Wednesday, July 24, 2024
முகப்புதலைப்புச் செய்திதுன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !

துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !

போலித்தனம், முட்டாள்தனம், எதேச்சாதிகாரம், பணிவது, மழுப்புவது, ஏமாற்றுவது, வார்த்தைகளைப் பற்றி வாதம் செய்வது ஆகியவை அலுத்து விட்டன. ஆகவே அரசாங்கம் என்னுடைய சுதந்திரத்தை திரும்ப ஒப்படைத்துவிட்டது – மார்க்ஸ் வரலாற்றுத் தொடர் 17

-

மார்க்ஸ் பிறந்தார் – 17
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

 1. உண்மையான போர் முழக்கத்தைத் தேடல்

மார்க்சியம் ஒரு முழுமையான, முரணில்லாத போதனையாகும். அது ஒரு அங்ககமான அமைப்பு, அதில் முழுமைக்கு முன்பாகத் தனிப் பகுதி தோன்றுவதில்லை, உயிருள்ள கரு வளர்ச்சியடைவதைப் போல அதன் மொத்தமும் வளர்ச்சியடைந்து தன்னை முழுநிறை வாக்கிக் கொள்கிறது.

முதலில் இயக்கவியல் பொருள்முதல்வாதமும் பிறகு விஞ்ஞான கம்யூனிசமும் அரசியல் பொருளாதாரமும் தோன்றின என்று நினைப்பது வெகுளித்தனமாகும். ஆனால் மார்க்சின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் அவர் பிரதானமாக இவற்றில் ஏதாவதொரு துறையில் முழு கவனத்தையும் செலுத்தினார்.

மார்க்ஸ் தன்னுடைய புதிய உலகக் கண்ணோட்டத்தைத் தத்துவஞானத்திலிருந்து தொடங்கினார் என்ற போதிலும், மார்க்சியத்தின் சமூக மற்றும் பொருளாதார அம்சங்களின் உருவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதுதான் இத்துறையில் தீர்மானமான புரட்சி சாத்தியமாயிற்று.

இந்தக் கூறு ஏற்கனவே Rheinische Zeitung காலகட்டத்தில் தோன்றியிருந்தது. மார்க்சின் தத்துவஞான அறிவு பரந்த அளவிலும் கலைக் களஞ்சிய விரிவுடனும் இருந்தாலும் மெய்யான வாழ்க்கை முன்வைக்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த ஆன்மிகச் செல்வம் போதுமானதாக இருக்கவில்லை; தத்துவஞானத்தில் உண்மையான முன்னேற்றத்தை அடைவதற்கும் அது போதுமானதாக இருக்கவில்லை.

மெய்யான வாழ்க்கை, தத்துவம் ஆகிய இரண்டிலும் சமூக உறவுகளைப் பற்றிய ஆழமான பகுப்பாய்வில் ஈடுபடும்படி மார்க்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

அவர் கற்பனாவாத சோஷலிஸ்டுகளின், முதலாவதாகவும் முதன்மையாகவும் சான்சிமோன், ஃபூரியே மற்றும் ஓவனின் தத்துவக் கட்டுரைகளை விமர்சனப் பகுப்பாய்வு செய்தார்.

Utopian Socialist

அவர்கள் கம்யூனிஸ்டு சமூகத்தின் கூறுகள் பலவற்றை (தனிச் சொத்துடைமை, வர்க்க முரணியல்புகள் மற்றும் மனிதனை மனிதன் சுரண்டல் இல்லாதிருத்தல், உழைப்பு சாபக்கேடு என்ற நிலைமையை மாற்றி அதைப் பிரதான மனித அவசியமாகச் செய்வது, சுய நிர்வாகம், இதரவை) அதிகமான மதிநுட்பத்துடன் வர்ணித்தார்கள்; ஆனால் ஒரு முதலாளித்துவச் சமூகத்தைப் புரட்சியின் மூலமாக இல்லாமல், “உதாரணத்தின் வன்மையினால்”, அறவுரைகளினால், வங்கி அதிபர்களையும் தொழிற்சாலை முதலாளிகளையும் தங்களுடைய இலட்சியத்துக்கு மாற்றுவதன் மூலம் – அவர்கள் உடனே தங்களுடைய உடைமைகளைப் பொது நன்மைக்குப் பயன்படுத்தும்படி ஏழைகளிடம் விருப்பபூர்வமாக ஒப்படைத்துவிடுவார்கள் – கம்யூனிஸ்டு சமூகமாக மாற்றிவிட முடியும் என்று வெகுளித்தனமாக நம்பினார்கள்.

மார்க்ஸ் தன்னுடைய மாணவப் பருவத்திலேயே கற்பனாவாத சோஷலிஸ்டுகள் மீது ஒரளவுக்கு அவநம்பிக்கை கொண்டிருந்தார்; ஏனென்றால் அவர்களுடைய உன்னதமான கற்பனைகளுக்கும் அரை நிலப்பிரபுத்துவ பிரஷ்யாவின் வாழ்க்கைக்கும் இடையில் எவ்விதமான உண்மையான இணைப்பையும் அவரால் பார்க்க முடியவில்லை.

ஜெர்மனியில் கற்பனாவாத சோஷலிசக் கருத்துக்கள் பெரும்பாலும் குழப்பமான வடிவத்தில் – மாயாவாத வடிவத்திலும் கூடப் – பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தன என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொண்டால் மார்க்சின் அவநம்பிக்கை இயற்கையானதே.

மார்க்ஸ் Rheinische Zeitung பத்திரிகையில் பணி புரிந்த காலத்தில் அவசரமான, செய்முறைக் கடமைகளைத் தீர்ப்பதற்கென்று தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தபடியால் அவர் கற்பனாவாதத்தைப் பற்றி இன்னும் அதிக ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டார்.

“சரியான தத்துவம் ஸ்தூலமான நிலைமைகளுக்குள் மற்றும் இருக்கின்ற நிலைமைகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்” என்று அவர் கருதினார்.

அவருடைய முன்னாளைய நண்பர்கள், இளம் ஹெகலியவாதிகள் “அரசியலமைப்புச் சட்டத்தின் சுற்றுவட்டத்திற்குள் ஒவ்வொரு படியாக சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கு பதிலாக” “சூக்குமக் கருத்தமைப்புகள் என்ற வசதியான சாய்வு நாற்காலியில்” இருந்து கொண்டு பொது முறையான வாதங்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.(1) தன்னுடைய முன்னாளைய நண்பர்களுடைய நிலைகளைப் பற்றி அவர் வெறுத்தார்.

ஹெகலுடன் அவரது மாணவர்கள்

இந்த வழியில் சுதந்திரத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கைகள் வெறும் கற்பனையே; இந்த உண்மையை மார்க்ஸ் இன்னும் உணரவில்லை. “சுதந்திரமான சிந்தனையைக் கொண்ட, செய்முறையான மனிதர்கள்” அனைவரையும் பத்திரிகையைச் சுற்றி ஒன்றுபடுத்த முடியும் என்று அவர் நம்பினார்; “இன்றைய அரசு அமைப்பின் அடிப்படைகளை எதிர்த்துத் தெளிவான ஆர்ப்பாட்டம் செய்வதனால் தணிக்கை முறை தீவிரப்படுத்தப்படலாம், பத்திரிகை கூட ஒடுக்கப்படலாம்” என்று அவர் அஞ்சினார்.(2)

எனினும் சம்பவங்கள் வேறுவிதமாக வளர்ச்சியடைந்தபடியால் 1842-ம் வருடத்தின் இலையுதிர்காலத்தில் கற்பனாவாதக் கம்யூனிசத்தைப் பற்றித் தன் கருத்துக்களை எழுதும்படி மார்க்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

அநேகமாக இதே சமயத்தில் Rheinische Zeitung பத்திரிகை மெவிஸென் மற்றும் ஹேஸ் எழுதிய கட்டுரைத் தொடரை வெளியிட்டது. அவர்கள் சோஷலிஸ்ட் கருத்துக்களை வெளியிட்டதுடன் “சொத்துடைமையில் புரட்சி” என்ற கோரிக்கையையும் கூட முன்வைத்திருந்தார்கள்.

குறிப்பாக மோஸஸ் ஹேஸ் தனிச் சொத்துடைமைக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக முதலாளி வர்க்கம் நடத்திய போராட்டத்துடன் ஒப்பிட்டுக் காட்டி இப்போராட்டம் ஒரு தேசியப் புரட்சிக்கு இட்டுச் செல்லப்படுகிறது என்று வலிமையாக வற்புறுத்தினார்.

மோஸஸ் ஹேஸ்

அவுக்ஸ்பர்கிலிருந்து வெளியிடப்பட்ட Algemeine Zeitung (“பொதுப் பத்திரிகை”) என்ற பத்திரிகை Rheinische Zeitung பத்திரிகைக்குப் போட்டியாக நடத்தப்பட்டு வந்தது. அது தன்னுடைய எதிரியைத் தாக்குவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது. “பணக்கார வர்த்தகர்களின் புதல்வர்கள்” (மோஸஸ் ஹேஸ் ஒரு வர்த்தகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்) தங்களுடைய உடைமைகளைக் கொலோனின் கைவினைஞர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்கின்ற எண்ணம் சிறிதுமில்லாமல் சோஷலிஸ்ட் கருத்துக்களுடன் சல்லாபிக்கிறார்கள் என்று கிண்டல் செய்தது.

ஜெர்மனியைப் போன்ற பின்தங்கிய நாட்டில் மத்தியதர வர்க்கத்தினர் இப்பொழுதுதான் சுதந்திரமாக மூச்சுவிடத் தொடங்கியிருக்கிறார்கள், 1789-இல் பிரெஞ்சுப் பிரபுக்களுக்கு ஏற்பட்ட கதியைச் சுட்டிக்காட்டி இப்பொழுது அவர்களைப் பயமுறுத்துவது என்றால் அது சிறுபிள்ளைத்தனமானது என்று அது எழுதியது.

இது சாமர்த்தியமான தாக்குதல். முதலாளி வர்க்க வாசகர்கள் Rheinische Zeitung பத்திரிகையைப் படிக்காமலிருக்கும்படி பயமுறுத்துவதும் அது கம்யூனிஸ்ட் பத்திரிகை என்று அரசாங்கத்திடம் எடுத்துக்காட்டுவதும் அதன் நோக்கமாகும்.

Rheinische Zeitung -இன் பிரதம ஆசிரியர் என்ற முறையில் இத்தாக்குதலுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு மார்க்சுக்கு ஏற்பட்டது. பத்திரிகை ஏற்கெனவே எடுத்த நிலையை ஆதரிக்க வேண்டும், அதே சமயத்தில் “கம்யூனிசத்தால்” அதிர்ச்சியடைந்திருக்கும் வாசகர்களைச் சாந்தப்படுத்த வேண்டும். இத்தகைய சிக்கலான, சமயோசிதமான கடமையை அவர் இராஜதந்திரத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

கம்யூனிசம் என்பது அழகான சொற்றொடர்களை உபயோகித்து வரவேற்பறையில் விவாதிக்கக் கூடிய பொருளல்ல என்று அவர் காரமாகக் கூறுகிறார். பன்னீரின் நறுமணம் அதில் இல்லை, அது அழுக்குத் துணியை அணிந்திருக்கிறது. ஆனால் நம் காலத்தின் முக்கியமான பிரச்சினையாக அது இருப்பதை இது தடுக்கவில்லை.

புதிய சமூகப் பிரிவை, அதாவது பாட்டாளி வர்க்கத்தைப் பற்றிய கருத்தை மார்க்ஸ் உறுதியாக ஆதரிக்கிறார். “இன்று எந்த உடைமையும் இல்லாதிருக்கின்ற சமூகப் பிரிவு மத்தியதர வர்க்கத்தினரது செல்வத்தில் பங்கு கேட்கிறது என்ற உண்மை, ஸ்ட்ராஸ்பர்க் பேச்சு இல்லாமலே, அவுக்ஸ்பர்கின் மெளனத்தை மீறி மாஞ்செஸ்டர், பாரிஸ் மற்றும் லியோனில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரிந்ததே.”(3)

மார்க்சின் எழுத்துக்களில் பாட்டாளி வர்க்கம் முதல் தடவையாகக் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து 1842-ம் வருடத்திலேயே அவர் பிரான்சிலும் இங்கிலாந்திலும் பாட்டாளி வர்க்கத்தின் சமூகக் கோரிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது.

ஆனால் மத்தியதர வர்க்கத்துக்கும் (முதலாளி வர்க்கத்துக்கும்) புதிய சமூகப் பிரிவுக்கும் (தொழிலாளர்களுக்கும்) இடையில் “மோதல்” எந்த வழியில் தீர்க்கப்படும்? மார்க்ஸ் இதை முடிவு செய்வதற்கு இன்னும் முன்வரவில்லை. “இரண்டு மக்களினங்கள் தீர்க்க முயன்று கொண்டிருக்கின்ற பிரச்சினைகளை ஒரேயொரு சொற்றொடரில் தீர்த்துவிடுகின்ற கலையை நாம் கற்கவில்லை.”(4)

இந்தப் பிரச்சினையின் இரண்டு அம்சங்களுக்கு இடையில், அதாவது “புதிய சமூகப் பிரிவின்” இயக்கம் என்ற முறையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உண்மையான பிரச்சினைக்கும், தத்துவ ரீதியான விளக்கத்துக்கும் கம்யூனிசப் பிரச்சாரத்துக்கும் இடையில் மார்க்ஸ் தெளிவாக வேறுபடுத்திக் காண்கிறார்.

இரண்டாவது பிரச்சினையைப் பொறுத்தவரை மார்க்ஸ் விமர்சனம் செய்கிறார். ஆனால் இங்கும் அவர் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் எழுதுகிறார். Rheinische Zeitung கம்யூனிஸ்ட் கருத்துக்களை முற்றமுழுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தும், அவை தத்துவ ரீதியான மெய்மையைக் கொண்டிருக்கின்றன என்று ஒத்துக் கொள்ளவில்லை, ஆகவே அவை நடைமுறையில் அமுலாக்கப்படுவதை இன்னும் குறைவாகவே விரும்ப முடியும் என்று மார்க்ஸ் எழுதிய பொழுது “இன்றைய வடிவத்திலுள்ள” கம்யூனிஸ்ட் கருத்துக்களையே மனதில் கொண்டிருக்கிறார்.

கற்பனாவாதக் கம்யூனிசத்தில் மார்க்ஸ் துல்லியமாக எந்த அம்சத்தை வெறுத்தார் என்பதைப் பின்வரும் உதாரணத்தில் காண முடியும். Algemeine Zeitung-க்குத் தெரிந்த ஒரு பிரபலமடையாத நபர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் கம்யூனுக்குக் கொடுத்துவிட்டுத் “தன்னுடைய தோழர்களின் உணவுத் தட்டுகளைக் கழுவி, பூட்சுகளை சுத்தம் செய்தார்” என்பதை மார்க்ஸ் குறிப்பிட்டுக் கிண்டல் செய்கிறார்.

இங்கே அவர் ஃபூரியேயின் சீடர்கள் நடத்திய கம்யூன்களைக் குறிப்பிடுகிறார். இவற்றைப் பற்றி ஏராளமான கதைகள் சொல்லப்பட்டன; இவை கம்யூனிசக் கருத்துக்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தின. இத்தகைய “முயற்சிகள்” உண்மையில் ஆபத்தானவை அல்ல என்று மார்க்ஸ் எழுதியது சரியானதாகும்.

தணிக்கை முறையின் காரணமாகத் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக எழுதுவதற்கு மார்க்சினால் முடியவில்லை. எனினும் அவற்றின் சாராம்சம் என்னவென்றால், மக்களின் அறிவை வெல்லக் கூடிய கம்யூனிஸ்ட் கருத்துக்களின் தத்துவ அடிப்படையைத் தேடுவது அவசியம்; அப்படி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால் அது பீரங்கியையும் எதிர்த்து நிற்க முடியும்.

புரூதோன்

கம்யூனிசத்தைப் பற்றித் தத்துவ ரீதியாக விமர்சனம் செய்வதற்கு முன்பாக லெரூ, கன்சிடெரான் ஆகியோரது நூல்களையும் எல்லாவற்றுக்கும் மேலாக “புரூதோன் எழுதிய நுண்ணறிவு நிறைந்த புத்தகத்தையும்” முற்றமுழுமையாக ஆராய உத்தேசிப்பதாக மார்க்ஸ் எழுதினார்.

பிற்காலத்தில் அவர் பின்வருமாறு நினைவு கூர்ந்தார்: “…”முன்னுக்குப் போக ஆசைப்படுகின்ற நல்லெண்ணங்கள் விவரமான அறிவின் இடத்தைப் பிடித்திருந்த அந்தக் காலத்தில் லேசான தத்துவஞான முலாம் பூசப்பட்ட பிரெஞ்சு சோஷலிசம், கம்யூனிசத்தின் எதிரொலி Rheinische Zeitung பத்திரிக்கையில் குறிப்பிடத்தக்க விதத்தில் தென்பட்டது. இந்த மேற்போக்கான அறிவுக்கு (dilettantism) என்னுடைய மறுப்பைத் தெரிவித்தேன் என்றாலும் Allgemeine Zeitung என்ற அவுக்ஸ் பர்க் நகரப் பத்திரிகையோடு நடத்திய விவாதத்தில் பிரெஞ்சுக் கொள்கைகளின் உள்ளடக்கத்தைப் பற்றி ஏதாவது அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு எனது கடந்த கால ஆராய்ச்சிகள் அனுமதிக்கவில்லை என்பதை அதே சமயத்தில் வெளிப்படையாக ஒத்துக்கொண்டேன்.”(5)

மார்க்சுக்கு இன்னும் இருபத்தைந்து வயது கூட முடியவில்லை. Rheinische Zeitung பத்திரிகையை நடத்துவதற்கு அகல்விரிவான, ஆழமான அறிவும் நிதானமான, செய்முறைத் தலைமைக்குரிய குணங்களும் தேவைப்பட்டன. ஆனால் மார்க்சின் ஆளுமையில் போர்க்குணம் அதிகம். எனவே மேற்கூறிய குணங்கள் அவரிடம் இல்லையென்று தோன்றின.

எனினும், ஒரு பத்திரிகையை நடத்துகின்ற சிக்கலான கலையில் தான் முழுத் தேர்ச்சி பெற்றிருப்பதை மார்க்ஸ் சிறப்பாக எடுத்துக்காட்டினார். இருப்பதோ ஒரே ஒரு நீர்ப்பாதை; ஆனால் அதன் ஒரு கரையில் தணிக்கை முறை என்ற பூதம் உட்கார்ந்திருக்கிறது; மறு கரையில் அதிதீவிரவாதப் புரட்சிகரக் கோரிக்கைகள் என்ற பயங்கரமான விலங்கு பசியுடன் உட்கார்ந்திருக்கிறது. இவற்றுக்கு நடுவில் கப்பலை சாமர்த்தியமாக ஓட்டிச் சென்று தன்னுடைய திறமையை நிரூபித்தார் மார்க்ஸ்.

அதிதீவிரவாதப் புரட்சிகரக் கோரிக்கைகளை “சுதந்திர மக்கள்” என்ற கழகத்தைச் சேர்ந்த பெர்லின் இளம் ஹெகலியவாதிகள் முன்வைத்தார்கள். அவர்கள் உலகத்தைப் புரட்சிமயமாக்குகின்ற உணர்வில் தோய்ந்து ஆனால் கருத்துக்கள் இல்லாத கட்டுரைகளை ஏராளமாகப் பத்திரிகைக்கு அனுப்பினார்கள். இக்கட்டுரைகளில் அரைகுறையாக ஜீரணிக்கப்பட்ட கற்பனாவாதக் கருத்துக்களை அள்ளித் தெளித்திருந்தார்கள்.

மார்க்ஸ் இந்தச் “சொற்களின் நீர் வீழ்ச்சியை” உறுதியாக நிராகரித்த பொழுது துணிவுடன் நடந்து கொண்டார். Rheinische Zeitung இன் புதிய ஆசிரியர் “பழமைவாதி”, அவர் “துரோகி” என்று “சுதந்திர மக்கள்” கூக்குரலிட்ட பொழுது அவர் சிறிதும் கவலைப்படவில்லை.

பத்திரிகையை நாட்டிலுள்ள எல்லா எதிர்ப்புச் சக்திகளின் கேந்திரமாகச் செய்வது புரட்சிகர ஜனநாயகவாதி என்ற முறையில் மார்க்சுக்கு முக்கியமானதாக இருந்தது. ஆனால் பத்திரிகை மிகவும் “அதிதீவிரமான” முறையில் நடைபெற வேண்டும் என்று “சுதந்திர மக்கள் என்ற கழகம் கோரியது; அப்படிச் செய்தால் பத்திரிகை உடனடியாக மூடப்பட்டுவிடும். அதன் விளைவாகப் “போராட்டக் களம்” போலீஸ் மற்றும் தணிக்கை முறையின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுவிடும்.

“சுதந்திர மக்கள்” கழகத்தின் உறுப்பினர்களில் மார்க்ஸ் சில காலத்துக்கு முன்பு நட்புக் கொண்டிருந்த புரூனோ பெளவர், அடோல்ப் ருட்டென்பர்க், பிரெடெரிக் கோப்பென் ஆகியோரும் இருந்தனர். அத்தகைய கழகத்திடம் மார்க்ஸ் ஏன் கடுமையாக நடந்து கொண்டார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அதன் நோக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

புரூனோ பெளவர்

அக்கழகத்தில் பலவிதமான கருத்துக்களை உடையவர்கள் இருந்தார்கள். அறிவுப் போட்டியில் ஈடுபட்டிருக்கும் மிதவாதப் பத்திரிகையாளர்கள், அரசியல் துறையில் புதிய அருணோதயத்தைப் பற்றித் தெளிவில்லாத கனவுகளைக் கொண்டிருந்த இளங்கவிஞர்கள், இளங்கலைஞர்கள், முதிர்ச்சியடையாத இளம் அறிவாளிகள், பாசறை மற்றும் குதிரைப் பண்ணை வேலைகளில் முற்றிலும் மூழ்கிவிடாத இராணுவ அதிகாரிகள், பேராசிரியர்களின் உரைகளைக் கேட்டு முற்றிலும் அலுப்படைந்த மாணவர்கள் ஆகியோர் அதில் சேர்ந்திருந்தனர். மேலும் வேடிக்கைப் பேச்சு அல்லது கெட்ட வார்த்தைகளைக் கேட்டு முகஞ்சுழிக்காத பெண்கள் சிலரும் அதில் இருந்தார்கள்.(6)

இக்கழகத்தினர் ஒரு மதுக்கடையில் கூடி அதிகமாகக் குடிப்பார்கள். அப்படிச் செய்யும் பொழுதே அன்றைய மொத்த அமைப்பையும் இடித்துத் தகர்த்துவிடுவார்கள். அவர்கள் அற்பவாதத்தின் பால் தங்களுடைய இகழ்ச்சியைப் பற்றி உரத்த குரலில் பேசுவார்கள், சமூகத்தின் “தப்பெண்ணங்கள்” அனைத்திலிருந்தும் விடுதலையடைந்துவிட்ட நபர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்வார்கள். “அதிபுரட்சிகரமான சொற்றொடர்களை” ஒருவர் மீதொருவர் வீசிக்கொள்வார்கள் – ஆகவே இந்த பொஹீமிய (ஒழுக்கவரம்பற்ற) எழுத்தாளர்கள் மூளை குழம்பிப் போன அற்பவாதிகளுக்கு உதாரணமாக நடந்து கொண்டார்கள்.

அவர்களுடைய கோமாளித்தனம் பல சமயங்களில் களியாட்டமாகவும் மாறிவிடும். அவர்கள் அருவருப்பான வேடிக்கைகளைச் செய்வார்கள், பிச்சைக்காரர்கள் ஊர்வலங்களை நடத்துவார்கள், தொடர்ந்து குடிப்பதற்காக வருவோர் போவோரிடம் பணம் பிடுங்குவார்கள், விபச்சார விடுதிகளுக்குச் சென்று அங்கே கோமாளித்தனமாக நடந்து கொள்வார்கள், அதன் விளைவாக வெளியே விரட்டப்படுவார்கள்.

புரூனோ பெளவர் இப்படி அற்பவாதிகளை நடுங்கச் செய்யும் வேடிக்கைகளைச் செய்து கொண்டே அரசு, சொத்துடைமை, குடும்பம் ஆகியவை ஒழிக்கப்பட்ட கருத்துக்களாகக் கருதப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.

“சுதந்திர மக்கள்” சமூகத்தின் “மரபுகளிலிருந்து” தங்களை “விடுவித்துக் கொண்டு”, “மக்கட் கூட்டத்திலிருந்து” உயர்ந்து நிற்கின்ற பெருமை மிக்க தனிமனிதனின் புகழைப் பிரகடனம் செய்து கொண்டிருந்த பொழுது அவர்கள் அதே சமயத்தில் மனித நிலைமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதையும் சேற்றில் காது வரையிலும் அமிழ்ந்து கொண்டிருப்பதையும் கவனிக்கவில்லை. அவர்கள் சமூகத்தின் “பன்றித்தனத்தைத் தங்களுடைய தனிப்பட்ட பன்றித்தனத்தின் மூலம் எதிர்த்தார்கள்.

அறநெறிப் போதனை செய்யும் அற்பவாதப் போலித்தனத்தை மார்க்ஸ் மிகவும் வெறுத்த போதிலும் அதை எதிர்க்கின்ற இத்தகைய வடிவங்கள் மீது அவர் அனுதாபம் கொள்ளவில்லை.

“பெர்லினைச் சேர்ந்த வாயாடிகள்” நம்ப முடியாத ஆணவத்தோடு தங்களை உண்மையான புரட்சிக்காரர்கள், கம்யூனிஸ்டுகள், மனித குலத்தை விடுவிப்பவர்கள் என்று விளம்பரப்படுத்தி அந்த மாபெரும் இலட்சியத்தைக் கேவலப்படுத்துவதைப் பற்றி அவர் மிகவும் ஆத்திரமடைந்தார்.

Rheinische Zeitung பத்திரிக்கையை வெட்கமில்லாத சுய விளம்பரப் பத்திரிகையாக மாற்றுவதற்கு விரும்பிய “சுதந்திர வீரர்களிடம்” மார்க்ஸ் உறுதியான நியாயமான கோரிக்கையை முன்வைத்தார். உங்களுடைய தெளிவில்லாத வாதத்தை, ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களை, சுய போற்றுதலைக் குறைத்துக் கொள்ளுங்கள், உண்மையில் இருக்கின்ற நிலைமையைப் பற்றி அதிகமான கவனம் செலுத்துங்கள், அதிகத் திட்டவட்டமான முறையில், அதிகமான நிபுணத்துவத்துடன் பேசுங்கள் என்று மார்க்ஸ் கேட்டுக் கொண்டார்.

“சுதந்திர மக்கள்” கம்யூனிஸ்ட் மற்றும் சோஷலிஸ்ட் கோட்பாடுகளை-ஆகவே ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை-தற்செயலான நாடகபாணியான விமர்சனத்துக்குள் தந்திரமாக நுழைப்பது, இதரவை பொருத்த மற்றவை, ஒழுக்கக்கேடானவை கூட என்று மார்க்ஸ் கூறினார். “கம்யூனிசம் விவாதிக்கப்பட வேண்டும் என்றால், அதை மிகவும் வித்தியாசமான முறையில், முற்றமுழுமையாக விவாதிக்க வேண்டும்”(7) என்று மார்க்ஸ் வற்புறுத்தினார்.

மார்க்ஸ் “சுதந்திர மக்களுடன்” முறித்துக் கொண்டுவிட்டார்; ஆனால் Rheinische Zeitung பத்திரிகையை அரசாங்கத்தின் அடக்குமுறையிலிருந்து இது பாதுகாக்கவில்லை; அதில் வெளியிடப்பட்ட விமர்சனக் கட்டுரைகள், குறிப்பாக மோஸெல் பிராந்திய திராட்சை பயிரிடுபவர்களை ஆதரித்து மார்க்ஸ் எழுதிய கட்டுரை அரசாங்கத்துக்கு ஆத்திரமேற்படுத்தின. பத்திரிகையை நோக்கி அடக்குமுறை மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன.

தணிக்கை முறையின் கடுந்துன்பங்கள், பங்குதாரர்களின் கூக்குரல்கள், மாநில சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள், பிராந்தியத் தலைவரின் புகார்கள் ஆகியவை பற்றிக் கவலைப்படாமல் மார்க்ஸ் பதவியில் நீடித்தார். அதிகாரம் வகிப்பவர்களுடைய திட்டங்களைத் தன்னால் இயன்றவரை தடுப்பது தன் கடமையென்று மார்க்ஸ் கருதினார்.

பத்திரிகை தன்னுடைய முந்திய நிலையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை, அதன் குணாம்சத்தையும் கண்ணியத்தையும் தக்கவைத்துக் கொள்வதை அனுமதித்தால் மார்க்ஸ் சில சமரசங்களுக்குத் தயாராக இருந்தார். ஆனால் பத்திரிகை அதிகாரிகளிடம் “நிதானமாக” நடந்து கொள்ள வேண்டும் என்று பத்திரிகை உடைமையாளர்கள் வற்புறுத்திய பொழுது மார்க்ஸ் ஆட்சேபித்தார், ஆசிரியர் குழுவிலிருந்து விலகும்படி அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். முக்கியமான நோக்கத்தைப் பாதுகாப்பதற்காகச் சில பிரச்சினைகளில் சமரசம் செய்து கொள்வதற்கு மார்க்ஸ் தயாராக இருந்தார். ஆனால் கொள்கைப் பிரச்சினைகளில் அவர் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

தணிக்கை அதிகாரியான ஸான்-பால் பத்திரிகையின் பரமவிரோதி. அவர் மிகவும் வெட்கங்கெட்ட முறையில் ஆசிரியர் குழுவினருக்குத் தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் அவர் கூட பத்திரிகையின் ஆசிரியரான மார்க்சின் மேன்மையை, உறுதியை, ஆழமான நம்பிக்கைகளை மறுக்கவில்லை. பிரஷ்ய அரசின் கோட்பாடுகளுக்கு விரோதமான தீவிர ஜனநாயகக் கருத்துக்களைக் கொண்டிருந்த டாக்டர் மார்க்ஸ் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் என்று ஸான்-பால் அரசாங்கத்துக்கு அறிக்கை அனுப்பிய பொழுது, இப்பத்திரிகையைப் பழைய முறையில் நடத்துவதற்கும் அதன் இலட்சியங்களுக்காகச் சுறுசுறுப்புடன் போராடுவதற்கும் தகுதியுள்ள ஒரு நபர் கூட இப்பொழுது கொலோனில் இல்லை என்று தெரிவித்தார்.

பத்திரிகையை விட்டு வெளியேறிய பொழுது மார்க்ஸ் நிம்மதியாக மூச்சுவிட்டார். அந்தச் சூழலில் தன்னால் சுவாசிக்க முடியவில்லை என்று அர்னோல்டு ரூகேக்கு அவர் எழுதினார். “சுதந்திரத்துக்காக என்றால் கூட-அடிமை வேலை செய்வது மோசமானதே; கம்புகளைக் கொண்டு சண்டை போடுவதற்குப் பதிலாக குண்டுகளைக் கொண்டு குத்துவது வெறுக்கத்தக்கதே. போலித்தனம், முட்டாள்தனம், எதேச்சாதிகாரம், பணிவது, மழுப்புவது, ஏமாற்றுவது, வார்த்தைகளைப் பற்றி வாதம் செய்வது ஆகியவை எனக்கு அலுத்துவிட்டன. ஆகவே அரசாங்கம் என்னுடைய சுதந்திரத்தை என்னிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டது.”(8)

மார்க்சின் பெண்கள் 1865ம் வருடத்தில் வினா விடை தயாரித்த பொழுது “துன்பத்தைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?” என்று மார்க்சிடம் கேட்டனர். “கீழ்ப்படிதல்” என்று அவர் பதிலளித்தார். அநேகமாக இந்தக் காலத்தை நினைத்தே அவர் அப்படி பதிலளித்திருக்க வேண்டும்.(9)

பத்திரிகையிலிருந்து விலகியது நாட்டின் அரசியல் போராட்டத்தில் பங்கெடுக்கின்ற கடைசி சந்தர்ப்பத்தை இழப்பதாகவே மார்க்ஸ் கருதினார். ஜெர்மனியில் தோன்றிக் கொண்டிருந்த முதலாளி வர்க்க மிதவாதத்தைக் கெய்சர் தன்னுடைய பூட்சுகளின் கீழ் நசுக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அற்பவாத ஜெர்மனி அந்த பூட்சுகளை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. பத்திரிகையிலிருந்து விலகிய பிறகு அங்கே இருப்பது அர்த்தமில்லாததாக மார்க்ஸ் கருதினார்.

ஜெர்மனியில் ஒருவர் “தனக்கே போலியாக மாறுகிறார்”(10), ஏனென்றால் “இங்கே உள்ள சூழல் ஒரு நபரைப் பண்ணையடிமையாக மாற்றுகிறது”(11) என்று மார்க்ஸ் கூறினார். எனவே அவர் சிறிதும் தயக்கமின்றி-மகிழ்ச்சியோடு கூட-ஜெர்மனியிலிருந்து புறப்படுவதென்று முடிவு செய்தார்.

மார்க்சின் மகிழ்ச்சிக்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருந்தது. பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுதும் Rheinische Zeitungஇல் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலும் ஜென்னி அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். ஜெர்மனிக்கு வெளியில் தன்னுடைய புதிய வாழ்க்கையை ஜென்னியுடன் தொடங்குவதென்று மார்க்ஸ் உறுதியாக முடிவு செய்திருந்தார்.

மார்க்ஸ் 1843 மார்ச்சில் அர்னோல்டு ரூகேக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய சொந்தத் திட்டங்களைப் பற்றிப் பின்வருமாறு எழுதினார்: “நான் காதலில் மூழ்கியிருக்கிறேன்-அதிலும் மிகவும் உறுதியான முறையில்-என்பதைச் சிறிதளவு புனைந்துரை கூட இல்லாமல் உங்களிடம் தெரிவிக்கிறேன். நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து ஏழு வருடங்களுக்கும் அதிகமாகிவிட்டது. என் மணப்பெண் எனக்காக அவளுடைய உயர்குல உறவினர்கள்-அவர்களைப் பொறுத்தவரை ‘வானத்திலிருக்கும் தேவன்’, ‘பெர்லினிலிருக்கும் பிரபு’ ஆகிய இருவரும் சம அளவுக்கு வழிபாட்டுக்குரியவர்களே-மற்றும் என் சொந்தக் குடும்பத்தினரை-அங்கே சில மதபோதகர்களும் என்னுடைய எதிரிகளும் வசதியாக உட்கார்ந்திருக்கிறார்கள்-எதிர்த்து மிகக் கடுமையாகச் சண்டையிட்டிருக்கிறாள், அதனுல் அவளுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டது.”(12)

1843 ஜூன் 12ந் தேதியன்று ‘கொலோனில் வசிக்கின்ற, தத்துவஞான டாக்டராகிய திரு. கார்ல் மார்க்சுக்கும் கிரைத்ஸ்னாக்கில் வசிக்கின்ற செல்வி யோஹன்னா பெர்த்தா ஜூலி ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலனுக்கும் (தொழில் கிடையாது)”(13) திருமண ஒப்பந்தச் சான்றிதழ் கையெழுத்திடப்பட்டது.

அன்று முதல் மார்க்ஸ் தன் வாழ்க்கை முழுவதும் விசுவாசத்துடனிருந்த துணைவியைப் பெற்றார். ஜென்னி “தன் கணவருடைய விதி, உழைப்பு, போராட்டம் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் அவற்றில் சிறந்த அறிவுடனும் தீவிரமான உணர்ச்சியுடனும் தானே பங்கெடுத்தாள்”(14) என்று எங்கெல்ஸ் எழுதினார்.

தம்பதிகள் கிரைத்ஸ்னாக்கில் தங்கியிருந்த பிறகு பாரிசுக்குப் புறப்பட்டனர். மார்க்சும் அர்னோல்டு ரூகேயும் பாரிசிலிருந்து Deutsch-Französische Jahrbücher (“ஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்தர சஞ்சிகையை”) வெளியிடுவதற்கு முடிவு செய்திருந்தனர்.

“ஆகவே-தத்துவஞானத்தின் பழைய பல்கலைக்கழகமான பாரிசுக்குப் போவோம்-absitomen! (இது கெட்ட சகுனமாக இல்லாதிருக்கட்டும்! –ப-ர் .)…”(15)

குறிப்புகள்:

(1)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 392. 239
(2)Ibid. 240.
(3)Ibid., p. 216.
(4)Ibid., p. 219.
(5)கார்ல் மார்க்ஸ், “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை” , முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1982, பக்கம் 8.
(6) எம். செரெப்ரியக்கோவ், கவிஞர் ஹேர்வெக்கும் மார்க்சும், லெனின்கிராத், 1948, பக்கம் 28, (ருஷ்ய மொழியில்).
(7) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 394. 251.
(8) Ibid., p. 397.
(9) Reminiscences of Marx and Engels, p. 266.
(10) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 398.
(11)Marx, Engels, Collected Works, Vol. 3, p. 142.
(12) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 399.
(13) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 571.
(14) Marx, Engels, Werke, Bd. 19, Berlin, 1962, S. 291.
(15) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 142.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

 1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
 2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
 3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
 4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
 5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
 6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
 7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
 8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
 9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
 10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
 11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
 12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
 13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
 14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
 15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
 16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க