Tuesday, June 25, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்தமிழகம்ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

-

க்கிப் புயல் பாதிப்பின் தீவிரத்தை; அரசின் அலட்சியமும், பாராமுகமும் ஏற்படுத்திய பேரழிவின் ஆழத்தைப் பேசும், ‘கண்ணீர்க் கடல்’ என்ற திரைச் சித்திரத்தை ‘வினவு’ தயாரித்து உள்ளது. இது, சென்னை, வடபழனி, ஆர்.கே.வி. ப்ரிவியூ அரங்கில் டிசம்பர் 25 -ம் தேதி திரையிடப்பட்டது. 250 -க்கும் அதிகமானோர் அரங்கு முழுவதும் நிறைந்திருந்த நிலையில், ஆவணப்படம் ஏற்படுத்திய பாதிப்பை ஒவ்வொருவரின் முகத்திலும் உணர முடிந்தது.

சோகம், ஏமாற்றம், கையறு நிலை, கோபம்… என ஒவ்வொருவரும் ஓர் உணர்ச்சிநிலையில் இருந்தனர். திரையிடல் நடைபெறும்போதே அரங்கின் உள்ளே அழுகை ஒலிகளும், கண்ணீர்த் துளிகளும் நிறைந்திருந்தன. அதனைத் தொடர்ந்து, மீனவ இளைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்ற உரையாடல் நடைபெற்றது.

குமரிக் கரையில் அரபிக் கடலோரத்தில் உள்ள வள்ளவிளை, சின்னத்துறை, தூத்தூர், நீரோடி உள்ளிட்ட எட்டு கிராமங்கள் பாரம்பரிய ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பெயர்பெற்றவை. ஒக்கி புயலால் நூற்றுக்கணக்கான மீனவர்களை இழந்திருப்பதும் இந்த கிராமங்கள்தான். இதில் வள்ளவிளையில் இருந்து ஆல்பர்ட், டிக்சன் என்ற இரண்டு இளைஞர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் பத்திரிகையாளர் ரகுமான், ம.க.இ.க. பொதுச் செயலாளர் மருதையன் ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று வந்த பத்திரிகையாளர் பாரதி தம்பி இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

*****

ன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று வகையான மீன்பிடி முறைகள் இருக்கின்றன. ஒன்று, பகல் 3 மணிக்கு கிளம்பிச் சென்று காலை 3 மணிக்குத் திரும்பி வருவது. அடுத்தது, காலை 3 மணிக்கு கிளம்பி அதே நாள் மாலைக்குள் திரும்பி வருவது. மூன்றாவது பிரிவினர் ஆழ்கடல் மீன்பிடிப்பவர்கள். இவர்கள் இன்றைக்கு கிளம்பினால் எப்போது திரும்பி வருவார்கள் என்பதே தெரியாது. நான்கு நாட்கள் முதல் அதிகபட்சம் 50 நாட்கள் கூட ஆகலாம்.

நவம்பர் 29 -ம் தேதி இரவு புயல் அடித்தது. அன்று மாலை 3 மணிக்கு கிளம்பியவர்கள் கடலுக்குள் சென்றுவிட்டார்கள். வானிலை ஆய்வு மையம் புயல் அறிவிப்புக் கொடுத்தது நவம்பர் 30 -ம் தேதிதான். ஒரு நாள் முன்பாக சொல்லியிருந்தால், குறைந்தபட்சம் அன்றைய பகலில் கடலுக்குச் சென்றவர்களையேனும் காப்பாற்றியிருக்க முடியும்.

இவற்றை விளக்கிய ஆல்பர்ட், “முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல… அதன்பிறகும் என்ன செய்வது என்று இவர்களுக்குத் தெரியவே இல்லை. அந்த சமயத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அவரிடம் நாங்கள் மீனவர்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ள சில ஜி.பி.எஸ். பொசிசன்களை கொடுத்தோம். அது அதிகபட்சம் 720 நாட்டிகல் மைல் தூரம் இருந்தது. இது நிச்சயம் ஹெலிகாப்டரால் சென்று வரக்கூடிய தூரம்தான். ஒரு ஹெலிகாப்டரின் அதிகபட்ச வேகம் 200 நாட்டிக்கல் மைல். நான்கு மணி நேரத்தில் போகக்கூடிய தூரம். ஆனால், இவர்கள் ஹெலிகாப்டரை வைத்துக்கொண்டு, எங்கள் பார்வையில் படும்படி கடலின் ஓரப்பகுதியையே சுற்றிச்சுற்றி வந்தார்கள்.

இரண்டாவதாக, அமைச்சர் எங்கள் ஊரில் இருந்த சமயத்தில் புயலின் மையப்பகுதி (epicentre) லட்சத்தீவுக்கும், கொச்சினுக்கும் இடையே 13 டிகிரி அட்சரேகை பகுதியில் நிலைகொண்டிருந்தது. கரையை கடந்திருக்கவில்லை. மீனவர்களை மீட்க கப்பல் அனுப்புவதாக சொன்ன அமைச்சரிடம், ‘அந்தக் கப்பலை மகாராஷ்டிராவில் இருந்தோ, கோவாவில் இருந்தோ அனுப்புங்கள். ஏனெனில் மீனவர்கள் சிக்கியுள்ள பகுதி அங்கிருந்து 500 நாட்டிக்கல் மைல் தூரம்தான். மாறாக, கொச்சினில் இருந்து கப்பல் அனுப்பினால், அது 1000 நாட்டிக்கல் மைல் தொலைவு வரும். சரிபாதி தூரமும், நேரமும் குறையும்’ என்று சொன்னோம். ஆனால் அமைச்சரோ, ‘மீட்புப் பணிக்கு கப்பல் அனுப்ப வேண்டும். அதை எங்கிருந்து அனுப்பினால் உங்களுக்கு என்ன?’ என்று கேட்டார்.

ஆல்பர்ட்

நாங்கள் சொன்ன பகுதியில் இருந்து கப்பல்களை அனுப்பி இருந்தால், புயல் அவர்களை நெருங்கும் முன்பே மீட்டிருக்க முடியும். அதைத்தான் செய்யவில்லை என்றால், புயல் சென்ற பாதையிலேயே பின் தொடர்ந்து செல்லுங்கள் என்று சொன்னோம். ஒன்று புயலுக்கு முன்னே செல்ல வேண்டும். இல்லை என்றால் பின்னே வேண்டும். இதுதான் மீனவர்களை மீட்பதற்கு வழி. ஆனால் நிர்மலா சீதாராமன் நாங்கள் சொன்ன எதையும் காதுகொடுத்தும் கேட்கவில்லை’’ என்று ஆல்பர்ட் விவரித்தபோது அரசின் அலட்சியமும், திமிர்த்தனமும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டன.

“சாலையில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவரை யாரோ சிலர் காப்பாற்றாமல் போனால், அது அவர்களின் சுயநலம். அதுவே, ஒரு ஆம்புலன்ஸுக்கு போன் செய்து சொல்லி, ‘போக்குவரத்து நெரிசல். வர முடியாது’ என்று ஏதோவொரு நொண்டிச்சாக்கு சொல்லி மறுத்து, அதன் காரணமாக உயிர் போகிறது என்றால், அதை விபத்து என்று சொல்வதா, கொலை என்பதா? ஒக்கி புயலில் நடந்ததும் இதுதான். எங்கள் மீனவ மக்களை இந்த அரசு இயற்கை சீற்றம் என்ற பெயரால் இனப்படுகொலை செய்திருக்கிறது” என்கிறார் ஆல்பர்ட்.

புயல் முடிந்து 10 நாட்கள் கழித்து, கரைக்குத் திரும்ப வருமாறு மீனவர்களுக்கு அறிவிப்பு விதமாக ஒரு ஆடியோ அறிவிப்பை ஹெலிகாப்டர் மூலம் கடலுக்குள் சென்று ஒலிபரப்பியது கடலோர காவல்படை. கரையிலிருந்து வயர்லெஸ் கிடைக்காது என்பதால் இப்படிச் செய்தார்கள். இதை நவம்பர் 29 -ஆம் தேதியே செய்திருந்தால், கிட்டத்தட்ட அனைத்து மீனவர்களையுமே காப்பாற்றியிருக்க முடியும் என்கிறார்கள் ஆல்பர்ட்டும், டிக்சனும்.

“பொதுவாக ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள், பத்து பதினைந்து படகுகள் சேர்ந்து ஒரு கூட்டாகத்தான் கடலுக்குள் செல்வார்கள். ஒரு படகின் வயர்லஸ் வரம்புக்குள்தான் இன்னொரு படகு இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். ஒரே ஒரு படகுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால், அடுத்தடுத்த படகுகளுக்கு உடனடியாகத் தகவல் சென்று சேர்ந்திருக்கும். அவர்கள் அருகில் உள்ள கரை பகுதியை நோக்கி விரைந்திருப்பார்கள். மிக அதிகபட்சமான மீனவ உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்’’ என அவர்கள் விவரிக்க, விவரிக்க… இது இயற்கை பேரழிவு அல்ல; அரசே செய்த படுகொலைகள் என்பதை அரங்கில் இருந்த ஒவ்வொருவரும் உணர்ந்தனர்.

“கோஸ்ட் கார்டு எங்களில் சிலரையும் மீட்புப் பணிக்கு அழைத்துச் சென்றது. நானும் அதில் சென்றேன். ஆனால், அதிகபட்சம் 50 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு மேல் அவர்கள் போக மறுத்துவிட்டார்கள். எங்கள் மீனவர்கள் தொழில் செய்வதோ குறைந்தது 200 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால். அப்படியிருக்க 50 நாட்டிக்கலில் தேடி என்ன கிடைக்கும்? அதில் ஒரு கோஸ்ட் கார்டு அதிகாரி சொன்னார், ‘நாங்கள் இப்போதுதான் இவ்வளவு தொலைவுக்கே வந்திருக்கிறோம். இதுவரை இங்கெல்லாம் வந்ததே இல்லை’ என்றார். அப்போதுதான் இவர்களால் உடைந்த ஒரு வள்ளத்தின் பலகையை கூட மீட்க முடியாது என்பதை தெரிந்துகொண்டோம்’’ என்று கோஸ்ட் கார்டின் லட்சணத்தை விளக்கினார் மீட்புப் பணிக்குச் சென்றுவந்த டிக்சன். “ஐம்பது நாட்டிகல் என்பது எங்கள் மீனவர்கள் சாதாரணமாக ஃபைபர் படகில் சென்று வரும் தூரம்தான்” என்று அவர் சொன்னவுடன் அரங்கமே கைகொட்டிச் சிரித்தது.

டிக்சன்

ஆனால், அரசோ தாங்கள் துரிதமாகவும், சிறப்பாகவும் மீட்புப் பணிகளைச் செய்து வருவதாகப் பச்சைப் பொய்களை முதல் நாளில் இருந்து சொல்லிவந்தது. “எல்லா கப்பல்களிலும் voyage data recorder என்றொரு கருவி இருக்கும். ஒருவேளை அரசு சொல்வதைப் போல அவர்கள் மீனவர்களைக் காப்பாற்றியது உண்மையாக இருந்தால், எந்த அட்சரேகை, தீர்க்கை ரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அவர்கள் மீனவர்களை மீட்டார்கள் என்ற “பொசிசன்” அந்த கருவியில் நிச்சயம் பதிவாகி இருக்கும். அந்தப் பதிவுகளை வெளியிட அரசு தயாரா? நாங்கள், எத்தனை மீனவர்களை, எந்த இடத்தில் காப்பாற்றினோம் என்பதற்குத் துல்லியமான பொசிசன்களை தருகிறோம். அரசு தருமா?’’ என்று கோபத்துடன் கேட்டார் ஆல்பர்ட்.

இன்னமும் வள்ளவிளையில் இருந்து மட்டும் 67 பேர் கரை திரும்பவில்லை. அதில் தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம் வரை பல மாநிலங்களிலிருந்து வந்த மீனவர்கள் உண்டு. குமரி மீனவர்களின் படகுகளில், ஒரு படகுக்கு ஓரிருவராக ஏராளமான வட இந்தியத் தொழிலாளர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை; பெயர் விவரம் எதுவும் யாரிடமும் இல்லை.

“எங்க ஊர் படகுகள் சிலவற்றுக்கு அரசு distress alert transmitter எனப்படும் கருவியை வழங்கியது. ஆபத்து காலங்களில் அந்த கருவியை அழுத்தினால் அதில் இருந்து மீன்வளத்துறைக்கு சிக்னல் போகும். அவர்கள் ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க வேண்டும். ஒக்கி புயலில் சிக்கிய 123 படகுகள் அந்தக் கருவியை அழுத்தியிருக்கிறார்கள். ஒரு சிக்னல் கூடவா மீன்வளத் துறைக்கு வரவில்லை? யாரேனும் அதைத் தவறுதலாக அழுத்திக் கடற்படையை அலையவிட்டால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று விதியெல்லாம் வைத்திருக்கிறார்கள்’’ என்று நமது அரசின் அணுகுமுறையில் உள்ள அலட்சியத்தையும், புறக்கணிப்பையும், திமிரையும் சுட்டிக்காட்டினார் ஆல்பர்ட்.

இலங்கைக்கும்,கன்னியாகுமரிக்கும் இடையில் மீன்வளம் நிறைந்த wedge bank பகுதியில் முன்பு குமரி மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இப்போது அங்கு மீன்பிடிக்கும் உரிமையை வெளிநாட்டு கப்பல்களுக்கு நம் அரசு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது. இப்போது நம் படகுகள் அங்கு போக முடியாது. ஆகவே, வேறுவழி இல்லாமல் மீனவர்கள் ஆழ்கடலை நோக்கி விரட்டப்படுகின்றனர்.

மேலும், இலங்கையில் மீனவர்களுக்கு சாட்டிலைட் போன் பயன்படுத்த அனுமதி உள்ளது. ஆனால், இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களை சொல்லி அது மறுக்கப்படுகிறது. “நாங்கள் கேட்பது இருவழித் தகவல் தொடர்பு அல்ல. ஒரு வழி தகவல் தொடர்புள்ள சாட்டிலைட் போன் பயன்படுத்த அனுமதி வழங்கினால் போதும். அதை வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று கேட்கிறார் ஆல்பர்ட்.

பத்திரிக்கையாளர் பாரதி தம்பி

மீனவர்களின் இத்தகைய பிரச்னைகளைப் பேச வேண்டிய ஊடகங்களும், அரசும் இழிவான முறையில் அவற்றை இருட்டடிப்பு செய்ததுடன் ஆபாசமான முறையில் அரசுக்கு விளம்பரம் செய்தன. சென்னை மழை வெள்ளத்தில் மக்கள் கொடுத்த நிவாரணப் பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட ‘ஜெயலலிதா லெகசி’யில் வந்தவர்கள், ஒக்கி புயலில் தாங்களாகவே நீந்திக் கரை சேர்ந்த மீனவர்களை அரசுதான் மீட்டது என்று வெட்கமே இல்லாமல் சொன்னார்கள். அதை அப்படியே ஊடகங்கள் வாந்தி எடுத்தன.

“ஒரு ஹெலிகாப்டரில் நான்கு மீனவர்கள் மீட்கப்படும் ஒரே ஒரு வீடியோ காட்சியை 10 நாட்கள் மீண்டும், மீண்டும் ஊடகங்கள் ஒளிபரப்பின. ராபிட்சன் என்பவர் மூன்று இரவு, மூன்று பகல்கள் நீந்தி லட்சத்தீவில் கரையேறினார். மருத்துவமனையில் கண்விழித்துப் பார்த்தபோது அவரையும், அவருடன் நீந்தி கரை சேர்ந்தவர்களையும் கடலோர காவல்படை மீட்டு சிகிச்சை அளித்து வருவதாக செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது’’ என்கிறார் ஆல்பர்ட்.

ஆழக்கடலில் நிராதரவாக கைவிடப்பட்ட அந்த இளைஞர்களுக்கு மரணத்தை விடக் கொடிய வலி அந்தப் பொய்தான். ராபிட்சன், தான் மட்டும் நீந்தி வரவில்லை. தன்னுடன் ஓர் உடலையும் இணைத்துக் கட்டிக்கொண்டு மூன்று நாட்கள் நீந்தி வந்திருக்கிறார். உணவில்லை; நீர் இல்லை; துளி உறக்கம் இல்லை; பகல் எல்லாம் உப்புக்கத்தியாய் குத்தும் கொடும்வெயில்; இரவெல்லாம் கடுங்குளிர்; இரவும், பகலும் முகத்தில் அடிக்கும் அலைகடல். ஒரு நொடி கூட இடைவெளி விடாமல் நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். கண்காணா தூரத்தில் இருக்கும் கரையை நோக்கி நீந்தும் பொழுதில், ‘யாரேனும் ஒருவர் மீட்க வந்துவிட மாட்டாரா?’ என ஒவ்வொரு கணமும் எவ்வளவு எதிர்பார்த்திருப்பார்கள்? கரையில் தவிக்கும் மனைவி, பிள்ளைகளை எண்ணி எவ்வளவு மனம் கலங்கியிருப்பார்கள்? உடன் நீந்தி வந்தவர்கள் ஒவ்வொருவராய் கண் முன்னே மடிந்து வீழும்போது மனதைச் சூழும் அச்சத்தையும், அவலத்தையும் என்னவென்று அழைப்பது?

இத்தகைய நிலையிலும், தன் உடன் வந்த ஒரு மீனவனின் உடலைச் சுமந்துகொண்டு மூன்று இரவும், மூன்று பகலும் நீந்தி ஒரு மீனவர் கரை சேர்ந்திருக்கிறார் என்றால்…. அந்த மன உறுதியும், உடல் வலுவும், சக தொழிலாளி மீதான நேசமும், ஆழ்கடல் மீன் பிடிப்பு எனும் கூட்டு உழைப்பு அளித்த பரிசுகள். “வைராக்கியமா கரையில வந்து நின்னு, அரசாங்கத்தை வெட்கப்பட வைக்கனும்னு நினைச்சேன்” என்று ஒரு மீனவர் சொன்னார். ஆனால் அரசோ, வெட்கம், மானம் எதுவுமின்றி பேரிடர் காலங்களை ஆதாயத்துக்கான வாய்ப்பாகப் பார்க்கிறது.

பத்திரிக்கையாளர் ரகுமான்

“இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ‘சாகர் மாலா’ப் ‘பாரத் மாலா’ ஆகிய இரண்டு திட்டங்களின் மூலம், தனியார் துறைமுகங்கள், சரக்கு பெட்டக முனையங்கள் (container terminals), அனல் மின் நிலையங்கள், அனு மின் நிலையங்கள்… போன்றவற்றைக் கொண்டு வருவது அரசின் திட்டம். இவை எல்லாம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்கள். இவை போக, கடற்கரையோரப் பகுதிகளை, குறிப்பாக குமரி மற்றும் கேரள கடலோரப் பகுதிகளை சுற்றுலாவுக்காக திறந்துவிட வேண்டும் என்பது அரசின் திட்டம். தாஜ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் சொகுசு நட்சத்திர விடுதிகளைக் கட்டுவதற்காகக் காத்திருக்கிறார்கள். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ஒக்கி புயலில் மீனவர்கள் மீதான அலட்சியமும், புறக்கணிப்பும் தற்செயல் நிகழ்வு என்று கருத இடமில்லை. இது திட்டமிட்டுதான் நடந்திருக்கிறது. மீனவர்களைக் கடற்புறத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கம் இதன் பின்னே இருக்கிறது” என்கிறார் ம.க.இ.க. பொதுச் செயலாளர் மருதையன்.

இந்த கருத்தை ஆமோதித்துப் பேசிய பத்திரிகையாளர் ரகுமான், “மீனவர்களை வெளியேற்றிவிட்டு கடல்வளம் முழுவதையும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்குத் திறந்து விடுவதுதான் இவர்கள் நோக்கம். மீனவர்களின் துயரம் அரசின் மனசாட்சியை உலுக்கவில்லை. மீனவர் துயரம் மட்டுமல்ல… கந்துவட்டி கொடுமையில் நெல்லையில் 4 பேர் உடல் கருகிச் செத்துப்போனார்களே.. அது இரக்கம் உள்ள யாருடைய மனதையும் உலுக்கிவிடும். ஆனால், அதுவும் இந்த அரசின் மனசாட்சியை உலுக்கவில்லை.’’ என்றார்.

தென்முனை கடலோரத்தின் சோகம் இன்னும் தீரவில்லை. அவர்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் என்றேனும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் அரபிக்கடலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஏக்கமாகவும், ஆற்றாமையாகவும் மட்டும் இல்லை. அதன் அடியாழத்தில், தங்களை மரணத்தை நோக்கித் தள்ளிய அரசுக்கு எதிரான கோபம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.

அந்த கொந்தளிப்பு விவசாயிகளின் கோபத்துடன்; தொழிலாளர்களின் எதிர்ப்புடன் இணையும்போது, அவர்கள் ஒக்கியை விடவும் வேகமாக இந்த அரசை திருப்பித் தாக்குவார்கள்.

-வினவு செய்தியாளர்.

புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

  1. Nothing going to happen, because we are Tamil and specially these people are mostly Christians and not belongs to ruling class. (Yes I know …..my comment may be inappropriate but – truth hurts)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க