கரோனா வைரஸ் (Covid-19) பரவலின் காரணமாக அனைத்து நாடுகளும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் மூடிவிட்டன. இந்தியாவிலோ மார்ச் 17-ஆம் தேதியில் இருந்து மறுதேதி குறிப்பிடாமல் கல்வி நிலையங்களை மத்திய அரசு மூடியுள்ளது. கரோனா வைரஸ்ஸின் பரவல் அதிகரிக்கும் நிலையில் உயர்கல்வி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றிய வாய்ப்புகளை ஆராய்வதற்காக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஹரியானா மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேரா. குஹத் தலைமையில் குழுவை அமைத்தது.
இக்குழு இப்பருவத்திற்கான பாடங்களை முடிப்பது, தேர்வுகளை நடத்துவது அடுத்த பருவத்திற்கான மாணவர் சேர்க்கை நடத்துவது மற்றும் ஆராய்ச்சிகளை தொடர்வது பற்றிய பரிந்துரைகளை பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு அளித்தது. அதனடிப்படையில் ஏப்ரல் 27-ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு Covid-19 சூழலில் உயர்கல்வி நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதில் தேர்வுகளை ஜுலையில் நடத்துவது, அடுத்த பருவத்திற்கான (Odd semester) வகுப்புகளை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குவது, முதலாமாண்டு வகுப்புகள் செப்டம்பரில் தொடங்குவது, இந்த பருவத்திற்கான (Even semester) முடிக்காதப் பாடப்பகுதிகள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களின் ஆய்வுரைகளை இணையதள வாயிலாக நடத்தி முடிப்பது போன்ற வழிக்காட்டுதல் உள்ளடக்கிய சுற்றறிக்கையை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ளது. வருங்காலங்களில் Covid-19 போன்ற சூழலை எதிர்கொள்ளவதற்கான முன்தயாரிப்பாக மொத்த பாடத்தில் 75%-த்தை வகுப்புகளிலும் 25%-த்தை இணையதளம் வழியாகவும் (Online mode) நடத்தவும் UGC கூறியுள்ளது. (கலை-அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்த குழு அறிக்கை பரிந்துரைத்ததாக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்பரிந்துரையையை UGC தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது).
மார்ச் 26-ஆம் தேதி மத்திய பள்ளிக் கல்விக் குழு (CBSE Central Board of Secondary Education) தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 23,000 பள்ளிகளுக்கு “Lockdown-A Golden Opportunity for Education” என்று தலைப்பிட்டு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் மாணவர்கள் கல்வி இணையதளங்களை (Online Education Platform) பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் ஆசிரியர்கள் இணையவழியில் பாடம் எடுப்பதற்கு தேவையான திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசின் CBSE பள்ளிகளான கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பணிபுரியும் 35,000 ஆசிரியர்களுக்கு இணையவழியாக வகுப்பு நடத்துவது, பற்றிய பயிற்சி வகுப்புகளை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. மத்திய அரசு மேற்கண்ட அறிவிப்புகளை கரோனா நெருக்கடி காலத்திற்கானதாக கூறிக்கொண்டாலும் அத்திட்டத்தின் நோக்கம் அதன் விளைவுகள் பெரும்பான்மை மக்களுக்கு மிகவும் தீங்கானதாகும்.
படிக்க:
♦ என்னால் மூச்சுவிட முடியவில்லை ! அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் !
♦ வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன ?
***
இந்தியா மட்டுமின்றி கொரோனா தனிமைப்படுத்தலின் காரணமாக வளர்ந்த நாடுகள் தொலைக்காட்சி, ரேடியோ, இணையம் போன்ற தளங்களின் வாயிலான கற்பித்தல் முறைக்கு மாறிவருகின்றன (இதற்கான கட்டமைப்பு வசதிகளை இந்நாடுகள் உருவாக்கியுள்ளது). அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகம் (CSU) தன்னுடைய 23 கல்லூரிகளிலும் அடுத்த பருவத்தை (Fall Semester) இணைய வழியில் நடத்தபோவதாக அறிவித்துள்ளது. சீனா ஊரடங்கை அறித்த சில வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளை இணையதள முறையில் பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தது. சீனா கல்வி அமைச்சகமும் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து (அலிபாபா-DingTalk) இதனை செய்துள்ளது. ஆகான் மாகாணத்திலுள்ள பள்ளி மாணவர்களில் 81% பேர் (7,30,000 மாணவர்கள்) Tencet K-12 online school என்ற இணையதள வகுப்பின் வாயிலாக பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் ZOOM, Google class room செயலிகள் உதவியுடன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. மத்திய அரசின் MOOCs’ ஆன SWAYAM இணையக் கல்வி தளத்தை பயன்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை UGC வலியுறுத்தியுள்ளது. மேலும் Coursera’, Edx, Udacity, Khan Academy, BYJU’S, Mindspark, Simple learn, Toppr போன்ற தனியார் இணையக் கல்வி தளங்களில் மாணவர்கள் அதிகமாக படிக்கின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு 700 கல்லூரிகள் இணையதள வாயிலாக பாடங்களை நடத்த Coursera உடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. இதம் மூலம் Coursera-ல் உள்ள 4,100 தலைப்புகளிலான பாடங்களை இக்கல்லூரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு BYJU’S-ன் இணையவழி கல்வியில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 200 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. கரோனா ஊரடங்கு தனியார் இணையக் கல்வி தளங்களின் வளர்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளது.
உலகளவில் கல்வி தொழில்நுட்பச் (EduTech) சந்தையில் செய்யப்பட்டுள்ள முதலீடு 18.66 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது 2025-க்குள் 350 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலோ கல்விதொழில்நுட்பச் (EduTech) சந்தையின் மதிப்பு 2021-ல் 1.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என கூகுள் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. கரோனா ஊரடங்கு இந்த மதிப்பீடுகளை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக பெங்களூரை அடிப்படையாகக் கொண்ட BYJU’S உலகிலேயே அதிக மதிப்புள்ள கல்வி தொழில்நுட்ப நிறுவனமாகும்.
2020 ஜனவரியில் இந்நிறுவனத்தின் மதிப்பு எட்டு பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதில் Tiger global, Atlantic போன்ற நிதிநிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 2019 ல் Coursera-வின் மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலராக நிர்ணியக்கப்பட்டது. இந்த கல்வி இணையதளங்கள் Microsoft, Google, Facebook மற்றும் இணையதள சேவை வழங்குபவர்கள் ஆகியோரின் (Tech giants) நிதி மற்றும் தொழில்நுட்பக் கூட்டுடனே செயல்படுகிறது. பல private equity மற்றும் venture capital நிறுவனங்கள் இணையக் கல்வி சந்தையில் முதலீடு செய்துள்ளன.
இணையவழிக் கல்வியை மத்திய அரசு ஊக்குவிப்பதற்கு இரண்டு பிரதான நோக்கங்கள் இருப்பதாகத் தெரிகிறது.
- இணையவழி பட்டப்படிப்புகளை வழங்க அனுமதிப்பதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுக்கான நிதியை தாங்களே ஈட்டிக்கொள்ள செய்வது. NIRF தரப்பட்டியலில் முதல் 100 கல்லூரிகள் பட்டப்படிப்புகளை இணையவழியில் வழங்குவதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் பிப்ரவரி மாதம் செய்திருந்தார். முதல் 100 கல்லூரிகளில் 75 கல்லூரிகள் மத்திய மாநில அரசால் நடத்தப்படுகின்ற இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி, என்.ஐ.டி, மத்திய பல்கலைக்கழகம், மாநில பல்கலைக்கழகம்). இக்கல்லூரிகள் தங்களுக்கான நிதியை உருவாக்கிகொள்ள வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே மோடி அரசு அழுத்தம் கொடுத்து வந்தது. அதையொட்டி கல்விக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன. தற்போது இக்கல்லூரிகளுக்கு இணையவழி படிப்புகளுக்கான ஒப்புதல் வழங்கியிருப்பதின் மூலம் இக்கல்லூரிகளுக்கு அரசு வழங்கி வந்த நிதியை (தேவையை விட குறைவு தான்) அரசு நிறுத்திவிடும். மேலும் இத்திட்டத்தினை இதர பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளுக்கு விரிவுப்படுத்தவும் செய்யும். (பல்கலைக்கழகங்கள் தொலைதூரக் கல்வியின் வருவாயைக் கொண்டே நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கின்றன. இணையவழி பட்டப்படிப்பு திட்டத்தின் மூலம் தொலைதூரக் கல்விமுறையை விட குறைந்த செலவில் அதிக வருவாய் பெறமுடியும்).
- உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை (GRE) 2030-க்குள் 50%-மாக உயர்த்துவது என மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. (2019-ல் GRE 25%-மாக உள்ளது). தற்போதைய அளவைவிட (1.36 கோடி) கூடுதலாக 1.5 கோடி இளைஞர்களுக்கு உயர்கல்வி வழங்குவது. இதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், பேராசிரியர்கள் நியமனங்கள் என அதிக முதலீடுகளை மத்திய மாநில அரசுகள் ஒதுக்க வேண்டி வரும். இணைய வழி பட்டப்படிப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் தருவதன் மூலம் நிதி ஒதுக்கீடு மற்றும் கல்வி வழங்க வேண்டிய பொறுப்பிலிருந்தே அரசு தன்னை படிப்படியாக விடுவித்துக் கொள்ளலாம். (தேசிய கல்விக் கொள்கையில் கல்லூரிகளின் எண்ணிக்கையை குறைப்பதையும் இணையவழியில் பட்டப்படிப்புகளை வழங்குவதற்கான பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தது)
கரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு இணையவழிக் கல்வி முறையை new normal (புதிய இயல்புநிலையாக்க) ஆக்க மோடி அரசு திட்டமிடுகிறது. தனியார் கல்வி முதலாளிகளோ குறைவான ஆசிரியர்களைக் கொண்டு கல்லூரிகளை இயக்கலாம், பராமரிப்பு செலவுகள் குறைவு, NIRF ranking பெறலாம் என்ற கனவுகளிலிருந்து இணையவழி கற்பித்தல் முறைக்கு ஆதரவாக உள்ளனர்.
MOOCs (Massive Online Open Courses) எனப்படும் இணையவழி கற்கும் முறையில் பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பட்டப்படிப்புகளை வழங்குகின்றன. இதற்காக அதிகக் கட்டணங்களை வசூலிக்கின்றன. உதாரணமாக ஜான் ஹோப்கின் பல்கலைக்கழகம் இணையவழி கணிப்பொறி பட்ட மேற்படிப்பிற்காக (Online degree – Master of computer science) 42,500 டாலர் (சுமார் 29,75,000 ரூபாய்) கட்டணமாகப் பெறுகிறது. USC’s பல்கலைக்கழகம் இணையவழி Master of Social work படிப்பிற்கு 107,484 டாலர் (சுமார் 75,23,880 ரூபாய்) கட்டணமாக பெறுகிறது. Coursera, Udacity நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து இணையவழி பட்டப் படிப்புகளை வழங்குகின்றன. அப்படிப்புகளின் சந்தை தேவையை பொறுத்து அதற்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. (Machine learning, IoT படிப்புகளுக்கு கட்டணம் அதிகம்). வகுப்பறைகள் குறைவு, கல்லூரி பராமரிப்புக்கான செலவுகள் இல்லை, குறைவான ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் என மிகக் குறைவான முதலீட்டில் மிக அதிக லாபத்தை அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஈட்டுகின்றன. பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி Coursera. Udacity, Biju’s போன்ற MOOCs தளங்கள், மென்பொருள்-இணைய சேவை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களும் லாபத்தை பங்கிட்டுக் கொள்கின்றன. உதாரணமாக, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்ற இணையவழி படிப்புகளுக்கான விளம்பரங்களினால் Google, Facebook நிறுவனங்கள் ஒரு பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இணையவழி கல்வி என்பது ஒரு பொன்முட்டையிடும் வாத்து. எனவே தான் கல்வித்துறையில் அடுத்தகட்ட வளர்ச்சி என்றும் ஊரடங்கு காலகட்டத்தில் சிறந்த தீர்வு என்றும் கல்வியாளர் என்ற போர்வையில் முதலாளித்துவ ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.
இணையவழி பட்டப் படிப்பிறக்கான மத்திய அரசின் அனுமதி, 25 சதவிகித படிப்புகளை online முறையில் வழங்குவதற்கான UGC-ன் வழிகாட்டுதல், GER-ஐ 50 சதவிகிதமாக உயர்த்துவது என்ற தேசிய கல்விக் கொள்கையின் இலக்கு ஆகியவை இந்திய கல்வி சந்தையானது குறிப்பாக உயர் கல்வியானது இணையவழி கற்பித்தல் முறையை (Online Education Mode) நோக்கி நகர்கிறது என்று கூறலாம். இணைய கல்வித் தளங்கள் – மென்பொருள் / தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என்ற ஒரு சிறு குழுவின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும். அச்சிறு குழுவே ஒட்டுமொத்த கல்வியையும் கட்டுப்படுத்துகின்ற பிரதான சக்தியாக இருக்கும். இவர்கள் தரமான கல்வி என்ற போர்வையில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்-மாணவர்-பள்ளி கல்லூரி கட்டமைப்பை சிதைப்பதுடன் மொத்த கல்வியையுமே கட்டுப்படுத்துவதின் வாயிலாக தடையற்ற கொள்ளைக்கு முயற்சிக்கின்றனர். இதற்கு தோதாக இணையதளக் கல்வியின் வாயிலாக பட்டப்படிப்புகளை வழங்குவதற்கான திட்டத்தை தேசியக் கல்விக்கொள்கை பரிந்துரைத்திருந்தது. உடனே தேசிய தரப் பட்டியலில் (NIRF) முதல் 100 இடங்களில் உள்ள கல்லூரிகள் இணையதள வழி பட்டப்படிப்புகளை வழங்கலாம் என 2020 பட்ஜெட்டில் நியமைச்சர் அறிவித்தார். கூடவே உயர்கல்வியில் அந்நிய நேரடி முதலீடும் (FDI), Extra Commercial Borrowing (ECB)-யும் அனுமதிப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.
இணையவழி கல்வி முறைக்கு மாறுவது பற்றிய அதீத ஆசை ஆளும் வர்க்கத்திற்கு இருந்தாலும் அதனை அமல்படுத்துவதற்கு தேவையான இணைய தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இந்தியாவில் இன்னும் உருவாக்கவில்லை . கல்வி பற்றிய 2017-18 தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி (NSSO-75″ round on education) இந்திய குடும்பங்களில் 23.8% குடும்பங்களில் மட்டுமே இணையதள வசதியைக் கொண்டுள்ளது. (14.9% கிராமப்புற குடும்பங்கள் 42% நகர்புறக் குடும்பங்கள்), கணிப்பொறி, மடிக்கணினி (Desktop, laptop, Tap) போன்றவற்றை வைத்துள்ள குடும்பங்கள் வெறும் 11% மட்டுமே. முக்கியமாக 8% குடும்பங்கள் மட்டுமே கணிப்பொறி மற்றும் இணையதள வசதி இரண்டையும் பெற்றுள்ளன. இந்நிலையில் UGC மற்றும் CBSE-யின் வழிகாட்டுதல்களை எவ்வாறு அமல்படுத்துவது? இது மேட்டிக்குடி மக்களுக்கு மட்டுமே சத்தியம்.
உயர்கல்விக்கான திட்டங்களும் நிதி உதவிகளும் NIRF ranking/NAAC மதிப்பெண் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளுக்கு வழங்கப்படுகிறது. NIRF/NAAC/NBA-ன் மதிப்பீடுகளுக்குள் செல்லாத ஆயிரக்கணக்கான அரசு உயர்கல்வி நிறுவனங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்கிவருகின்றன. இக்கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளோ, ஆய்வகங்களோ கிடையாது. இக்கல்லூரிகளில் இணைய தொழில்நுட்ப வசதிகள் என்பது பெருங்கனவு. அரசுப் பள்ளிகளிலும் இதே நிலைதான் உள்ளது. இச்சூழலில் இணையவழி கல்வி முறையையானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வகையில் சாத்தியம்?
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மிகச்சிக்கலான கருதுகோள்களையும் மிக எளிமையாக மாணவர்களுக்கு விளக்கமுடியும். நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், அதற்கான நடவடிக்கைகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் செய்யாமல் இருக்கின்ற கல்வியமைப்பை சீர்குலைத்து அதனை தொழில்நுட்ப நிதி ஏகபோகங்களின் கைகளில் ஒப்படைப்பதின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக இந்த கரோனா ஊரடங்கு காலக்கட்டத்தை மோடி அரசு பயன்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கல்வியானது அனைவருக்குமானதாக ஒருபோதும் இருந்ததில்லை. ஒருவருடைய சாதிய-சமூக-பொருளாதார ஏற்றத்தாழவுகளுக்கு தகுந்தாற் போலவே கல்வி கிடைக்கும் வாய்ப்பும் இருந்து வந்துள்ளது. கடந்த இருபதாண்டுகால புதிய பொருளாதர கொள்கையோ கிடைத்துவந்த ஒருசில கல்விச் சலுகைகளுக்கும் தடைப்போட்டு கல்வியை சரக்காகவே மாற்றியுள்ளது. இந்நிலையில் இணையவழிக் கல்விமுறை என்பது ஏற்கனவே இருந்துவந்த ஏற்றத்தாழ்வுகளை இன்னும் ஆழமாக்குவதன் மூலம் பெரும்பான்மையான மக்களை கல்வியிலிருந்தே வெளியேற்றச் செய்யும்.
– மலரவன், சமூக அரசியல் ஆர்வலர்.
குறிப்பு :
1. MOOCs – Massive Open Online Courses
2. இந்தியாவில் மத்திய அரசின் MOOCs ஆன SWAYAM என்ற இணைய கல்வி தளம் உயர்கல்வி பாடங்களை (கலை, அறிவியல், பொறியியல், பொருளாதாரம், மருத்துவம்) தருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் என பணியில் உள்ளவர்கள் பலரும் SWAYAMல் தங்களுடைய துறை சார்ந்த பாடங்களை தேர்ந்தெடுத்து படித்துக்கொள்ளலாம். SWAYAM இணைய கல்வி தளத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு (System integrator) மைக்ரோசாப்ட்டிடம் மத்திய அரசால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி மைக்ரோசப்ட்டிடம் ஒப்படைத்தாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
3. Courdera, Edax, Udacity, Khan Academy ஆகியவை அமெரிக்க நிறுவனங்கள். BYJU’S, Khan Academy, MindSpark போன்றவைகள் பள்ளி மாணவர்களுக்கானது.