காவி என்பது நிறமல்ல எனும் நூலின் ஆசிரியர் மு. சங்கையா அவர்கள் தனது நூல் குறித்தும் இந்தியாவில் காவி பயங்கரவாதம் வளர்ந்ததன் வரலாறு குறித்தும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் பேராசியர் இரா. முரளி அவர்களுக்கு நேர்காணல் அளித்துள்ளார். இந்த நூல் எழுதுவதற்கு முன்னரே இரண்டு நூல்களை எழுதியுள்ள மு. சங்கையா அவர்களின்பன்னாட்டுச் சந்தையில் பாரதமாதா எனும் நூல் சர்வதேச அளவில் இந்தியா எப்படி சூறையாடப்படுகிறது என்பதை விளக்கும் விதமாக தமிழில் வெளிவந்த சிறப்பான நூல் ஆகும்.

காவி என்றால் சாதுக்களின் நிறம் என்ற நிலையில் இருந்து வெறுப்பரசியலின் நிறம் என்ற நிலைக்கு மாறியதன் பின்னணி குறித்து இந்த நேர்காணலில் விவரிக்கிறார் சங்கையா. இந்து என்ற சொல்லின் வரலாறு துவங்கி இன்று இந்துத்துவ அரசியலை முன் வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-இன் செயல்திட்டம் வரை அனைத்தையும் வரலாற்றுப் போக்கில் விவரிக்கிறார்.

2000 ஆண்டுகள் ஆதிக்கம் செய்த பார்ப்பன சனாதனக் கும்பலுக்கு கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடி பற்றியும் அதன் விளைவாகவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தோன்றியது குறித்தும் விவரிக்கும் சங்கையா, அம்பேத்கருக்கு முன்னர் இருந்த பார்ப்பன எதிர்ப்பு மரபைப் பற்றியும் இந்த நேர்காணலில் விவரித்துள்ளார்.

படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவாரா – சுயமரியாதை பெரியாரா ? யாரை தெரிவு செய்வது ?
♦ ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !

குறிப்பாக கோல்காப்பூர் மன்னர் சாஹு மகராஜ் மற்றும் பரோடா மன்னர் கெய்க்வாட் ஆகியோர் பார்ப்பனியத்துக்கு எதிராக எவ்வகையில் எல்லாம் நடவடிக்கைகள் எடுத்தனர் என்பதை விவரிக்கிறார். இன்று ஜனநாயக ஆட்சி இருப்பதாகச் சொல்லப்படும் காலத்திலேயே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கையில், தனது அரசாட்சியில் தீண்டாமைக்கு எதிராக சட்டம் இயற்றி, ஆறு ஆண்டுகளில் தீண்டாமையைக் கடைபிடித்த சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கிய வர்லாற்றையும் எடுத்துரைக்கிறார் சங்கையா.

மேலும் ஆர்.எஸ்.எஸ்.-இன் தோற்றம் மற்றும் அதனைத் தோற்றுவித்தவர்களின் சாதிய அடிப்படையை விவரிக்கும் சங்கையா, இத்தாலியில் முசோலினியின் பாசிசக் கருத்தாக்கத்தை ஆர்.எஸ்.எஸ். எப்படி தனக்கான தத்துவமாக வாரி அணைத்துக் கொண்டது என்பதைப் பற்றியும் பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு கல்வி உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் புகுந்து வரலாற்றைத் திரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது என்பதையும் தேர்தல் அரசியலைத் தாண்டி எப்படி மக்கள் மத்தியில் விரவி இருக்கிறது என்பதையும் இந்த நேர்காணலில் விவரிக்கிறார்.

நேர்காணல் காணொலி :

நன்றி : Socrates Studio

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க