ஈரானின் இராணுவ உத்தியின் அரசியல் பின்னணிகள்

காசா மற்றும் ஈரான் போர்நிறுத்தங்கள் எதைக் குறிக்கின்றன என்றால், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் இன்னும் பல திருப்பங்களையும் சூழ்ச்சிகளையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, வரவிருக்கும் இன்னும் கடினமான போராட்டங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

(கடந்த ஏப்ரல் 8 அன்று தொடங்கிய ஈரான் – அமெரிக்கா இடையேயான போர்நிறுத்தம் குறித்து ரூபே-இந்தியா (Rupe India) தளத்தில் வெளியான கட்டுரை.)

டந்த ஓராண்டிற்குள் இரண்டாவது முறையாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈரான் மீதான போருக்கு எதிராக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது முறையாக இத்தகைய போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானின் தலைமை ஒப்புக்கொண்டது குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.

இத்தகைய எந்தவொரு முடிவையும் மதிப்பிடும் உரிமை முதன்மையாக ஈரான் மக்களுக்கே உரியது என்றும், அவர்கள் தங்கள் விருப்பத்தை உருவாக்கி அதற்கேற்ப செயல்படும் முழுத்திறமை கொண்டவர்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். தூரத்திலிருந்து ஈரானை ஆதரிப்பவர்கள், தங்களின் கருத்துக்கள் அந்த உள்நாட்டுச் செயல்பாட்டில் தலையிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தற்போதைக்கு, வெளிப்படையான மற்றும் முக்கியமான விசயம் என்னவென்றால், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் முதன்மையான போர் நோக்கத்தில் தோல்வியடைந்துள்ளது. அதன் நோக்கம் ஈரானியர்களைக் கொல்வது அல்லது இராணுவ மற்றும் சிவிலியன் உள்கட்டமைப்புகளை அழிப்பது மட்டுமல்ல, ஈரானை அடிபணிய வைப்பதே ஆகும். அவ்வாறு செய்யத் தவறியது மட்டுமின்றி, மாறாக, மிக மோசமான தாக்குதல்களைத் தாங்கி நின்று, அடிபணிய வைக்கும் முயற்சிகளை முறியடிக்கும் திறனை ஈரான் நிரூபித்துள்ளது; அமெரிக்க ஏகாதிபத்தியம் மீண்டும் முயற்சித்தால் அதை எதிர்கொள்ளும் திறன் ஈரானிடம் இப்போதும் அப்படியே உள்ளது. அதுவே ஈரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும். இது, உலகம் முழுவதும், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில், அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் அடிப்படைத் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர்கள் தங்கள் நீண்டகால நோக்கங்களைக் கைவிடவில்லை என்பதும், அவர்கள் தங்கள் பலத்தை முழுமையாக இழக்கவில்லை என்பதும் தெளிவாகிறது. அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய மற்ற வழிகளைத் தொடர்ந்து தேடுவார்கள், மேலும் மோசமான கொடூரங்களையும் கையாளக்கூடும். எனவே, இதை ஒரு இறுதி வெற்றியாக எவரேனும் கருதினால் அது ஒரு மாயையாகவே இருக்கும். காசா மற்றும் ஈரான் போர்நிறுத்தங்கள் எதைக் குறிக்கின்றன என்றால், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் இன்னும் பல திருப்பங்களையும் சூழ்ச்சிகளையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, வரவிருக்கும் இன்னும் கடினமான போராட்டங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

தற்போதைக்கு, இந்த வெற்றியை அது எவ்வளவு பகுதியளவானதாகவோ அல்லது நிபந்தனைக்குட்பட்டதாகவோ இருந்தாலும், அதன் தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஈரான் எவ்வாறு தொடர்ந்து எதிர்த்து நிற்கிறது?

போர்களின் முடிவு ஆயுதங்களின் இருப்பு மற்றும் அதிநவீனத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதாக இருந்தால், மார்ச் 1-ஆம் தேதியே ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் முடிந்திருக்க வேண்டும். ஏனெனில் இரு தரப்புக்கும் இடையிலான உபகரணங்கள் மற்றும் வளங்களில் உள்ள ஏற்றத்தாழ்வு அவ்வளவு பெரியது. தாக்குதல் தொடங்கி இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் செய்தியாளர்களிடம், “ஈரானிடம் வான் பாதுகாப்பு இல்லை. ஈரானிடம் விமானப்படை இல்லை. ஈரானிடம் கடற்படை இல்லை…” என்று கூறினார்.

“இது ஒரு சமமான போராட்டமாக இருக்காது என்று கூறினோம், அது அவ்வாறே இருந்தது… உலகின் இரண்டு சக்திவாய்ந்த விமானப்படைகளை தோற்கடிக்க கனவிலும் முடியாது. எங்கள் விமானப்படை மற்றும் இஸ்ரேலிய விமானப்படை இணைந்து, 15,000-க்கும் மேற்பட்ட எதிரி இலக்குகளைத் தாக்கியுள்ளோம். அது ஒரு நாளைக்கு 1,000 க்கும் மேலானது” எனக் கூறினார்.

ஈரான் இந்தப் போரைத் தனித்தே எதிர்கொண்டது (அதன் முக்கிய உதவி, பிராந்தியத்தில் உள்ள அதன் போராட்டக் கூட்டாளிகளிடமிருந்து வந்தது); மேலும் பெருமளவு தனது சொந்த ஆயுதங்களைக் கொண்டே போராடியது. ஈரான் ஒரு மூன்றாம் உலக நாடு, பல தசாப்தங்களாக கடுமையான ஏகாதிபத்தியத் தடைகளின் கீழ் உழைத்து வந்திருக்கிறது. அது இப்போது ஒரு ஏகாதிபத்திய வல்லரசு மற்றும் பிராந்தியத்தின் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இராணுவ வலிமை கொண்ட நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்கிறது. அது எவ்வாறு தொடர்ந்து எதிர்த்து நிற்கிறது? ஈரானின் இராணுவ உத்தி என்ன?

ஈரானின் உத்திகள் குறித்து நாங்கள் குறிப்பிடும் உண்மைகள் பரவலாகத் தெரிந்தவை. ஆனால், அதனால் ஏற்பட்ட அரசியல் தாக்கங்கள், குறிப்பாக ஈரான் மக்களின் பங்கு என்பது பெரிதும் கவனிக்கப்படாதது ஆகும்.

ஈரானின் பாதுகாப்பு உத்தி மற்றும் அதன் தாக்கங்கள்

அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் தரைப்படை தாக்குதலை தொடங்கவில்லை; ஈரானுக்கு எதிரான தாக்குதல் வான்வழியாக, பெரும்பாலும் ஏவுகணைகளால் நடத்தப்பட்டது. ஈரானிடம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, அதாவது வரும் ஏவுகணைகளைத் தகர்க்கும் தடுப்பான்கள் இல்லாததால், அதன் எதிரிகள் தங்கள் வசதிக்கேற்ப ஏவுகணைகளை ஏவ முடிந்தது.

இந்த ஏவுகணைகளுக்கு எதிரான ஈரானின் ஒரே பாதுகாப்பு என்பது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (Drone – ட்ரோன்) வடிவிலான அதன் எதிர்தாக்குதல் மட்டுமே. ஒரு மாதத்திற்கும் மேலான தீவிர அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சு அந்தத் திறனை அழிப்பதில் வெற்றி பெறவில்லை. தனது எதிரிகளுக்குப் பொருளாதார மற்றும் அரசியல் விலையை விதிப்பதன் மூலமும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் முக்கியமான இராணுவ உள்கட்டமைப்புகளைத் தகர்ப்பதன் மூலமும், ஆக்கிரமிப்பை இறுதியில் நிறுத்துவதை ஈரான் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், இதற்கிடையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கெனவே பொதுமக்களைக் கொன்று குவித்து, மருத்துவமனைகள், மருந்துத் தொழிற்சாலைகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் பாலங்கள் மீது குண்டு வீசி, ஈரானின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை ஒரு ஆதி நிலைக்கு (அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வார்த்தைகளில் “கற்காலத்திற்கு”) கொண்டு செல்ல முயன்றுள்ளன. ஈரான் அரசாங்கம் இதை கணக்கில் எடுத்திருக்க வேண்டும். மேலும், தனது சொந்த மக்களின் பெரும் உயிரிழப்புகளுக்குத் தயாராக இருந்திருக்க வேண்டும். இந்த புள்ளியின் முக்கியத்துவத்திற்கு நாம் பின்னர் வருவோம்.

 நீண்டகாலப் பாதுகாப்பிற்கான ஏவுகணைப் பயன்பாடு

1980-88 போரில் மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற ஈராக்கின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்ட ஈரான், லிபியா மற்றும் வடகொரியாவிலிருந்து சில “ஸ்கட்” (Scud) ஏவுகணைகளைப் பெற்று அவற்றை மறு-பொறியியல் (Reverse-engineering) செய்யத் தொடங்கியது. கடந்த தசாப்தத்தில் எதிரியின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணை முறைக்கு முன்னுரிமை அளித்தது ஈரான்.

பல பத்தாண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடிய உலகின் பிற படைகளை முன்மாதிரியாகக் கொண்டு, ஈரான் தனது தங்குமிடங்களை நிலத்திற்கு அடியில் ஆழமாகத் தோண்டியுள்ளது. அதன் ஏவுகணைகள் நாடு முழுவதும் டஜன் கணக்கான நிலத்தடி தளங்களில் சுரங்கங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. இவை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வெடிகுண்டுகளால் எட்ட முடியாத ஆழத்தில் உள்ளன.

ஈரான் பல ஆண்டுகளாக, ஒருவேளை பல பத்தாண்டுகளாக இதுபோன்ற ஒரு போருக்குத் தயாராகி வந்திருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. ஏவுகணைகள், நடமாடும்  ஏவுதளங்கள் (Mobile missile launchers) மூலம் வெளியே கொண்டு வரப்பட்டு, ஏவப்பட்டு, மீண்டும் மலைகளுக்குள் மறைக்கப்படுகின்றன. இதுபோன்ற டஜன் கணக்கான நிலத்தடி தளங்கள் இருப்பதாக சி.என்.என். (CNN) ஊடகம் கூறுகிறது.

ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள், நுழைவாயில்கள் மீது குண்டுவீசி, ஆயுதங்களைத் தரைக்கு அடியில் புதைத்து வருதால், ஈரானின் உத்தி “ஒரு தவறான முடிவாகத் தெரியத் தொடங்குகிறது” என்று போர் தொடங்கிய ஐந்தாவது நாளில் “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” (Wall Street Journal) பத்திரிகை அறிவித்தது. “ஈரானிடம் எஞ்சியிருக்கும் ஏவுகணை ஏவுதளங்களை வேட்டையாடி அவர்களின் ஏவுகணைத் திறனை ஒழிக்கப் போகிறோம்” என்று மத்திய கிழக்கின் உயர்மட்ட அமெரிக்கத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் கூறினார். ஈரானின் தினசரி ஏவுகணை ஏவுதல் குறைந்ததே, பெரும்பாலான தளங்களைச் செயலிழக்கச் செய்துவிட்டதற்கான சான்று என்று அமெரிக்கா கூறியது.

இருப்பினும், கூப்பர் கொக்கரித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஈரான் இஸ்ரேல் மீது மட்டும் ஒரு நாளைக்கு 10-20 ஏவுகணைகளை ஏவிக் கொண்டிருந்தது, அவற்றின் தாக்குதல் வேகம் மேம்பட்டிருந்தது. தினசரி ஏவுதல்கள் குறைக்கப்பட்டது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு மாற்றத்தின் ஒரு பகுதியாகும்; ஈரான் ஒரு நீண்டகாலப் போரை நடத்தி வந்தது, அதில் நீண்ட காலத்திற்குத் தொடர்ச்சியான ஏவுதல்களைப் மேற்கொண்டது. மேலும், அமெரிக்க குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட சுரங்க நுழைவாயில்கள் தற்காலிகமாக மட்டுமே பாதிக்கப்பட்டதாகத் தோன்றியது, அவை சில நாட்களில் மீண்டும் தோண்டப்பட்டன அல்லது மாற்று நுழைவாயில்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் அமெரிக்காவின் பல வெற்றிகரமான தாக்குதல்கள் ஈரான் அமைத்திருந்த போலி இலக்குகள் (Decoys) மீது வீணடிக்கப்பட்டிருக்கலாம் என தோன்றியது.

ஏழைகளின் குரூஸ் ஏவுகணை

ஈரானின் ஷாஹெட் (Shahed) ட்ரோன்களின் கதை இன்னும் வியப்பானது. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பிராந்தியத்தில் அதன் கூட்டாளிகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், நாற்பது ஆண்டுகாலத் தடைகளுக்கு இடையிலும் ஈரானின் வளமான கண்டுபிடிப்புத் திறனுக்கு இவை சான்றாகும். “தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது எதிரி தாக்குதல்களின் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் ஏவுகணை வடிவமைப்புகளை ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்ததால், ஈரான் பயன் அடைந்துள்ளது” என்கிறது சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் (IISS).

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது, ஈரானின் ஷாஹெட் (Shahed) ட்ரோன்கள் பொம்மைகளைப் போலத் தோன்றலாம். ஒப்பீட்டிற்கு, உலகின் முதல் குரூஸ் ஏவுகணையான, இரண்டாம் உலகப் போரின் போது 1944-இல் ஏவப்பட்ட ஜெர்மனியின் வி-1 (V-1) ராக்கெட் 850 கிலோகிரோம் எடையுள்ள போர்குண்டை சுமந்து சென்றதுடன், மணிக்கு அதிகபட்சமாக 400 மைல்கள் வேகத்தையும் கொண்டிருந்தது. ஆனால், ஈரான் ஷாஹெட்கள் 8 அடி அகலம் மற்றும் 12 அடி நீளம் கொண்டவை. 30-50 கிலோ வெடிகுண்டை சுமந்து செல்பவை. இந்த ட்ரோன்களின் வேகம் முதலாம் உலகப் போர் விமானங்களுடனே ஒப்பிடத்தக்கது. நிச்சயமாக, இலக்கைத் தாக்கும் துல்லியத்தில் பெரிய வித்தியாசம் உள்ளது. 1960-70-களின் தொழில்நுட்பத்திலானவை.

  • அவை தயாரிக்க எளிமையானவை மற்றும் மலிவானவை;
  • அவற்றின் உற்பத்தி காலம் (அதாவது, உற்பத்தி தொடக்கம் முதல் முடிவு வரை) மிகக் குறைவு;
  • சிவிலியன் உபகரணங்களில் பயன்படுத்தப்படும் மலிவான, எளிதில் கிடைக்கக்கூடிய பாகங்களைக் கொண்டு இவற்றை உருவாக்கலாம், இவற்றின் இறக்குமதியைக் கண்காணிப்பது கடினம்;
  • நாடு முழுவதும் உள்ள பல சிறிய பட்டறைகளில் இவற்றைத் தயாரிக்கலாம்;
  • ஒரு பெரிய பிக்-அப் டிரக்கின் சரக்கு ஏற்றும் பகுதியில் கொண்டுசென்றுவிட முடியும் என்பதால், இதைக் கண்டுபிடிப்பது கடினம்;
  • மேலும் வணிக ரீதியான டிரக்கின் பின்புறத்தில் இருந்து தண்டவாளம் போன்ற அமைப்பிலிருந்து இவற்றை ஏவலாம். இதனால் இவற்றை அதிக எண்ணிக்கையில் தயாரித்து, எந்த இடத்திற்கும் நகர்த்தி, ஏவ முடியும். “இத்தகைய தொழில்நுட்பத்தின் சிக்கல் என்னவென்றால், அது இப்போது எல்லோரின் கைளிலும் எளிதாகச் சென்றடைந்து விட்டது.

இதற்கு முன்னர் ஈரானிடம் எத்தனை ட்ரோன்கள் உள்ளன என்பது பற்றி அமெரிக்காவிற்கு எந்தத் தெளிவான மதிப்பீடும் இல்லை. ட்ரோன்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுவதால், வான் பாதுகாப்பு அமைப்புகளைத் திணறடிக்க இவற்றை ஒரு கூட்டமாக (Swarm) பயன்படுத்தலாம். எதிரியின் ஏவுகணைத் தடுப்பான்களைத் தகர்ப்பதன் மூலம் அது ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

இராணுவ ஆய்வாளர்கள் இவ்வகை ட்ரோன்களை “ஏழைகளின் குரூஸ் ஏவுகணை” என அழைக்கிறார்கள். ஈரானின் ட்ரோன்கள் தயாரிப்பதற்கு தலா 20,000 – 50,000 டாலர் செலவாகும்; அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் இவற்றை 40 லட்சம் டாலர் செலவாகும் பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகள், 1.28 கோடி டாலர் செலவாகும் தாட் (THAAD) ஏவுகணைகள் மற்றும் 1 முதல் 28 கோடி டாலர் வரை செலவாகும் கப்பல் ஏவுகணைத் தடுப்பான்களைக் கொண்டு சுட்டு வீழ்த்துகின்றன.

ட்ரோன்களை வீழ்த்த போர் விமானங்களைப் பயன்படுத்துவது இன்னும் அதிகச் செலவாகும்: லண்டனின் “ஃபைனான்சியல் டைம்ஸ்” (Financial Times), “ஈரான் ஏவிய மெதுவாகச் செல்லும் மற்றும் தாழ்வாகப் பறக்கும் ட்ரோன்களை வேட்டையாட வளைகுடா நாடுகள் முழுவதும் அதிநவீன போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் அவை இவற்றுடன் போராட வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஒரு எஃப்-16 (F-16) போர் விமானத்தை ஒரு மணி நேரம் காற்றில் வைத்திருக்க 25,000 டாலர்களுக்கு மேல் செலவாகும். மணிக்கு 445 – 1186 மைல் வேகத்தில் போரிட வடிவமைக்கப்பட்ட எஃப்-16 (F-16), இந்த மெதுவான இயந்திரங்களைக் கையாளத் தனது வேகத்தை மிகக் குறைவாகக் குறைக்க வேண்டியுள்ளது. பின்னர் அது 5 முதல் 10 லட்சம் டாலர் வரை செலவாகும் ஆயுதங்களைக் கொண்டு அந்த ட்ரோனைச் சுடுகிறது” என தெரிவித்தது.

இதுவரை எவ்வளவு செலவானது என்பதைப் பற்றி விவாதிக்க அமெரிக்க அரசாங்கம் தயங்கினாலும், அதன் பாதுகாப்புத்துறை போருக்காக மேலும் 20 ஆயிரம் கோடி டாலர் நிதியைக் காங்கிரசிடம் கோரியுள்ளது. பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் கூறுகையில், இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றார்.

ட்ரோன்களால் ஏற்பட்ட கடுமையான சேதங்கள்

ஈரானின் உத்தியாளர்கள் பென்டகன் (Pentagon) கவனிக்கத் தவறிய இரண்டு எளிமையான, ஆனால், அதிர்ச்சியூட்டும் கணக்கீடுகளைச் செய்துள்ளனர். இவை அமெரிக்க முதலீட்டு வங்கியான ஜே.பி. மோர்கனின் (J.P. Morgan) குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

  1. ட்ரோன்களின் வெடிமருந்து அளவு குறைவாக இருந்தாலும், அதிக விலை கொண்ட விமானங்கள், கப்பல்கள் மற்றும் ரேடார் அமைப்புகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தச் சிறிய அளவே போதுமானது.
  2. பல ஏவுகணை அமைப்புகளை விட ட்ரோன்கள் – செலவை விட அதிகப் பலனைத் தருகின்றன.

பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதில் அடி கொடுக்க, ஈரான் 3,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியுள்ளது; இதில் பெரும்பாலானவை வளைகுடா நாடுகளின் இலக்குகள் மீது ஏவப்பட்டன. பெரும்பாலானவை தடுக்கப்பட்டாலும், “சில ட்ரோன்கள் இராணுவத் தளங்கள், எரிசக்தி நிலையங்கள் மற்றும் சிவிலியன் உள்கட்டமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கியுள்ளன. தப்பிச் சென்ற ட்ரோன்கள் முக்கியமான வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகளை அழித்தன அல்லது செயலிழக்கச் செய்தன.”

பி.பி.சி. (BBC) இவ்வாறே கூறுகிறது: “ரேடார் மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகள் ஆரம்பத்திலிருந்தே ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் முக்கிய இலக்குகளாக இருந்தன. அவை நவீன இராணுவ நடவடிக்கைகளின் கண்கள் மற்றும் காதுகளாகச் செயல்படுகின்றன. அந்த கண்கள் மற்றும் காதுகள் இல்லாமல், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட முடியாது. உண்மையில், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, யு.ஏ.இ. (UAE) மற்றும் ஜோர்டான் போன்ற இடங்களில் அமெரிக்க ரேடார்களுக்கு ஏற்பட்ட சேதம் எவ்வளவு அதிகமாக இருந்ததென்றால், தென் கொரியாவிலிருந்து ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா கொண்டு வர வேண்டியிருந்தது.

போர் தொடங்கிய போது பிராந்தியத்தில் சுமார் 40,000 படைகள் இருப்பதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்திருந்தாலும், ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கானோரை இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

“நியூயார்க் டைம்ஸ்” சுட்டிக்காட்டியபடி, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் நீண்ட காலமாகக் கட்டப்பட்டவை. இப்போது, ஈரானில் நடக்கும் போர் அந்தத் தளங்கள் அனைத்தும் பாதிக்கப்படக்கூடியதாக மாறியுள்ளது. அங்கு இராணுவ வீரர்கள் நீண்ட காலத்திற்கு வாழவோ அல்லது வேலை செய்யவோ முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் உள்ள 13 இராணுவத் தளங்களில் பல பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. குறிப்பாக ஈரானுக்கு அருகிலுள்ள குவைத்தில் உள்ளவை மிக மோசமான சேதத்தைச் சந்தித்துள்ளன.”

தாக்கப்பட்டவற்றில் சில: குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ நடவடிக்கை மையம்; அலி அல் சேலேம் விமானத்தளம்; கேம்ப் புயரிங்; கத்தாரில் உள்ள அல் உதித் விமானத் தளம் (அமெரிக்க மத்திய கட்டளையின் பிராந்திய தலைமையகம்); பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படைத் தலைமையகம்; மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானத் தளம். மார்ச் 27 அன்று பிரின்ஸ் சுல்தான் தளத்தின் மீதான ஈரானின் தாக்குதல் முக்கியமான “அவாக்ஸ் இ-3” (AWACS E-3) என்ற விமானத்தைச் செயலிழக்கச் செய்தது. இந்த இழப்பு, அனைத்து நடவடிக்கைகளுக்கும் மிக முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதன் விளைவாக, பணிகளுக்காகத் தேவையான விமானிகள் மற்றும் பணியாளர்களை மட்டும் அங்கேயே வைத்துக்கொண்டு, தரைப்படை வீரர்களில் பெரும்பாலோரை ஐரோப்பா வரையோ அல்லது பிராந்தியத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் மக்கள் வாழும் பிற இடங்களுக்கோ அமெரிக்கா வெளியேற்றியுள்ளது. நடைமுறையில், ஈரான் சுட்டிக்காட்டியபடி, அப்பிராந்தியத்தின் பொதுமக்களை அமெரிக்கா மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது. மறைந்திருக்கும் அமெரிக்க படைகளை கண்டால் புகாரளிக்குமாறு, ஈரான், மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு இடமளிக்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அவர்களின் சொத்துக்கள் இராணுவ இலக்குகளாக மாறக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் இரண்டாவது கடற்படை

இந்தப் போரின் தொடக்கத்தில் ஈரானிடம் இரண்டு கடற்படைகள் இருந்தன. ஒன்று வழக்கமான “அர்தேஷ்” (Artesh) கடற்படை. இது பாரசீக வளைகுடா (Persian Gulf) மற்றும் அரேபிய கடலில் இயங்கும் பெரிய கப்பல்கள் மற்றும் இரண்டு பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டது. இவை அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு எளிதான இலக்குகளாகி, சில நாட்களிலேயே மூழ்கடிக்கப்பட்டன அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டன.

இரண்டாவது ஒரு “கொசுப் படை” (Mosquito fleet). இது “ஈரானிய புரட்சிகர காவல் படை”யின் (IRGC) கடற்படை. இது குண்டுவீச்சுகளிலிருந்து பெருமளவு தப்பியுள்ளது. இது வழக்கமான கடற்படையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இது பெரிய எண்ணிக்கையிலான மலிவான வாகனங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டது, அவை கூட்டமாகச் செயல்பட்டு பெரிய கப்பல்களின் பாதுகாப்பை முறியடிக்கக்கூடியவை. இந்த ராணுவத்தில் நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய அதிவேகப் படகுகள், சுமார் இரண்டு டஜன் சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள், ஏராளமான ஆளில்லா மேற்பரப்பு வாகனங்கள் (USVs) மற்றும் ஆளில்லா நீருக்கடியில் செல்லும் வாகனங்கள் (UUVs), ஆயிரக்கணக்கான கடல் கண்ணிவெடிகள் மற்றும் நீச்சல் வீரர்கள் செல்லும் வாகனங்கள் உள்ளன.

இவை அனைத்தும் வளைகுடா நாடுகளின் புவியியல் மற்றும் ஹார்மூஸ் நீரிணையின் (Hormus Strait) நிலைமைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவை. இந்த படகுகள் 30 மீட்டர் ஆழம் கொண்ட குறைந்த ஆழமான நீரிலும் இயங்கக்கூடியவை. சோனார் கண்டுபிடிப்பைத் தவிர்க்க சத்தமான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு எதிரியைத் தாக்கக்கூடியவை. மலைகளுக்குள் உள்ள சுரங்கங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள, டிரக் மூலமாக ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் கடற்கரையிலிருந்து இவற்றுக்கு ஆதரவளிக்கின்றன. இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) கடற்படையின் முழு கொள்கை, பயிற்சி மற்றும் உபகரணங்களின் கொள்முதல் ஆகிய அனைத்தும் ஒரே சூழ்நிலைக்காகவே வடிவமைக்கப்பட்டவை. தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட எதிரியை ஹார்மூஸ் நீரியணையில் தடுத்து நிறுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. ஈரான் இப்போது அந்தப் போரைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்த விசித்திரமான படை, தடைகளுக்கு மத்தியிலும் ஈரானின் பல ஆண்டுகால முயற்சியாலும் உருவாக்கப்பட்டவை. ஈரான் ஒரு அதிவேகப் பிரிட்டிஷ் படகைப் பெற்று, அதை மறு-பொறியியல் செய்து நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய வேகப்படகுகளைத் தயாரித்தது; அந்த அறிவைப் பயன்படுத்தி எதிரிக் கப்பல்கள் மீது மோதி வெடிக்கும் ஆளில்லாத் தற்கொலைப் படகுகளை உருவாக்கியது; வான்வழி ட்ரோன்களைத் தயாரித்த அறிவைக் கொண்டு சொந்தமாக நீருக்கடியில் செல்லும் ட்ரோன்களை (UUVs) உருவாக்கியது; மேலும் வடகொரியாவிலிருந்து ஒரு சிறிய நீர்மூழ்கிக் கப்பலை இறக்குமதி செய்து அதைப் போலவே சுமார் இரண்டு டஜன் கப்பல்களைத் தயாரித்தது. இவை அனைத்தும் குறைந்த செலவில் செய்யப்பட்டன. (உதாரணமாக, அமெரிக்காவின் ஓஹியோ (Ohia) ரக நீர்மூழ்கிக் கப்பல், ஈரானிய சிறிய நீர்மூழ்கிக் கப்பலை விட 6 மடங்கு நீளமானது; 150 மடங்கு எடை கொண்டது மற்றும் 180 மடங்கு அதிகச் செலவு கொண்டது. இருப்பினும் ஹார்முஸ் நீரியணையில் அது எளிதான இலக்காகிவிடும்.)

தரைப்படை தாக்குதலுக்கு அஞ்சும் அமெரிக்கா

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் தரைப்படை ஊடுருவலுக்கு முயலவில்லை. தரைப்படை ஊடுருவல் இன்றி ஈரானைக் கட்டுப்படுத்த முடியாது (ஆட்சி கவிழ்ப்பு செய்ய முடியாது) என்பது தெரிந்திருந்தும் அவர்கள் தயங்குகிறார்கள். அமெரிக்க-இஸ்ரேலியத் தயக்கத்திற்கான காரணம் தெளிவானது: மக்கள் எதிர்க்கத் தயாராக இருக்கும் ஒரு நாட்டில், தரைப்படை ஊடுருவல்காரர்கள் கடுமையான பாதகங்களைச் சந்திப்பார்கள் என்பதை வியட்நாமிலும் பிற இடங்களிலும் அமெரிக்காவும்; காசாவில் இஸ்ரேலும் கற்றுக்கொண்டுள்ளன. ஈரான் மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளை மாலைகளுடன் வரவேற்கக் காத்திருக்கவில்லை. மாறாக, 1.4 கோடி ஈரானியர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்கத் தங்களை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த நிலையில் கொரில்லாப் போர் முறையின் அனைத்துப் பாடங்களும் இன்னும் தீவிரமாகப் பயன்படுத்தப்படும்.

ஈரானில் ஒரு பெரிய படையை இறக்குவதே சவாலானது, அந்த நாட்டை ஆக்கிரமிப்பது என்பது இன்னும் கடினம். ஈரானிடம் ஏவுகணை பாதுகாப்பு இல்லையென்றாலும், அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் அமெரிக்காவின் ஏ-10 (A-10) விமானம், இரண்டு சி-130 (C-130) போக்குவரத்து விமானங்கள், இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு எஃப்-15 (F-15) போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தித் தங்கள் திறமையை நிரூபித்துள்ளன.

மார்ச் 20, 2003 அன்று அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தபோது, அது ஒரு மையப்படுத்தப்பட்ட தலைமையைக் கொண்ட வழக்கமான இராணுவத்தை எதிர்கொண்டது. 22 நாட்களில் அமெரிக்கப் படைகள் பாக்தாத்தை (Baghdad) அடைந்தன. அந்த நேரத்தில் ஈராக் இராணுவம் சிதைந்து போயிருந்தது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. சில உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதும் ஒரு காரணம். அமெரிக்கா பாக்தாத்தையும் பிற முக்கிய நகரங்களையும் கைப்பற்றியவுடன் போர் முடிவுக்கு வந்தது.

ஆனால், ஈரானின் ஆயுதப்படைகளின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டது. அவை எந்தவொரு ஊடுருவலையும் எதிர்க்கும் திறன் கொண்டவை.

ஈரானின் மொசைக் பாதுகாப்பு

இன்றைய ஈரானிய அரசின் அமைப்பு 1979 புரட்சியின் ஒரு பாரம்பரியமாகும். அந்த வரலாற்று நிகழ்வு, அமெரிக்கப் பொம்மையான ஷாவை (Shah) தூக்கியெறிந்து. ஈரானை நிரந்தரமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நிறுத்தியது. அந்தப் புரட்சி ஈரானின் சமூக அமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதை முழுமையாக மாற்றவில்லை; வர்க்கப் பிரிவினைகள் இன்னும் அப்படியே உள்ளன.

ஈரான் இரண்டு இணையான படைகளைக் கொண்டுள்ளன: 4.2 லட்சம் வீரர்களைக் கொண்ட வழக்கமான இராணுவம் (அர்தேஷ்) மற்றும் 1.9 லட்சம் வீரர்களைக் கொண்ட இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படை. அர்தேஷ், நாட்டின் எல்லையைப் பாதுகாக்க வேண்டும். ஐ.ஆர்.ஜி.சி. இஸ்லாமியப் புரட்சியையே பாதுகாக்க வேண்டும். எனவே ஐ.ஆர்.ஜி.சி-க்கு அதிக கருத்தியல் கல்வியும் ஊக்கமும் அளிக்கப்படுகிறது. ஐ.ஆர்.ஜி.சி. 4.5 லட்சம் வீரர்களைக் கொண்ட பசிஜ் (Basij) என்ற படையையும் நிர்வகிக்கிறது. அர்தேஷ் மற்றும் ஐ.ஆர்.ஜி.சி. ஆகிய ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை உள்ளன. இருப்பினும், இவை அனைத்தும் ஆயுதப்படைகளின் தலைமைப் பணியாளர் குழு (General Staff), மத்திய தலைமயகம் மற்றும் உச்சத் தலைவரின் கட்டளையின் கீழ் வருகின்றன.

ஈரானின் தலைமையைக் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்ற அமெரிக்க ஏகாதிபத்தியம் நீண்டகாலமாகத் திட்டமிட்டுள்ளதை நன்கு அறிந்த ஈரான், ஒரு “மொசைக்” பாதுகாப்பு உத்தியை (Mosaic defence) உருவாக்கியுள்ளது. அதாவது, “வெவ்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ஏராளமான தன்னாட்சி பெற்ற செல்கள், மையத் தலைமை இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவை; அதே நேரத்தில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட உத்திகளின் வழிகாட்டுதலின் படி செயல்படும். நெருக்கடி காலங்களில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள ஐ.ஆர்.ஜி.சி. பிரிவுகள் அந்தப் பிராந்திய பசிஜ் (Basij) படைகளை அழைக்க முடியும். ஒவ்வொரு பிரிவிற்கும் உளவுத்துறை, ஆயுதங்கள் மற்றும் கட்டளை அமைப்பு என அனைத்தும் தனித்தனியாக உள்ளன.

இதனால், வளங்கள் வீணடிக்கப்படுவது போலத் தோன்றினாலும், மையத் தலைமைத் தாக்கப்படும் சூழலில் இத்தகைய அமைப்பு ஈரானுக்கு அவசியமானது. ஒவ்வொரு மட்டத்திலும் மாற்று வழிகளை (Redundancy) உருவாக்குவதன் மூலம், மையத்தில் ஏற்படும் இழப்பு, பிராந்தியங்களைச் செயலிழக்கச் செய்யாமல் இருப்பதை இந்த அமைப்பு உறுதி செய்கிறது. இது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் உயர்மட்டத் தலைவர்களை அமெரிக்கா படுகொலை செய்த போதிலும், ஈரானின் போர் செய்யும் திறனில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

அடிப்படைத் தத்துவங்கள்

இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும், இதற்கு வரலாற்று ரீதியான உதாரணங்களைக் காண்பது கடினம். இருப்பினும், ஈரானின் உத்தியில் பல புதிய அம்சங்கள் இருந்தாலும், அது கொரில்லாப் போர் மற்றும் நீண்டகாலப் போரின் (protracted war) சில கொள்கைகளைத் தெளிவாகப் பின்பற்றுகிறது. இக்கொள்கைகளின்படி, மக்கள் ஆதரவைப் பெற்ற ஒரு சிறிய மற்றும் இராணுவ ரீதியாகப் பின்தங்கிய படை, காலப்போக்கில் ஒரு பெரிய, மேம்பட்ட இராணுவப் படையை முறியடிக்க முடியும்.

இந்தக் கொள்கைகளின்படி, ஒரு சிறிய மற்றும் இராணுவ ரீதியாகப் பின்தங்கிய படை, எதிரி விரும்பும் முறையிலோ, நேரத்திலோ அல்லது இடத்திலோ போரிடாமல், தனக்குச் சாதகமான நேரத்தில், தனக்குச் சாதகமான முறையில் போராட வேண்டும். இது குறிப்பிட்ட போர்களில் பரவலாக்கப்பட்ட (Decentralise) தலைமையையும், அதேசமயம் மையப்படுத்தப்பட்ட தலைமையையும் இணைக்கிறது; ஆயுதப்படைகளின் சுயசார்பு திறனை உறுதி செய்கிறது; மக்களையும் படைகளையும் கிடைக்கும் ஆயுதங்களைக் கொண்டு வலுப்படுத்துகிறது; மேலும் அந்த ஆயுதங்களைத் தனது பலவீனங்களைக் குறைத்து எதிரியின் பலவீனங்களைப் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

போரில் ஆயுதங்கள் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிப்பதில்லை என்ற புரிதல் இதன் பின்னால் உள்ளது.

ஆயுதங்கள் ஒரு முக்கியமான காரணியாக இருந்தாலும், இறுதியில் மனிதர்களே தீர்மானிக்கிறார்கள். ஒரு நீண்டகாலப் போரின் போது, பலவீனமான இராணுவப் படை பெரிய மோதல்களைத் தவிர்த்து, காலப்போக்கில் பல நிலைகளை மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்தப் பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தேசிய மற்றும் சர்வதேசச் சூழல்களைப் பொறுத்தது. ஆனால் வெற்றி என்பது போரின் தலைமையையும், அது தனது பலத்தைப் பயன்படுத்திப் பலவீனங்களை எவ்வாறு முறியடிக்கிறது என்பதையும் பொறுத்தே அமையும்.

ஆயுதங்கள் போரின் எல்லாவற்றையும் தீர்மானிப்பதில்லை என்பது போல, புவியியலும் தீர்மானிப்பதில்லை. ஹார்முஸ் நீர்யணையின் புவியியல் அமைப்பு மட்டுமே ஈரானுக்கு ஒரு வெற்றிக் காரணியாக அமைந்துவிடவில்லை. அந்தப் புவியியல் அம்சத்தைப் பயன்படுத்திக் கொள்ள, ஈரானுக்கு ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் தேவைப்பட்டது. அது சுயசார்பு மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வாகும்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஒருங்கிணைந்த தாக்குதலைத் திறம்பட எதிர்த்ததன் மூலம் ஈரான் உலக அரங்கில் ஒரு முக்கிய இராணுவ சக்தியாக உருவெடுத்துள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தவறான புரிதலாகும். ஈரானின் இராணுவ பலம் மற்ற நாடுகளை ஆதிக்கம் செலுத்தத் தகுந்ததல்ல, மாறாகத் தனது நாட்டைப் பாதுகாப்பதற்கும், பிராந்தியத்தில் உள்ள பிற எதிர்ப்புப் படைகளுடன் இணைந்து செயல்படுவதற்கும் மட்டுமே ஏற்றது. இந்தப் படையின் அரசியல் தன்மை அதன் எதிரிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் படைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

நிச்சயமாக, 40 நாட்கள் என்பது ஒரு நீண்டகாலப் போர் அல்ல; ஆனால் ஈரான் அத்தகைய போருக்குத் தயாராக இருப்பதைக் காட்டியுள்ளது. இதன் விளைவாக ஈரானுக்குச் சாதகமாகப் பலங்களின் சமநிலை மாறத் தொடங்கியுள்ளது. இந்த செயல்முறை முழுமையாக விரிவடைவதைத் தடுக்கவே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. எனவே, இந்த 40 நாள் போரைக் கூட ஒரு நீண்டகாலப் போர் என்ற கருத்தின் விளக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.

தற்போதைய பேச்சுவார்த்தைகளிலிருந்து ஏதேனும் வெளிவருகிறதோ இல்லையோ, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அடிப்படைத் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பது உறுதி. அவர்கள் மீண்டும் தாக்கும் திறனை நிரந்தரமாக இழக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து தொல்லைகளைக் கொடுப்பார்கள். அதேபோல், இந்தப் பிராந்திய மக்கள் தங்கள் வெற்றி கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் போராடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்!

மக்களின் உணர்வுநிலையை வடிவமைத்தல்

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, ஈரானின் இந்த உத்தி மக்கள் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று கோருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ஏவுகணைகளை வீசுவதையோ, மக்களைக் கொல்வதையோ, பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழிப்பதையோ தடுக்க வழி ஏதுமில்லை. ஈரான் பதிலடி கொடுக்க மட்டுமே முடியும், தடுக்க முடியாது. அந்த பதிலடியில் ஏற்படும் உயிரிழப்புகள், ஈரான் மக்கள் செய்யும் தியாகத்தை விட மிகக் குறைவாகவே இருக்கும். ஒரு ஒடுக்கப்பட்ட நாடு ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிடும் ஒவ்வொரு போரிலும் இதுவே நிலைமை. வியட்நாம் வியட்நாமியர்களின் இறப்பு விகிதம் 60-க்கு 1 அமெரிக்க வீரர் என்ற அளவில் இருந்தது. இருப்பினும் வியட்நாம் இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது.

ஈரானைப் பொறுத்தவரை, போருக்கு முந்தைய நிலைமையே சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன் விளைவுகள் ஒரு போருக்கு இணையானவை. 2025-இல் “லான்செட்” (Lancet) மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வின்படி, முக்கியமாக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடைகளால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஐந்து லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது, போர்களினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கைக்கு நிகரானது. ஈரானின் நிலைமையும் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

2018-இல் அமெரிக்கா மீண்டும் தடைகளை விதித்த காலத்திலிருந்து அதன் தாக்கத்தைப் பார்க்கலாம். தடைகளின் தாக்கம் குறித்து ஐ.நா. (UN) தாக்கல் செய்த 2022 அறிக்கை மிகவும் வேதனையானது. அந்நியச் செலாவணி வருவாய் 62 சதவிகிதம் குறைந்தது. சுகாதாரச் செலவுகள் 67 சதவிகிதம் அதிகரித்தன. உணவுப் பொருட்களின் விலை 300 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்தது. மேலும் வறுமை விகிதம் 11 சதவிகிதம் அதிகரித்தது.

ஆனால், இந்தத் தரவுகளை விட, தடைகளின் கோரமான தன்மை சில உண்மைகளால் வெளிப்படுகிறது: ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உபகரணங்கள் (கோவிட் காலத்தின் வென்டிலேட்டர்கள் உட்பட), 130-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள், புற்றுநோய் போன்ற நோய்களுக்கான மருந்து அளவுகளை நிர்வகிக்கும் மென்பொருள் போன்றவை தடுக்கப்பட்டன. தலசீமியா நோயாளிகளுக்கு 10 மில்லியன் டோஸ்கள் தேவைப்பட்ட இடத்தில், ஈரானால் 15 லட்சம் டோஸ்களை மட்டுமே பெற முடிந்தது. இது அந்த நோயால் ஏற்படும் இறப்பை நான்கு மடங்காக உயர்த்தியது. குறிப்பாக, 1980-களில் ஈராக் உடனான போரின் போது நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் மஸ்டர்ட் கேஸ் (Mustard gas) தாக்குதல்களில் தப்பிய ஈரானிய வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சையும் தடுக்கப்பட்டது. ஈரான் மீது படையெடுக்கத் ஈராக்கை அமெரிக்கா தூண்டியது; ஈராக்கிற்கு ரசாயன (Chemical weapons) ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான பொருட்கள் மற்றும் நிதியுதவியை அது வழங்கியது; அவற்றைப் பயன்படுத்தத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தது. இவை அனைத்தும் ஈரானின் புரட்சிக்குப் பிந்தைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்காகச் செய்யப்பட்டவை. இப்போது அந்தப் போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்ட ஈரானியர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அமெரிக்கா தடுத்தது.

சுகாதாரத் துறையில் மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் தடைகளின் தாக்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஒரு போரைப் போலவே பாதிக்கிறது. எனவே, ஈரானியத் தலைமையும் மக்களும் தற்போதைய போரின் விலையைத் தங்கள் முந்தைய நிலைமையுடன் ஒப்பிடும்போது, அவர்கள் தற்போதைய சவால்களைக் கண்டு பின்வாங்க வேண்டிய அவசியமில்லை .

தடைகள் என்பவை இப்பிராந்தியத்தில் ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் ஒரு வெளிப்பாடே ஆகும். தடைகளால் இழந்த உயிர்களைத் தாண்டி, ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை ஈரான் மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர். இது பாலஸ்தீனத்தின் விடுதலைப் போராட்டம், லெபனான் மக்களின் இறையாண்மைப் பாதுகாப்புப் போராட்டம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் நடக்கும் போராட்டங்களுடன் இணைந்துள்ளது. இது தெருக்களில் இறங்கும் மக்களின் உணர்வுகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது. ஏகாதிபத்தியத்தை அகற்ற அவர்கள் பெரும் தியாகங்களுக்குத் தயாராக உள்ளனர். அவர்கள் எதிர்ப்பதன் மூலம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, பெறுவதற்குத்தான் எல்லாம் உள்ளது.

ஈரானியர்கள் தற்போதைய அரசாங்கத்தைத் தூக்கியெறிந்துவிட்டு முன்னாள் ஷாவின் மகனை அமர்த்தத் துடிப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் கூறுவதற்கு மாறாக, ஈரானின் நீண்டகாலப் போர் உத்தி என்பது ஈரானிய மக்களின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டது. அத்தகைய ஆதரவு இல்லாமல், ஈரானின் உயர்மட்டத் தலைவர்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் படுகொலை செய்ததற்குக் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.

அதற்குப் பதிலாக, அடுத்தடுத்த தலைவர்கள் விரைவாகவும் திறம்படவும் பொறுப்பேற்றனர். மேலும், ஏவுகணைகளுக்கு அஞ்சாமல் நாடு முழுவதும் தினமும் வீதிகளில் திரளும் பெருந்திரளான மக்கள் அவர்களுக்கு ஆதரவளித்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நிபந்தனையின்றி எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தைப் பற்றி ஈரான் மக்களிடையே உள்ள விழிப்புணர்வை இது பிரதிபலிக்கிறது. தங்கள் அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதால் மட்டுமே அவர்கள் அதை ஆதரிக்கிறார்கள். ஈரானிய நாகரிகத்தையே அழிப்பதாக டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்கு எதிராக, நாட்டின் மின்திட்டங்கள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளைச் சுற்றி மக்கள் மனிதச் சங்கிலி அமைத்தனர். இது உலக மக்கள் பாராட்டுக்குரிய ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

மக்களை அமெரிக்க-இஸ்ரேலிய எதிர்ப்புப் போராட்டத்திற்காகத் திரட்டியதன் மூலம், ஈரான் அரசாங்கம் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு அரசியல் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. இப்போது ஈரானிய அரசு மக்களின் ஆதரவின் மீது மேலும் சார்ந்திருக்கிறது. அதே நேரத்தில் மக்களும் அதிகமான அரசியல் உறுதியையும் உரிமை உணர்வையும் வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர் .

இந்தச் சூழலில், ஏப்ரல் 10 அன்று ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி ஆற்றிய உரை முக்கியமானது: “இன்று… வீரமிக்க ஈரானிய தேசமாகிய நீங்களே உறுதியான வெற்றியாளர்கள் என்று சொல்லலாம்… தெருக்களில் நீங்கள் எழுப்பும் முழக்கங்கள் பேச்சுவார்த்தைகளின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த நாற்பது நாட்களைப் போலவே மக்களின் தொடர்ச்சியான ஆதரவு அவசியம். இந்த ஆதரவுதான் ஈரானின் தற்போதைய பலத்தின் தூண். பேச்சுவார்த்தைகள் தொடங்கினாலும், மக்களின் இருப்பு குறையக் கூடாது. மக்களின் குரல் பேச்சுவார்த்தைகளில் செல்வாக்கு செலுத்துகிறது.” என்றார்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு முழுமையான போராட்டம் மக்களின் ஜனநாயகப் பங்கேற்பைக் கோருகிறது. ஒருமுறை களத்தில் இறங்கிய பிறகு, மக்கள் தங்கள் சமூகத்தையும் உலகத்தையும் அனைத்து அம்சங்களையும் வடிவமைக்கும் திறனைப் பெறுகிறார்கள்.


மொழிபெயர்ப்பு: அஜிதா


சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க