நேர்காணல் : ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு – மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!

ஒக்கிப் புயலில் மீனவர்கள் சந்தித்த துயருக்கான காரணங்களையும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்டு ஒட்டுமொத்த அரசும் மீனவர்களை பாராமுகமாக நடத்தியது குறித்தும் தனது கருத்துக்களை நம்முடன் இந்நேர்காணலில் பகிர்ந்துகொள்கிறார், மீனவர்கள் பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசிவரும் வழக்கறிஞர் திரு.லிங்கன் அவர்கள்.

2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒக்கிப் புயல் ஏற்படுத்திய பேரழிவினால் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலிலேயே மாண்டு போயினர். குடும்ப உறுப்பினர்களை இழந்த துயரத்தில் வள்ளவிளை, சின்னத்துறை, தூத்தூர், நீரோடை உள்ளிட்ட குமரி மாவட்ட கிராமங்கள் கண்ணீர் கடலில் மூழ்கின. மிகப்பெரிய கடற்படையை வைத்திருப்பதாக பெருமை பீற்றிக் கொண்டிருக்கும் இந்திய ஒன்றிய அரசோ, மீனவர்களைக் காப்பாற்ற எவ்வித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

புயல் அடிக்கத் தொடங்கிய அடுத்தநாள்தான், வானிலை மையத்தால் புயல் எச்சரிக்கை அறிவிப்பே கொடுக்கப்பட்டது. ஒருநாள் முன்பாக சொல்லியிருந்தால்கூட சிலரையாவது காப்பாற்றியிருக்கலாம். புயலின்போதும், புயலுக்குப் பிறகும்கூட கடலில் சிக்கியிருந்தவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் இருந்து எடுக்கப்படவில்லை. மீனவர்கள்தான் தங்கள் சொந்த முயற்சியில் குறிப்பிட்ட பேரை மீட்டு வந்தார்கள். புயலில் சிக்கிய பெரும்பான்மையினர் மடிந்துவிட்டார்கள். அத்துயர நிகழ்வின் ஐந்தாம் ஆண்டு இது!

ஒக்கிப் புயலில் மீனவர்கள் சந்தித்த துயருக்கான காரணங்களையும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்டு ஒட்டுமொத்த அரசும் மீனவர்களை பாராமுகமாக நடத்தியது குறித்தும் தனது கருத்துக்களை நம்முடன் இந்நேர்காணலில் பகிர்ந்துகொள்கிறார், மீனவர்கள் பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசிவரும் வழக்கறிஞர் திரு.லிங்கன் அவர்கள்.

000

படிக்க : ஒக்கி புயல் : மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதான பொய் வழக்கு ரத்து !

புதிய ஜனநாயகம்: குமரியைப் புரட்டிப்போட்ட ஒக்கிப் புயல் பேரிடர் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்பேரிடரின்போது கடலில் சிக்கி 218 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்; 243 பேர் காணவில்லை என்று அரசு புள்ளிவிவரமே கூறுகிறது. புயலின்போது கடலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணிகளில் அரசு அலட்சியம் காட்டியது. மீனவ மக்கள், பிணங்களையாவது மீட்டுத் தாருங்கள் என்று கோரிக்கை வைத்த போதும், அரசு மீட்டுவரவில்லை. கடலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மீனவர்களையும் கடலில் செத்து மிதந்துகொண்டிருந்த மீனவ உடல்களையும் மீனவ மக்கள்தான் மீட்டுவந்தனர்.

ஒக்கிப் புயலானது, மீனவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குமரி மீனவ சமுதாயத்தையும் பாதித்துள்ளது. பல குடும்பங்கள் தங்களது உறவினர்களை இழந்திருக்கிறார்கள். அரசு அறிவித்த நிவாரணங்களால், தங்களது இழப்பை ஈடுசெய்ய முடியாத அளவிற்கு பேரிழப்பைச் சந்தித்துள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்களின் இறப்பிற்கும் வாழ்வாதாரத்தை இழந்த மீனவ சமூகத்தின் நிலைமைக்கும் அரசின் பாராமுகம் எப்படி காரணமாக இருந்தது?

திரு.லிங்கன்: முக்கியமான விசயம் என்னவென்றால், அரசுத்துறைகளில் குறிப்பாக மீன்வளத்துறையிலும் பேரிடர் மீட்புத் துறையிலும் மீனவ சமூகத்தினர் இல்லை; கடலைப் பற்றியோ, கடலோர மக்களைப் பற்றியோ தெரிந்த அதிகாரிகள் இல்லை. அரசு அதிகாரிகள் நிலத்தில் வாழ்பவர்கள்; நிலம் சார்ந்த சிந்தனையாளர்கள். கடல் சார்ந்த சிந்தனை என்பது வேறு; கடலில் இருந்து உலகத்தைப் பார்ப்பதும், சமவெளியில் இருந்து கடலைப் பார்ப்பதும் வேறு!

புயல், சுனாமி போன்ற பேரிடர்களைக் கையாள்வதற்கான முழுமையான கொள்கை – திட்டமே அரசிடம் இருந்ததில்லை. 2004 சுனாமி தாக்குதலுக்குப் பிறகுதான் பேரிடர் மேலாண்மைச் சட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கான தனித்துறை அமைக்கப்படுகிறது. சுனாமிக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட புயல் நிவாரணக் கொள்கையிலும்கூட, கரையில் புயல் வருவதற்கு முன், வரும்போது, வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்றுதான் இருக்கிறதே தவிர, கடலுக்குள் புயல் அடிக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் இல்லை. இப்படிப்பட்ட பாராமுகமான திட்டத்தால்தான் மீனவ மக்களுக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்ட மீனவர்களில் ஆழ்கடல் மீன்பிடிப்பவர்கள் உள்ளனர். அவர்கள் 45 முதல் 50 நாட்கள்வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கக் கூடியவர்கள். இம்மீனவர்களைப் பற்றி அரசு சிந்திக்கவே இல்லை. நவம்பர் 29-ஆம் தேதி மதியவேளையில்தான் புயல் அபாய அறிவிப்பை அரசு கொடுத்தது. அந்த அறிவிப்புக்கு பிறகு, கரையில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் போகவில்லை. ஆனால் அதற்கு முன்பே கடலுக்குள் சென்ற மீனவர்களுக்கு தகவல் தெரியாது. அவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதற்கான எந்த திட்டமும் சாதனமும் அரசிடம் இல்லை. கடற்கரையில் நின்றுகொண்டு ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு கொடுத்தார்கள்; கடலில் 200 மைல்கல்லுக்கு அப்பால் இருக்கும் மீனவர்களுக்கு அது எப்படி கேட்கும்?

இப்புயலினால் இத்தனை மீனவர்கள் உயிரிழந்ததற்கு மீட்புப் பணியில் அரசு காட்டிய அலட்சியம்தான் காரணம். தன்னால் 60 கி.மீ. தூரம்தான் தேடமுடியும் என்றது கடலோர காவல்படை. கப்பற்படையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தூரத்தில் மீனவர்களைத் தேடும்படி மக்கள் கோரிக்கை வைத்த பிறகும், அரசானது கப்பற்படையை முறையாக மீட்புப் பணியில் ஈடுபடுத்தவில்லை. செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி கடலில் மீனவர்கள் எங்கு சிக்கியுள்ளார்கள் என்பதை அடையாளம் காணவும் முயற்சிக்கவில்லை. கடலையும் கடல் நீரோட்டத்தையும் அறிந்த தங்களை மீட்புப் பணியில் இணைத்துக்கொள்ளுமாறு மீனவர்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அரசானது உடனடியாக அவர்களை இணைத்துக் கொண்டு மீட்புப் பணியில் ஈடுபடவில்லை.

புதிய ஜனநாயகம்: நீங்கள் சொன்னதுபோல் அரசானது மீட்பு நடவடிக்கைகளைச் செய்ய வாய்ப்பிருந்தும், அலட்சியத்தால் செய்யவில்லை. மீனவக் குடும்பங்களுக்கான நிவாரணம் கூட பல போராட்டங்களுக்குப் பிறகுதான் அறிவிக்கப்பட்டது. மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம் முழுமையாக சென்றடைந்ததா?

திரு.லிங்கன்: சென்னை உள்ளிட்டு பல மாவட்டங்களில் நடந்த போராட்டங்களுக்குப் பிறகுதான் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, மீனவ மக்களுக்கு நிவாரணம் அறிவித்தார். இதற்கு முன்னால் கடலில் காணாமல் போனவர்களை 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் இறந்தவர்களாக அறிவிப்பார்கள். இப்போராட்டத்தின் விளைவால் ஒக்கிப் புயல் பேரிடர் நிகழ்ந்து ஒரு மாதத்துக்குள்ளே கரைக்குத் திரும்பாத மீனவர்களை இறந்தவர்களாக அறிவித்து அரசு நிவாரணம் வழங்கியது. உயிரிழந்த மீனவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சத்துணவு கூடங்களில் வேலைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தருவதாகக் கூறினார்கள்; எந்த வீடும் கட்டித்தரவில்லை. பேரிடர்களின்போது கடலில் இருக்கும் மீனவர்கள் கடற்கரையில் இருப்பவர்களிடம் தொடர்பு கொள்வதற்காக உலக வங்கியின் உதவியுடன் நவீனக் கருவிகளை வாங்கித்தருவதாகக் கூறினார்கள்; அதுவும் நிறைவேற்றப்படவில்லை. கன்னியாகுமரி அல்லது குளைச்சலில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்போவதாக அறிவித்தார்கள்; நிறைவேற்றவில்லை.

புதிய ஜனநாயகம்: ஒக்கிப் புயலின் போதுதான் கடலுக்குள் புயல் அடித்தால் இத்தகைய பேரிடரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அரசு முதன்முறையாக உணர்ந்ததா? அல்லது இதற்கு முன்பு நடந்த பேரிடர்களில் இருந்து அரசு படிப்பினைகளைப் பெறாமல் செயல்பட்டுள்ளதா?

திரு.லிங்கன்: ஒக்கி புயலுக்கு முன்பும் புயல்கள் தாக்கியுள்ளன. ஆனால் அப்புயல்களைவிட ஒக்கிப் புயலின் பாதிப்பு அதிகம். முன்பே குறிப்பிட்டதைப் போல, புயலினால் கடலுக்குள் சிக்கிக்கொண்ட மீனவர்களைக் காப்பாற்றுவதற்கான திட்டமோ, கொள்கையோ சுனாமிக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டத்திலும், மத்திய அரசின் பேரிடர் மீட்புத் திட்டத்திலும் கூட இல்லை. புயல் வரும் போது கரையோர மக்களை அப்புறப்படுத்தி மீட்பதற்கான திட்டம் மட்டுமே அரசிடம் உள்ளது. சான்றாக, நான்கு வருடத்திற்கு முன் ஒடிசாவில் ஒரே நாளில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட கரையோர மக்களை புயல் வருவதற்கு முன்பே அப்புறப்படுத்தியது அரசு.

ஆனால் இன்றுவரை புயலின்போது கடலுக்குள் சிக்கிக்கொண்ட மீனவர்களை மீட்பதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை. திட்டமே இல்லாதபோது, எப்படி செயல்பட முடியும்?

புதிய ஜனநாயகம்: மீனவ மக்களைப் பாதிக்கும் வகையில் அணு உலை, சாகர்மாலா திட்டம், துறைமுகங்கள், சுற்றுலா விடுதிகள் என கார்ப்பரேட் திட்டங்களைக் கடற்கரைப் பகுதிகளில் கொண்டு வருகிறது ஒன்றிய அரசு. மேலும் கடல் மீன்வள மசோதா மூலம் மீனவர்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் மீன்பிடிக்கவேண்டும் என வரம்பிடுகிறது. ஆனால் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ராட்சச கப்பல்களையும் வலைகளையும் கொண்டு மீன்பிடிக்க அனுமதி கொடுக்கிறது.

கடல்வளத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தூக்கிக் கொடுக்கும் வேலையை செய்து வரும் அரசு ஒக்கி புயல், சுனாமி போன்று எதிர்பாராமல் நிகழும் பேரிடர்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு மீனவர்களை பாராமுகமாக நடத்துவதன் மூலம் அவர்களை கடற்கரையிலிருந்தே விரட்டியடிக்கும் வேலையைச் செய்து வருகிறதா?

திரு.லிங்கன்: கடற்கரைச் சார்ந்த மீன்பிடித்தலை துறைமுகம் சார்ந்த மீன்பிடித்தலுக்கு மாற்றுவதுதான் ஒன்றிய அரசின் திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்த மீனவப் பகுதிகளில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்த வேண்டும். மீனவர்களை நேரடியாக அப்புறப்படுத்த முடியாது என்பதால் மீன்பிடித் தொழிலில் நெருக்கடியை ஏற்படுத்தி விரட்டியடிக்கிறது.

கடல் மீன்வள மசோதாவானது, கடலில் 12 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு மேல் சென்று மீன்பிடிக்க ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்கிறது. மேலும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் ஒவ்வொரு முறையும் என்ன வலை பயன்படுத்துகிறோம், எவ்வளவு மீன் பிடிக்கிறோம், எந்த வகை மீன் பிடிக்கிறோம் என்று முன் அனுமதி பெறவேண்டும். அனுமதி பெற்ற அளவுக்கு மீறி மீன்பிடித்தாலோ அல்லது வேறு வகை மீன் பிடித்தாலோ அபராதம் விதிக்கப்படும். இவை நடைமுறையில் கடைப்பிடிக்க முடியாத, சாத்தியமில்லாத ஒன்று. நெருக்கடி கொடுப்பதற்காகவே இவ்வாறான விதிகள் வகுக்கப்படுகிறது.

மேலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டால், எந்த படகையும் யாருடைய அனுமதியுமின்றி, எப்போது வேண்டுமானாலும் இந்திய கப்பற்படையால் சோதனையிட முடியும். சோதனையை நடத்தவிடாமல் தடுத்தால் சிறை தண்டனை வழங்கப்படும். சுருக்கமாகச் சொன்னால், இச்சட்ட மசோதாவின்மூலம் கடல் பரப்பை இராணுவமயமாக்குகிறார்கள், தங்களது கண்காணிப்புக்குள் கொண்டுவருகிறார்கள்.

இம்மசோதா மட்டுமல்ல, மரக்காணம் முதல் இராமேஸ்வரம் வரை கடலுக்குள் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த விழைகிறது அரசு. கடலை மீனவர்களிடமிருந்து பிடுங்கி அதானி-அம்பானிக்கு தாரைவார்க்கிறது.

புதிய ஜனநாயகம்: பேரிடர் பாதிப்புகளை தாண்டி, பொதுவாக மீனவ மக்களுக்கு என்னென்ன வாழ்வாதாரக் கோரிக்கைகள் இருக்கிறது? தங்களது கோரிக்கைகளை அவர்கள் வென்றெடுப்பதற்கான வழி என்னவாக இருக்க வேண்டும் என்று தாங்கள் கருதுகிறீர்கள்?

திரு.லிங்கன்:  பேரிடர்காலமின்றி, சாதாரண காலங்களிலேயே வாரத்திற்கு இரண்டு மீனவர்கள் கடலில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். இதனால் மீனவப் பகுதிகளில் இளம் வயது விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவர்களின் வாழ்வாதாரத்திற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை.

விவசாயிகளுக்கு உழவர் சந்தை இருப்பதைப் போல, மீனவர்கள் தங்களுடைய மீன்களை விற்பதற்கான சந்தை எதுவும் கிடையாது. பேரிடர்களின்போது வலை, வள்ளம், படகுகள் சேதமடைந்தால் அதற்கு இழப்பீடு ஏதும் வழங்கப்படுவதில்லை.

மீன்பிடி தடைக்காலத்திற்கு அரசால், குறிப்பிட்டத் தொகை நிவாரணமாக வழங்கப்படுகிறது. ஆனால், புயல் போன்ற காரணங்களுக்காகவும் மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருக்கிறார்கள். மொத்தமாக ஆண்டுக்கு 100 – 150 நாட்கள் மட்டுமே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கிறார்கள். புயல் உள்ளிட்ட இதர காரணங்களால் மீன்பிடித்தல் தடைப்படும்போது, அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்குவதில்லை.

படிக்க : ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

உயிருக்கு ஆபத்தான, வாழ்க்கை உத்திரவாதமில்லாத மீன்பிடித் தொழிலில் தங்கள் பிள்ளைகள் ஈடுபடுவதை மூத்த மீனவ சமுதாயம் விரும்பவில்லை. ஆனால், இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களும் மீன்பிடிக்க வராமல் இல்லை. பொறியியல், முதுகலை பட்டப் படிப்புகளை முடித்துவிட்டு வேலை கிடைக்காததால், வேறு வழியின்றி கடலுக்கு மீன்பிடிக்க இளைஞர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்த சுயதொழில் இதுதான்.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முக்கியமான காரணம் மீனவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை என்பதுதான். முன்பே சொன்னதுபோல, கடலோரப்படையிலோ, பேரிடர் மீட்பு துறையிலோ மீனவர்களே இல்லை, கப்பற்படையில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இத்துறைகளில் எல்லாம் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சென்றால்தான் அவர்களது பிரச்சினை ஓரளவு அடையாளப்படுத்தப்படும்.

தேசியக் கட்சிகளும், மாநில அரசியல் கட்சிகளும்கூட மீனவர்களை ஒரு சமூகமாகவே கருதுவதில்லை, அவர்களது கோரிக்கைகளுக்காக குரல் எழுப்புவதில்லை. ஏனெனில், அக்கட்சிகளில் மீனவர்களின் பிரதிநிதித்துவம் ஏறத்தாழ இல்லை என்பதுதான். மீனவப் பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக மாற்றுவதற்கான முயற்சிகள் தேவைப்படுகிறது; சமூக இயக்கங்கள் மீனவர்கள் பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக மாற்றப் போராட வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க