தெளிந்த நீரோடை போல் எளிமையான உரைநடையில் தோழர் சங்கையா இந்த அரிய படைப்பை உருவாக்கியுள்ளார்.

இந்த நூலின் முதல் கட்டுரையான ‘மதமெனும் மந்திரக்கோல்’, மதங்களின் தோற்றுவாய் குறித்துத் தெளிவாக விளங்குகிறது. இந்து என்பது பூகோள அடையாளமாகவும், பின்னர் அதை மதத்தை குறிக்கும் சொல்லாக காலம் பதிவு செய்துவிட்டதையும் வரலாற்றுப் பின்னணியில் இந்த முதல் கட்டுரை விவரிக்கிறது.

இந்தியாவை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிளவுபடுத்தி கலவரங்களின் பூமியாக மாற்றி, காலத்துக்கேற்ற கோலமாக இந்து அரிதாரத்தை பூசிக் கொண்டனர் பார்ப்பனர்கள்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்
♦ நூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் !

ஹிந்து தேசியமே உண்மையான தேசியம். இந்துஸ்தானம், இந்து ராஷ்டிரம் என்ற கோட்பாட்டை சமூக அரசியல் தளங்களில் முன்வைக்கத் தொடங்கினர். அதன்மூலம் இஸ்ரேல், ஈரான், சவுதி அரேபியா போன்ற மதம் சார்ந்த கட்டளைகளால் ஆளப்படும் அரசை நிறுவுவதற்கு உடலளவிலும் அறிவுத் தளத்திலும் சாத்தியமுள்ள அவசியமான அனைத்து வழிகளிலும் தங்களைத் தயாரித்துக் கொள்வது என்ற இலக்கோடு ஆர்எஸ்எஸ் அமைப்பை தோற்றுவித்தனர்.

இந்துத்துவ பாசிச கொடுங்கோல் ஆட்சியை இந்திய மண்ணில் நிறுவிட தொலைநோக்கோடு பார்ப்பனிய கும்பல் ஆர்எஸ்எஸ் அமைப்பை உருவாக்கிய பின்னணியை இந்த நூல் தெளிவுபட கூறுகிறது.

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள்,  பண்பாடுகள்,  மதங்கள் என்கின்ற பன்முகத்தன்மை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை இந்து – இந்தி -இந்தியா என்ற குடுவைக்குள் அடைத்து வைக்கவும், மனிதநேயமற்ற கோட்பாடான மனுதர்மத்தை அரசியல் சட்டமாக உருவாக்கவும் தற்போது கைப்பற்றியுள்ள அரசியல் அதிகாரத்தை தீவிரமாக பயன்படுத்துகிறது. இந்திய மக்களின் ஒற்றுமை வாழ்வு சிதறுண்டு போகச் செய்வதற்கான வெடிகுண்டுதான் இந்து ராஷ்டிரம் என்பதை இந்நூல் ஆசிரியர் வரலாற்றுப் பின்புலத்தோடு எடுத்துரைக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற நூற்றுக்கணக்கான மதவெறி அமைப்புகளை உருவாக்கி களத்தில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மதவெறி கும்பல் மக்களை  மதவெறியின் அடிப்படையில் பிளவுபடுத்த அனைத்து சித்து வேலைகளைச் செய்து வருவதை பல்வேறு வரலாற்று தரவுகளோடு இந்நூல் விவரிக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சலாம் போட்டு சோரம் போன இந்த ஆர்.எஸ்.எஸ். ‘மாவீரர்’களின் முக விலாசத்தையும் இந்நூலில் தோலுரித்துக் காட்டத் தவறவில்லை. இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் கொண்டுவந்த  நெருக்கடி நிலையை ஆதரித்து காவடி தூக்கியதை எடுத்துரைத்து  ‘விலை போன வீரம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ஆசிரியர் சங்கையா சுவைபட எழுதியுள்ளார்

“காந்தி-கோட்சே-ஆர்எஸ்எஸ்” என்ற கட்டுரையில், குற்றச்செயல்களில், வன்முறைகளில், கொலைச் சம்பவங்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் மாட்டிக் கொள்ளும் பொழுது ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அந்தர்பல்டி அடிப்பதும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை நீக்கி விட்டதாக கூறி தங்களை புனிதர்களாக காட்டிக் கொள்வதும் தான் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு வாடிக்கை என்பதை பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் ஊடாக இந்நூல் நிறுவுகிறது.

சிந்திப்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் ஆர்எஸ்எஸ் -பாஜக சித்தாந்தமே சிந்திக்காதே, கேள்வி கேட்காதே என்பதுதான். இந்திய வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இருந்திராத வகையில் ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதி, ஆகியவற்றின் மீது கொடும் தாக்குதலை மதவெறி பாசிச கும்பல் நடத்திவருகிறது.

பாசிசத்துக்கு எதிராக ஐக்கிய முன்னணி அமைத்து மக்களைத் திரட்ட வேண்டிய காலத்தின் தேவையை, அவசரத்தை இந்நூலின் மூலம் தோழர் சங்கரய்யா வலியுறுத்துகிறார்.

எளிமையான சரளமான மொழிநடையை கைவரப்பெற்ற தோழர் சங்கையா அவர்களின் இந்தப் படைப்பு வரலாற்று நாவலை படிப்பது போல் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்துத்துவ பாசிச எதிர்ப்பு போராட்டக் களத்தில் களமாட வலிமையான கருத்து ஆயுதமாக நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.

நூல் : காவி என்பது நிறம் அல்ல
ஆசிரியர் : எம். சங்கையா
பதிப்பகம் : சித்தன் புக்ஸ் வெளியீடு
தொடர்புக்கு : 94451 23164
விலை : ரூ. 150
இணையத்தில் வாங்க : Common Folks

நூல் அறிமுகம் : எஸ் காமராஜ்,
மாநிலத் துணைச் செயலாளர் – அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம், ஆலோசகர் – தேசிய தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க