புதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! இது தொழிலாளர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி !

வேல் பிஸ்கட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதுச்சேரி திருபுவனை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஐ.டி.சி பன்னாட்டு நிறுவனத்தின், சன் பீஸ்ட், மேரி கோல்டு போன்ற உண்ணும் பிஸ்கட்டுகளைத் தயாரித்துக் கொடுக்கும் ஜாப் ஒர்க் நிறுவனம் தான் வேல் பிஸ்கட்ஸ் நிறுவனம்.

இந்த நிறுவனத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமும், சிறுபான்மைச் சங்கமாக INTUC சங்கமும் செயல்படுகின்றன. அதில், பு.ஜ.தொ.மு சங்கத் தொழிலாளர்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக அடக்குமுறைகளை ஏவி வந்தது நிர்வாகம்.

ஒவ்வொரு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் போதும் சங்க முன்னணியாளர்கள் மீது பொய்யான குற்றம் சுமத்தி நடவடிக்கை எடுத்து, அதன் மூலம் ஊதிய உயர்வை தனக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல், சங்க முன்னணியாளர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து, சங்கத்தையும் கலைத்து விட வேண்டும்! என்பதை நிர்வாகம் ஒரு உத்தியாகவே கையாண்டு வருகிறது. இருந்த போதிலும், ஒவ்வொரு முறையும் எமது சங்கம் சட்டரீதியாகவும், பு.ஜ.தொ.மு வழிகாட்டுதல்களாலும், தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தாலும் நிர்வாகத்தின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்ற முறை கிட்டத்தட்ட 52 நாட்கள் உள்ளிருப்புப்_போராட்டம் நடந்த போது, உற்பத்தியை நடத்த வேண்டும் என்பதற்காக, போட்டி சங்கத்தையும், ஒப்பந்த தொழிலாளர்களையும், சங்கத்திற்கு எதிராக திருப்பி விட்டது. தொழிலாளர் என்ற பெயரில் உள்ளூர் ரவுடிகளை இறக்கி விட்டு மோதலை உருவாக்க முயற்சித்தது. ஆனால், நிர்வாகத்தின் அத்தனை தகிடுதத்தங்களையும் முறியடித்து போராட்டம் வெற்றிகரமாக முன்னேறியது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

எவ்வளவு குடைச்சல் கொடுத்தாலும் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தையும் ஒன்றும் செய்ய முடியவில்லை! முக்கிய சங்க நிர்வாகிகளை மாதக்கணக்கில் வெளியே தூக்கிப் போட்டாலும், அந்த இழப்புக்களை எல்லாம் தாங்கிக் கொண்டு வெட்ட வெட்ட முளைக்கும் மரம் போல, மீண்டும் – மீண்டும் எழுந்து நிற்பதைப் பார்க்க நிர்வாகத்தால் பொறுக்க முடியவில்லை. அதனால், ஆத்திரம் தலைக்கேறி, இந்த முறை, “நம்மை எதிர்ப்பவர்கள் யாரும் இந்த ஏரியாவிலேயே இருக்கக் கூடாது!” என்று முடிவு செய்தது. தான் செய்வது சட்ட விரோதம் என்று தெரிந்தும், சங்க முன்னணி தோழர்கள் வேலை செய்யும் லைன் III-யில் உற்பத்தி ஆர்டர் இல்லை என அந்த லைனை பிரித்து கம்பெனியிலேயே வைத்துக் கொண்டது. இயந்திரத்தில் வேலை செய்த தொழிலாளர்களை சேல்ஸ் டிவிசனுக்கு மாற்றுவதாகச் சொல்லி கம்பெனியே இல்லாத ஊர்களிலும், கடைகளுக்கும் என 09 பெண் தொழிலாளர் உள்ளிட்டு 25 பேரை கண்மூடித்தனமாக பந்தாடியது. ஏற்கனவே எலக்ட்ரீசியனாக வேலை பார்த்த ஒரு தொழிலாளியை கும்பகோணத்தில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைக்கு மாற்றிய ‘இழி பெருமை’ இந்நிறுவனத்திற்கு உண்டு என்பது தனிக்கதை.

இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் பணியிட மாற்றத்தை தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் முடிக்க வேண்டும் என்று இப்பிரச்சினையின் ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் பணியிட மாற்ற நடவடிக்கைகள் சட்டவிரோதம் என தொழிலாளர் துறையில் முறையீடு செய்த போது, பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை. நீதிமன்றத்தில் பெற்ற தடை உத்தரவையும் மதிக்கவில்லை. பணியிட மாற்றத்தை எப்படியாவது நிறைவேற்றி, சங்கத்தையே இல்லாமல் ஒழித்து விடுவது என்பதில் தான் நிர்வாகம் விடாப்பிடியாக இருந்தது. மேலும், பணியிட மாற்றத்தில் செல்லாததைக் காரணம் காட்டி தற்காலிக பணிநீக்கம் செய்வதை அடுத்தகட்ட மிரட்டலாகக் கையில் எடுத்தது.

இதற்கிடையில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த கொரோனா கால நெருக்கடியை பயன்படுத்தி, தொழிலாளர்களை இன்னும் கூடுதலாக பழிவாங்கத் துடித்தது நிர்வாகம். அதன்படி நிறுவனம் செயல்படும் பகுதி கொரோனா தொற்று சிவப்பு மண்டலமாக புதுச்சேரி சுகாதாரத் துறையால் அறிவிக்கப்பட்டு பகுதி சீல் வைக்கப்பட்ட போதும், “தொழிலாளர்கள் வேலைக்கு வந்தால் தான் ஊதியம் தர முடியும்” என அச்சுறுத்தியது.

படிக்க:
செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !
♦ கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு !

மேலும், ஊரடங்கு காலத்திற்கு எந்த சம்பளமும் தரமுடியாது என அடாவடியாக மறுத்ததுடன், பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டியது. குடும்ப நெருக்கடி, வறுமையின் காரணமாக வேறு வழியின்றி கொரோனா வைரஸ் தொற்று அபாயம் மிகுந்த சூழலிலும், அந்தப் பகுதியில் வசித்த சில தொழிலாளர்கள் மறைந்து மறைந்து பணிக்கு செல்லும் அவலத்திற்கு தள்ளியது. இந்த நிலைமையை அந்தப் பகுதி போலிசு நிலையத்தில் முறையிட்ட அடிப்படையில், நிறுவன அதிகாரிகளை அழைத்து போலிசு இன்ஸ்பெக்டர் சத்தம் போட்டு அனுப்பிய பிறகு தான், தொழிலாளர்களை பணிக்கு வரக் கட்டாயப்படுத்துவதை நிறுத்தியது. இருப்பினும், இன்று வரை ஊரடங்கு காலத்திற்கு ஊதியம் தராமல் மறுத்து வருகிறது.

இந்த நெருக்கடியான கால கட்டத்தில், வெளியூருக்கு பணியிட மாற்றம் செல்வது சாத்தியமில்லை என்றும், கொரோனா முடிந்து போக்குவரத்து உள்ளிட்ட ஊரடங்கு தளர்வுகள் நடைமுறைக்கு வரும் வரை, அரசின் அறிவுறுத்தலின் படி உள்ளூர் தொழிலாளர்களை பணிக்கு அனுமதிக்கக் கோரியும், பணியிட மாற்றம் குறித்து பேசி முடிவெடுக்கலாம் எனக் கேட்டும், பணியிட மாற்றம் சென்று தான் ஆக வேண்டும் என்று கூறி வம்படியாக மறுத்து விட்டது.

பணியிட மாற்றம் என்ற பெயரில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் வறுமை, பசி, பட்டினி என கடும் நெருக்கடியுடன், கொரோனா தொற்று சூழலும் சேர்ந்து, ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் முடங்கி விட்ட சூழலில், நிர்வாகத்தின் ஈவு இரக்கமற்ற செயல்களும், பழிவாங்கும் நடவடிக்கைகளும் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை அதிகமாக்கியது.

அதனால் வேறு வழியின்றி, கடந்த மே-27 அன்று காலை 06.00 மணிக்கு உள்ளிருப்புப் போராட்டம் துவங்கப்பட்டது. நிறுவனத்தின் உள்ளேயும், வெளியிலும் ஆண், பெண் தொழிலாளர்கள் என அனைவரும் இரவு, பகல் என்றும் பாராமல், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
போராட்டத்தை அறிவித்தவுடனேயே, உள்ளூர் போலீசைக் குவித்து மிரட்ட ஆரம்பித்தது. மற்றொரு சங்கமான ஐஎன்டியூசி சங்கத் தொழிலாளர்களை வைத்தும், ஒப்பந்தத் தொழிலாளர்களை இறக்கியும் உற்பத்தியைத் துவங்க முயற்சித்தது.

ஆனால், நமது தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தையும் தாண்டி, தொழிலாளர் துறை, போலீசு துறை அதிகாரிகளை உடனுக்குடன் அணுகி, பிரச்சினைப் பற்றிய சரியான பார்வையை உருவாக்கியதாலும், நமது பு.ஜ.தொ.மு வழிகாட்டுதல்களை சங்க நிர்வாகிகள் கடைபிடித்து, தொழிலாளர்களை உணர்வூட்டி நடத்திய ஒற்றுமையான, விடாப்பிடியான போராட்டத்தாலும், உற்பத்தியை துவக்கும் நிர்வாகத்தின் முயற்சி பலனளிக்காமல் போனது. நமது சங்கத்தின் நோக்கம், உற்பத்தியை நிறுத்துவதோ, முடக்குவதோ அல்ல என்பதையும் தொழிலாளர்களின் உடனடி கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உள்ளூர் போலீசு முதல் தொழிலாளர் துறை வரை ஏற்கனவே தொடர்ச்சியாக பேசி வந்தோம்.

மறுபுறம், பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் நமது முயற்சிகள் பற்றியும், நிர்வாகத்தின் அடாவடிகளைப் பற்றியும் போலீசும் அறிந்திருந்தது. மேலும், தொழிலாளர்களின் விடாப்பிடியான போர்குணமிக்க தொடர் போராட்டத்தினால் வேறு வழியின்றி காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தினால் தான் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற முடிவுக்கு வரவைத்தது. அது காவல்துறையை தொழிலாளர்கள் எதிர்கொண்ட விதம்தான் காரணமாக அமைந்தது. எனவே வேறு வழியே இல்லை என போலீசு பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லி நிர்வாகத்திற்கு அறிவுறுத்த ஆரம்பித்தது.

இதனால், வேறு வழியின்றி, நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்ததுடன், பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கும் தள்ளப்பட்டது.
தொடர்ச்சியாக 25 தொழிலாளர் குடும்பங்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக பணியின்றி இருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்பதை பிரதானமான கோரிக்கையாகவும், மற்ற கோரிக்கைகளை அடுத்தடுத்து பேசுவது எனவும் முன் வைக்கப்படது. அதன் அடிப்படையில் பெண்கள் பணியிட மாற்றத்தில் செல்வதை தடுப்பது, வெளி மாநில பணியிட மாற்றத்தை நிறுத்துவது, காலவரையற்ற பணியிட மாற்றத்தை ஆறு மாத காலமாக வரையறுப்பது என்ற நிபந்தனைகளுடன், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் யார் மீதும் எந்த விதத்திலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது,
தற்போதைய உடனடி நிலைமைகள் தமக்கு சாதகமில்லை என்பதை உணர்ந்த நிர்வாகம், நமது நிபந்தனைகளை ஏற்றதுடன், இந்தப் போராட்டம் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி இழப்பை மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் உற்பத்திச் செய்து ஈடுகட்ட வேண்டும் என்ற நிர்வாகத்தின் வேண்டுகோளுடன் போராட்டத்தை நான்கு நாட்களுக்குப் பிறகு மே-30 அன்று இரவு 07.00 மணிக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இப்போராட்டம் தொழிலாளர்களுக்குக் கிடைத்துள்ள முழு வெற்றியாகக் கொள்ள முடியாது. எனினும், முதலாளித்துவத்தை நிலைகுலையச் செய்துள்ள பொருளாதார நெருக்கடியை, கொரோனா வைரஸ் தொற்றின் பெயரால், ஒட்டு மொத்தமாக தொழிலாளர்கள் வர்க்கத்தின் மீது ஏவி வருகிறது. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான மோடியின் சட்டத் திருத்த நடவடிக்கைகள் மற்றும் சட்டத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைகள் என நம்முன் கார்ப்பரேட் காவி பாசிச அபாயம் சூழ்ந்துள்ள இந்த சூழ்நிலையில் வரம்புக்குட்பட்ட வகையில் தொழிலாளர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் சிறு, சிறு போராட்டங்களையும் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கான நம்பிக்கையாக கொள்ள வேண்டியுள்ளது.
அந்த வகையில் இப்போராட்ட வெற்றியை தொழிலாளி வர்க்கம் இனிப்போடு கொண்டாடுவதை விட, தொழிலாளர்களை வர்க்க உணர்வோடு வளர்த்தெடுப்போம்!

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: 95977 8980

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க