லக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் (IMF) பாலித் தீவுகளில் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்திய கலந்துரையாடல் குறிப்பான தீர்வுகள் எதையும் எட்டாமல் புலம்பல்களோடு முடிவுக்கு வந்தது. எனினும், சர்வதேச நிதித்துறைப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மேற்படி கூட்டத்தின் நிறைவில் நடந்து வரும் உலக வர்த்தகச் சண்டைகளின் விளைவாக கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் அதை எதிர் கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் பேசப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே உலகளவிலான பங்குச் சந்தைகள் படு வேகமாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே காலகட்டத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் “வர்த்தகப் போர்” ஒரு புதிய உச்சத்தையும் எட்டியுள்ளது. இதன் பின்னணியில் ஆசிய பங்குச் சந்தைகள் – குறிப்பாக வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் (Non Banking Finance) பங்குகள் பெரும் வீழ்ச்சியடைந்தன. இந்திய பங்குச் சந்தையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் பங்கு வீழ்ச்சிக்கு ஐ.எல்.எப்.எஸ். (IL&FS – Infrastructure Leasing and Finance Services) நிறுவனத்தின் வீழ்ச்சி கட்டியம் கூறியது.

ஏறத்தாழ அமெரிகக் சப்பிரைம் நெருக்கடியைத் துவக்கி வைத்த லேமென் பிரதர்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சியின் இந்திய வடிவம் தான் ஐ.எல்.எப்.எஸ். நிறுவனத்தின் வீழ்ச்சி என முதலாளிய பொருளாதாரப் பத்திரிகைகளே குறிப்பிடுகின்றன. இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிக்கட்டுமானப் பணிகளுக்கான நிதி உதவியை வழங்கியுள்ளது ஐ.எல்.எப்.எஸ். இந்நிறுவனத்தில் ஸ்தாபன முதலீட்டார்களாக (Institutional Investors) எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ போன்ற பொதுத்துறை நிதிநிறுவனங்கள் உள்ளன. அதிகபட்சமாக எல்.ஐ.சிக்கு ஐ.எல்.எப்.எஸ்-ல் 25.34 சதவீத பங்குகள் சொந்தமாக உள்ளன.

ஐ.எல்.எப்.எஸ் நிறுவனத்திற்கு நேரடியாக 24 துணை நிறுவனங்களும், 135 மறைமுக துணை நிறுவனங்களும் உள்ளன. இந்நிறுவனத்தின் நேரடி மற்றும் மறைமுக துணை நிறுவனங்கள், கூட்டுப்பங்கு நிறுவனங்கள் என அனைத்தும் சேர்த்து மொத்தமாக சுமார் 91 ஆயிரம் கோடி கடன் உள்ளது – இந்தக் கடன்கள் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பெறப்பட்டவை. இக்கடன்களுக்கான வட்டியைக் கட்ட முடியாத நிலையில் ஐ.எல்.எப்.எஸ். சிக்கிக் கொண்டதை அடுத்தே வங்கியல்லாத நிதி நிறுவனங்களான டி.ஹெச்.எப்.எல்., டாடா கேபிடல், இந்தியா புல்ஸ் போன்ற நிறுவனங்களுடைய பங்குகள் வீழ்ச்சியடைந்தன. சென்ற இரண்டு வாரங்களாக பங்குச் சந்தையில் சூறாவளியைக் கிளப்பிய இந்த வீழ்ச்சிக்கான பிரதான காரணங்களாக முதலாளித்துவ பத்திரிகைகள் சொல்வது ரூபாய் மதிப்பு குறைவு மற்றும் சீன அமெரிக்க வர்த்தகப் போரின் விளைவாக ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் அனைத்துமே சுணக்கமாக இருக்கும் நிலை.

இந்தப் பின்னணியில் இருந்துதான் சீன அமெரிக்க வர்த்தகப் போர் பிற நாடுகளையும் பாதித்து விடக்கூடும் என்கிற சர்வதேச நாணய நிதியத்தின் அச்சத்தையும் எச்சரிக்கையையும் புரிந்து கொள்ள வேண்டும். நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் வர்த்தகப் போரின் பாதிப்பு சீனாவையும் அமெரிக்காவையும் மட்டும் பாதிக்கப் போவதில்லை; மாறாக ஏகாதிபத்தியம் எனும் கண்ணியால் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கும் உலக நாடுகளின் பொருளாதாரம் அனைத்தையுமே புதை குழியை நோக்கி இழுத்துச் செல்லும் சாத்தியம் இந்த வர்த்தகப் போருக்கு உண்டு.

***

வெற்றி பெற்றால் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஒரு முடிவு கட்டுவேன் என்று டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பரப்புரையில் சொன்னதை வெறும் தேர்தல் கால சவடால் என பலரும் கடந்து சென்றனர். ஆனால், அவரிடம் ஒரு திட்டம் இருந்தது. அந்த திட்டம் அமெரிக்க முதலாளிகளின் ஒரு பிரிவினரின் நலனைப் பிரதிபலிப்பதாகவும் அதே நேரம் டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட ‘பாசிசக் கோமாளி‘ என்கிற வேடத்திற்குப் பொருத்தமானதாகவும் இருந்தது. அதாவது, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவைச் சேர்ந்த உற்பத்தி நிறுவனங்கள் தமது ஆலைகளை இந்தியா சீனா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு கடத்திச் சென்றது தான் என்றார் ட்ரம்ப். அதே போல் அமெரிக்க நிறுவனங்கள் கீழை நாடுகளில் இருந்து குறைந்த கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து அமெரிக்கர்களுக்கு செல்ல வேண்டிய வேலை வாய்ப்புகளைப் பறித்து விடுகின்றன என்று குற்றம் சாட்டிய டொனால்ட் டிரம்ப், அது போன்ற நிறுவனங்களை தான் சும்மா விடப் போவதில்லை எனவும் அறிவித்திருந்தார்.

படிக்க:
முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
விரைவில் மரணம் – இந்தியா மீது அமெரிக்கா போர் !

ஆட்சிப் பொறுப்பேற்ற பின் விசா நடைமுறைகளை கடுமைப்படுத்துவது, வெளிநாடுகளில் உற்பத்தி ஆலைகளை வைத்திருக்கும் பெரு முதலாளிகளை மிரட்டுவது என சில காலம் சலம்பி வந்தார் டொனால்ட் ட்ரம்ப். இந்நிலையில் கடந்த ஜனவரியில் (2018) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியமின் தகடுகளுக்கான இறக்குமதி வரியை 25 சதவீமாக உயர்த்தினார். அமெரிக்காவில் புழங்கும் சூரியமின் தகடுகள் பெரும்பான்மையாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை என்பதோடு சீனாவுக்கு சூரியமின் தகடுகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை அமெரிக்காவில் இருந்தது. இதைச் சற்றும் எதிர்பாராத சீனா உடனடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 16 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களின் மீது இறக்குமதி வரியை அதிகரித்தது.

அப்போதிருந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் துவங்கி சூடுபிடிக்கத் துவங்கியது. மாறி மாறி பல்வேறு சீன இறக்குமதிப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தி வந்த ட்ரம்ப் நிர்வாகம், கடந்த செப்டம்பர் 24ல் சுமார் 200 பில்லியன் பெறுமானமுள்ள சீனப் பொருட்களின் இறக்குமதி வரியை உயர்த்தியது. அமெரிக்கா குறிப்பிட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்த ஒவ்வொரு சந்தர்பத்திலும் சீனாவும் அதே போன்ற பதிலடியை கொடுத்துள்ளது (என்றாலும், சீனாவின் தரப்பில் இறக்குமதி வரியை அதிகரித்துள்ள பொருட்களின் மதிப்பு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதே).   சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலையில் சீன ஆதரவு நிலைப்பாட்டை ரசியா எடுத்துள்ளது. இச்சூழலில் தற்போது நடந்து வரும் இந்த மோதல்களை ஒரு சில மேற்கத்திய பொருளாதார அறிஞர்கள் இரண்டாம் பனிப் போர் எனக் குறிப்பிடுகின்றனர்.

***

ர்வதேச நாணய நிதியம் பாலியில் நடத்திய கூட்டத்தில் சீனாவின் சார்பில் கலந்து கொண்ட அந்நாட்டின் மத்திய வங்கியின் தலைவர் யீ காங் (Yi Gang), ஒரு சில நாடுகள் வர்த்தகக் காப்பு (Trade protectionism) நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்க பிற நாடுகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்றும், உலமயமாக்கல் இன்னும் வெளிப்படையாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் பாரபட்சமின்றியும், அனைவருக்கும் பயன் தரத்தக்க விதத்திலும் செயல்பட எல்லா நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என கோரியுள்ளார்.

இதே கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க கருவூலத் துறையின் செயலாளர் ஸ்டீவன் நூச்சின், இது ஒன்றும் சோயா பீன்சை அதிகமாக வாங்குவது பற்றிய சில்லறைப் பிரச்சினை இல்லை; மாறாக, இது கட்டுமானப் பிரச்சினை என்று பேசியுள்ளார். மேலும் நடந்து கொண்டிருக்கும் வர்த்தகப் போரைத் தணிக்க பாலியில் ஐ.எம்.எப். கூட்டிய பஞ்சாயத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதை பகிரங்கமாக போட்டுடைத்த நூச்சின், எதுவாக இருந்தாலும் தமது குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

நூச்சின் சொல்லும் ”கட்டுமானப் பிரச்சினை” என்பது வேறு – அதாவது, உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் உள்ள சட்டவிதிகளின் ஓட்டைகளுக்குள் சீனா புகுந்து கொள்வதாகவும், அதைப் பயன்படுத்திக் கொண்டு மேற்குலகச் சந்தைகளுக்குள் சுலபமாக ஊடுருவியுள்ள சீனா தனது சந்தையை பிற நாடுகளுக்குத் திறந்து விடுவதில்லை எனவும் மேற்கு நாடுகள் முன்வைக்கும் குற்றச்சாட்டைத் தான் நூச்சின் “கட்டுமானப் பிரச்சினை” என்கிறார். ஆனால், இதில் மெய்யாலுமே வேறு ஒரு அம்சத்தினாலான “கட்டுமானப் பிரச்சினை” உள்ளது.

அடிப்படையில் கூலி உழைப்பைச் சுரண்டுவதன் மூலமே மூலதனம் இடையறாது செயல்படவும் விரிவடையவும் லாபம் சம்பாதிக்கவும் முடியும். அதற்கு அடிப்படை குறைந்த கூலி. மேற்கத்திய நாடுகளின் மனித வளம் என்பது கூடுதல் விலை என்பதால் சுரண்டல் வாய்ப்பு குறைவு என்பதால் தான்  இந்தியா சீனா போல் மலிவு விலையில் மனித வளத்தைச் சுரண்டும் வாய்ப்புள்ள நாடுகளுக்கு தங்களது உற்பத்தி அலகுகளை ”கடத்தி” வந்தனர் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற் கழகங்கள். மூன்றாம் உலக நாடுகளில் கிடைக்கும் மலிவான கூலித் தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தி செய்து குவிக்கும் பொருட்களை முதலாம் உலக நாடுகளின் சந்தைகளில் விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிப்பதே முதலாளிகளின் நோக்கம்.

எனினும், தொடர்ந்து உற்பத்தி ஆலைகள் மூன்றாம் உலக நாடுகளுக்கு கடத்திச் செல்லப்படும் நிலையில் அமெரிக்கா போன்ற முதலாம் உலக நாடுகளில் உற்பத்தி ஆலைத் தொழிலாளர்கள் (blue collar) வேலை இழப்புக்கு ஆளாகினர். நிர்வாக வேலைகள் உள்ளிட்ட ஒரு சில வெள்ளைக் காலர் வேலைகளை மட்டும் அங்கே வைத்துக் கொள்வது, மற்றபடி உற்பத்திப் பொருளாதாரத்தைக் கைவிட்டு நிதிச் சூதாட்டப் பொருளாதாரத்தை மேற்கொள்வது என்கிற பாதையில் பயணித்துள்ள அமெரிக்கா, திரும்பி வர முடியாத நீண்ட தொலைவுக்கு ஏற்கனவே வந்து விட்டது.

படிக்க:
துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
அந்நிய முதலீட்டுக்காக!

எனவே தான் ட்ரம்பின் நடவடிக்கைகளை போர்டு, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரும் பன்னாட்டுத் தொழிற் கழகங்கள் எதிர்த்து வருகின்றன. அமெரிக்க முதலாளிகளிலேயே மிகச் சிறுபான்மையினராக இருக்கும் காப்புப் பொருளாதாரவாதிகள் மற்றும் அரசியல் அரங்கில் இனவாத பிற்போக்குவாதிகளின் ஆதரவு ட்ரம்புக்கு உள்ளது. தனது வாக்குவங்கியாக டொனால்ட் ட்ரம்ப் குறிவைத்திருப்பது வேலை இழப்புக்கு ஆளாகியிருக்கும் நாட்டுப்புற வெள்ளை இனத் தொழிலாளிகளையே என்பதால் நடந்து கொண்டிருக்கும் வர்த்தகப் போர் மேலும் சிலகாலம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

முடிவில் ஒன்று இந்த முரண்பாடுகளின் விளைவாக உலகப் பொருளாதாரம் ஒரு மீளமுடியாத நெருக்கடிக்கும் வீழ வேண்டும் அல்லது தற்காலிகமாக அமெரிக்க பெரு முதலாளிகள் டொனால்ட் ட்ரம்பை கட்டுப்படுத்தி அந்த நெருக்கடியை மேலும் சில காலத்திற்கு தாமதப்படுத்தலாம். எப்படிப் பார்த்தாலும் குறைந்த கூலியில் மனித உழைப்பைச் சுரண்டுவது மற்றும் அமெரிக்க நுகர்வுவெறி என்கிற பொருந்தாத கூட்டணி நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது. ஏனெனில், குறைந்த கூலியைத் தேடி மூன்றாம் உலக நாடுகளில் அலைந்து கொண்டிருக்கும் அமெரிக்க முதலாளி நம்பிக் கொண்டிருப்பது அங்கே உற்பத்தியாகும் பொருட்களுக்கு முதலாம் உலக நாடுகளில் இருக்கும் சந்தையை – அந்த சந்தையானது வேலையிழப்புகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் ஒரு கட்டத்தில் நொறுங்கிச் சரிந்தே தீரும்.

  • சாக்கியன்

ஆதாரம் : IMF-World Bank ends meetings with call to brace for risks

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க