Wednesday, September 27, 2023
முகப்புஉலகம்ஐரோப்பாமுதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?

முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?

-

தொழில்துறை முதலாளிகள் பிறந்த கதை! – சிறப்புக் கட்டுரை !

முன்னுரை:

பிரிட்டிஷ் ஐரோப்பிய முதலாளிகள் தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கான மூலதனத்தை எப்படிச் சம்பாதித்தார்கள்? அது சிறு முதலாளிகளைப் போல உழைத்துச் சம்பாதித்ததோ, வேறு யோக்கியமான வழிகளில் ஈட்டியதோ அல்ல. முதலாளித்துவத்தின் தாயகமான இங்கிலாந்திலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் முதன் முதலில் தோன்றிய தொழில்துறை முதலாளிகள் என்ற வர்க்கத்தினரின் ஆதி மூலதனம் திரட்டப்பட்ட வரலாற்றை, அதாவது மூலதனத்தின் ரிஷிமூலத்தைத் தனது மூலதனம் நூலில் வெளிக்கொணர்கிறார் மார்க்ஸ்.

“மூலதனம்” நூலின் முதல் தொகுதியில் “ஆதித் திரட்டல் எனப்படுவது” என்ற 8-வது பகுதி அத்தியாயங்கள் 26 முதல் அத்தியாயம் 33 வரை கொண்டுள்ளது. அவற்றில் “தொழில்துறை முதலாளி பிறந்த கதை” என்ற தலைப்பிலான அத்தியாயம் 31, தொழில் துறை மூலதனத்தின் ஆதித் திரட்சியின் வரலாற்றை விவரிக்கிறது. “முதலாளித்துவத் திரட்டலின் வரலாற்று வழிப்பட்ட போக்கு” என்ற தலைப்பிலான அத்தியாயம் 32, முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொடரும் மூலதனத் திரட்டல் பற்றிய சுருக்கமான சித்தரிப்பைத் தருகிறது.

இந்த இரண்டு அத்தியாயங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை மட்டும் இங்கு தருகிறோம். மூல நூலில் உட்தலைப்புகள் கிடையாது. வாசகர்கள் புரிந்து கொள்ள உதவும்பொருட்டு உட்தலைப்புகளையும் அடைப்புக் குறிக்குள் கூடுதல் வரலாற்றுக் குறிப்புகளையும் சேர்த்துள்ளோம்.

17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் தமது சொந்த நாட்டிலும், காலனியாக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகளிலும் நிகழ்த்தப்பட்ட கற்பனைக்கெட்டாத கொடூரங்களை மார்க்ஸ் விவரிக்கிறார். இந்தக் கொடூரங்கள் அனைத்திலும் காலனியாதிக்கவாதிகளின் கையாட்களாகவும் கூட்டாளிகளாகவும் இருந்து திரட்டப்பட்டதுதான் இந்தியத் தரகு முதலாளிகளின் மூலதனம்.

ஆதித்திரட்டலின் கொடுமைகள் அன்றோடு முடிந்து விடவில்லை. இன்று தண்டகாரண்யாவில் நடைபெறும் காட்டுவேட்டை முதல் நெடுவாசல் வரையிலான ஆக்கிரமிப்புகளிலும், சிறு தொழில்களையும் கைவினைத் தொழில்களையும் அழிக்கும் நோக்கத்துடன் திணிக்கப்படும் ஜி.எஸ்.டி. முதலான வரிவிதிப்புகளிலும் அவை தொடர்கின்றன. இவை எதுவும் சுதந்திரமான போட்டியை அடிப்படையாகக் கொண்ட தூய பொருளாதார நடவடிக்கைகளாக அன்றும் இல்லை. இன்றும் இல்லை.

வரிக்கொள்கை, மானியங்கள், வங்கிக் கடன்கள், பொதுச்சொத்துக்களை அபகரித்தல், தொழிலாளர் சட்டத் திருத்தம் உள்ளிட்ட எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் அரசு அதிகாரத்தின் துணை கொண்டு ஏவப்படும் வன்முறை நடவடிக்கைகளாகவே இருக்கின்றன.

கடந்த காலம் குறித்த மார்க்சின் சித்தரிப்புகள், நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வதற்கு  மட்டுமின்றி, எதிர்காலத்திற்கான பாதைக்கும் வழிகாட்டுகின்றன.

ஐரோப்பிய முதலாளி வர்க்கத்தின் ஆதிமூலதனம் எங்கிருந்து வந்தது?

அமெரிக்காவில் தங்கமும் வெள்ளியும் கண்டுபிடித்ததும், பூர்வகுடிகளை அழித்து, அடிமைப்படுத்தி, சுரங்கங்களில் சமாதியாக்கியதும், இந்தியாவைக் கைப்பற்றிக் கொள்ளையிடத் தொடங்கியதும், கறுப்பின மக்களை வணிகப்பொருளாய் வேட்டையாடுவதற்கான களமாக ஆப்பிரிக்காவை மாற்றியதும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி சகாப்தத்தின் இனிய விடியலின் நற்காட்சிகளாய் அமைந்தன. அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இந்தச் செயல்கள் ஆதித் திரட்டலின் பிரதான உந்து சக்திகளாய் அமைந்தன.

இவற்றைத் தொடர்ந்து வருகிறது ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான வாணிகப் போர்; உலகம் முழுவதுமே அந்த போர்க்களத்தின் அரங்கம். ஸ்பெயினிலிருந்து பிரிவதற்காக நெதர்லாந்து கலகக் கொடி உயர்த்தியதில் அது தொடங்கியது; இங்கிலாந்து தொடுத்த ஜாக்கோபின் – எதிர்ப்புப் போரில் (பிரஞ்சு புரட்சியைத் தோற்கடிக்க பிரான்சுக்கு எதிராக இங்கிலாந்து 1790-களில் நடத்திய போர்) அது பிரம்மாண்டமான பரிமாணங்களை எட்டியது; சீனாவுக்கெதிரான அபினிப் போர்களிலும் (1839-1842, 1856-1860 என இரண்டு கட்டங்களாக சீனாவைக் காலனி ஆதிக்கத்துக்குத் திறந்துவிடும்படிக் கட்டாயப்படுத்தி இங்கிலாந்தும், பிற காலனியாதிக்க நாடுகளும் நடத்திய போர்) இன்னும் பிற போர்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கிறித்துவக் காலனியாதிக்க அமைப்பு பற்றி கிறித்துவத்தைத் தனது தனித்துறையாக்கிக் கொண்ட வி.ஹோவிட் என்பவர் கூறுவதை இப்போது பார்க்கலாம். உலகின் எல்லா பிராந்தியங்களிலும் தம்மால் அடிமைப்படுத்த முடிந்த எல்லா மக்கள் சமூகங்கள் மீதும் கிறித்துவ இனத்தார் என அழைக்கப்படுபவர்கள் புரிந்துள்ள  காட்டுமிராண்டிச் செயல்களும், வெறித்தனமான அட்டூழியங்களும், வேறு எந்த இனத்தாலும் – அவர்கள் எவ்வளவுதான் மூர்க்கர்களாகவும், நெறி புகட்டப்படாதவர்களாகவும், கருணை, வெட்கம் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்களாகவும் இருந்த போதிலும் – உலக வரலாற்றின் எந்தக் காலத்திலும் நிகழ்த்தப்பட்டதில்லை.

பாட்டாளி வர்க்கப் பேராசான் கார்ல் மார்க்ஸ் (இடது) மற்றும் 1867 – ஆம் ஆண்டு முதன்முதலாக ஜெர்மன் மொழியில் வெளியான மூலதனம் நூலின் முகப்பு அட்டை

அன்று தலையாய முதலாளித்துவ நாடு ஹாலந்து

ஹாலந்து 17-ஆம் நூற்றாண்டின் தலையாய முதலாளித்துவ நாடாக இருந்தது. அதன் காலனிய நிர்வாகத்தின் வரலாறு, துரோகத்துக்கும், இலஞ்ச லாவண்யத்துக்கும், படுகொலைக்கும், இழிதகைமைக்கும் இடையேயான அசாதாரணமான உறவுகளின் உச்சத்தைத் தொட்டது (தாமஸ் ஸ்தாம்போர்டு ராபின்ஸ், ஜாவாவின் சரித்திரம், 1817)

ஜாவா தீவுக்குத் தேவைப்பட்ட அடிமைகளைப் பிடிப்பதற்காக அவர்கள் உருவாக்கிய பிள்ளை பிடிக்கும் முறை அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெளிவாய்ப் புலப்படுத்துகிறது. ஆள் திருடர்கள் இந்தப் பணிக்காகவே பயிற்றுவிக்கப்பட்டனர். திருடனும், மொழிபெயர்ப்பாளனும், விற்பனையாளனும் இந்தத் தொழிலில் முக்கியமானவர்கள்; உள்நாட்டு மன்னர்களே பிரதான விற்பனையாளர்கள். திருடப்பட்ட இளைஞர்கள் அடிமைக் கப்பல்களுக்கு அனுப்பப்படும் வரை செலிபிசில் (இந்தோனேஷிய தீவுகளில் ஒன்று)  இரகசியப் பாதாளச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.

எடுத்துக்காட்டாக, மக்காசர் என்ற இந்த நகரம் கொடூரத்தில் ஒன்றையொன்று விஞ்சும் இரகசியச் சிறைகளால் நிரம்பியிருக்கிறது. பேராசைக்கும் கொடுங்கோன்மைக்கும் பலியாக்கப்பட்ட பல துர்ப்பாக்கியசாலிகள் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு, விலங்கிடப்பட்டு இச்சிறைகளில் திணித்து வைக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு அதிகாரபூர்வ அறிக்கை.

மலாக்காவைப் பிடிப்பதற்காக (மலேசியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு மாகாணம்) டச்சுக்காரர்கள் அதன் போர்ச்சுக்கீசிய கவர்னரை ஊழல்படுத்தினார்கள். 1641-இல் டச்சுக்காரர்களை அவர் நகருக்குள் வர விட்டார். அவர்கள் விரைந்து அவரது வீட்டுக்குச் சென்று அவரைக் கொலை செய்ததன் மூலம் அவரது துரோகத்துக்கு விலையாக கொடுக்க ஒப்புக் கொண்டிருந்த 21875 பவுண்டு செலவைத் தவிர்த்துக் கொண்டார்கள். அவர்கள் கால்வைத்த இடமெல்லாம் பேரழிவு விளைந்தது. மக்கள்தொகையே சுருங்கியது.  ஜாவா தீவின் பாஞ்சுவாங்கி மாகாணத்தில் 1750-ல் 80,000 மக்கள் வசித்தனர்; 1811-ல் 18,000 பேர் மட்டுமே எஞ்சினர். என்னே வாணிபத்தின் இனிமை!

கஞ்சா விற்ற கிழக்கிந்திய கம்பெனி !

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் அரசியல் அதிகார உரிமையைக் கைப்பற்றியதோடு, தேயிலை வர்த்தகத்திலும், சீனாவுடனான பொது வர்த்தகத்திலும், ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி, இறக்குமதி சரக்குப் போக்குவரத்திலும் ஏகபோக உரிமை பெற்றிருந்தது பொதுவாக அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இத்தோடு இந்தியாவின் கரையோர வர்த்தகமும், சுற்றியுள்ள தீவுகளுக்கிடையேயான வர்த்தகமும், இந்திய உள்நாட்டு வர்த்தகமும் கம்பெனியின் உயர் அதிகாரிகளது ஏகபோகமாய் இருந்தன. உப்பு, அபின், பாக்கு மற்றும் பிற சரக்குகள் மீதான ஏகபோகம் அவர்களுக்கு வற்றாத செல்வச் சுரங்கமாய் இருந்தது.

இந்தியாவில் ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட கஞ்சா தொழிற்சாலை

கம்பெனியின் அதிகாரிகள் தாமே விலை நிர்ணயம் செய்தார்கள்; பரிதாபத்துக்குரிய இந்தியர்களை விருப்பம் போல் கொள்ளையிட்டார்கள். இதில் கவர்னர் ஜெனரலும் பங்கு பெற்றார். அவருக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைத்தன. ரசவாதிகளையும் விஞ்சும் விதத்தில், வெறும் காற்றைத் தங்கமாக்கிக் கொள்ளும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. காளான்களைப் போல மலையளவு செல்வங்கள் ஒரே நாளில் முளைத்தன. சல்லிக்காசு முதல் போடாமல் ஆதித் திரட்டல் நடந்தேறியது.

வாரன் ஹேஸ்டிங்ஸ் வழக்கு விசாரணை இத்தகைய சம்பவங்களால் நிரம்பி வழிகிறது. (1772 முதல் 1785 வரை வங்காளத்தின் கவர்னராகவும், கம்பெனியின் இந்தியப் பகுதிகள் அனைத்துக்கும் கவர்னர் ஜெனரலாகவும் இருந்தவர். ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அவர், பின்னர் ஆங்கிலேய அரசால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.)

இதோ ஓர் எடுத்துக்காட்டு : சல்லிவன் என்ற அதிகாரி இந்தியாவில் அபின் பயிரிடும் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் ஒரு பகுதிக்கு கம்பெனிப் பணி நிமித்தம் கிளம்பிக் கொண்டிருந்தபோது, அபினுக்கான ஓர் ஒப்பந்தம் அவருக்கு தரப்பட்டது. தனக்குக் கிடைத்த அந்த ஒப்பந்தத்தை அவர் பிண் என்பவருக்கு 40000 பவுண்டுக்கு விற்றார்; பிண் அந்த ஒப்பந்தத்தை அதே நாளில் 60000 பவுண்டுக்கு விற்றார். கடைசியில் அந்த ஒப்பந்தத்தை வாங்கியவர், இவ்வளவுக்குப் பிறகும் தனக்கு அமோக இலாபம் கிடைத்ததாகக் கூறினார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியல்களில் ஒன்றின்படி, 1757 முதல் 1760 வரை கம்பெனியும் அதன் அதிகாரிகளும் இந்தியர்களிடமிருந்து 60 இலட்சம் பவுண்டுகளை அன்பளிப்புகளாகப் பெற்றிருக்கின்றனர். (அன்று ஒட்டு மொத்த வங்காளத்தில் கம்பெனி வசூலித்த நிலவரி சுமார் 3 கோடி பவுண்டு என்பதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் – அதாவது இந்தியாவில் கம்பெனி அதிகாரிகள் வாங்கிய இலஞ்சம் கம்பெனியின் ஒட்டு மொத்த வரி வருவாயில் 20%)  1769-க்கும் 1770-க்குமிடையில், ஆங்கிலேயர்கள் அறுவடையான நெல் முழுவதையும் வாங்கிப் பதுக்கி, கொள்ளை விலை கிடைத்தாலன்றி அதனை விற்க மறுத்து ஒரு பஞ்சத்தையே உற்பத்தி செய்தார்கள். (1769-க்கும் 1773-க்கும் இடையே சுமார் ஒரு கோடி பேரை கொன்று குவித்த வங்காளப் பஞ்சம்.)

இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட வங்கப் பஞ்சம்(மேல் படம்) ஒரிசா பஞ்சத்தால் (கீழ் பஞ்சம்) உருக்குலைந்து போன உழைக்கும் மக்கள்

(அதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடி ஆட்சியில் 1866-ம் ஆண்டில் ஒரிசாவில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பட்டினியால் கொல்லப்பட்டனர். பட்டினி கிடந்த மக்களிடம் அத்தியாவசியப் பொருட்களை கொள்ளை விலைக்கு விற்று அரசுக் கருவூலத்தை நிரப்ப முயற்சிக்கப்பட்டது.- மொ.ர்)

ஒரு செவ்விந்தியக் குழந்தையின் தலைக்கு 50 பவுண்டு

ஏற்றுமதி வர்த்தகத்துக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் போன்ற தோட்டத் தொழில் காலனிகளிலும், கொள்ளைக் களமாக மாற்றப்பட்ட செல்வச் செழுமையும் மனித வளமும் வாய்ந்த மெக்சிகோ, இந்தியா போன்ற நாடுகளிலும் பூர்வ குடிகள் நடத்தப்பட்ட விதம் இயல்பாகவே பயங்கரமானதாய் இருந்தது. காலனி என்பதன் சரியான பொருளில், ஐரோப்பியர்கள் நேரடியாக குடியேறிய நாடுகளிலும் கூட, ஆதித் திரட்டலின் கிறித்துவத் தன்மை பொய்த்து விடவில்லை.

1703-இல் புரோட்டஸ்டண்ட் சமயத்தின் மதச்சான்றோர்களான நியூஇங்கிலாந்தின் பியூரிட்டன்கள், தமது சமயப் பேரவையின் ஆணைகள் மூலம், ஒவ்வொரு வெட்டப்பட்ட செவ்விந்திய பழங்குடியினரின் தலைக்கும், உயிரோடு பிடித்து வரப்படும் ஒவ்வொரு பழங்குடி மனிதருக்கும் 40 பவுண்டு விலை நிர்ணயித்தார்கள். 1720-ல் வெட்டப்பட்ட ஒரு பூர்வகுடி தலைக்கு வைத்த விலை 100 பவுண்டு ஆனது; 1744-ல் மசச்சூசெட்ஸ் விரிகுடா பிரதேசத்தில் குறிப்பிட்ட பழங்குடியினத்தினரைக் கலகக்காரர்கள் எனப் பிரகடனம் செய்த பின்னர், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைகள் வருமாறு: 12 வயதுக்கு மேற்பட்ட ஆணின் வெட்டப்பட்ட தலைக்கு 100 பவுண்டு (புதிய நாணயத்தில்), ஆண் கைதிக்கு 105 பவுண்டு,  பெண் மற்றும் குழந்தைக் கைதிக்கு தலா 50 பவுண்டு, வெட்டப்பட்ட பெண் தலைக்கும் குழந்தை தலைக்கும் தலா 50 பவுண்டு.

ஐரோப்பாவுக்கு வெளியே அப்பட்டமான கொள்ளை மூலமும், அடிமைப்படுத்தல் மூலமும், படுகொலைகள் மூலமும் கைப்பற்றப்பட்ட செல்வங்கள் கடல் வழியாகத் தாய்நாட்டுக்கு மிதந்து வந்து அங்கே மூலதனமாக மாற்றப்பட்டன.

மூலதனத் திரட்டலுக்கு நெம்புகோலாக பொதுக்கடன், தேசிய வங்கிகள்!

பொதுக்கடன் ஆதித் திரட்டலின் வலுமிக்க நெம்புகோல்களில் ஒன்றாகிறது. மந்திரக் கோலை வீசியதும் நிகழும் அற்புதம் போல், இது மலட்டுப் பணத்தைக் குட்டி போடும் திறனுடையதாக்கி, அதனை மூலதனமாக மாற்றுகிறது; தொழில் துறையிலும், ஏன், கடுவட்டியிலும் ஈடுபடுத்தப்படும் போது தவிர்க்கமுடியாதபடி நேரும் இன்னல்களும் அபாயங்களும் இல்லாமலேயே பொதுக்கடன் மூலம் பணம் மூலதனமாக மாறுகிறது.

காலனி ஆட்சியில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேங்டிங்ஸ் மீது இலண்டனில் நடந்த ஊழல் விசாரணை குறித்த சித்திரம்

அரசுக்குக் கடனளிப்போர் உண்மையில் எதையும் விட்டுக் கொடுப்பதில்லை; ஏனென்றால், அவர்கள் கடனாகத் தரும் பணம் எளிதில் மாற்றத்தக்க பொதுக்கடன் பத்திரங்களாக அவர்கள் கைக்கு உடனடியாகத் திரும்புகிறது. இப்பத்திரங்கள் ரொக்கப் பணம் போலவே அவர்களுக்கு பயன்படுகின்றன. இவ்விதம் வருடாந்திர வட்டி பெறுவோரின் சோம்பேறி வர்க்கம் ஒன்று உருவாகிறது; அரசாங்கத்துக்கும் தேசத்துக்கும் இடைத்தரகர்களாய்ச் செயல்படும் லேவாதேவிக்காரர்கள் எந்த முயற்சியும் இல்லாமலேயே, திடீரென செல்வம் குவிக்கிறார்கள். தேசக்கடன் தொகை ஒவ்வொன்றிலும் கணிசமான பகுதி வரிக் குத்தகையாளர்களுக்கும், வணிகர்களுக்கும், தனியார் உற்பத்தியாளர்களுக்கும் கூரையைப் பிய்த்துக் கொண்டு விழும் மூலதனமாய்ப் பயன்படுகிறது. அதோடு கூடவே, கூட்டுப் பங்கு நிறுவனங்கள் உருவாவதற்கும், அனைத்து விதமான ஊக பேர பரிவர்த்தனைகளுக்கும், பங்குச் சந்தை ஊக வணிகத்துக்கும், சுருங்கச் சொல்லின், பங்குச் சந்தை சூதாட்டத்துக்கும் நவீன வங்கியாதிக்க சிறு கும்பலுக்கும் தேசக் கடன் வழிவகுக்கிறது.

தேசிய நாமம் சூட்டப்பெற்ற பெரும் வங்கிகள் எல்லாம் அதற்கு முன் தனியார் ஊக வணிகர்களின் சங்கங்களாகவே இருந்தன; அவை ஆட்சியாளர்களுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்வதன் வாயிலாகப் பெற்ற தனிச்சலுகைகள் மூலம், அரசுக்கே கடன் கொடுக்கும் நிலையை அடைந்தன. ஆகவே, தேசக் கடன்கள் திரண்டு பெருகியதற்கான பிழையில்லாத அளவீடு, இந்த வங்கிகளின் மூலதனத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிகரிப்பே ஆகும். தேசக் கடனின்  முழு வளர்ச்சி 1694-ல் இங்கிலாந்து வங்கி நிறுவப்பட்டதிலிருந்து ஆரம்பமாகிறது.

8% வட்டிக்கு அரசுக்குக் கடன் கொடுத்து இங்கிலாந்து வங்கி தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. வங்கி-நோட்டு வடிவில் பொது மக்களுக்குக் கடன் கொடுப்பதன் மூலம் அதே மூலதனத்திலிருந்து பணத்தை உருவாக்குவதற்கு நாடாளுமன்றம் அதற்கு அதிகாரமளித்தது. அதாவது, இந்த நோட்டுகளைப் பயன்படுத்தி வர்த்தகப் பத்திரங்கள் மீது கடன் கொடுக்கவும், சரக்குகளின் பேரில் முன்பணம் கொடுக்கவும், தங்கம்/வெள்ளி வாங்கவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது

இங்கிலாந்து வங்கி படிப்படியாகவும், தவிர்க்க முடியாதபடியும் நாட்டின் உலோகச் சேமிப்பின் இருப்பகமாகவும், வாணிபக் கடன் அனைத்தின் ஈர்ப்பு மையமாகவும் ஆனது. வங்கியாதிக்க சிறு கும்பல், கடன் கொடுப்பவர்கள், வட்டிப்பணத்தில் வாழ்வோர், தரகர்கள், பங்கு வியாபாரிகள் போன்றோர் அடங்கிய இந்த ஒரு கூட்டுப் பறவைகளின் திடீர் வளர்ச்சி சம காலத்தவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தை அக்காலத்திய எழுத்துக்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது

வற்றாச் சுரங்கமாக வரி விதிப்பு!

தேசக்கடனுக்கு அரசின் பொது வருவாயே ஆதாரம். இந்த வருவாயிலிருந்தே வருடாந்திர வட்டி கொடுப்பதும், பிற செலவுகளும் செய்யப்பட வேண்டுமென்பதால், நவீன வரி விதிப்பு முறை தேசக்கடன் முறையின் தவிர்க்க முடியாத மறுபக்கமாயிற்று. வரி செலுத்துவோர் உடனடியாக உணராத வண்ணம் அரசாங்கம் தனது எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்வதற்கு இந்த தேசக்கடன்கள் பயன்படுகின்றன. ஆனால், கடன் வாங்கியதன் விளைவாக வரிகளை உயர்த்துவது அவசியமாகிறது. உயர் வரி விதிப்பைத் தொடர்ந்து, அரசு புதிய திடீர் செலவுகளுக்கு எப்போதுமே புதிய கடன்களை நாட வேண்டியதாகிறது. இவ்வாறு அத்தியாவசிய வாழ்வுச் சாதனங்கள் மீது வரி விதித்து, அவற்றின் விலையை உயர்த்துவதை அச்சாணியாய்க் கொண்ட இந்த நவீன வரி வருவாய் அமைப்பு, தொடர்ந்து பல்கிப் பெருகுவதற்கான கருவைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

உயர் வரி விதிப்பு தற்செயலாக நடப்பது அல்ல, அது ஒரு கொள்கையாய்ப் பின்பற்றப்படுகிறது. எனவேதான், இந்த அமைப்பு முதன்முதல் தொடங்கி வைக்கப்பட்ட ஹாலந்தில் பெரிய தேசபக்தரான டெவிட்,  தமது “நீதிமொழிகளில்” இதனைப் போற்றிப் புகழ்ந்தார்; “கூலித் தொழிலாளியை அடக்க ஒடுக்கமானவராகவும் சிக்கனமானவராகவும் முயற்சி வாய்ந்தவராகவும் இருக்கச் செய்வதற்கும், அதிக உழைப்பை அவர் மீது சுமத்துவதற்கும் இதுவே சிறந்த ஏற்பாடு” என்றார்.

ஆயினும் கூலித் தொழிலாளியின் நிலைமை மீது அது ஏற்படுத்திய நாசகார விளைவைக் காட்டிலும், இதன் விளைவாக விவசாயிகளும், கைவினைஞர்களும், சுருங்கச் சொன்னால் கீழ் நடுத்தர வர்க்கத்தின் எல்லாப் பிரிவினரும் பலவந்தமாக உடைமைப் பறிப்புக்கு ஆளானதன் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். (மோடி அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் விளைவுகளை இத்துடன் பொருத்திப் பார்க்கலாம்.) இது பற்றி முதலாளித்துவப் பொருளாதாரவியல் அறிஞர்களிடையே கூட மாற்று கருத்தில்லை.

காப்பு முறை என்ற ஏகபோகம்!

இந்த அமைப்பின் உடைமைப் பறிப்புத் திறனை அதனுடைய உறுப்புகளில் ஒன்றான வர்த்தகக் காப்பு முறை மேலும் கூட்டுகிறது

ஐரோப்பிய முதலாளிகளிடம் விற்பதற்காகக் கொண்டுவரப்படும் கறுப்பின அடிமைகள் (இடது); பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு ஆரோக்கியமான 94 கறுப்பின அடிமைகள் விற்பனைக்கு தயாராக இருப்பதை தெரிவிக்கும் விளம்பரம்

இந்த வர்த்தகக் காப்பு முறை என்பது பட்டறைத் தொழிலதிபர்களை உற்பத்தி செய்வதற்கும், சுயேச்சையான உழைப்பாளர்களின் உடைமையைப் பறிப்பதற்கும், தேசிய உற்பத்திச் சாதனங்களையும் வாழ்வாதாரங்களையும் தனியார் மூலதனமாக மாற்றுவதற்கும், மத்திய கால உற்பத்தி முறையிலிருந்து நவீன உற்பத்தி முறைக்கு மாறிச் செல்லும் காலத்தை வலுக்கட்டாயமாகக் குறைப்பதற்கும் செயற்கையானதொரு வழிமுறையாகப் பயன்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தும் ஏகபோக உரிமையின் பொருட்டு ஐரோப்பிய அரசுகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. உபரி – மதிப்பை ஈட்டும் முதலாளிகளுக்குச் சேவகம் செய்யத் தொடங்கிய அந்த அரசுகள், வர்த்தகக் காப்புத் தீர்வைகள் மூலம் மறைமுகமாகவும், ஏற்றுமதி வரிகள் மூலம் நேரடியாகவும் தம் சொந்த நாட்டு மக்களைச் சூறையாடியதோடு நிற்கவில்லை; தமது சார்பு நாடுகளின் தொழில் துறைகள் அனைத்தையும் வலுவந்தமாய் வேரோடு பிடுங்கியெறிந்தன, உதாரணம் : அயர்லாந்தின் கம்பளித் தொழிலை இங்கிலாந்து அழித்தது.

பிள்ளை பிடித்த முதலாளிகள்!

காலனியாதிக்க முறை, பொதுக் கடன்கள், கடும் வரி விதிப்பு, வர்த்தகக் காப்பு, வணிகப் போர்கள் ஆகிய பட்டறை உற்பத்தி பெற்றெடுத்த குழந்தைகள் நவீன எந்திரத் தொழில்துறையின் தொடக்க காலத்தில் மேலும் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்தன. அப்பாவிகளைப் பெருமளவு கொன்று குவிப்பதன் மூலம் நவீன தொழில்துறையின் பிறப்பு தொடங்கி வைக்கப்பட்டது.

முடியரசின் கடற்படைக்கு ஆள் சேர்த்தது போலவே தொழிற்சாலைகளுக்கும் கட்டாய அரசு ஆணையின் பேரில் வலுவந்தமாக ஆள் சேர்த்தனர். 15-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து தன் காலம் வரையில் விவசாயக் குடிகளின் நிலவுடைமை பறிக்கப்பட்ட போது நடந்த கொடுமைகள் குறித்து எவ்விதக் கலக்கமும் அடையாதவர் சர் எஃப்.எம். ஈடன். முதலாளித்துவ விவசாயத்தை தோற்றுவிக்கவும், விவசாய நிலத்துக்கும் மேய்ச்சல் நிலத்துக்குமிடையே பொருத்தமான விகிதாச்சாரத்தை ஏற்படுத்தவும் இந்த நிகழ்முறை “அவசியமானது” என்று மன நிறைவுடன் மகிழ்ச்சியடைந்தவர் அவர்

எனினும், பட்டறைத் தொழில் சுரண்டலை ஆலைத் தொழில் சுரண்டலாக மாற்றும் பொருட்டும், மூலதனத்துக்கும் உழைப்புச் சக்திக்குமிடையேயான “உண்மை உறவை” நிலை நாட்டும் பொருட்டும், குழந்தைகளைத் திருடுவதும் அடிமைகளாக்குவதும் அவசியமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கான பொருளாதார ‘நுண்ணுணர்வு’ ஈடனுக்கு இல்லையே. அவர் இப்படிப் பதிவு செய்கிறார்:

ஒரு உற்பத்தித் தொழில், தான் வெற்றிகரமாக நடப்பதற்கு ஏழைக் குழந்தைகளைத் தேடி குடிசைகளையும் உழைப்பு இல்லங்களையும் சூறையாடுவதையும், இரவின் பெரும்பகுதியில் முறை வைத்து அவர்களை வேலை வாங்குவதையும், எல்லாருக்குமே இன்றியமையாததும், ஆனால், இளம் வயதினருக்கு மிகவும் அவசியமானதுமான ஓய்வு நேரத்தைப் பறிப்பதையும், ஒருவரைப் பார்த்து ஒருவர் ஒழுக்கக் கேட்டையும் காம வெறியையும் கற்றுக் கொள்வதைத் தவிர்க்கவியலாத வகையில், பல்வேறு வயதிலான, பல்வேறு நாட்டங்கள் கொண்ட ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்க்கப்படுவதையும் அவசியமாகக் கொண்டிருக்கிறது என்றால், அத்தகைய பட்டறைத் தொழில் மொத்தத்தில் தனிமனித நலனுக்கோ, நாட்டு நலனுக்கோ பயன் கூட்டுமா என்பது பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினை.

ஃபீல்டன் சொல்கிறார் : டெர்பிஷயர், நாட்டிங்காம்ஷயர் மாவட்டங்களிலும், குறிப்பாக லங்காஷயர் மாவட்டத்திலும் நீர்விசைச் சக்கரத்தை இயக்கவல்ல நீரோடைகளின் அருகில் கட்டப்பட்ட பெரிய தொழிற்சாலைகளில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நகரங்களிலிருந்து தொலைவாக ஒதுங்கியிருந்த இந்த இடங்களில் திடீரென்று ஆயிரக்கணக்கான ஆட்கள் தேவைப்பட்டார்கள்; குறிப்பாக, அது வரை ஒப்பளவில் மக்கள் நெருக்கமற்றதாகவும் பொட்டலாகவும் இருந்த லங்காஷயருக்கு இப்போது திரளான மக்கள் தேவைப்பட்டார்கள்.

மிகப் பெரும்பாலும் சின்னஞ்சிறு குழந்தைகளின் பிஞ்சு விரல்களே அதிகமாய்த் தேவைப்பட்டதால், இலண்டன், பர்மிங்காம் போன்ற பகுதிகளில் திருச்சபையின் கீழிருந்த பல்வேறு உழைப்புக் கூடங்களிலிருந்து தொழில் பழகுனர்களைக் கொள்முதல் செய்யும் நடைமுறை உருவானது. 7 முதல் 13 அல்லது 14 வயதுடைய பல்லாயிரக்கணக்கான அனாதரவான குழந்தைகள் வடபகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமெரிக்கக் கண்டத்துப் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் மீது ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய இனப்படுகொலை குறித்த சித்திரம்

பட்டறை அதிபரே தனது தொழில் பழகுனர்களுக்கு உடை அளிப்பதும், தொழிற்சாலை அருகே அமைக்கப்பட்ட “தொழில் பழகுனர் விடுதியில்” உணவு-உறைவிடம் அளிப்பதும் வழக்கமாக இருந்தது; உற்பத்தியை மேற்பார்வையிடக்  “கங்காணிகள்” நியமிக்கப்பட்டனர்; கங்காணிகளது ஊதியம் அவர்களால் கறக்க முடிந்த வேலையின் அளவைப் பொருத்து இருந்ததால், குழந்தைகளை முடிந்த வரை அதிகமாய் வேலை வாங்குவதே அவர்களது நோக்கமாக இருந்தது. கொடுமைதான் இதன் தவிர்க்க முடியாத விளைவு.

பட்டறைத் தொழில் வட்டங்கள் பலவற்றிலும், குறிப்பாக குற்றத்தின் நிலைக்களனான எனது சொந்த மாவட்டத்தில் (லங்காஷயர்) பட்டறை அதிபர்களின் பொறுப்பில் இவ்விதம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பாவமுமறியாத, கேட்பாரற்ற பிறவிகளுக்கு நெஞ்சு பொறுக்க முடியாத அளவு கொடுமைகள் இழைக்கப்பட்டன. அதீத உழைப்பால் இறப்பின் விளிம்புக்குச் செல்லும் வரை அவர்கள் துன்புறுத்தப்பட்டனர்… சவுக்கால் அடிக்கப்பட்டனர்… சங்கிலியில் பிணைக்கப்பட்டனர்… சகிக்கவொண்ணாத வகைகளிலெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டனர்…  பட்டினியால் எலும்பும் தோலுமாகிவிட்ட பலரும் சவுக்காலடித்து வேலை வாங்கப்பட்டனர்… சிலர் கொடுமை தாளாமல் தற்கொலைக்கும் தள்ளப்பட்டனர்… டெர்பிஷயர், நாட்டிங்காம்ஷயர், லங்காஷயர் போன்ற மாவட்டங்களில் மக்களின் கண்ணுக்கெட்டாத இடங்களில் ஒதுக்கமாக இருந்த அழகான, எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகள், துயர் நிரம்பிய தனிமைச் சிறைகளாகவும் கொலைக்கூடங்களாகவும் மாறின.

பட்டறையதிபர்களின் இலாபம் அமோகமாக இருந்தது. ஆனால், அது இலாபப் பசியைத் தணிப்பதற்குப் பதிலாக, அதனை மேலும் கிளறி விட்டது. எனவே, எல்லையே இல்லாமல் இலாபம் ஈட்டிக்கொண்டே போவதற்கு உகந்ததாகத் தோன்றிய ஓர் உத்தியை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்; “இரவு வேலை” என்ற நடைமுறையை அமல்படுத்த ஆரம்பித்தார்கள். அதாவது, ஒரு தொகுதி ஆட்களைப் பகல் முழுதும் வேலை வாங்கிக் களைப்படைய வைத்ததும், தொடர்ந்து இரவு முழுக்க வேலை செய்வதற்கு இன்னொரு தொகுதி ஆட்களைத் தயாராக வைத்துக் கொண்டார்கள்; இரவுத் தொகுதியினர் சற்று முன்னரே விட்டுப்போன படுக்கைகளில் பகல் தொகுதியினர் வந்து படுப்பார்கள்; பகல் தொகுதியினர் எழுந்து சென்றவுடன் இரவுத் தொகுதியினர் வந்து படுப்பார்கள். படுக்கையின் சூடு தணிவதே இல்லை என்பது லங்காஷயர் வழக்கமாகி விட்டது.

அடிமைகளால் வளர்ந்த ஆங்கிலேய  முதலாளித்துவம் !

உட்ரெட்க்ட் சமாதான உடன்படிக்கையின் கீழ், அதுகாறும் ஆப்பிரிக்காவுக்கும் ஆங்கிலேய மேற்கிந்தியத் தீவுகளுக்குமிடையில் மட்டுமே நடந்து வந்த தமது நீக்ரோ (அடிமை) வர்த்தகத்தை, ஆப்பிரிக்காவுக்கும் ஸ்பானிய அமெரிக்காவுக்குமிடையிலும் நடத்துவதற்கான தனிச்சலுகையை 1713 அசியந்தோ ஒப்பந்தத்தின்படி ஸ்பானியர்களிடமிருந்து இங்கிலாந்து கறந்தது; இதனை ஆங்கிலேய ராஜ தந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி என்று வரலாற்றேடுகள் கொண்டாடுகின்றன.

இதன்படி, 1743 ஆம் ஆண்டு வரை, ஸ்பானிய அமெரிக்காவுக்கு ஆண்டொன்றுக்கு 4,800 நீக்ரோக்களை விற்கும் உரிமையை இங்கிலாந்து பெற்றது. இது பிரிட்டன் ஏற்கெனவே நடத்தி வரும் கள்ளக் கடத்தலை மறைத்துக் கொள்வதற்கான அதிகாரபூர்வ போர்வை ஆயிற்று. அடிமை – வர்த்தகத்தின் மூலம் லிவர்பூல் உப்பிக் கொழுத்தது. இதுவே அதன் ஆதித்திரட்டலுக்கான வழியாய் இருந்தது.

அடிமை வர்த்தகத்தில் லிவர்பூல் ஈடுபடுத்திய கப்பல்களின் எண்ணிக்கை

1730-ல் 15; 1751-ல் 53; 1760-ல் 74; 1770-ல் 96; 1792-ல் 132.

பருத்தித் தொழிலானது, இங்கிலாந்தில் குழந்தையடிமை முறையைப் புகுத்தியபோது, அமெரிக்காவில் ஏற்கனவே நிலவி வந்த அடிமைமுறையினைப் புதுவிதமாக மாற்றியமைக்கவும் அது தூண்டியது. அடிமையின் குழந்தைகளும் அடிமைகள்தான் என்பதான, தந்தைவழி அடிமைமுறையை, ஒரு பொருளாதாரச் சுரண்டல் முறைமையாக உருவாக்கியது. ஐரோப்பாவின் கூலித்தொழிலாளர்கள் அனுபவித்து வந்த முகத்திரையிட்ட அடிமை முறைக்கு ஒரு பீடம் தேவைப்பட்டது. புதிய உலகத்தின் அம்மணமான அடிமைமுறையே அந்தப் பீடம். (1790-ல் ஒவ்வொரு சுதந்திர குடிமகனுக்கும் ஆங்கிலேய மேற்கிந்தியத் தீவுகளில் 10 அடிமைகளும், பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளில் 14 அடிமைகளும், டச்சு மேற்கிந்தியத் தீவுகளில் 23 அடிமைகளும் இருந்தார்கள்.)

இப்படியெல்லாம் படாதபாடுபட்டுத்தான், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் “நிரந்தர இயற்கை விதிகள்” நிலைநாட்டப் பெற்றன. உழைப்பாளிகளும், உழைப்புச் சாதனங்களும் பிரிந்து தனித்தனியாகும் நிகழ்முறை பூர்த்தி செய்யப்பட்டது; ஒரு துருவத்தில் சமுதாய உற்பத்திச் சாதனங்களும் வாழ்வுச் சாதனங்களும் மூலதனமாக மாற்றப்படுவதும் மறு துருவத்தில் பெருந்திரளான மக்கள் கூலித் தொழிலாளர்களாய், நவீன சமுதாயத்தின் செயற்கைப் படைப்பாகிய “சுதந்திர உழைப்பாளி ஏழைகளாய்” மாற்றப்படுவதும் நிறைவேறியது.

மூலதனத்தின் ஒவ்வொரு மயிர்க்காலிலும் ரத்தம்!

“பணம் பிறவியிலேயே ஒரு கன்னத்தில் இரத்தக் கறையுடன் உலகில் காலடி எடுத்து வைக்கிறது” என்கிறார் ஒழியே. மூலதனமோ, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடலின் ஒவ்வொரு மயிர்க்காலிலிருந்தும் இரத்தமும் சகதியும் சொட்டச் சொட்ட உலகிற்குள் நுழைகிறது.

ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் சீனாவின் மீது நடத்திய அபினிப் போர் குறித்த சித்திரம்

(வெற்றிடத்தை இயற்கை வெறுக்கிறது என்று முன்பு கூறுவார்களே, அது போல  மூலதனம் இலாபமின்மையை அல்லது குறைந்த இலாபம் என்ற நிலையை ஒதுக்குகிறது. போதுமான இலாபம் கிடைத்தால் மூலதனம் மிகவும் துணிவு பெறுகிறது. 10 சதவீதம் உறுதியான இலாபம்  அது எங்கு வேண்டுமென்றாலும் முதலீடு செய்யப்படுவதை உறுதி செய்யும்; 20 சதவீதம் உறுதியான இலாபம் ஆர்வத்தைத் தூண்டும்; 50 சதவீதம் கிடைக்குமென்றால், அது திமிராய் நடந்து கொள்ளும்; 100 சதவீதம் கிடைக்குமென்றால் எல்லா மனித நியதிகளையும் காலில் போட்டு மிதிக்கத் தயாராகி விடும்; 300 சதவீதம் கிடைக்குமென்றால் குறுகுறுப்பே இல்லாமல் எந்தக் குற்றமும் செய்யத் தயாராகி விடும்; மூலதனத்தின் உடைமையாளர் தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தாலும் கூட, எந்த நச்சுப் பரிட்சையிலும் துணிந்து இறங்கும். குழப்பத்தாலும், பூசலாலும் இலாபம் கிடைக்குமென்றால், இரண்டையும் தடையின்றி ஊக்குவிக்கும். கடத்தலும் அடிமை வர்த்தகமும் இதைப் போதுமான அளவு தெளிவாக நிரூபித்திருக்கின்றன.  – டி டன்னிங் 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் தொழிற்சங்க இயக்கத் தலைவர்களில் ஒருவர்.)

முதலாளிகளின் உடைமை பறிக்கும் முதலாளித்துவம்!

பலரது சிறு சொத்துடைமையைச் சிலரது பெருஞ்சொத்துடைமையாக மாற்றுவதும், பெருந்திரளான மக்களிடமிருந்து நிலத்தையும் வாழ்வுக்கான சாதனங்களையும், உழைப்புச் சாதனங்களையும் பறிப்பதும், அவர்களை அச்சத்திலும் வேதனையிலும் ஆழ்த்தும் வண்ணம் உடைமைப் பறிப்புக்கு ஆளாக்குவதும் மூலதனத்தின் வரலாற்றுக்கு முன்னுரை ஆகிறது. அடுக்கடுக்கான பல வலுவந்த முறைகள் இதில் அடங்குமென்ற போதிலும், மூலதனத்தின் ஆதித்திரட்டல் முறைகளில் சகாப்தகரமானவற்றை மட்டுமே இங்கே தொகுத்திருக்கிறோம்.

மிகவும் இழிந்த, மிகவும் நேர்மையற்ற, ஆகக்கேடுகெட்ட, அற்பமான, அசிங்கத்திலும் அசிங்கமான உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு, நேரடி உற்பத்தியாளர்களின் உடைமைப் பறிப்பு என்ற நடவடிக்கை, ஈவிரக்கமின்றி வெறித்தனமாய் செய்து முடிக்கப்பட்டது. முதலாளித்துவத் தனியுடைமை பெயரளவில் சுதந்திரமான உழைப்பின் சுரண்டலை, அதாவது கூலியுழைப்பை ஆதாரமாய்க் கொண்டுள்ளது.

இந்த மாற்ற நிகழ்முறை பழைய சமூகத்தை அடி முதல் நுனி வரை போதுமான அளவு சிதைக்கப்பட்டதும், உழைப்பாளிகள் பாட்டாளிகளாகவும் அவர்களது உழைப்புச் சாதனங்கள் மூலதனமாகவும் மாற்றப்பட்டதும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியதும், உழைப்பை மேலும் மேலும் சமூகமயமாக்குதலும், நிலத்தையும் ஏனைய உற்பத்திச் சாதனங்களையும் சமுதாய அளவில் நுகரத்தக்க பொதுவான உற்பத்திச் சாதனங்களாக மாற்றுவதும், தனிச் சொத்துடைமையாளர்களின் உடைமைகளை மேலும் பறித்தெடுப்பதும் புதிய வடிவமெடுக்கின்றன.

இப்போது உடைமைப் பறிப்புக்கு ஆளாகவிருப்பது தனக்காக உழைக்கும் உழைப்பாளியல்ல; மாறாக, பல உழைப்பாளிகளைச் சுரண்டும் முதலாளியே. இந்த உடைமைப் பறிப்பும்கூட “மூலதனம் ஒன்றுகுவிதல்” என்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தியினது உள்ளார்ந்த விதியின் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது.

எப்போதுமே ஒரு முதலாளி பல முதலாளிகளை விழுங்கி விடுகிறார். மூலதனம் ஒன்று குவியும் இந்த நிகழ்ச்சிப்போக்குடன் கூடவே, அதாவது பல முதலாளிகளைச் சில முதலாளிகள் உடைமைப் பறிப்பு செய்வதுடன் கூடவே, உழைப்பு நிகழ்முறையின் கூட்டுத்துவ வடிவமும், அறிவியலை உணர்வுபூர்வமாகத் தொழில்நுட்பரீதியில் பயன்படுத்துவதும், நிலத்தின் முறைவழி சாகுபடியும், உழைப்புக் கருவிகளனைத்தும் பொதுவில் மட்டுமே பயன்படுத்தக் கூடியவையாக மாற்றப்படுவதும், உழைப்புச் சாதனங்கள் அனைத்தும் பொதுவில் மட்டுமே பயன்படுத்தத்தக்கவையாக மாறுவதும், சமூகமயமான உழைப்பில் மட்டுமே பயன்படுத்தப்படுத்தத் தக்கவையாக உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சிக்கனப்படுத்தப்படுவதும், சமூகமயமாக்கப்பட்ட உழைப்பும், உலகச் சந்தை என்னும் வலையில் எல்லா மக்கள் சமூகங்களும் சிக்க வைக்கப்படுவதும், இத்துடன் மூலதனத்துடைய ஆட்சியின் சர்வதேசத் தன்மையும் மேன்மேலும் அதிக அளவில் வளர்கின்றன.

முதலாளித்துவத்துக்குச் சாவுமணி!

இந்த மாற்ற நிகழ்முறையின் ஆதாயங்களையெல்லாம் அபகரித்துத் தமது ஏகபோக உரிமையாக்கிக் கொள்ளும் முதலாளித்துவத் திமிங்கிலங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து செல்கின்ற அதே நேரத்தில், மக்கள் பெருந்திரளின் துன்ப துயரமும் ஒடுக்குமுறையும், அடிமைத்தனமும் சீரழிவும் சுரண்டலும் அதிகரிக்கின்றன;

ஆனால், இத்தோடு தொழிலாளி வர்க்கத்தின் கிளர்ச்சியும் வளர்கிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் பொறியமைப்பால் கட்டுப்பாடுமிக்கதாக ஆக்கப்பட்டு, ஒன்றுபடுத்தப்பட்டு, அமைப்பு வழியிலும் திரட்டப்படும் தொழிலாளி வர்க்கம், எண்ணிக்கையில் பெருகிக் கொண்டே செல்கிறது.

இன்னொரு பக்கம் மூலதனத்தின் ஏகபோகமே, அதனோடு சேர்ந்து அதன் ஆளுகையில் தோன்றி வளர்ந்த பொருளுற்பத்தி முறையின் மீது பூட்டிய விலங்காக மாறிவிடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்படுத்தலும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்குப் பொருந்தாததாகி விடும் நிலை வருகிறது. ஆகவே, அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.

மொழியாக்கம்: அப்துல்

***

பெட்டிச் செய்தி.

ஆங்கிலேயக் கொள்ளையர்களின் இந்தியக் கூட்டாளிகள்!

கஞ்சா விற்று டாடா குழுமத்தை நிறுவிய ஜாம்சேட்ஜி டாடா

ஐரோப்பிய முதலாளி வர்க்கத்தின் ஆதித்திரட்டலில், இந்தியாவில் அவர்கள் அடித்த கொள்ளையை மார்க்ஸ் விளக்கியிருக்கிறார். இந்தக் கொள்ளையில் அவர்களுக்குத் துணை நின்ற பங்காளிகள்தான் இன்று மோடி அரசைத் தாங்கி நிற்கும் இந்தியத் தரகு முதலாளிகள். இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் (அலைகள் வெளியீட்டகம்), இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (விடியல் பதிப்பகம்) என்ற தனது நூல்களில் இந்தியத் தரகுப் பெரு முதலாளிகளின் மூலதனம் திரட்டப்பட்ட குற்ற வரலாற்றை விவரிக்கிறார் தோழர்.சுனிதி குமார் கோஷ்.

டாடா, பிர்லா, சிங்கானியா, ரூயா போன்ற முதலாளிகள் பிரிட்டிஷாருடன் சேர்ந்து சீனத்துக்கு கஞ்சா விற்றவர்கள். கோயங்கா போன்ற குழுமங்கள் இந்திய நெசவாளர்களுக்கு எதிராக லங்காஷயர் துணியை விற்றவர்கள். கோயங்கா, மகாஜன் போன்ற மார்வாரிகள் கந்துவட்டியால் இந்திய விவசாயிளின் இரத்தம் உறிஞ்சியவர்கள். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கந்து வட்டி மூலம் பர்மா விவசாயிகளின் இரத்தம் குடித்தவர்கள். பழங்குடி மக்களின் நிலங்களை ஏமாற்றிப் பிடுங்கி அவர்களை விரட்டியடித்தும், நெசவாளர்களைக் கொத்தடிமையாக்கியும், முதல், இரண்டாம் உலகப்போர்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உதவி செய்தும், பஞ்சங்களின் போது உணவுதானியத்தைப் பதுக்கி விற்றும், இன்னும் பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்களுக்கு எதிராக இழைத்த எல்லாவிதமான கொலை பாதகங்களுக்கும் துணை நின்றும்தான் இந்தியத் தரகு முதலாளிகள் ஒவ்வொருவரும் தனது மூலதனத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

-புதிய ஜனநாயகம், நவம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

 1. Dear Vinavu Comrades

  The unscrupulous missionaries who helped the europeans in their exploitation against the native indigenous races were active in India too. Bishop Cald well who pretended to championise Tamil he only first created the Aryan-dravidian divide. Should vinavu accepts all the biased notions about india and her cultural heritage by the missionaries

 2. ஆரியன்-திராவிடன் என்பதை பிரிவினை என்று புரிந்து வைத்துள்ளீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. ஆரிய இனக்கலப்பு இங்கே நடந்திருக்கிறது என்பதை தாய்வழி மரபணு ஆய்வு நிரூபித்து இருக்கிறது.

 3. ஐரோப்பியர்கள் இந்தியாவை காலனிப்படுத்துவதற்கு கிருத்துவ சமயம் உறுதுணையாக இருந்தது என்பது சரிதான். ஆனால் நிலபிரபுத்துவ சொத்துடைமை நிலவிய இந்தியாவில் ஏற்கனவே சுரண்டல் முறை இருந்தது என்பதை மறந்து விட வேண்டாம். பார்ப்பனியத்தின் கெட்டித்தட்டிப் போன சாதிரீதியான சுரண்டல் முறையே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின்
  முதலாளித்துவ சந்தைக்கான சுரண்டல் முறைக்கு ஏதுவாக இருந்தது.

  அதனால் தான் லகானை வெள்ளையர்களிடம் கொடுத்துவிட்டு குமாஸ்தா வேலைக்காக பார்ப்பனர்கள் அன்று வெள்ளையர்களின் கல்லை நக்கினார்கள்.

  அதாவது பார்ப்பனியத்திடம் இருந்த சுரண்டல் லகான் வெள்ளையர்களிடம் எளிதாக வருவதற்கு ஏற்கனவே இங்கிருந்த வர்ணாஸ்ரம சுரண்டல் முறை வழி வகுத்தது.

  ஆனால் அமெரிக்கா கதை வேறு. ஐரோப்பியர்கள் அங்கு செல்லும் வரை அங்கு மண்ணின் மைந்தர்களாக இருந்தது வர்க்கபேதமற்ற பழங்குடி இனமக்களே. அதாவது அங்கு அதற்கு முன்பு சுரண்டல் அமைப்பு என்பது ஒன்றும் இல்லை. அதாவது வர்க்கம் என்ற அடிப்படையில் சமூகம் பிளவுப்பட்டிருக்கவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க