ந்தியாவின் மதப்பூசல்கள் வெறும் இந்து மதத்திற்கும் இசுலாத்திற்கும் இடையே மட்டும் நடக்கவில்லை. மத்திய காலத்தில் இந்திய அளவிலும் தமிழகத்திலும் பவுத்தம் சமணம் சைவம் வைணவம் ஆகியவற்றிற்கிடையே உக்கிரம்மான சச்சரவுகள் நடைபெற்றன. இதில் பல கோவில்கள் அழிக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டன. இது பற்றிய சுருக்கமும் முன்வைக்கப்பட்டுள்ளது. மயிலை சீனி வெங்கடசாமி, அருணன், தி.சு.நடராசன், காமாட்சி ஆகியோர் எழுதிய நூல்கள் இதற்குப் பயன்பட்டன. திருவாருர் தங்கராசு அவர்கள் எழுதிய “திருஞானசம்பந்தர்” எனும் நாடக நூலிலிருந்தும் சில செய்திகள் கிடைத்தன.

வழிப்பாட்டுத்தலங்கள் தாக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் இங்கு மட்டும்தான் நடந்துள்ளதா? இக்கேள்விக்கு விடை என்ன? மங்கோலியர்கள் பாக்தாதை நிர்மூலமாக்கிய பொழுது மசூதிகள் அழிக்கப்பட்டன. சிலுவைப்போர்களின் பொழுது மசூதிகளும் யூதர்களின் வழிபாட்டுத்தலங்களும் ஒரு புறமும், மாதாகோவில்கள் மறுபுறமும் தாக்குதலுக்கு உள்ளாயின. கிறித்துவத்திற்குள் கத்தோலிக்க புராடெஸ்டெண்டு பூசலில் மாதா கோவில்கள் தாக்கப்பட்டன. இசுலாத்தின் பிரிவுகளான சன்னி பிரிவு ஒரு புறமும் ஷியா, இஸ்மாயிலி மற்றும் சுஃபி பிரிவு மறுபுறமும் மோதின.

இப்பொழுதும் மோதல் தொடர்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுமையுமே வழிபட்டுத்தலங்கள் தாக்குதல்களின் இலக்காக இருந்துள்ளன. இன்னும் இருக்கின்றன.

இந்தியச் சூழலில் இந்து மதமும் இசுலாமும் முரண்பட்டுக்கொண்டன என்பது உண்மையே! அதே சமயம் இந்த இரு பெரும் மதங்களும் உறவாடவும் செய்தன. இந்த உறவாடலின் உன்னதமான பிரதிநிதிகள்தான் அக்பரும் கபீரும்! இந்து மதவாதம் மட்டுமல்ல; இசுலாமிய மதவாதமும் அக்பர் மற்றும் கபீரைப்பற்றி பேசுவது இல்லை. இரு பிரிவினருக்குமே அவர்கள் கசக்கின்றனர். இப்புத்தகத்தின் மையப் பொருள், வழிப்பாட்டுதலங்கள் அழிப்பு என்பதால் கபீரைப் பற்றியோ அல்லது அக்பரின் தீன் இலாஹி எனும் புதிய மதத்தைப்பற்றியோ எழுத இயலவில்லை.

இசுலாமிய மன்னர்கள் கோவில்களைப் பாதுகாத்த ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை முன்வைத்துள்ளோம். இசுலாத்தின் சன்னிப்பிரிவில் ஆழ்ந்த பற்று கொண்ட மதவெறியன் எனக் கருதப்படுகின்ற (அது ஓரளவுக்கு உண்மையும் கூட!) அவுரங்கசீப் கூட கோவில்களை பாதுகாத்திட ஆணைகளை பிறப்பித்துள்ளான் என்பது ஆச்சர்யமான ஒன்று அல்லவா? மறுபுறத்தில் மசூதிகளைக் கட்டுவதற்கு உதவிய இந்து மன்னர்களும் உண்டு. இதில் விஜயநகர மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்!

போரில் தோற்ற இந்து மன்னர்களின் கோவில்களை இசுலாமிய மன்னர்கள் அழித்தனர். மற்ற கோவில்களை அவர்கள் தொடுவது கூட இல்லை! ஏன்? இந்து மன்னர்கள் மசூதிகளை அழித்த உதாரணங்கள் உண்டு. ஒப்பிடுகையில் அவை மிகச்சில! இசுலாமிய மன்னர்களைத் தோற்கடிக்கும் பொழுது இந்து மன்னர்கள் பொதுவாக மசூதிகளை அழித்தது இல்லை! ஏன்? வழிபாட்டுத்தலம் என்ற முறையில் கோவிலுக்கும் மசூதிக்கும் என்ன வேறுபாடு? இவை மிக முக்கியமான கேள்விகளாகும். இக்கேள்விகளுக்கு வரலாறு முன்வைக்கின்ற பதில்தான் மதவாதத்தின் பிரச்சாரம் பொய் என்பதை தெளிவாக்குகிறது.

ஒவ்வொரு மதமும் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு பழிவாங்கப் புறப்பட்டால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மதமோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். முடிவே இருக்காது! அழிக்கப்பட்ட கோவில்கள் திருப்பித்தரவேண்டும் என சங்பரிவாரத்தின் கோரிக்கை நியாயம் எனில், சமணம் மற்றும் பவுத்தத்திடமிருந்து பறித்த கோவில்களை இந்து மதம் திருப்பித்தர இயலுமா? இது சாத்தியமல்ல! எனவேதான், 15.08.1947 அன்று வழிபாட்டுத்தலங்கள் என்ன நிலையில் இருந்தனவோ அதே நிலை தொடர வேண்டும் என இந்திய அரசாங்கம் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்பு சட்டம் இயற்றியது. பாபர் மசூதி இராமஜென்ம பூமிக்கு மட்டுமே விதிவிலக்கு வழக்கு நடப்பதால்!

எனினும் சங்பரிவாரம் தனது செயல்களைக் கைவிடப்போவது இல்லை. மோடி ஆட்சி தனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என சங்பரிவாரம் எண்ணுகிறது. சங்பரிவாரத்தின் செயல்பாடுகள் மறுபுறத்தில் சிறுபான்மை மதவெறிக்குக் காரணியாக செயல்படுகிறன. எனவே, மதச்சார்பின்மைக்கான இயக்கம் நடத்துவதும் அதில் அனைத்துப் பகுதி மக்களையும் திரட்டுவது ஒன்றே மதவாத சக்திகளைத் தனிமைப்படுத்தும். அதற்கு இச்சிறு நூல் சிறிதளவாவது உதவினால் அது மிகப்பெரிய வெற்றியாக அமையும். (நூலின் முன்னுரையிலிருந்து…)

கோவில் கொள்ளை மட்டுமல்ல; கோவில்களை அழிப்பதும் இந்து மன்னர்களின் போரின் பொழுது நடந்துள்ளது. பத்தாவது நூற்றாண்டில் இராஷ்ட்ரகூடா அரசனான மூன்றாவது இந்திரன் தனது பரம எதிரியான பிரதியாரா அரசனை தோற்கடித்த பொழுது களப்பிரியாவிலிருந்த அவனின் கோவிலை அழித்தான்; அதனை பெருமையாக பதிவும் செய்தான். சிங்கள அரசனான எட்டாம் அகபோதி தமது சரணாகதிக்கு அடையாளமாக இராஷ்ட்ரகூடா மன்னர்களுக்கு அளித்த இரண்டு புத்தர் சிலைகள் 1007-ம் ஆண்டு இராஜேந்திர சோழன் படையெடுப்பின் பொழுது அழிக்கப்பட்டன. அதே போல அபயகிரி சரணாலயத்தில் இருந்த தங்கத்தாலான புத்தர் சிலை(பாண்டிய மன்னனால் கொள்ளை அடிக்கப்பட்டு மீண்டும் சிங்கள அரசனால் மீட்கப்பட்டது) 1017-ம் ஆண்டு இராஜேந்திர சோழன் படையெடுப்பின்பொழுது கொள்ளை அடிக்கப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டது. (குல வம்சா 55.2021) 

படிக்க :
கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது !
வரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம் | பேரா. கருணானந்தன் உரை | காணொளி

11-ம் நூற்றாண்டில் காஷ்மீரை ஆண்ட ஹர்ஷா எனும் மன்னன் கோவில்கள் கொள்ளை அடிக்கவும், அழிக்கவும் தனியாக ஒரு அமைச்சரையே நியமித்தான். அவன் காலத்தில் குஜராத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஜைனக்கோவில்கள் கொள்ளை அடிக்கப்பட்டன மட்டுமல்ல; அவை அழிக்கவும்பட்டன. 11-ம் நூற்றாண்டின் மத்தியில் சோழ அரசன் இராசாதிராசன் சாளுக்கியர்களை தோற்கடித்து தலைநகரான வாதாபியை சூறையாடி, முற்றிலுமாக எரித்தான். இயற்கையிலயே வாதாபியில் இருந்த கோவில்களும் எரிக்கப்பட்டிருக்கவேண்டும். சாளுக்கியர்களின் கறுப்பு கல்லாலான வாயிற்காப்போன் சிலையை சோழமன்னன் தன் தலைநகரத்திற்குக் கொண்டுவந்து போரில் வென்றதற்கான பரிசுகளாக மக்களின் பார்வைக்கு வைத்தான்.

இவையெல்லாம் இசுலாமியர்கள் எனப்படும் துருக்கியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்பே இந்து மன்னர்களால் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட நிகழ்வுகள் ஆகும். இதனை அப்படியே இசுலாமிய மன்னர்கள் தொடர்ந்தனர். துருக்கியர்கள் வருகைக்குப் பின்னரும் கூட இந்து மன்னர்கள் தாம் தோற்கடித்த மன்னர்களின் கோவில்களைக் கொள்ளை அடிப்பதும் அவற்றை அழிப்பதும் தொடர்ந்தனர். (நூலிலிருந்து பக்.37)

ருத்ரா மகாலயா, குஜராத்.

… என்னதான் ஆட்சி இசுலாமிய சுல்தான்களது என்றாலும், ஆளப்படுகிற பெரும்பான்மை மக்கள் இசுலாமியர் அல்லாதவர்கள். அவர்களில் இந்துக்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் என பல பிரிவினர் இருந்தனர். இந்துக்களும் இன்றைய காலகட்டத்தில் இருந்ததுபோல அல்லாமல் பல பிரிவுகளைக் கொண்டதாக இருந்தனர். பல மதங்களும் பிரிவுகளும் கொண்ட பன்முக தேசத்தை ஆளும்பொழுது, அதற்கே உரிய சில தேவைகள் எழுந்தன. அவற்றில் முக்கியமானது கோவில்களை பாதுகாப்பது ஆகும். அதனை மிகத்தெளிவாக சுல்தான் மன்னர்கள் உணர்ந்திருந்தனர். – “குஸ்ருகான் ராஜாவான பிறகு இந்துக்களுக்கு நிறைய சாதகங்கள் செய்தார். பசுவதையைக்கூட தடை செய்தார்” என எழுதுகிறார் இபன் பதூதா. இயற்கையிலேயே இவன் கோவில்களையும் பாதுகாத்திருக்க வேண்டும். (அருணன்/காலம்தோறும் பிராமணியம் / தொகுதி-2 / பக்:39)

முகம்மதுபின் துக்ளக் தென்னிந்தியப் பகுதியான டெக்கான் பிரதேசத்தை தன் பேரரசின் கீழ் கொண்டு வந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1326-ம் ஆண்டில் பிதார் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில் செயல்பட உத்தரவாதப்படுத்த தனது அதிகாரிகளை அங்கு அனுப்புகிறான். அந்த சிவன் கோவிலில் சில உள்ளூர் பிரச்சனைகள் காரணமாக வழிபாடு நடக்கவில்லை. மக்கள் சுல்தானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மிக விரைவில் அங்கு வழிபாடு தொடங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனும் ஆணையுடன் சுல்தான் தனது அதிகாரிகளை அங்கு அனுப்பிவைத்தான்.  (P.B. Desai / Kalyana Inscription of Sultan Muhammad, Saka 1248 / Epigraph ialndica 32 (1957-58:165-168) Eaton p-111) (நூலிலிருந்து பக்.41-42)

நூல் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும்
ஆசிரியர்கள் : அ.அன்வர் உசேன், வெ.பத்மனாபன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424 | 2435 6935
மின்னஞ்சல் : tamizhbooks@gmail.com

பக்கங்கள்: 96
விலை: ரூ 70.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க :panuval | commonfolks

1 மறுமொழி

  1. (இசுலாத்தின் சன்னிப்பிரிவில் ஆழ்ந்த பற்று கொண்ட மதவெறியன் எனக் கருதப்படுகின்ற (அது ஓரளவுக்கு உண்மையும் கூட!) அவுரங்கசீப்),

    ஆசிரியரே , பண்டைய இந்தியாவை பல்வேறு மன்னர்களும் மதங்களும் கடந்து சென்றுள்ளன , அவரவர்கள் தங்களுடைய நம்பிக்கை கொண்டுள்ள மதத்தில் பற்றுள்ளவர்களாக இருந்திருந்திருக்கலாம், ஆக இஸ்லாமிய மன்னர் என்று மட்டும் வரும்போது அவர்கள் இன்றலுவும் வெறியர்களாக எழுதப்படுவது ஏன்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க