Saturday, June 15, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விஅக்டோபர் புரட்சி : உலகின் விடிவெள்ளி ! ரஜனி தேசாய்

அக்டோபர் புரட்சி : உலகின் விடிவெள்ளி ! ரஜனி தேசாய்

-

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு நிறைவு, நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 19, 2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து மும்பையிலிருந்து வெளிவரும் “ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” இதழின் வெளியீட்டாளர் தோழர் ரஜனி எக்ஸ். தேசாய் அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம்.

க்டோபர் புரட்சியை நினைவு கூர்வதற்காகக் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தின் அமைப்பாளர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

20 -ஆம் நூற்றாண்டை அக்டோபர் புரட்சியைப் போலத் தீர்மானகரமாக மாற்றியமைத்த நிகழ்வு வேறெதுவும் இல்லை என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. உலகின் ஆக மிகப் பெரிய மக்கள் தொகையின் வாழ்க்கையினை நேரடியாக மாற்றிய அசாதாரண சீனப் புரட்சிகூட, அதன் போல்ஷ்விக் முன்னோடி இல்லாமல் சாத்தியமாகியிருக்க முடியாது. இருப்பினும், பின்னர் நேர்ந்த பின்னடைவுகளுக்குப் பிறகு, மார்க்ஸ் 19 -ஆம் நூற்றாண்டின் தத்துவ மேதையாக மட்டும் பல அறிஞர்களால் பார்க்கப்படுவது போல, அக்டோபர் புரட்சி 20 -ஆம் நூற்றாண்டு நிகழ்வாக மட்டும் கருதப்படுகிறது. ஆகையால்தான் நாம் காலத்தால் அழியவொண்ணாத சில உண்மைகளைத் திரும்பவும் வலியுறுத்த வேண்டிய அவசரம் எழுந்திருக்கிறது.

“ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” இதழின் வெளியீட்டாளர் தோழர் ரஜனி எக்ஸ். தேசாய்

முதலில், அக்டோபர் புரட்சியில்தான் மனித வரலாற்றில் முதன்முதலில் மக்கள் வெறுமனே காலத்தின் போக்கில் அனிச்சையாக எதிர்வினையாற்றாமல், ஒரு திட்டவட்டமான செயல்திட்டத்தின்படிச் செயல்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினர். மக்கள் தங்கள் சொந்த தலைவிதியைத் தாங்களே மாற்றிக் கொள்வதன் அறிவியல் கோட்பாடுகளைப் புரிந்து கொண்டால், அவர்கள் அவ்வாறு செய்து காட்ட முடியும் என்பதுதான் இந்த புரட்சியின் முக்கியத்துவமாகும். தங்கள் தலைவிதியை அவர்களின் மனம் போன போக்கிற்கு மாற்றிக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். அவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் மிகக் குறுகிய வரம்புகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் தான். முன்னால் பிப்ரவரி புரட்சி நடக்காமல் அக்டோபர் புரட்சி நடைபெற்றிருக்காது தான். பிப்ரவரி புரட்சியும் அதற்கு முன்னால் நிகழ்ந்த எதேச்சதிகார நாடுகளுக்கிடையிலான போர் உட்பட, பல மாற்றங்களால் தூண்டப்பட்டது தான்.

நவம்பர் புரட்சிக்கு முன்பாக, 1917, ஜூனில், அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே என்ற அரசியல் முழக்கத்தின் கீழ் பெத்ரோகிரேடு நகரில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணி. (கோப்புப் படம்)

பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு கூட போல்ஷ்விக்குகள் தங்கள் விருப்பப்படி புரட்சியை துவங்கவில்லை. மக்கள் களத்தில் இறங்கத் தயாரான பிறகு தான், எதிரி குழப்பத்தில் இருந்த போதுதான், அவர்கள் எழுச்சியைத் துவக்கினார்கள். அக்டோபர் புரட்சி மிகத் துல்லியமாகவும், வலிமிகுந்ததுமான தயாரிப்புகளாலே சாத்தியமாயிற்று. திட்டமிடல் செயலளவில் மட்டுமல்ல, அமைப்பளவிலும், கோட்பாட்டளவிலும் செய்யப்பட்டது. பிறகு வந்த காலத்தில், லெனினிசக் கட்சி என்று அறியப்பட்ட கட்சியால் இந்தத் திட்டமிடல் செய்யப்பட்டது. (இந்தப் பரபரப்பான சூழலில்தான் 1917 -இல் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம், அரசும் புரட்சியும் என்ற இரண்டு கோட்பாட்டு நூல்களை லெனின் வெளியிட்டார். அரசும் புரட்சியும் என்ற நூல் அவர் தேடப்படுபவராக அறிவிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் ஜூலை மாதம் எழுதப்பட்டது. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற நூல், வரப் போகும் புரட்சியின் சமூகப் பொருளாதார அடிப்படையை வரையறுத்தது; அரசும் புரட்சியும், புரட்சியின் அரசியல் நோக்கத்தை விளக்கியது.)

மக்கள் தங்கள் சொந்த முயற்சியால் வரலாற்றை மாற்றியமைக்க முடியும் என்ற இந்த உண்மை மனித வரலாற்றை அக்டோபர் புரட்சிக்கு முன், அக்டோபர் புரட்சிக்குப் பின் என்று இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. சில பத்தாண்டுகளுக்குப் பிறகு, கட்சியின் உலக கண்ணோட்டம் மற்றும் பாதையில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகப் புரட்சி பின்னடைவுக்குள்ளானது என்பது அதன் வரலாற்று முக்கியத்துவத்தை எந்த வழியிலும் குறைத்துவிடவில்லை. வரலாற்றை உணர்வுபூர்வமாக படைக்கின்ற ஆற்றல் தங்களுக்கு இருக்கிறது என்பதை மக்களால் இனி மறக்கவியலாது. மக்களின் இந்த ஆற்றல் குறித்துத்தான் சுரண்டும் வர்க்கங்கள் அஞ்சுகின்றன. அதனால்தான் இக்கோட்பாடுகளை மக்களிடம் பரப்புபவர்களை அழித்துவிட அவர்கள் எத்தனிக்கிறார்கள்.

இரண்டாவதாக, உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுகின்ற ஒரு சமூக அமைப்பை உருவாக்குவதற்காக அல்லாமல், உழைப்புச் சுரண்டல் என்பதே இல்லாத ஒரு சமூகத்தைப் படைக்கும் பொருட்டு, ஒரு வர்க்கம் அன்றைய ஆளும் வர்க்கத்தை அகற்றி, தானே ஆளும் வர்க்கமாக மாற்றிக் கொண்டதென்பது வரலாற்றில் அதுதான் முதன் முறை. மழலைப் பருவம் தொடங்கிப் பிஞ்சு உள்ளங்களிலேயே திணிக்கப்பட்டிருந்த மரபு சார்ந்த கருத்துகள் எதையும் இந்தப் புதிய சமூகத்தால் பயன்படுத்திக் கொண்டிருக்க இயலாது.

இளம் சோவியத் அரசை வீழ்த்தும் நோக்கில் நடந்த ஏகாதிபத்திய படையெடுப்பின்போது, பெத்ரோகிரேடு நகரை ஆக்கிரமித்த் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு, ஜப்பானிய இராணுவத் துருப்புகள். (கோப்புப் படம்)

முதலாளித்துவத்தைப் போன்று  தன்னெழுச்சியாகத் தம்மைத்தாமே மறுஉற்பத்தி செய்து கொள்ளும் சக்திகளையும் இந்தப் புதிய சமூகம் நம்பியிருக்க முடியாது. வெகு மக்களின் உணர்வுபூர்வமான செயல்பாடுகளை மட்டுமே அது நம்பியிருக்க முடியும். எனவே, வரலாற்றில் நடைபெற்றுள்ள வேறெந்த ஆட்சி மாற்றத்தை விடவும் இந்த மாற்றம் மிக மிகக் கடுமையானதாகத் தான் இருந்திருக்க முடியும். இவ்வளவையும் எதிர்கொண்டு அது சாதித்த முன்னேற்றம் என்பது நிச்சயமாக அசாத்தியமானது.

மூன்றாவதாக, இந்தக் கடினமான பணி நடந்தது ஏகாதிபத்திய நாடுகளிலேயே தொழில் துறையில் மிகவும் பின் தங்கிய நாடு. உழைப்பாளர்களில் ஐந்தில் நான்கு பங்கினர் விவசாயிகளாக இருந்த நாடு. அந்தக் காலக்கட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த புரட்சிகரத் தன்மையற்ற மிதவாத மார்க்சியவாதிகள், முதலில் ரசியா முதலாளித்துவ வழியில் போதிய வளர்ச்சி பெற்ற பின்னர்தான் பாட்டாளி வர்க்க ஆட்சி என்பதை நோக்கி முறையாக நகரமுடியும் என்று தொழிலாளி வர்க்கத்துக்குப் போதித்தார்கள். அன்றைய காலத்தின் முன்னனி மார்க்சியவாதியான கார்ல் கவுட்ஸ்கி, “போல்ஷ்விக் புரட்சியானது பாட்டாளிகளின் மிக உயர்ந்த இலக்குகளுக்கும் நாட்டின் மிகத் தாழ்வான வளர்ச்சி நிலைக்கும் இடையேயான பாரிய வேறுபாட்டை மிகவும் தீவிரமானதாக ஆக்கி விடும்” என்று அறிவித்தார்.

ஆரம்பத்தில், போல்ஷ்விக்குகள்கூடத் தங்கள் புரட்சியைத் தொடர்ந்து ஐரோப்பாவின் தொழிற்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் புரட்சிகள் வெடிக்கும் என்று எண்ணினார்கள். விரைவில் அத்தகைய மாற்றங்களை எதிர் நோக்கி கம்யூனிச அகிலம் என்ற அமைப்பையும் உருவாக்கினார்கள். ஐரோப்பாவில் சில நம்பிக்கையளிக்கும் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால், அவை புரட்சிகளில் முடியவில்லை. ஆகையால், சோவியத் யூனியனின் பாட்டாளிகள் மீண்டும் முதலாளித்துவத்திற்குத் திரும்புவது அல்லது தனியொரு நாட்டில் சோசலிசத்தைப் படைப்பது என்ற இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யவேண்டிய இக்கட்டுக்கு ஆளானார்கள். மறுபடியும் மக்கள் தங்களது தலைவிதியைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடியுமா, முடியாதா என்ற கேள்வியாகவே அது மாறியது. போல்ஷ்விக் தலைமையின் கீழ் மாபெரும் தியாகங்கள் பலவற்றின் ஊடாக, அதிசயிக்கத்தக்க வேகத்தில் தொழில் துறையில் முன்னேறிய ஒரு சோசலிச நாட்டை அவர்கள் படைத்தார்கள்

அக்டோபர் புரட்சியானது, பின்தங்கிய ஒடுக்கப்பட்ட நாடுகளின் மக்கள், காலனிய, அரைக்காலனிய ஆட்சியாளர்கள் தங்கள் நாடுகளை ‘வளர்த்து விடுவார்கள்’ எனக் காத்திராமல், தங்கள் விதியைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளுமாறு விடப்பட்ட ஒரு அறைகூவலாக அமைந்தது. 1917 -க்கு பிறகு, சில ஆண்டுகளிலேயே சீனா, இந்தியா, ஈராக், இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஒரு பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கிளர்ந்து எழுந்தது. உண்மையிலேயே, மூன்றாம் நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளின் மக்கள் அக்டோபர் புரட்சிக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறார்கள்.

நான்காவதாக, அக்டோபர் புரட்சியானது, தங்களது சொந்த அதிகார உறுப்புகளான சோவியத்துகள் என்ற மக்கள் மன்றங்களின் மூலம், நேரடியாக ஆட்சியதிகாரத்தில் பங்குபெற்று, தங்களைப் பாதிக்கும் உண்மையான, பொருளாயத விவகாரங்கள் அனைத்தின் மீதும் முடிவெடுக்கும் அதிகாரத்தை மக்களே பெற்றிருந்த முதல் அரசை உருவாக்கியது.

சோவியத் மக்கள் தங்கள் அரசுக்கு தாங்களே சொந்தக்காரர்களாக இருந்தார்கள் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளாதவரை, எப்படி அந்த இளம் அரசு ஐந்து ஏகாதிபத்திய இராணுவங்களின் படையெடுப்பையும், உள்நாட்டு எதிர்புரட்சிப் படைகளின் தாக்குதலையும் மீறிப் பிழைத்தெழுந்தது என்பதையும், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஐரோப்பிய அரசுகளை ஒன்றன் பின் ஒன்றாக வீழ்த்த முடிந்த இட்லரின் படைகளை சோவியத் மக்களால் எப்படி முறியடிக்க முடிந்தது என்பதையும் புரிந்து கொள்ளவியலாது.

(இந்த ஏகாதிபத்திய படையெடுப்புகளை மனதில் கொள்ளாமல் சோவியத் யூனியனின் சாதனைகளை மதிப்பிடுவது சாத்தியமில்லை. இத்தகைய முதல் படையெடுப்பின் இறுதியில், அதாவது 1921 -இல், நாட்டின் தொழில்துறை உற்பத்தி போருக்கு முந்தைய ஆண்டுகளைவிட 80 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது. அடுத்த சில ஆண்டுகள் போருக்கு முந்தைய உற்பத்தி நிலையை மீட்டெடுக்கும் முயற்சியிலேயே கழிந்தன.

இட்லரின் நாஜிப் படைகளைத் தோற்கடித்த பிறகு, செஞ்சேனை படை வீரர் செங்கொடியை ஜெர்மன் நாடாளுமன்றக் (ரெய்ச்ஸ்டாக்) கட்டிடத்தில் ஏற்றும் வரலாற்று நிகழ்வு. (கோப்புப் படம்)

அதன் பின்னர்தான் திட்டமிட்ட, வேகமான வளர்ச்சி நிகழ்ந்தது. ஆனால், போர் மூளும் என்ற அச்சுறுத்தலும், அதன் பொருட்டு சில வகை கனரகத் தொழில்களை அவரசமாகத் தொடங்குவதற்கான தேவையும் அமைதி நிலவிய குறுகிய காலப்பகுதியிலும் தொடர்ந்தது. 1937 வாக்கில் நாஜி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல் கவிந்தது. மத்திய திட்டப் பொறுப்பாளர்கள் மீண்டும் போருக்கு தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பரவலாக தெரிந்தது போல ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் பாசிசத்தைத் தோற்கடிப்பதில் முதன்மைப் பங்காற்றியது. இந்தப் போரில், உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரப் பேரழிவையும்  மனித உயிர் இழப்புகளையும் சந்தித்தது. இதற்காகவும் உலக மக்கள் சோவியத் மக்களுக்கு என்றென்றும் கடன் பட்டிருக்கிறார்கள்.)

எந்த வகையில் பார்த்தாலும், அக்டோபர் புரட்சி என்பது 20 -ஆம் நூற்றாண்டிற்கு மட்டுமானது அல்ல. தனது எதிர்காலத்தைத் தானே உருவாக்கிக் கொள்ள விரும்பும் வேட்கை மனித இனமாகிய நம்மிடம் இருக்கும் காலம் வரை அது நம்முடன் இருக்கும். அதனைச் சாதிப்பதற்கான அறிவை அது நமக்கு வழங்கும். அதன் நேர்மறை மற்றும் எதிர்மறை அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை. மாவோ கலாச்சாரப் புரட்சியின் போது முயற்சித்ததைப் போல, நாமும் அதை முன்னோக்கி எடுத்துச் செல்லமுடியும். ஆனால், இந்த எல்லா முயற்சிகளும், 21 -ஆம் நூற்றாண்டில் தொடரும் முயற்சிகள் உள்ளிட்ட அனைத்தும், அக்டோபர் புரட்சியின் வாரிசுகளே!

வாழ்த்துக்களுடன்,
ரஜனி எக்ஸ். தேசாய்

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க