ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி “உலக புற்றுநோய் தினமாக” அணுசரிக்கப்படுகின்றது. இந்தாண்டு உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி உலக சுகாதார நிறுவனம் “இந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் மற்றும் முறைமை -2018” என்கிற அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேற்படி அறிக்கையின் படி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 11.60 லட்சம் பேருக்கு புதிதாக புற்றுநோய் தாக்கியுள்ளது. மேலும், சுமார் 7.84 லட்சம் பேர் புற்று நோயினால் இறந்து போயுள்ளனர். மேலும், இந்தியாவில் 22.6 லட்சம் பேருக்கு ஐந்தாண்டுகளுக்கும் மேலாக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் புற்றுநோய் நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்களை பாதிக்கும் பொதுவான புற்றுநோய்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மார்பக புற்றுநோய் (1,62,500 பேர்), வாய் புற்றுநோய் (1,20,000 பேர்), கர்பப்பைவாய் புற்றுநோய் (97,000), நுரையீரல் புற்றுநோய் (68,000), வயிற்று புற்றுநோய் (57,000), பெருங்குடல் புற்றுநோய் (57,000) ஆகிய இந்த ஆறு புற்றுநோய்களே இந்தியர்களை பரவலாக தாக்கும் புற்று நோய் வகைகள். இந்த ஆறு வகையான புற்றுநோய்கள் மட்டும் மொத்த புற்றுநோய் தாக்கியவர்களில் 49 சதவீதம் பேருக்கு இருந்துள்ளது.
ஒரு ஆண்டில் (2018) புதிதாக புற்றுநோய் தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கையான 11.60 லட்சம் பேரில் 5.7 லட்சம் பேர் ஆண்கள். ஆண்களில் வாய்புற்று, நுரையீரல் புற்று, வயிற்று புற்று, பெருங்குடல் புற்று, உணவுக்குழாய் புற்று ஆகிய ஐந்து புற்றுநோய் வகைகள் 45 சதவீதமாக உள்ளது. புதிய புற்றுநோயாளிகளில் 5.87 லட்சம் பேர் பெண்கள். இவர்களில் மார்பக புற்று, கர்பப்பைவாய் புற்று, வாய்ப்புற்று, பெருங்குடல் புற்று ஆகியவை சுமார் 60 சதவீதமாக உள்ளன.
படிக்க:
♦ மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை ! புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு
♦ இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ?
ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் சுமார் 34-69 சதவீதம் புகையிலை பழக்கத்தால் ஏற்படுகின்றன; இதே பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கு 10-27 சதவீதம் புகையிலை காரணமாக அமைகிறது. குறிப்பாக 40-70 வயதுப் பிரிவில் வரும் ஆண்களில் வாய்ப்புற்று நோய் ஏற்படும் சதவீதம் அதிகரித்திருப்பதற்கு பான்பராக், ஹன்ஸ், கூல் லிப் போன்ற குட்கா பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பது காரணமாக இருக்கும் என்கிறார்; மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமையின் இணை இயக்குனராக இருக்கும் மருத்துவர் பங்கஜ் சதுர்வேதி. புகை பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர் குறிப்பிடுகிறார்.
***
புற்றுநோய் ஏற்பட மரபணு பிறழ்வு துவங்கி தவறான வாழ்க்கை நடைமுறை அல்லது பழக்கவழக்கங்கள் மற்றும் சூழலியல் மாற்றங்கள் வரை எண்ணற்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. நகரமயமாக்கலின் விளைவாக அதிகரித்துள்ள வாகன எண்ணிக்கை மற்றும் இதன் காரணமாக அதிகரித்துள்ள புகை உமிழ்வு ஒருபக்கம் என்றால், அதனுடன் அதே நகரமயமாக்கலின் விளைவாக ஓரிடத்தில் குவியும் கண ரக தொழிற்சாலைகளும் அவை உருவாக்கும் சூழலியல் கேடுகளும் கைகோர்த்துக் கொள்கின்றன. மறுபுறம், பரபரப்பான வாழ்க்கை முறையும், கடன் மற்றும் வேலையிழப்புகள் உள்ளிட்ட பொருளாதார காரணங்களால் ஏற்படும் மன அழுத்தங்களும் நம்மை அச்சுருத்துகின்றன.
புற்றுநோய்க்கான குறிப்பான காரணம் இன்னதென்று கண்டறியப்படவில்லை என்றாலும், ஒரு கேடான சூழலில், தவறான வாழ்க்கை முறையில் வாழும் ஒருவருக்கு புற்றுநோய் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை மருத்துவ ஆராய்ச்சிகள் நிறுவியுள்ளன. எனவே சரிவிகித உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைமுறை இவற்றோடு புகையிலை பயன்பாடு போன்ற தீய பழக்கங்கள் இல்லாமல் இருப்பது புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களைக் குறைக்கும்.
ஆனால், நிலைமை என்ன?
குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த போதைப் பொருட்களை காகிதத்தில் உள்ள சட்டங்கள் தடைசெய்கிறது. ஆனால், அதே சட்டத்தை உருவாக்கிய ஆளும் கும்பலே குட்கா பொருட்கள் கடத்தலிலும், விற்பனையிலும் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் சுகாதார அமைச்சரே குட்கா மாஃபியா கும்பலோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததும், அவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதும் பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது. சட்டமீறலை கண்காணித்து தடுக்க வேண்டிய காவல் துறையின் உயரதிகாரியும் இந்த கும்பலோடு ‘ஒன்னுமண்ணாக’ புழங்கியது அம்பலமானதை நாம் மறந்திருக்க மாட்டோம். சாதாரண குடிமகனின் உயிரை ஆளும் கும்பல் எந்தளவுக்கு இழிவாக பார்க்கின்றன என்பதை உணர்த்தியவாறே பெட்டிக்கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றது ஹன்ஸ் பாக்கெட்டுகள்.
சமூகத்தைப் பீடித்திருக்கும் இந்தப் புற்றுநோய் தீரும் போது, மனிதர்களைத் தாக்கும் புற்றுநோய் தானாக குணமாகும்.
மித்ரன்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.