Friday, December 2, 2022
முகப்புதலைப்புச் செய்திகார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !

கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !

முதலாளித்துவ அரசின் அதிகார வர்க்க எந்திரம், அதன் தணிக்கை, ஊடகங்களின் சுதந்திரம் குறித்தும், தணிக்கை முறை எப்படி அதை ஏவிவிடும் அரசை முடக்கும் என்பதை இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் இளம் கார்ல் மார்க்ஸ்.

-

மார்க்ஸ் பிறந்தார் – 14
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

6. “யதார்த்தத்தை இரக்கமற்ற முறையில் விமர்சனம் செய்தல்”

ஒரு அரசாங்கம் மக்களுக்கு விரோதமாக இருக்குமானால் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் – “நல்லவை” கூட- எதிரானவையாக மாறிவிடுகின்றன. “சட்டத்தை” அமுலாக்க முயற்சிக்கின்ற பொழுது அது அராஜகத்தை, சட்டத்தை மீறலைத் துணையாகக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறது. அது தான்தோன்றித் தனத்தைச் சட்டத்தின் நிலைக்கு உயர்த்துகிறது.

பத்திரிகைகள் விமர்சனம் செய்கின்ற உரிமையை அது பறிப்பதனால் அரசாங்க அதிகாரிகளின் மீது விமர்சனக் கடமையைச் சுமத்துகிறது, “தனிநபர்களே” ஆதரிப்பதன் மூலம் அது தனிநபரைக் கீழிறக்குகிறது; அந்தத் தனிநபர் சொந்தக் கருத்தை வைத்துக் கொள்கின்ற உரிமையைக் கூடப் பறித்து விடுகிறது.

தேசிய உணர்ச்சியை அதிகப்படுத்த முயற்சிக்கும் பொழுது அது “தேசிய இனத்தை அவமதிக்கின்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.” அரசாங்க ஆணை “அதிகாரிகளிடம் அளவுக்கு மீறிய நம்பிக்கையைக்” கோருகிறது; “அதிகாரிகள் அல்லாதவர்களிடம் அளவுக்கு மீறிய அவநம்பிக்கையிலிருந்து முன்னே செல்கிறது”.

பிரஷ்ய அதிகாரி “பாதுகாவலர்” என்ற பாத்திரத்தில் செயல்படுகிறார், “மூளையைக் கட்டுப்படுத்துகின்ற” பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விஞ்ஞானத் தகுதியுடைய விஷயங்களைப் பற்றித் தீர்ப்பு வழங்குவதற்கு அவருக்கு விஞ்ஞானத் தகுதி இருக்கிறதா என்பதைப் பற்றி மிகச் சிறிதளவு சந்தேகம் கூட ஏற்படுவதில்லை.(1)

இந்த அதிகாரவர்க்கக் கோட்பாட்டில் அமைந்திருக்கும் கிண்டலை மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். சிந்தனையாளர்களைப் பற்றித் தகுதியுடன் மதிப்பிடுவதற்கு அதிகாரி எல்லாத் துறைகளிலும் அவர்களைக் காட்டிலும் உயர்ந்த தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

ஒரு வேளை “அரசாங்கத்துக்குத் தெரிந்த சர்வாம்ச மேதைகள் கூட்டம்” உண்மையாகவே பிரஷ்யாவில் வசிக்கலாம். அப்படியானால் இந்தக் “கலைக்களஞ்சிய மேதைகள்” எழுத்தாளர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் ஏன் முன்வருவதில்லை?

எண்ணிக்கையில் ஏராளமாகவும் விஞ்ஞான அறிவினாலும் மேதாவிலாசத்தினாலும் மாபெரும் பலமுடையவர்களாகவும் இருக்கின்ற இந்த அதிகாரிகள் சமூக மேடையில் தோன்றி பரிதாபகரமான எழுத்தாளர்களைத் தங்களுடைய கணத்தினால் ஏன் நசுக்கவில்லை?

சிந்தனைத் துறையில் ஒழுங்கை பாதுகாப்பவர்களை நியமித்து, அவர்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற இந்த அதிகாரிகளின் மேதாவிலாசம் இன்னும் எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும்? “இந்த அறிவின் அதிகாரவர்க்கத்தில் எவ்வளவு மேலே நாம் போகிறோமோ அந்த அளவுக்கு நாம் சந்திக்கின்ற மூளைகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.”(2)

ஒரு அதிகாரவர்க்க, போலீஸ் அரசில் எல்லாத் தணிக்கைக்கும் மேலே இன்னொரு உயர்ந்த தணிக்கை இருக்கிறது; ஒவ்வொரு அதிகாரியின் எதேச்சாதிகாரமும் அவருக்கு மேலே இருக்கின்ற அதிகாரியின் எதேச்சாதிகாரத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

அத்தகைய அமைப்பில் “மூன்றாவது அல்லது தொண்ணூற்று ஒன்பதாவது கட்டத்தில் சட்டத்தை மீறல் தொடங்குவது”(3) தவிர்க்க முடியாதது. அதிகாரவர்க்க அரசு இந்தத் துறையை நம் கண்களுக்குத் தெரியாமலிருக்கும்படி மிகவும் உயரத்தில் வைப்பதற்கு முயற்சி செய்கிறது.

“தணிக்கை முறையை ஒழிப்பதே அதற்குத் தீவிரமான மருந்து; ஏனென்றால் அந்த அமைப்பே மோசமானதாகும்.”(4) என்ற இயற்கையான முடிவுக்கு இந்தப் பகுப்பாய்வு மார்க்சை இட்டுச் சென்றது.

முதலாளித்துவ அரசின் “அதிகாரவர்க்க” இயந்திரத்தை அழிக்க வேண்டிய அவசியத்தை மார்க்ஸ் இங்கே போதிக்கவில்லை; ஆனால் அந்தக் கருத்தை மிகவும் நெருங்கி வருகிறார்.

மார்க்ஸ் தன் முதிர்ச்சிக் காலத்தில் தணிக்கை அரசாணையைப் பற்றிய இந்தக் கட்டுரையை மிக உயர்வாக மதிப்பிட்டார் என்பது 1851ம் வருடத்தில் வெளிவரத் தொடங்கிய அவருடைய கட்டுரைகளின் தொகுப்பில் முதல் கட்டுரையாக அதை வைத்தார் என்பதிலிருந்து விளங்கும் (முதல் தொகுதி வெளியான பிறகு அரசாங்க நிர்ப்பந்தம் காரணமாக இப்பதிப்பு நிறுத்தப்பட்டது).

அக்கட்டுரை மிகவும் தீவிரமான முறையில் எழுதப்பட்டிருந்தபடியால் அதை ஜெர்மனியில் அச்சடிக்கின்ற பேச்சுக்கே இடமில்லை. மார்க்ஸ் எதிர்பார்த்ததைப் போல தணிக்கை முறை அக்கட்டுரையைத் தடை செய்தது; அதன் மூலம் அக்கட்டுரையில் அதைப் பற்றி எழுதப்பட்டிருந்த வர்ணனை எவ்வளவு துல்லியமானது என்பதை நிரூபித்தது. அக்கட்டுரை முதல் தடவையாக 1843-இல் ஸ்விட்சர்லாந்தில் வெளியிடப்பட்டது.

ஆனால் 1842ம் வருடத்தின் வசந்தகாலத்தில் Rheinische Zeitung பத்திரிகையில் ரைன் மாநில சட்டசபையில் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிய விவாதங்களைப் பற்றிக் கட்டுரை எழுதினார். அதில் இப்பிரச்சினையை வேறொரு கோணத்திலிருந்து அணுகினார்.

பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றி சபையின் உறுப்பினர்கள் தெரிவித்த பல்வேறு கருத்துக்களுக்கும் அவர்களுடைய சமூக-வர்க்க அந்தஸ்துக்கும் இடையிலுள்ள நேரடியான இணைப்பை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். அவர் பின்பற்றிய புதிய அணுகுமுறை இந்த உண்மையில் அடங்கியிருக்கிறது. இது முன்னே வைக்கப்பட்ட முக்கியமான காலடியாகும்.

பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிய விவாதத்தில் “சமூகக் குழுக்களின்” நலன்கள் சமரசப்படுத்த முடியாதபடி மோதுவதால், “பொதுவான” சுதந்திரம் இல்லை என்பது தெளிவாயிற்று, ஒவ்வொரு சமூகப் பிரிவும் தன்னுடைய “சொந்த” சுதந்திரத்தை ஆதரிக்கிறது.

முதலாளி வர்க்க, விவசாய வர்க்கக் குழுக்கள் கூட பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றித் தங்களுடைய கோரிக்கைகளின் குறுகிய தன்மையை விளக்கிவிட்டார்கள் என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். முதலாளி வர்க்க பத்திரிகைச் சுதந்திரம்-அது அப்பொழுது பிரான்சில் இருந்த வடிவத்தில்கூட- போதுமான சுதந்திரத்தைக் கொண்டிருப்பதாக மார்க்ஸ் கருதவில்லை.

பிரெஞ்சுப் பத்திரிகைகள் “ஆன்மிகத் தணிக்கைக்கு உட்பட்டிருக்காவிட்டாலும்… அவை பெருந்தொகைகளைப் பிணையாகக் கட்ட வேண்டியிருப்பதால் பொருளாயதத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன”, அவை “பெரும் வர்த்தக சூதாட்டத் துறைக்குள் இழுக்கப்பட்டிருக்கின்றன.”(5)

இங்கே ஒரு புதிய கருத்து தோன்றுவதைத் தெளிவாகப் பார்க்கிறோம்: “ஆன்மிகத் தணிக்கை” “பொருளாயதத் தணிக்கையை”, முதலாளித்துவச் சமூகத்தின் வர்த்தக – பணவியல் உறவுகளைச் சார்ந்திருக்கின்றது. இக்கருத்து மார்க்ஸ் அடுத்தடுத்து எழுதிய ஒவ்வொரு புத்தகத்திலும் மேலும் வளர்த்துக் கூறப்படுவதை நாம் காண்கிறோம்.

ஜெர்மானிய மிதவாத அறிவுஜீவிகள் முதலாளித்துவ சுதந்திரங்களைத் தம்முடைய இலட்சியமாகக் கொண்டிருந்தனர்; ஆனால் மார்க்ஸ் அவற்றைத் தன் இலட்சியமாக ஒருக்காலும் கருதவில்லை என்பதை அவருடைய முதல் பத்திரிகைக் கட்டுரையே எடுத்துக்காட்டுகிறது. அவர் ஆரம்பத்திலேயே புரட்சிகர ஜனநாயகவாதியாகத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மிகவும் தீவிரமான முதலாளிவர்க்க மிதவாதிகள் செய்ய முடிந்ததைக் காட்டிலும் அதிக ஆழமான, முரணில்லாத முறையில் ஜெர்மானிய யதார்த்தத்தை விமர்சனம் செய்தார்.

ஒரு முறை சுதந்திரத்தை அனுபவித்த பிறகு ஒரு நபர் அதற்காக “ஈட்டிகளை மட்டுமல்லாமல் கோடரிகளையும் உபயோகித்துப்” போராட வேண்டும் என்று ஹெரடோடஸ் கூறியதை மேற்கோளாகக் காட்டி பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது விவாதத்தைப் பற்றிய தன்னுடைய கட்டுரையை மார்க்ஸ் முடிக்கிறார்.

Rheinische Zeitung பத்திரிகையில் மார்க்ஸ் மேதாவிலாசத்துடன் எழுதத் தொடங்கிய பொழுது அது உண்மையிலேயே பரபரப்பூட்டியது. மார்க்ஸ் தன்னுடைய திறமைகளை நிரூபிக்க வேண்டும் என்று நெடுங்காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள் திருப்தியடைந்தனர். பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றியும் அதை ஆதரித்தும் இப்படி மிக ஆழமான, நன்கு வாதிக்கப்பட்ட முறையில் இதற்கு முன்பு ஒருபோதும் எழுதப்படவில்லை என்று அ. ரூகே கூறினார்.

Rheinische Zeitung பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் மார்க்சின் செல்வாக்கு இதற்கு முன்பு கணிசமாக இருந்தது. அது இக்கட்டுரைத் தொடருக்குப் பிறகு மிகவும் அதிகரித்துவிட்டபடியால் மார்க்ஸ் அதன் தலைவர்களில் ஒருவரானார். சிறிது காலத்துக்குப் பிறகு அப்பத்திரிகையின் தலைமை ஆசிரியராக அவர் நியமிக்கப்பட்டார். ரைன் மாநில சட்டசபையில் மரங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் சட்டத்தின் மீது நடைபெற்ற விவாதங்களைப் பற்றி இப்பத்திரிகை 1842 அக்டோபரில் ஒரு புதிய கட்டுரைத் தொடரை வெளியிட்டது.

மார்க்சின் படைப்பாற்றல் நிறைந்த வாழ்க்கையில் இக்கட்டுரைகள் முக்கியமானவையாகும். முதல் தடவையாக அவர் சூக்குமக் கருத்தாக்கம் என்ற வானத்திலிருந்து “உறுதியான பூமிக்கு” வரும்படி, அதாவது ஹெகலின் தத்துவஞான அமைப்பில் இடம்பெறாத பொருளாயத நலன்களைப் பற்றி எழுதும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இந்தச் சமயத்திலிருந்து மார்க்சினுடைய சிந்தனை சமூகத்தின் வர்க்க மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பைப் பகுத்தாராய்கின்ற திசையில் செலுத்தப்பட்டது. மரம் திருடப்படுவதைப் பற்றிய விவாதங்களைப் பற்றிய கட்டுரையைப் படிக்கின்ற பொழுது புதிய கருத்துக்களின் “உதயத்தை” அறிவிக்கின்ற முதல் “மின்னல் வீச்சுக்களை” நாம் கற்பனை செய்ய முடிகிறது.

மரங்கள் திருடப்படுவதும் வேட்டையாடுதல் மற்றும் காடுகளைப் பாதுகாத்தலைப் பற்றிய சட்டங்கள் மீறப்படுவதும் பொருளாதார வாழ்க்கையில் அற்பமான விஷயமாகத் தோன்றும். ஆனால் அவற்றுடன் தொடர்புடைய சந்தர்ப்பங்களைப் பற்றி செய்யப்பட்ட ஆராய்ச்சி பெருந்திரளான ஏழை மக்களின் வறுமை நிலையையும் அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்டிருப்பதையும் முழுமையாக எடுத்துக் காட்டியது.

பெரிய நிலவுடைமையாளர்களின் நலன்களுக்குச் சாதகமான முறையில் அடிப்படை மனித உரிமைகள் எவ்வளவு அவமானகரமான முறையில் மீறப்பட்டன, தனிச் சொத்துடைமைக்காக மக்கள் எப்படி பலியிடப்பட்டார்கள் என்பதை மார்க்ஸ் கண்டார்.

“தனிச் சொத்துடைமை” மனித விரோதமானது, அது தனி நபருக்கு எதிராக இருக்கிறது, தனி நபருக்கு எதிராக எல்லாவிதமான குற்றங்களையும் நியாயப்படுத்துகிறது, அது மனிதனை மிருகத்தின் நிலைக்குத் தாழ்த்திவிடுகிறது என்பவை அவருக்கு மிகவும் தெளிவாயிற்று.

குறிப்புகள் :

(1) Ibid., p. 126.
(2) Ibid.
(3)Ibid., p. 131.
(4) Ibid.
(5)Ibid., p. 167.

தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

 1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
 2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
 3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
 4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
 5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
 6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
 7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
 8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
 9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
 10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
 11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
 12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
 13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க