மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆகும் செலவு, இந்தியாவில் ஒரு தனிநபரின் பத்தாண்டு சராசரி வருடாந்திர ஊதியத்திற்கு நிகராக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தனது உலக புற்றுநோய் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
HER2 வகை மார்பகப் புற்றுநோய்க்கான உலக சுகாதார நிறுவனத்தின் அவசிய மருந்துகளின் பட்டியலின்படியான சிகிச்சைக்கு ஆகும் செலவு, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பத்தாண்டுக்கான சராசரி ஆண்டு வருமானமாகும் எனத் தெரிவிக்கிறது. இந்தச் செலவு அமெரிக்காவின் 1.7 ஆண்டுகளுக்கான சராசரி ஆண்டு வருமானமாகும் என்றும் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி வெளியிடப்பட்ட உலகப் புற்றுநோய் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் அந்த அறிக்கையில், “இந்தியாவில் மொத்தம் 11.6 லட்சம் பேருக்கு புதியதாக புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 7.84 லட்சம் புற்று நோய் மரணங்கள் ஏற்பட்டிருக்கிறன. 22.6 லட்சம் பேருக்கு ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக புற்று நோய் நீடித்திருக்கிறது. புற்றுநோயின் காரணமாக இந்தியா, சீனா, பிரேசில், ரசிய கூட்டரசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புற்று நோயால் ஏற்படும் முதிர்ச்சியுறா மரணங்களின் காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு ஏற்பட்ட உற்பத்தித் திறன் இழப்பு மட்டும் 4630 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்தத் தொகை, உலகளாவிய ஜி.டி.பி-யில் 0.2 – 0.5% அளவிலானது.” என்று குறிப்பிடப்படுள்ளது.
புற்றுநோயின் சுமையை அதிகரிப்பதில் இந்தியாவில் நிலவும் சமூக பொருளாதார சமத்துவமின்மையை முக்கியக் காரணமாக சுட்டிக் காட்டும் இந்த அறிக்கை, 10-ல் ஒரு இந்தியருக்கு அவரது வாழ்நாளில் புற்று நோய் உருவாகிறது என்றும் 15-ல் ஒரு இந்தியர் புற்றுநோய்க்கு பலியாகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சில புதிய வகையிலான சிகிச்சை முறைகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்தாலும், அதை நோயாளிகள் பெற முடியாமல் போவதற்கு, இங்குள்ள சமூக பொருளாதார சமத்துவமின்மையே இந்த நோயின் சுமையை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.
“இந்த புதிய புற்றுநோய் மருந்துகள் சக்திமிக்கதாக இருக்கின்றன. 30-40 சதவீதம் வரையில் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய புற்றுநோய் சிகிச்சை முறைகள் நோயாளிகளின் ஆயுள் நீட்டிப்பையும், வாழ்க்கையின் தரத்தையும் மேம்படுத்துவதாக இருக்கிறது.” என்கிறது இந்த அறிக்கை.
படிக்க :
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சியாட்டில் மாநகர கவுன்சில் தீர்மானம் !
♦ இந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் : அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் !
ஆனால் துரதிருஷ்டவசமாக, அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் எதுவும் பெரும்பாலான புற்றுநோய் நோயாளிகளுக்கு கிடைப்பது இல்லை. “உதாரணத்திற்கு, அதிக வருமானம் உள்ள நாடுகளிலேயே வெறும் 13% பேர் மட்டும்தான் இம்முனோ தெரபி (immunotherapy) என்ற சிகிச்சை முறையையும், 4.9% பேர் மட்டும்தான் ஜினோம் டார்கெடட் தெரபி (genome-targeted therapy) என்ற சிகிச்சை முறையையும் பெற முடிகிறது. காப்பீடு அல்லது நிதிப் பாதுகாப்பு இல்லாத நிலையில் உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களுக்கு இந்த மருந்துகள் எல்லாம் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.” என்கிறது அறிக்கை.
இந்தியா குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் ஒன்றாகவே இருக்கிறது. எனில் இந்தியாவின் நிலையை ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம்.
இந்த அறிக்கையின்படி புதியதாக வரும் புற்றுநோயில் சுமார் 49%, பின்வரும் 6 வகைப் புற்றுநோய்களில் ஒன்றாகவே இருக்கிறது. அவை மார்பகப் புற்றுநோய், வாய் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயிற்றுப் புற்று நோய், பெருங்குடல் புற்று நோய் ஆகியவை ஆகும்.
இந்தியாவில் பெரும்பான்மையாக புகையிலை உட்கொள்ளுதல் காரணமாக ஆண்களுக்கு தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குறிப்பாக வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த இரண்டு வகை புற்றுநோய்களும் சமூக பொருளாதார தாழ்நிலையின் காரணமாக ஏற்படுவதேயாகும்.
“அதிக எடை, உடல் பருமண், குறைந்த அளவிலான உடற்பயிற்சி, மோசமான வாழ்க்கை முறை ஆகியவை, மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் வகைகள் வருவதற்கான அடிப்படையாக அமைகின்றன. இந்தப் புற்றுநோய்கள் உயர் சமூகப் பொருளாதார நிலையோடு இயைந்திருக்கின்றன” என்கிறது அந்த அறிக்கை
உலக சுகாதார நிறுவனம், கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பிட்டு அது ஏற்படுத்தியிருக்கும் சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்றாற்போல, புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், புற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சேவைகள் கிடைப்பதில் நிலவும் வேறுபாட்டையும் களைய வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
நந்தன்
நன்றி : தி பிரிண்ட்.