கேள்வி : //வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க காரணம் என்ன? தீர்க்க என்ன வழி? கூறுங்களேன்.//

– ராஜா

ன்புள்ள ராஜா,

டந்த ஐந்தாண்டுகளில் வேலை வாய்ப்பின்மை மிகவும் அதிகரித்திருக்கிறது. மோடி அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2017-18 ஆண்டுக்கான வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரம் ஊடகங்கள் மூலம் சமீபத்தில் கசிந்தது. கடந்த ஐந்தாண்டு கால மோடி அரசின் பல்வேறு மக்கள் விரோத ‘சாதனை’களை முறியடிக்கும் வகையில், இந்த புள்ளிவிவரம் இருக்கிறது. இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் 2017-18 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செயல் தலைவராக இருந்த பி. சி. மோகனன், அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஜே. மீனாட்சி ஆகியோர், வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரத்தை தொடர்புடைய அமைச்சகம் வெளியிட மறுப்பதாகக் கூறி, தங்களுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் வெளியாக வேண்டிய இந்த ஆய்வறிக்கையை தாங்கள் இருவரும் ஆராய்ந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் 65 மில்லியன் இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதாவது ஆறரைக் கோடி மக்கள். இது 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் என்கிறது ஆய்வறிக்கை. ( விரிவாகப் படிக்க: 45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி : ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை ! )

பி. சி. மோகனன் மற்றும் ஜே. மீனாட்சி

மோடி அரசின் மிக மோசமான சீரழிவு அறிவிப்பான பணமதிப்பழிப்பு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் ஏராளமான ஆய்வுகள் வந்திருக்கின்றன. சமீபத்தில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் 50 லட்சம் மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2000 – 2010-க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 2018 -ம் ஆண்டில் வேலையிழப்பு 6% அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பின்மை படிப்படியாக உயர்ந்து மோடியின் சர்வாதிகார அறிவிப்பு வந்த 2016-க்குப் பின் அது உச்சத்தை எட்டியதாக ஆய்வு கூறுகிறது. ‘இந்தியாவின் பணி நிலைமை 2019’ என்ற அந்த அறிக்கை, இந்தியாவின் பணி மற்றும் தொழிலாளர் நிலைமை ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில், 20-24 வயது வரையான நகர்ப்புற ஆண் மற்றும் பெண்கள், ஊரக ஆண் மற்றும் பெண்களிடையே வேலைவாய்ப்பின்மை மிகவும் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பணக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்ட பல ஆயிரக்கணக்கான பணி இழப்புகளை ஏற்படுத்தியது பணமதிப்பு நீக்கம். ஒப்பந்த தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ரியல் எஸ்டேட் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. சந்தைகளில் தேவை குறைவு காரணமாக வண்டிகளில் நிரப்பப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகி குப்பைக்குச் சென்றன. விலை குறைந்ததோடு, விவசாயிகளையும் அது பாதித்தது.

ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் சிறு மற்றும் குறுந் தொழில்கள் இன்னமும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.  சமீபத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் இந்த நிறுவனங்களின் கடன் நிலுவைத் தொகை 2018-ம் ஆண்டு இரட்டிப்பாகியுள்ளதாகக் கூறுகிறது. 2017-ம் ஆண்டு கடன் நிலுவை ரூ. 8,249 கோடியாக இருந்தது. 2018-ம் ஆண்டு ரூ. 16,118 கோடியாக உயர்ந்துள்ளது.

“பணக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்ட துறைகள் பெரிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமும், பணி ஆற்றலில் 80 சதவீதமும் பங்காற்றுகின்றன. இந்திய சுதந்திரத்துக்குப் பின், இந்தத் துறைகள் இப்படிப்பட்ட கொள்கை அமலாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என பணமதிப்பு நீக்கம் குறித்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியர் மைத்திரீஷ் கட்டக் தெரிவிக்கிறார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், பணி வாய்ப்பு உருவாக்கத்தில் முக்கியமான பங்காற்றுகின்றன. அதுபோல ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைக்கும் முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் அவற்றை நம்பியுள்ள வர்த்தகமும் கடந்த நான்கரை ஆண்டுகளில் வேலை இழப்பு மற்றும் வருமான இழப்பை சந்தித்துள்ளதாக அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் புள்ளிவிவரம் சொல்கிறது.  இந்தத் தொழில்களின் நிலைமை அபாய கட்டத்தில் இருப்பதாகவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. குறு தொழில்களில் 32% வேலை இழப்பும், சிறு தொழில்களில் 35% வேலை இழப்பும், நடுத்தர தொழில்களில் 24% வேலை இழப்பும் ஏற்பட்டிருப்பதாக 34,000 மாதிரிகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது தையல் கூடங்கள், தீக்குச்சி, பிளாஸ்டிக், பட்டாசு, வண்ணம் ஏற்றுதல், பதனிடும் நிலையங்கள், சில்லறை வேலை மற்றும் அச்சு நிறுவனம் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களைத்தான் அதிகமாக பாதித்துள்ளது.

படிக்க:
♦ வணிகவியல் பட்டதாரி முட்டை போண்டா விற்கிறார் ! மோடி அரசின் சாதனை !
♦ மோடியின் ‘சாதனை’ : 13 கேண்டீன் உதவியாளர் பணிக்கு 7000 விண்ணப்பம் | 12 பட்டதாரிகள் தேர்வு !

நாட்டின் தனிநபர் வருமானம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீத அளவிற்கு அதிகரித்து நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கையில், பெட்ரோல் விலை உயர்வு சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும்போது, விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருக்கிறது என்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக வேகமாக அதிகரித்து, ஒரு சதவீதம் கோடீஸ்வரர்கள் வசம் நாட்டின் 78 சதவீத சொத்துக்கள் குவிந்து கிடக்கும்போது மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவிதம் பேருக்கு இன்னமும் விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அரசோ இந்த உயிராதாரமான துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது. ஒருபுறம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் வாய்ச்சவடால் அடித்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய விவசாயிகளின் சராசரி வருமானம் உயராமல் தேங்கிக் கிடப்பதாக மைய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறுகிறார்.

“ஸ்டார்ட் அப் இந்தியா”, ஸ்கில் இந்தியா என மோடி காட்டிய ஜூம்லாக்கள் எல்லாம் பிசுபிசுத்துப் போய்விட்டன. “ஸ்டார்ட் அப் இந்தியா” திட்டத்தில் தொடங்கப்பட்ட 25% நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகள்கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் மூடப்பட்டுள்ளன. ஸ்கில் இந்தியா திட்டத்தின் மூலம் மொத்தமே 6 இலட்சம் பேருக்குதான் வேலை கிடைத்திருக்கிறது.

மோடி கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேருக்கு மேல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் காற்றில் பறக்கவிட்டது மட்டுமல்லாமல், மக்கள் தமது சொந்த முயற்சியில் உருவாக்கிக் கொள்ளும் வேலைவாய்ப்புகளையும் – தள்ளுவண்டிக் கடைகள் போடுவது, ஆட்டோ ஓட்டுவது போன்றவை – தட்டிப்பறித்துவிடும் வேலையைத்தான் செய்து வருகிறார். இந்த அரசு ஒரு கொடுங்கனவு (nightmare) என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்!

படிக்க:
♦ பொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்
♦ அமெரிக்க – சீன வர்த்தகப் போர் : வீழக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம் !

மேற்கண்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது என்ன? அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் விவசாயம் அரசால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. இதனால் ஊரகப் பகுதியில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் நகரங்களை நோக்கிச் செல்கின்றனர். நகரங்களிலோ பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி அமலாக்கத்தால் இலட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழந்துள்ளனர். மோடி கொண்டு வந்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.

சமீபத்தில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கார்களின் விற்பனைக் குறைவால் உற்பத்தியைக் குறைத்து, சில நாட்கள் ஆலையையே மூடுகின்றனர். இதனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளிகள் வேலை இழப்பர்.

சென்ற 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட சப்-பிரைம் நெருக்கடி காரணமாக உலகெங்கும் இந்தப்போக்கு வளர்ந்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பண்டங்கள் விலை கிடுகிடுவென ஏறிவிட்டது. இதனால் மக்கள் தமது தேவைகளை குறைத்துக் கொள்வதால் விவசாயம், சிறு குறு தொழில்கள் நசிவடைந்து போகின்றன. இத்துறைகளில் வேலை வாய்ப்பு முற்றிலும் அழிக்கப்படுகிறது.

மறுபுறம் பெரிய நிறுவனங்களும் உற்பத்தி செய்த பொருட்களை அதிகம் விற்க முடியாமல் தேங்கிப் போயுள்ளன. மக்களிடையே வாங்கும் சக்தி இல்லாமல் பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது.

இந்நிலையில் வேலையின்மையைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் ?

அறுபது சதவீத மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து மையப்படுத்தப்பட்ட திட்டம் போடப்படவேண்டும். அதாவது இந்தியா முழுவதற்கும் தேவையான அரிசி, கோதுமை, கரும்பு, காய்கறிகள் அனைத்தையும் ஆண்டு முழுவதும் சீரான விலையில் கிடைக்கும்படி விவசாயத்தையும் சந்தையையும் இணைக்கும் வண்ணம் மையப்படுத்தப் பட்ட திட்டம் போடப்பட வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக சிறு குறு தொழில்களையும் மேற்கண்ட முறையில் மையத்திட்டம் போட்டு முறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் வேலை முறையை ஒழித்து விட்டு அவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்கும் வண்ணம் தொழிலாளர் உரிமை நலத்திட்டங்கள் திருத்தப்பட வேண்டும். அன்னிய முதலீடுகளை நிறுத்தி விட்டு சுதேசிப் பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஒரு  சோசலிச நாட்டில் வேண்டுமானால் சாத்தியமாகலாம்.

இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியம் இல்லை. காரணம் இங்கு ஓரிரு சதவீத முதலாளிகள் நாட்டின் 75%-த்திற்கும் மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். இந்த மலையளவு வேறுபாடு ஒன்றே வேலையின்மையின் சித்திரத்தை தந்து விடுகிறது. சீனா, ரசியாவில் உண்மையான கம்யூனிச ஆட்சி இருந்த போது அந்த நாடுகளின் விலைவாசி ஆண்டுக்கணக்கில் உயராமல் இருந்தது. அதே போன்று தொழிலாளர் வேலை வாய்ப்பும் அனைவருக்கும் கிடைத்து வந்தது.

தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் கட்டுப்படுத்தும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டு ஒட்டு மொத்த தனியார் பெருநிறுவனங்களையும் நாட்டுடமை ஆக்காமல் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவே முடியாது.

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க