தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி அட்டூழியத்தில் ஈடுபடும் இலங்கைக் கடற்படை

ஒக்கி புயலில் மாட்டிக் கொண்டு நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றாமல் சாகவிட்ட பாசிச மோடி அரசு, தற்போதும் தனது இந்திய கடற்படையை கொண்டு காணாமல் போன மீனவர் ராமச்சந்திரனை தேடுவதாக எந்த அறிவிப்பையும் இதுவரை செய்யவில்லை.

டந்த ஜூலை 31 அன்று மாலை இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 1500 பேர் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வழக்கம் போல கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையின் கப்பல், மீனவர்களின் படகுகளை விரட்டியது.

அப்போது ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான படகு மீது இலங்கை கடற்படையின் கப்பல் மோதியது. இதில் அந்த படகில் இருந்த நான்கு மீனவர்கள் கடலில் விழுந்தனர். இதில் மீனவர் மலைச்சாமி கொல்லப்பட்டார். ராமச்சந்திரன் என்ற மீனவர் மாயமானார். இதுவரை இவரை பற்றிய தகவல் தெரியவில்லை. இரண்டு மீனவர்கள் மட்டும் காப்பாற்றப்பட்டனர். உயிருடன் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மலைச்சாமியை கொன்று பிணமாக இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது இலங்கை கடற்படை.

சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் நீதி கேட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சுமார் 5 மணி நேரம் வரை போராட்டம் நடத்தினர். அதன்பின் அனைத்து விசைப்படகு சங்கங்களின் மீனவ சமுதாய தலைவர்கள் கூட்டம் ஆகஸ்டு 2 ஆம் தேதி கூடி, மாயமான மீனவரை மீட்கக் கோரியும், இலங்கை கடற்படையைக் கண்டித்தும் 3 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்த சம்பவம் நடந்து முடிந்த சுவடு கூட அழியாத சூழலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் நான்கு புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமுக்கு பிடித்து சென்றுள்ளது. அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

இதேபோல் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்களை கைது செய்து, 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து ஜூலை 5 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது. மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 24 ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்து 700-க்கும் மேற்பட்ட படகுகள், 3000-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.


படிக்க: தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 : கடல் வள பேரழிப்பின் ஒரு அங்கம் !


மேலும், ஜூன் 30-ம் தேதி 400-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் 2500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை, மீனவர்களை விரட்டி அடித்ததோடு 25 மீனவர்களையும், 4 நாட்டுப் படகுகளையும் சிறை பிடித்தது. இதை கண்டித்து ராமேஸ்வரம் பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பெண்கள், குழந்தைகள் பேரணியாக சென்று, ராமேஸ்வரம் பேருந்து நிறுத்தம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். தங்களது கணவர்களையும் தகப்பன்மார்களையும் தம்பிமார்களையும் மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்து கண்ணீர் மல்க கூக்குரலிட்ட காட்சி காண்போர் நெஞ்சை கரையச் செய்தது.

இத்தனை நடந்தும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் இதுவரை கொஞ்சம் கூடக் குறையவில்லை. மீனவர்களின் கோரிக்கைகளுக்கும், போராட்டங்களுக்கும் பாசிச மோடி அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. இலங்கை அரசை கண்டித்து மீனவர்களை விடுதலை செய்யச் சொல்லவோ, இனி இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்று கண்டிக்கவோ செய்யவில்லை, ஏன்?

இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது அறிவிக்கப்படாத போரை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒக்கி புயலில் மாட்டிக் கொண்டு நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றாமல் சாகவிட்ட பாசிச மோடி அரசு, தற்போதும் தனது இந்திய கடற்படையை கொண்டு காணாமல் போன மீனவர் ராமச்சந்திரனை தேடுவதாக எந்த அறிவிப்பையும் இதுவரை செய்யவில்லை. மீன்வளத்துறையின் அனுமதி பெற்று சக மீனவர்களே இரண்டு படகுகளில் செல்ல உள்ளனர்.

2021 இல் பாசிச மோடி கும்பல் கொண்டு வந்த தேசிய கடல் மீன்வள (ஒழுங்காற்று) மசோதா (2021), மீனவர்கள் கரையில் இருந்து 12 கடல் மைல்களுக்கு உட்பட்டே மீன்களை பிடிக்க வேண்டும் என்றது. இதைப்போல் இன்னும் சில அம்சங்களை இணைத்து மீனவர்களை கடலில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தில் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பெரு நிறுவனங்களும், அதற்கு சொந்தமான பெரிய, பெரிய கப்பல்களுமே மீதி உள்ள கடல் எல்லைகளில் மீன் பிடிக்க, கடல் வளங்களை கொள்ளையடிக்க வாசல்களை திறந்துவிடுகிறது இச்சட்டம். இந்த சட்டத்திற்கான அடிக்கல் தனியார்மயம் தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையே ஆகும்.


படிக்க: நேர்காணல் : ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு – மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!


இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை சுடுவது, கைது செய்வது, சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது ஆகியவற்றால் மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடித்தொழிலில் இருந்து வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர். அதே சமயம் பாசிச மோடி அரசு கொண்டுவந்த கடல் வள மசோதாவும் மீனவர்களை கடலில் இருந்து வெளியேற்றி கடலின் வளங்களை கார்ப்பரேட்டுகள் கைகளில் ஒப்படைப்பதை நோக்கமாகக் கொண்டதாக உள்ளது. இதனால் மீனவர்களின் மீதான இலங்கை அரசின் தாக்குதலுக்கும், பாசிச மோடி அரசு கள்ள மவுனம் சாதிப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது.

ஆகவே, மீனவர்களின் போராட்டமானது, இலங்கை கடற்படையிடம் இருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டமாக மட்டும் இருந்துவிடக்கூடாது. கடல் வளங்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும், அவர்களுக்கு கடல் வளத்தை காவு கொடுக்கும் பாசிச மோடி கும்பலுக்கும் எதிரான போராட்டத்தையும் உள்ளடக்கியதாக அது இருக்க வேண்டும். ஆகவே இதை உணர்ந்து உழைக்கும் மக்களாகிய நாம் மீனவர்களின் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து களத்தில் இறங்க வேண்டியது அவசியமாக உள்ளது.


ரஞ்சித்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க