமைக்கான கோரிக்கை முக்கிய இடம் பிடித்திருந்தது. போராட்டம் உக்கிரமடைந்ததை அடுத்து, பெர்ட்ராண்ட் கிளான்சி என்பவர் தலைமையில் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினார் மன்னர். கிளான்சி கமிட்டி வழங்கிய பரிந்துரைகளின்படி, அப்போதைய காஷ்மீர் பிரதம மந்திரி கால்வின், 1933 ஆண்டு, ஏப்ரல் 10- தேதி அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கிறார். அந்த உத்தரவின்படி, அரசு நிலங்களில் குத்தகை விவசாயம் செய்துவந்த விவசாயிகளுக்கு அந்த நிலம் சொந்தமாக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இதை காஷ்மீரிகள் சாதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1944- ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சி புதிய காஷ்மீருக்கான அறிக்கை (New Kashmir Manifesto) என்கிற தனது கொள்கை அறிக்கையை வெளியிட்டது. புதிய காஷ்மீருக்கான அறிக்கை குறித்துப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆண்ட்ரூ வைட்ஹெட் சில முக்கியமான செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

அந்த அறிக்கையே முழுக்க முழுக்க கம்யூனிச சார்பு கொண்ட ஆவணம்” என்கிறார் ஆண்ட்ரூ வைட்ஹெட். புதிய காஷ்மீர் அறிக்கையின் உருவாக்கத்தில் ஷேக் அப்துல்லாவுடன் இணைந்து பணியாற்றிய பி.பி.எல். பேடி என்பவரிடம் (நடிகர் கபீர் பேடியின் தந்தை) இது குறித்து ஆண்ட்ரூ வைட்ஹெட் உரையாடியுள்ளார். அந்த அறிக்கையின் பல பத்திகள் ஸ்டாலின் கால ரசியாவின் அரசமைப்புச் சட்டத்திலிருந்து  அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன” என்று பேடி தன்னிடம் கூறியதை ஆண்ட்ரூ பதிவு செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் கொள்கை அறிக்கையை உருவாக்குவதில் முன்னணிப் பங்கு வகித்த பாபா பியாரே லால் பேடி மற்றும் அவரது துணைவியாரும்
காஷ்மீரில் மன்னராட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றியவருமான ஃபிரேடா பேடி.
(கோப்புப் படம்)

தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்திலும் சோசலிசத்தின் செல்வாக்கு பரவிவந்த அன்றைய உலகச் சூழ்நிலையின் தாக்கம் இந்தக் கொள்கை அறிக்கையில் மட்டுமின்றி, பின்னாளில் நிறைவேற்றப்பட்ட காஷ்மீரின் அரசியல் சட்டத்திலும் இருந்தது.

புதிய காஷ்மீர் அறிக்கையானது மிகவும் கலகத்தன்மை கொண்ட ஆவணம். அது பெண்களுக்குச் சாதகமாகவும், உலகளாவிய உரிமையைக் கோருவதாகவும், கருத்துச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் போன்றவற்றை முன்னிறுத்துவதாகவும், உழவருக்கே நிலம், ஆலைகள் அரசுடைமை, விவசாயக் கடன் ரத்து போன்றவற்றை வலியுறுத்துவதாகவும் இருக்கிறது. மேலும், பெண்களுக்கு எல்லா வேலைகளிலும், தொழில்களும் சம உரிமை கோருவதாக இருக்கிறது. அந்த ஆவணம் தொலைநோக்கு கொண்டதாக இருக்கிறது என்கிறார் ஆண்ட்ரூ வைட்ஹெட்.

இந்தியாவுடனான இணைப்பு ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் 1947- ஆண்டு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து காஷ்மீரின் பிரதமராக 1948- பதவி ஏற்கிறார் ஷேக் அப்துல்லா. இதற்கிடையே காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது செல்லாது என பாகிஸ்தான் சர்வதேச அளவில் குரல் எழுப்பி வந்தது. எனினும், ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி இந்தியாவுடன் இணைந்திருப்பதையே விரும்பியதற்கு அடிப்படையான காரணம், காஷ்மீரிகளுக்கு இந்திய அரசின் தரப்பில் வாக்களிக்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதிதான். அதை உத்திரவாதப்படுத்தும் அரசியல் சாசனத்தின் 370- பிரிவு அம்மாநிலத்திற்கென தனியே சட்டமியற்றிக் கொள்ளும் உரிமையை வழங்கியிருந்த காரணத்தினால், அதனைக் கொண்டு காஷ்மீர் விவசாயிகளின் உயிராதாரக் கோரிக்கையான நில உரிமையை வென்றெடுக்க முடியும் எனத் தேசிய மாநாட்டுக் கட்சி கருதியது.

படிக்க:
முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !
ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி

மறுபுறம், நிலப்பிரபுத்துவ கட்டமைப்பை அப்படியே பராமரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த அன்றைய பாகிஸ்தானின் ஆளும் வர்க்கத்தின் கீழ் இருந்து கொண்டு காஷ்மீர் ஏழை உழவர்களின் நிலம் குறித்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வது சாத்தியமில்லை என்பதை ஷேக் அப்துல்லா வெளிப்படுத்தியிருக்கிறார். காஷ்மீர் மக்களும் சரி, தேசிய மாநாட்டுக் கட்சியும் சரி, பாகிஸ்தானுக்குப் பதிலாக இந்தியாவைத் தெரிவு செய்ததற்கான மிக முக்கியமான காரணம் இது.

பாக். ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிடுவதற்காக உருவாக்கப்பட்ட
காஷ்மீர் சிறுவர் படை. (கோப்புப் படம்)

அதிகாரத்திற்கு வந்த தேசிய மாநாட்டுக் கட்சி, முதலில் மாநிலக் குத்தகைதாரர் சட்டத்தை (1924) உடனடியாக (1948 திருத்தியது. அதன் மூலம் குத்தகை விவசாயிகளிடமிருந்து அநியாயமாக அடித்துப் பிடுங்கப்பட்டு வந்த குத்தகைத் தொகைக்கு நியாயமான அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதன் மூலம் அன்றைய காஷ்மீரின் மொத்த சாகுபடிப் பரப்பளவான 22 இலட்சம் ஏக்கர் நிலத்தில் சுமார் 7 இலட்சம் ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்து வந்த குத்தகை விவசாயிகள் பலனடைந்துள் ளனர்.

இதையடுத்து நிலச்சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய ஏப்ரல் 1949 மிர்ஸா முகமது அஃப்சல் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. பின் அந்த கமிட்டியின் பரிந்துரைகளின்படி, ஜூலை 13, 1950- வரலாற்றுச் சிறப்புமிக்க நிலச் சீர்திருத்த சட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது தேசிய மாநாட்டுக் கட்சி. அதற்கு மூன்று மாதங்கள் கழித்து (18 1950) ஜம்மு காஷ்மீர் பெரும் பண்ணை ஒழிப்புச் சட்டத்தை அம்மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றுகிறது. இதன் மூலம் ஒரே வீச்சில் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. 1950 இருந்து 1952 வரையிலான இரண்டே ஆண்டுகளில் சுமார் 7 இலட்சம் நிலமற்ற கூலி விவசாயிகள் நில உரிமையாளர்கள் ஆகினர். இதில் சுமார் 2,50,000 பேர் ஜம்மு பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (இந்து) விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலச் சீர்திருத்த சட்டத்தில் ஒரு முக்கியமான அம்சம் என்னவெனில், உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்ட நிலத்துக்கும்கூட ஒருவர் உரிமையாளராக இருக்க வேண்டுமென்றால், அவர் விவசாயத்தைச் சார்ந்து வாழ்பவராகவும், நேரடியாக விவசாய உழைப்பில் ஈடுபடுபவராகவும் இருக்க வேண்டும் என்று கூறியது அந்தச் சட்டம். தலத்தில் இல்லாத நிலவுடைமையாளர்கள் (Absentee Landlords) எனப்படுவோர் யாரும் சொந்தமாக நிலம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இத்தகைய நிலவுடைமையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, உண்மையில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலம் (1951- காலப்பகுதியில்) 3,02,301 ஏக்கர். இதன் மூலம் பலனடைந்த விவசாயிகள் மட்டும் 4,20,867 பேர்.

மன்னர் ஹரி சிங் ஆட்சியின் போது, கையில் இரும்புத் தடியுடன் இருக்கும் கங்காணியின் கண்காணிப்பின் கீழ் வயல்களில் வேலை செய்யும் காஷ்மீரத்துப் பெண்கள். (கோப்புப் படம்)

ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டதுதான் நிலச்சீர்திருத்தம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டிருப்பது ஒரு முழு மோசடி. இதனைக் கீழ்க்கண்ட புள்ளி விவரமே நிரூபிக்கும். 1947 முதல் 1970 வரையிலான காலகட்டம் வரை இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் மூலம் நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட நிலம் 9.5 இலட்சம் ஏக்கர். காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட நிலச்சீர்திருத்தம் மூலம் அந்த மாநிலத்தில் மட்டும் விநியோகிக்கப்பட்ட நிலம் 4.5 இலட்சம் ஏக்கர். அதாவது கிட்டத்தட்ட சரிபாதி.

படிக்க:
♦ காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்
சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?

புதிய காஷ்மீர் அறிக்கையுடைய முன்னுரை இவ்வாறு சொல்கின்றது: பல நூற்றாண்டு காலக் கொடுமையான வரலாற்றில், இந்து எதேச்சாதிகார மன்னர்கள், பௌத்த அரசர்கள் மற்றும் முகலாயப் பேரரசர்களின் பல்லக்குத் தூக்கிகளாகவே ஜம்மு காஷ்மீர் மண்ணின் ஏழை மைந்தர்கள் இருந்துள்ளனர். மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வாழும் ஏழை விவசாயக் குடிகள் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக இந்த மண்ணில் வெறும் ஒன்பதங்குல அளவுக்கே உழவோட்டிப் பிழைத்துள்ளனர். அவர்கள் இந்த பூமியின் ஆழம் வரை சென்று அதன் வளங்களை அள்ளி வரும் நவீன தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கும், அதன் மூலம் தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்குமான காலம் இப்போதுதான் கனிந்துள்ளது.”

1949 காஷ்மீரில் அதிக உணவுப் பொருட்களை விளைவிப்போம் திட்டத்தை நிலத்தை உழுது தொடங்கி வைக்கும் காஷ்மீர் பிரதம மந்திரி ஷேக் அப்துல்லா. (கோப்புப் படம்)

ஷேக் அப்துல்லா பதவிக்கு வந்தவுடனேயே உயர்குடியினருக்கு மன்னரால் வழங்கப்பட்டு வந்த மானியங்கள் நிறுத்தப்பட்டன. விவசாயக் கடன் உள்ளிட்ட வணிகம் சாராத கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. குத்தகைதாரர்களுக்கு எதிரான நிலவெளியேற்ற வழக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

ஆகப்பெரும்பகுதி நிலம் மன்னர் குடும்பத்தினரிடமும், இந்து ஆதிக்க சாதியினரிடமும்தான் இருந்தது. குறிப்பாக மக்கள் தொகையில் சுமார் 5% இருந்த பண்டிட் சாதியினருக்கு 30% நிலம் சொந்தமாக இருந்தது. முஸ்லீம் நிலவுடைமையாளர்கள் மிகக் குறைவாகவே இருந்திருக்கின்றனர். உச்ச வரம்புக்கு மேற்பட்ட உபரி நிலம் நட்ட ஈடின்றிப் பறிமுதல் செய்யப்பட்டது என்பதுதான் இந்த நிலச்சீர்திருத்தத்தின் மிக முக்கியமான அம்சமாகும். இது மட்டுமல்ல, எதிரிகளுடைய கையாட்கள் என்று கருதப்பட்டோரின் நிலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. யார் அவர்கள்? யாரெல்லாம் காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைக்கவேண்டும் என்று சொன்னார்களோ அவர்களுடைய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறுகிறார் காஷ்மீர் அபாயம் (1954) என்ற நூலின் ஆசிரியர் கார்பெல்.

இந்த நிலச்சீர்திருத்தத்தை மன்னன் ஹரிசிங் எதிர்த்தார். இந்தியாவின் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலும் எதிர்த்தார். நட்ட ஈடே கொடுக்காமல் இப்படி நிலங்களைப் பறிமுதல் செய்வது சரியல்ல.  நாங்கள் இங்கே இந்தியாவில் செய்வதற்கு நேர் எதிராக இருக்கிறது உங்கள் நடவடிக்கை. நிலம் பறிமுதல் செய்யப்படும் நிலவுடைமையாளர்கள் பெரும்பாலும் இந்துக்கள் என்பதால், உங்கள் அரசுக்கு எதிராகச் சிறுபான்மை (இந்து) சமூகம் வெறுப்படையும் என்பதை மனதில் கொள்ளுங்கள்” என்று படேலின் தனிச் செயலாளர்  வி.சங்கர் 4.5.1948 அன்று ஷேக் அப்துல்லாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். காஷ்மீரில் செயல்பட்டு வந்த சங்கப் பரிவார அமைப்பான பிரஜா பரிஷத்தும் அன்று இந்த நிலச் சீர்திருத்தத்தை எதிர்த்தது.

படேல் குறிப்பிட்டிருப்பது போல, இந்தியாவில் செய்வது போல நிலச்சீர்திருத்தம் அமலாக்கப்பட்டிருந்தால், காஷ்மீர் மக்களின் நிலைமை பீகார் விவசாயிகளைக் காட்டிலும் மோசமானதாக இருந்திருக்கும். அன்று படேலால் செய்ய முடியாத காரியத்தை இன்று மோடி செய்திருக்கிறார்.

சட்டப்பிரிவு 370 என்பது எந்த வர்க்கத்துக்கு நலன் பயத்திருக்கிறது, எந்த வர்க்கத்தின் உடைமையைப் பறித்திருக்கிறது என்பதை இந்த வரலாற்று விவரங்கள் நிரூபிக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்திலிருந்து தப்பித்த காரணத்தினால்தான், காஷ்மீர் உழவர்களுக்கு நிலம் கிடைத்தது. அந்த நிலத்தைப் பிடுங்குவதற்குத்தான் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கம்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கம் காஷ்மீர் மக்களின் நிலத்தை மட்டும் பிடுங்கப் போவதில்லை, ஹைட்ரோகார்பனுக்கும், எட்டு வழிச்சாலைக்கும் நிலத்தைப் பிடுங்கப் போவதும் அந்த முழக்கம்தான். தமிழக அரசு மருத்துவக் கல்லூரியின் இடங்களை அனிதாவிடமிருந்து பிடுங்கி, வட இந்தியப் பணக்காரர்களுக்கு வாரி வழங்கப்போவதும் அதுதான்.

– சாக்கியன்


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க