வரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம் | பேரா. கருணானந்தன் உரை | காணொளி

இந்துத்துவக் கும்பலின் கட்டுக்கதைகளை, வரலாற்றுத் திரிபுகளை உடைத்து பார்ப்பனியத்தின் சதிகளை அம்பலப்படுத்துகிறார் பேராசிரியர் கருணானந்தன் - காணொளி.

“ஜே.என்.யு. முதல் சென்னைப் பல்கலைக் கழகம் வரை.. அறிவுத் துறையினரைத் தாக்கும் இந்து மதவெறிக் கும்பல்! தமிழ் சமூகமே ஆர்த்தெழு !”  என்ற முழக்கத்தின் கீழ் கடந்த 09 அக்டோபர் 2018 அன்று சென்னையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.

இதில் விவேகானந்தா கல்லூரியின் வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவரது உரையில், “அனைவரும் சமம் என்ற புத்த தத்துவத்தை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள். அவர்களுக்கு முன்னதாக அதனைச் செய்தவர்கள் வேதாந்திகள். இவர்கள் பிராமணர்கள் அல்ல. இவர்கள் சத்திரியர்கள்.

பிராமணர்கள் வேதங்களை எழுதியவர்கள். இவர்கள் கடவுளர்களைக் கட்டுப்படுத்தவல்லவர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட தரகர்கள்.

இவர்கள் உருவாக்கியதுதான் சதுர்வர்ண தர்மம். இதுதான் இன்று எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம், நக்கீரன் கோபாலுக்கு ஒரு சட்டமாக இருக்கி்றது. சட்டத்தின் ஆட்சி என்பது பெயரளவில்தான் இங்கு நடக்கிறது. இவர்களைப் பொறுத்தவரையில் இது மனுதர்மத்தின் ஆட்சிதான்.

பிராமணியத்தை எதிர்த்து வேதாந்தத் தத்துவத்தை சத்திரியர்கள் முன் வைத்தனர். “அனைத்திலும் பிரம்மம் இருக்கிறது” என்கிறது வேதாந்த தத்துவம். இதனை பிராமணியமயமாக்கியது ஆதி சங்கரர். அனைத்தும் ஜீவனும் கடவுளே என்று கூறிய வேதாந்தத்தை, சதுர் வர்ண பாகுபாடு பேசும் பிராமணியமயப்படுத்த அவர் எழுதிய ஸ்லோகங்களின் தொகுப்புதான் “அபசூத்ராதி கரணம்”. அதில், “அனைத்து பிரம்மங்களும் சமம் என்பது மறுமையில்தான். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் சூத்திரர்கள் மீது நிகழ்த்தப்படும் அனைத்து ஒடுக்குமுறைகள் அனைத்தும் சரியானவைதான் என்றார் ஆதிசங்கரர். அவரது அத்வைதத்தைப் போற்றுபவர்கள் யாரும் “அபசூத்ராதி கரணத்தை” எதிர்ப்பதில்லை.

இந்த திரிபுகளை எல்லாம் புரிந்து கொண்டு எதிர்ப்பைத் தெரிவிக்க, நமக்கு வரலாற்று உணர்வு தேவைப்படுகிறது. பல்கலைக்கழக ஆய்வுத் துறையில், உண்மையைக் கண்டறியவே ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

கருத்துரிமை என்பது வெறும் கருத்தை வைத்துக் கொண்டிருப்பது என்பது மட்டுமல்ல. அது கருத்தை பதிவு செய்வது என்றும் பொருள். பத்மாவதி ஒரு கருத்தை வைத்திருக்கிறார். அதனை புத்தகமாக பதிவு செய்திருக்கிறார். மாற்றுக் கருத்து இருந்தால் அதனை ஆய்வு செய்து அக்கருத்தை முன் வைத்து இந்தக் கருத்தை மறுக்கலாம். அதுதான் நாணயமான ஆய்வு முறை.

இவர்கள் இன்னும் பக்திகாலத்திலேயே இருக்கிறார்கள். பக்திகாலத்தில் சிவனடியார் வேசம் போட்டு மன்னனையே கொலை செய்யலாம். பக்தி என்றால் அறிவை இழப்பது என்று பொருள். அறிவை இழந்து விட்டு அடியாராக மாறுவதுதான் பக்தி. அரசன், தாய், தந்தை, கடவுள், குரு ஆகியோரிடம் பக்தி கொள்ளச் சொல்கிறது. ஒருதலைப்பட்சமான இந்த பக்தி ஒரு அடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது.

அதனால்தான் சம்பந்தர் “சிரமறுக்கத் திருவுளமே”, “கற்பழிக்கத் திருவுளமே” என்றெல்லாம் பாட முடிந்திருக்கிறது. இந்தக் காட்டுமிராண்டித் தனத்துக்குப் பெயர் பக்தி.

நாம் கல்வித்துறையும் வரலாறும் காவிமயமாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சரியாகச் சொல்லப்போனால், இதுவரை அது காவிமயமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.

சமுத்திரகுப்தனின் பெருமைகளை செப்பேடுகளிலிருந்து பாடப் புத்தகத்தில் ஏற்றியிருக்கிறது அரசு. ஆனால் இராஜராஜ சோழனின் செப்பேடுகள் கூறும் கடாரம் வென்ற, கங்கை வென்ற வரலாற்றை பாடப் புத்தகங்களில் ஏற்றவில்லை. ஏன் இந்த பாகுபாடு?

1800-களில் தமிழ் பள்ளிகளில் சைவமும், வைணவமும்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு சமஸ்கிருதம் இல்லாத சைவ, வைணவ மடம் இல்லை.

அதே போல இன்று இங்கு இருக்கும் சைவ ஆதீனங்கள் யாரும் தமிழை வளர்க்க முன்வரவில்லை. அவர்களது மடங்களில் சமஸ்கிருதத்திற்கு இருக்கும் மதிப்பு தமிழுக்கு கிடையாது.

இந்த சைவ, வைணவ வரலாறு நெடுக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த விடியலும் இல்லை. நந்தன், திருப்பானாழ்வார் போன்றவர்கள் ஒடுக்கப்பட்ட வரலாறே இதைச் சொல்லும். அவர்கள் மூலம் அச்சுறுத்தலை சமூகத்தில் பரப்பினர். அதனால்தான் மற்றுமொரு நந்தனோ, பானாழ்வாரோ இங்கு இல்லை. ஆகவே, இவர்கள் கூறும் வரலாற்றை நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய வேண்டும். பெரியாரிய பார்வையில் பார்க்க வேண்டும்.

விநாயகர், கணபதி, விக்னேஷ்வரன் ஆகிய பெயர்களெல்லாம், புத்தருக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள். புத்தருக்கு உருவ வழிபாடு கி.பி முதல் நூற்றாண்டு வரை செய்யப்படவில்லை. அடையாள வழிபாடுதான் நடைமுறையில் இருந்தது. ஒன்று அவரது கால் பாதங்கள் – தர்ம பாதம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் தர்மச் சக்கரம், அரச மரம், யானை ஆகியவைதான் அவரது அடையாளங்களாக வைத்து வழிபடப்பட்டன.

அரச மரத்தின் கீழ் யானையாக சித்தரிக்கப்பட்ட புத்தர்தான் பின்னர் பிள்ளையாராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். புத்தரின் பாத அடையாளம், கன்னியாகுமரியில் தேவி பாதமாக மாறிவிட்டது.

பௌத்தத்தை அழித்துவிட்டு கொண்டு வரப்பட்டவர்தான் விநாயகர். சிலை வழிபாட்டை ஆரியர்களின் ரிக்வேதம் எதிர்க்கிறது. சிறு கோவில்கள், சிலைகள் இவையெல்லாம் திராவிட பண்பாடு. கோவில்கள், சிலை வழிபாட்டில் ஆதாயமிருப்பதைப் புரிந்து கொண்டுதான் இவர்கள் கோவில்களை ஆக்கிரமித்தார்கள்.

நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவெனில் பார்ப்பனர்கள் எந்த விசயத்தையும் எதிர்க்க மாட்டார்கள். அதை தங்கள் வயப்படுத்திக் கொள்வார்கள். அப்படி மாற்றிக் கொள்ளப்பட்டதை இரண்டாம்பட்சமாகத்தான் நடத்துவார்கள். அப்படிப்பட்ட கடவுள்கள்தான் இன்று சிறு தெய்வங்களாக கொண்டாடப்படும் துலுக்கானத்தம்மன், எல்லையம்மன் போன்றவர்கள்.

இந்த சதியை புரிந்துகொள்ளத்தான் நாம் வரலாற்று உணர்வோடு இருக்க வேண்டும். இப்போது சங்க பரிவாரக் கும்பலோ, வேதகாலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது, விமானம் இருந்தது என கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று அதை அப்படியே பொறியியல் கல்லூரி பாடப்புத்தகத்தில் கட்டாயப் பாடமாக சேர்க்கப் பார்க்கிறார்கள். இதுதான் காவித் திணிப்பு. நம்மை மடையர்களாக்கி காலம் முழுவதும் நம்மை ஆட்சி செய்யவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம். ஒருவருக்கு நம்பிக்கை இருக்கலாம். அந்த நம்பிக்கை ஒரு இலக்கியமாக மாறிவிடலாம். ஆனால் நம்பிக்கையோ, இலக்கியமோ ஒருபோதும் வரலாறு ஆகிவிட முடியாது. வரலாறு மட்டுமே நமக்கு வழித்துணையாக இருக்க முடியும். உண்மைதான் நம்மை வழிநடத்த வேண்டுமே தவிர சதிகாரர்களின் சதித்திட்டங்கள் நம்மை வழிநடத்தக் கூடாது.

இன்று கல்வி முழுக்க மத்திய அரசின் கைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. காவியும், கார்ப்பரேட்டும் ஒன்றிணைந்து கொண்டிருக்கின்றன. இவையிரண்டும் நம்மை அழிவை நோக்கி இட்டுச் செல்லும். வெள்ளையர்களை நாம் அந்நியர்கள் என்கிறோம். அவர்கள் மட்டுமல்ல,  நம்மை அடிமைப்படுத்தத் துடிக்கும் எந்தத் தத்துவமும், எந்தக் கும்பலும் நமக்கு அந்நியர்களே” என்று பேசினார்.

அவரது முழு உரையை காணொளியில் காண..


பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு களச் செய்தியாளர்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. அப்ப கிறிஸ்துவ பள்ளிகளில் ஹிந்து மாணவிகள் பூ பொட்டோடு வர கூடாது என்ற தடை இருக்கிறதே அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள், கிறிஸ்துவமயமாக்கப்படும் கல்வி நிறுவங்களை பற்றி ஒரு வார்த்தை கூட இதுவரையில் எழுதியது இல்லை ஆனால் காவி பேச வந்துவிட்டார்கள் இந்த போலி மதச்சார்பின்மைவாதிகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க