செய்தி: சென்னையில் வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் உள்ள ஊழியர்கள், பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் இயங்காததால், காலையில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

“எங்களுக்கு எப்போதும் மாதத்தின் முதல் தேதியில் சம்பளம் வந்துவிடும். அப்படி இன்று வரவேண்டிய சம்பளம் 60 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படும், மீதியுள்ள 40 சதவிகித சம்பளம் பின்னர் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக எம்.டி கணேசன் அறிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறையின் நிதிநிலை சரியில்லை, பண வரவு இல்லை எனத் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்தத் தகவல் அறிந்ததும் சென்னை முழுவதும் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஒரு சில பணிமனைகளில் உள்ள உயர் அதிகாரிகள் இன்று இரவுக்குள் உங்களுக்கு முழுமையாகச் சம்பளம் வழங்கப்படும் என உத்திரவாதம் அளித்துள்ளால் அந்த பகுதிகளில் மட்டும் சில பேருந்துகள் வெளியில் சென்றுள்ளன. மற்ற பணிமனைகளில் இருந்து யாரும் பேருந்தை இயக்கவில்லை.

தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகமாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாங்கள் தினமும் வேலை செய்கிறோம். வாடகை வீட்டில்தான் உள்ளோம். மாத வருமானத்தை வைத்துதான் வீட்டு வாடகை, பிள்ளைகளின் பள்ளிச் செலவு ஆகியவற்றைப் பார்த்துவருகிறோம். இப்படி இருக்கையில், எங்களுக்கு வரவேண்டிய சம்பளத்தில் 60 சதவிகிதம் மட்டுமே வழங்கினால் எப்படி?” என்று போக்குவரத்து தொழிலாளிகள் கூறினர்.

நீதி: வராத அன்னிய முதலீட்டுக்காக முதலீட்டாளர் மாநாட்டை பல கோடி ரூபாய்களில் வீணடித்து நடத்திய எடப்பாடி அரசு, அல்லும் பகலும் உழைக்கும் மாநகரப் பேருந்து தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பது ஏன்?

♠ ♠ ♠ 

செய்தி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் இன்று தொடங்க உள்ளது. அத்திவரதரை தரிசிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் குளத்தின் நீரில் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த 1979-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி அத்திவரதர் வைபவம் தொடங்கி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 1) வசந்தமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நீதி: கூலிப்படையை ஏவி சங்கரராமனை கொன்ற சங்கராச்சாரி, குற்றவாளிகளை கண்டு கொள்ளாத அத்திவரதர் எழுந்தருளி என்ன பயன்?

♠ ♠ ♠ 

செய்தி: வங்கியில் கணக்கு வைத்திருப்போர், மற்றொரு கணக்குக்கு என்.இ.எப்.டி. எனப்படும், தேசிய மின்னணு பணப்பரிமாற்றம் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்., எனப்படும், உடனடி பணப்பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம், பணம் அனுப்பலாம். இதற்காக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி கட்டணம் வசூலிக்கிறது. வங்கிகள், வாடிக்கையாளர்களிடம் இருந்து, சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன.

மின்னணு பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த பரிமாற்றங்களுக்கான கட்டணம் முழுவதுமாக நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. வங்கிகளும், இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. அதனால் சேவைக் கட்டணத்தை விலக்கி கொள்வதாக பெரும்பாலான வங்கிகள் அறிவித்துள்ளன.

நீதி: பணமதிப்பழிப்பின் போது மின்னணு பரிமாற்றம் கொடிகட்டிப் பறக்கும் என்று கூவிய பாஜகவினர் வாயில் யதார்த்தம் மண்ணை அள்ளிப் போட்டது. ஏற்கெனவே இருந்த குறைந்தபட்ச அளவில் கூட மின்னணு பரிமாற்றம் நடக்கவில்லை. இந்நிலையில் ஆடித்தள்ளுபடி ஆஃபர் போன்று ரிசர்வ் வங்கி இச்சலுகையை அறிவித்திருக்கிறது. இத்தனை நாள் கட்டணத்தை வசூல் செய்த சூரப்புலிகள் இப்போது வேண்டாமென்று முடிவெடுத்திருப்பது யாரை ஏமாற்ற?

படிக்க:
கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?
♦ பணமில்லா வர்த்தகம் : மக்களை நச்சுக் கூண்டுக்குள் தள்ளிய மோடி !

♠ ♠ ♠ 

செய்தி: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன் 29 அன்று காலை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 160 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கார்த்திக், ராசு, மனோகர், ஆனந்த் ஆகிய 5 பேர் ஒரு படகில் நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தங்கள் படகை வைத்து மீனவர்களின் படகு மீது மோதினர்.

இதில் மீனவர்களின் படகின் முகப்பு பலத்த சேதம் அடைந்தது. மேலும் மரச்சட்டத்தை வைத்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். அவர்களை மீட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும், கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகளும், மணமேல்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

நீதி: போர் முடிந்தும் இலங்கைக் கடற்படையின் அட்டூழியம் குறைந்தபாடில்லை. மீனவர்கள்தானே என்று இந்திய அரசு மெத்தனமாக வேடிக்கை பார்ப்பது இலங்கை கடற்படையின் திமிருக்கு அடிப்படை. சென்னையில் மாதந்தோறும் சர்க்கஸ் காட்டும் கடலோரக் காவற்படை நமது மீனவர்களைக் காப்பாற்றாது என்பதற்கு மற்றுமொரு சான்று.

♠ ♠ ♠ 

செய்தி: நிலத்தடி நீர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு, மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கத்தாரியா கடந்த வியாழக்கிழமை பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நிலத்தடி நீர் பஞ்சாப் (76 சதவீதம்) மாநிலத்தில் அதிகமாக உறிஞ்சி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த நிலைகளில் ராஜஸ்தான் (66), டெல்லி (56), ஹரியாணா (54) மாநிலங்களில் அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது.

மேற்குவங்கம், உத்தராகண்ட், திரிபுரா, ஒடிசா, நாகாலாந்து, மேகாலயா, மிசோரம், மணிப்பூர், காஷ்மீர், அசாம், அருணாச்சல் ஆகிய மாநிலங்களில் அளவுக்கதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படவில்லை.

அருணாச்சல், அசாம், கோவா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அந்தமான் நிகோபர், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாப்பான நிலையில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் வட்டார அளவில் (பிளாக்) அதிகபட்சமாக 358 பகுதிகளில் நிலத்தடி நீர் அளவுக்கதிகமாக உறிஞ்சப்பட்டுள்ளது.

நீதி: விவசாயம் பொய்த்துப் போன நிலையில் நிலத்தடி நீரைக் காலி செய்தவர்கள் யார்? சிறப்பு பொருளாதார மண்டலம், பெருந்தொழில் நிறுவனங்கள், இவர்களுக்கான நகரமயமாக்கம் போன்றவைகளே தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு முதன்மையான குற்றவாளிகள்!

♠ ♠ ♠ 

செய்தி: நாடு முழுவதும், ஒரு முனை வரி விதிக்கும் வகையிலான மத்திய அரசின் ஜி.எஸ்.டி., சட்டத்திற்கு, 2016 செப்., 8 -ல், ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, 2017 ஜூலை 1-ல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தது.

இந்த நடைமுறை துவங்கி, இரண்டு ஆண்டுகள் முடிந்து, இன்று (ஜூலை 1) மூன்றாமாண்டு துவங்குகிறது.

நீதி: இந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான சிறு குறு தொழில்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மூடப்பட்டு இலட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். மக்கள் வேதனையை சாதனை என்று கொண்டாடுகிறார்கள் நவீன நீரோக்கள்.

♠ ♠ ♠ 

செய்தி: மத்தியப் பிரதேசம், இந்துார் மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட், ‘பேட்’ டால் தாக்கிய வழக்கில், சிறையில் இருந்து ஜாமினில் வந்த பா.ஜ.க. – எம்.எல்.ஏ., ஆகாஷ், ”சிறைவாசம் நன்றாக இருந்தது; புதிய அனுபவம் கிடைத்துள்ளது.

மீண்டும் பேட் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன்,” என, கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நீதி: மட்டையை தூக்கிய கை துவளும் வரை தண்டனை இல்லாத போது திமிர் தெனாவெட்டாக குரைக்கிறது.

படிக்க:
கும்பல் கொலைகளுக்கு எதிராக மோடி சொல்லும் சட்டமும் நீதியும் எப்படி செயல்பட்டன ?
♦ தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !

♠ ♠ ♠ 

செய்தி: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள சீதாபுரில், 14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அதே பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்களை விட நன்றாக படித்ததால், எட்டாம் வகுப்பு மாணவியை, அதே பள்ளியில் படிக்கும் அவரது உறவுக்கார மாணவர்கள் நான்கு பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

நீதி: பெண்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் முடக்கும் பார்ப்பனியம் பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கினால் வன்புணர்ச்சி செய்து ஒடுக்குகிறது! இப்பேற்பட்ட காரணங்களுக்காகவெல்லாம் பாலியல் பலாத்காரம் நடக்கும் ஒரே நாடு இந்தியாதான். இதோடு தாலிபான்கள் கூட போட்டி போட முடியாது.

♠ ♠ ♠ 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க