மார்க்ஸ் பிறந்தார் – 12
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

5. “தத்துவஞானம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது” (தொடர்ச்சி)

டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையிலும் அதற்கென்று தயாரிக்கப்பட்ட ஆரம்பக் கட்டுரைகளிலும் மார்க்ஸ் டெமாக்கிரீடஸ், எபிகூரஸ் மற்றும் ப்ளுடார்கை எவ்விதமாக வர்ணிக்கிறார் என்பது இக்கண்ணோட்டத்தின்படி சுவாரசியமானதாகும். இத்தத்துவ ஞானிகளைப் பற்றி அவருடைய அணுகுமுறையில், அவர்களிடம் அவர் எதை விரும்புகிறார், எதை வெறுக்கிறார் என்பதில் இளம் மார்க்சின் ஆளுமையின் கூறுகள் வெளிப்படுகின்றன.

டெமாக்கிரீடஸ், எபிகூரஸ் என்ற இரண்டு தத்துவஞானிகளின் தத்துவங்களும் ஒரே படித்தானவை அல்லது அநேகமாக ஒரே படித்தானவை என்று எப்பொழுதுமே கருதப்பட்டிருக்கின்றன. இக்கருத்து சரியல்ல என்று மார்க்ஸ் எடுத்துக் காட்டுகிறார். அவர்களிருவரும் அணுவாதக் கொள்கையை உருவாக்கி ஒரே விதமாக அதை வளர்த்திருந்த போதிலும் இத்தத்துவத்தின் உண்மை, நம்பத்தக்க நிலை, கையாளுதல் ஆகியன பற்றிய ஒவ்வொன்றிலும் அவர்கள் எதிரும் புதிருமான நிலையில் இருக்கிறார்கள். விஞ்ஞானத்தைப் பற்றி அவர்களுடைய அணுகுமுறை கூட எதிராகவே இருந்தது.

டெமாக்கிரீடஸ்

டெமாக்கிரீடஸ் தன்னுடைய வாழ்க்கை மற்றும் தேடல்களின் கோட்பாட்டைப் பின்வருமாறு உரைத்தார்: “பாரசீகத்தின் மகுடத்தை அடைவதைக் காட்டிலும் ஒரு புதிய காரண காரியத்தைக் கண்டுபிடிப்பது எனக்கு மேலானது!”(1) அவர் எல்லாவற்றிலும் தர்க்கவியலைத் தேடுகிறார், தற்செயலான நிகழ்வு என்பதை நிராகரிக்கிறார்; ஏனென்றால் அது “முழு நிறைவான சிந்தனையுடன் பொருந்தாது”, தான் திரட்டியிருக்கின்ற அறிவைப் பற்றி அவருக்கு எப்பொழுதும் அதிருப்தியே. அவர் வடிவகணிதத்தைக் கற்பதற்காக எகிப்துக்கும் பாரசீகத்திலுள்ள ஹால்டியர்களுக்குச் சென்றார். அவர் இந்தியாவுக்குச் சென்று யோகிகளிடமிருந்து அறிவைச் சேகரித்தார் என்றும் சிலர் கூறுவதுண்டு.

அவருடைய சகாப்தத்தின் கலைக்களஞ்சியப் பரப்பைக் கொண்ட அறிவு பிரபஞ்சத்தைப் பற்றி மிகவும் உருப்படியான, ஊகத் தத்துவத்தை, அணுவாதத் தத்துவத்தை உருவாக்கியது. அத்தத்துவத்தின் முக்கியமான கூறுகளைப் பிற்காலத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சி நிரூபித்திருக்கிறது. எனினும் அவர் அதிருப்தியோடிருந்தார். தன்னுடைய கண்ணின் புலனுணர்வு அறிவின் கூர்மையைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக அவர் தன்னைக் குருடாக்கிக் கொண்டார்.

எபிகூரஸ் முற்றிலும் வேறுவிதமான மனிதர், தத்துவஞானத்தைப் பற்றி அவருடைய அணுகுமுறையும் வேறு. டெமாக்கிரீடஸ் எல்லோரிடமிருந்தும் அறிவைத் திரட்ட விரும்பினாரென்றால் எபிகூரஸ் தனக்கு ஆசிரியர் இல்லாததைப் பற்றி, சுயமாகவே கற்றதைப் பற்றி, எந்த உதவியும் இல்லாமல் உண்மையை நோக்கிச் செல்கின்ற வழியை அடைந்ததைப் பற்றிப் பெருமைப்படுபவர்.

டெமாக்கிரீடசின் நிம்மதியற்ற மனம் அவரை உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் துரத்தியது, அவர் வெளிநாடுகளில் எண்பது வருடங்களைக் கழித்தார், ஆனால் எபிகூரஸ் ஏதன்சிலிருந்த தன்னுடைய தோட்டத்தை விட்டு வெளியே இரண்டு அல்லது மூன்று தடவைகள்தான் போயிருக்கிறார், அதுவும் கூட நண்பர்களைச் சந்திப்பதற்காகவே. அவர் தத்துவஞானத்தில் அமைதியையும் இன்பத்தையும் அடைந்தார்; டெமாக்கிரீடசுக்கு எதிரிடையான முறையில் துல்லியமான விஞ்ஞானங்களை நிராகரித்தார்.

எபிகூரஸ்

எல்லாப் பொருட்களைப் பற்றியும் முழுமையான அறிவைத் திரட்ட முடியவில்லையே என்ற வேதனையில் டெமாக்கிரீடஸ் கண்களைக் குருடாக்கிக் கொண்டார்; ஆனால் எபிகூரஸ் மரணம் நெருங்குவதை உணர்ந்தவுடன் வெந்நீரில் குளித்தார், ஒயினைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார், தத்துவஞானத்துக்கு விசுவாசமாக இருக்கும்படி நண்பர்களைக் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வுகளைப் புலன்களினால் அறிய முடியும் என்பதில் எபிகூரஸ் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே சூரியன் மிகவும் பெரியது என்று டெமாக்கிரீடஸ் கருதிய பொழுது எபிகூரசுக்கு அது இரண்டடி அளவை அதாவது நம் பார்வைக்குத் தோன்றுகின்ற அளவைக் கொண்டதாக இருந்தது. டெமாக்கிரீடஸ் எல்லாவற்றிலும் பார்க்க முடியும் என்று நம்பிய அவசியத்தை எபிகூரஸ் நிராகரித்தார். அவசியம் என்பது மனிதனை ஒடுக்குகின்ற தவிர்க்க முடியாத விதியாகிய ஊழ் என்று அவர் கருதினார். மனிதனுடைய எல்லா நடவடிக்கைகளையும் முன்பே நிர்ணயிக்கின்ற மதத்துடனும் கடவுள்களுடனும் அவர் அதை இணைக்கிறார். மனிதனுடைய நடத்தை அவனேயே, சந்தர்ப்பத்தையே சார்ந்திருக்க வேண்டும், அவசியத்தை அல்ல.

அவசியத்தில் வாழ்க்கை நடத்துவது துரதிர்ஷ்டம், ஆனால் அத்தகைய வாழ்க்கை எவ்விதத்திலும் அவசியமல்ல என்பார் எபிகூரஸ். சுதந்திரத்துக்கான பாதைகள் எல்லாப் பக்கங்களிலும் திறந்தே இருக்கின்றன; அவை பல, சுருக்கமானவை, சுலபமானவை. ஒரு நபர் அவசியத்தை மட்டுமே “அடக்கிவிட” வேண்டும். ஒரு நபர் அங்கீகரிக்க வேண்டியது “சந்தர்ப்பம், கடவுள் அல்ல”. இதற்கு முற்றிலும் பொருத்தமான முறையில் எபிகூரஸ் தன்னுடைய அணுவாதத் தத்துவத்தில் அணுக்களின் தற்செயலான கீழ்நோக்கிச் சரிதலைக் கொண்டு வருகிறார்; இவ்விஷயத்தில் அவர் டெமாக்கிரீடசிடமிருந்து வேறுபடுகிறார்.

அணுக்கள் தற்செயலாகக் கீழ்நோக்கிச் சரிதல் நகைப்புக்குரியது என்று பலர் கருதினார்கள், அது அணுவாதத் தத்துவத்தைச் செழுமைப்படுத்திய புதுமை, அது அத்தத்துவம் வளர்ச்சியடைவதற்கு உதவியது என்று மார்க்சே முதலில் நிரூபித்தார் (அவருடைய டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையின் நிரந்தரமான முக்கியத்துவம் இதில் அடங்கியிருக்கிறது). மார்க்ஸ் தன்னுடைய இயக்கவியல் உள்ளுணர்ச்சியின் விளைவாக இம்முடிவுக்கு வந்தார்; நவீன அணுவியல் பெளதிகம் நிச்சயமற்ற கோட்பாட்டை முன்வைத்திருப்பதன் மூலம் இதைப் பரிசோதனை முறையில் நிரூபித்திருக்கிறது என்று கூறலாம்.

தத்துவஞானம் தன்னுடைய பொருளாயத ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்திடம் காண்பதைப் போல, பாட்டாளி வர்க்கம் தன்னுடைய ஆன்மிக ஆயுதங்களைத் தத்துவஞானத்தில் காண்கிறது.

நாத்திக மற்றும் பண்டைக்கால கிரேக்க அறிவொளித் தத்துவஞானமாகிய எபிகூரியத் தத்துவஞானம் வாழ்க்கையின் எளிமையான, இயற்கையான மகிழ்ச்சியில் திளைக்கின்ற சுதந்திரமான மனிதனைப் போற்றியது. போலியான தத்துவஞானிகளும் அற்பவாதிகளும் அதைத் தங்களுடைய எரிச்சலான விமர்சனத்துக்கு உட்படுத்தினார்கள்.

இந்த விமர்சகர்களின் முன்னணியில் புகழ் மிகுந்த ப்ளுடார்க் இருந்தார்; அவர் சுயதிருப்தியடைகின்ற முட்டாள்தனத்தின், தன்னை புத்திசாலி என்று நினைக்கின்ற பகட்டான கெளரவத்தின் உருவகம் என்று மார்க்ஸ் கருதினார்.

எபிசுரசின் வாதத்தின் ஒத்திசைவான, நேர்மையான, துணிவான தர்க்க முறையை அதன் முடிவுகள் மதத்தை நிராகரிப்பதற்கு இட்டுச் சென்றாலும் அதைக் கண்டு அஞ்சாத தர்க்க முறையை – ப்ளுடார்கின் கோழைத் தனமான, அரை மனதுடைய, கதம்பவாத நிலையுடன், அவரது கடவுளுக்குப் பயப்படுகின்ற, நன்னெறி சார்ந்த பேச்சுடன், அவருடைய போலித்தனமான குழைவுடன் மார்க்ஸ் வேறுபடுத்திக் காட்டினார்.

தன்னுடைய சொந்தக் “கடமையுணர்ச்சியில்”, “நற்பண்புகளில்”, தன்னுடைய உடல் நலத்தைப் பற்றிய அக்கறையில், மறு உலகத்தில் “நிரந்தரமான இன்பத்தை” அடைய வேண்டும் என்ற அக்கறையில் திருப்தியடைகின்ற சாதாரணமான அறிவின் மலிவான “தத்துவஞானத்துக்கு”, தன்னுடைய சொந்த, அற்பமான “நானின்” வறுமையையும் அவமானத்தையும் நல்லொழுக்கத்தை வலியுறுத்துவதன் மூலம் மறைத்துக் கொள்கின்ற “தத்துவஞானத்துக்கு” ப்ளுடார்கின் வாதம் சிறந்த உதாரணமாகும்.

ப்ளுடார்க்

மார்க்சின் மனதில் ப்ளுடார்கின் உருவம் பயத்தினுல் சுருங்கிய, அடிமைத்தனமாகக் கெஞ்சுகின்ற, “நல்லவர்கள் தமது வாழ்க்கையின் பலன்களை வாழ்க்கையோடு இழக்க வேண்டுவது எவ்வளவு அநீதியானது” என்று போதிக்கின்ற மனிதருடன் இணைந்திருந்தது. சிந்தனைத் துறையில் “கண்ணியம்” இல்லாத அனைத்தையும் ப்ளுடார்க் மறுப்பது இயற்கையே. ப்ளுடார்கைப் படிக்கும் பொழுது புழுக்கமான “வகுப்பு அறையில்” உட்கார்ந்திருப்பதைப் போல நாம் உணர்கிறோம். எபிசுரசையும் “உலகத்தின் புத்தம் புதிய, கூருணர்ச்சி உடைய கவிமன்னனாகிய லுக்ரெத்சியசையும் படிக்கின்ற பொழுது கவர்ச்சியான உடையணிந்திருக்கும் துணிச்சலான கழைக் கூத்தாடியைப் பார்க்கிறோம்; நாம் நம்மை மறக்கிறோம், நம்மைக் காட்டிலும் மேலே உயர்கிறோம், வெகு தூரத்துக்கு அப்பால் பார்க்கிறோம், மேலும் சுதந்திரமாக மூச்சு விடுகிறோம்.

சரி, ஒவ்வொருவரும் தனக்கு ஏற்ற நபரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். “தன்னைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும் தன்னுடைய சொந்த வளங்களைக் கொண்டு முழுமையான உலகத்தை நிர்மாணிக்க, உலகத்தைப் படைப்போனாக முன்வராத நபர் ஏற்கெனவே ஆன்மாவினால் சாபமிடப்பட்டிருக்கிறார், அவர் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார் -ஆனால் அது எதிரான அர்த்தத்தில்: அவர் ஆலயத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டு ஆன்மாவின் நிரந்தரமான ஆனந்தத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார், தன்னுடைய சொந்தமான, தனிப்பட்ட ஆனந்தத்தைப் பற்றிப் பாட்டுப் பாடியும் இரவு நேரத்தில் தன்னைப் பற்றிக் கனவு காணும்படியும் விதிக்கப்பட்டிருக்கிறார்.”(2)

தத்துவஞானத்தில் ப்ளுடார்கின் ஆன்மிக வாரிசுகள் எப்பொழுதுமே அதிகமாக இருந்தார்கள். மார்க்ஸ் ப்ளுடார்குடன் செய்த வாதம் அவருடைய எல்லா ஆன்மிக வாரிசுகளோடும் வாதம் புரிவதாகவும் இருந்தது என்பது மெய்யே.

ஜீவனுள்ள, உயிர்த்துடிப்புள்ள சிந்தனையைச் சிறைப்படுத்தி உறங்க வைப்பதற்காக நன்னெறி சார்ந்த தடைகளையும் தேசபக்த உரைகளையும் கொண்ட சிலந்தி வலையை நெய்த ப்ளுடார்க் மரபினருடைய அலங்காரமான சொற்கூளம் மார்க்சிடம் தீவிரமான எரிச்சலை ஏற்படுத்தியது. ப்ளுடார்கின் “நன்னெறி சார்ந்த விமர்சனம் மற்றும் விமர்சன நன்னெறியின்” அனைத்து வெளிப்பாடுகளையும் மார்க்ஸ் தன் பேனா முனையினால் வரலாற்றின் ஏளனத்துக்கு உள்ளாக்கினார்.

19 -ம் நூற்றாண்டில் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதியான கார்ல் ஹைன்ஸென் எங்கெல்சுடன் செய்த வாதத்தில் இந்த “விமர்சனத்தை” சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ப்ளுடார்க் எபிகூரசுடன் செய்த வாதத்தைப் போலவே தத்ரூபமாக விளக்கினார்.

எங்கெல்ஸ்

ஹைன்ஸென் வடிவத்தில் “விமர்சகராக வருகின்ற அற்பவாதியை”, என்னுடைய மரபு தத்துவஞானமோ அல்லது கல்வியறிவோ அல்ல, அது “வாழ்க்கையின் முழுமையே” என்று அகம்பாவத்தோடு கூறுகின்ற, “முழுநிறைவான பொது அறிவை” போதிக்கின்ற, “தன்னுடைய சொந்த நற்பண்புகளைப் பற்றித் தானே திருப்தியடைகின்ற அற்பவாதியின் உணர்வை” விளக்கிக்காட்டுகின்ற, ஒரு சில “குறைவான, சதையில்லாத உண்மைகளை அசைக்க முடியாத வறட்டுக் கோட்பாடுகளாக மாற்றி “இத்தகைய நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசுபவர்களின் குருட்டுத்தனம்”, “முட்டாள்தனம்” அல்லது “போக்கிரித்தனத்தைப் பற்றித் தன்னுடைய தார்மிக ஆவேசத்தைக் கொட்டுகின்ற”(3) அற்பவாதியை மார்க்ஸ் இரக்கமற்ற நகைச்சுவையுடனும் கிண்டலுடனும் தாக்கினார்.

ப்ளுடார்கின் ஆதரவாளர்கள் எல்லோரையும் பற்றி மார்க்சின் இந்தத் தீவிரமான, எதிர்மறையான மதிப்பீடு விஞ்ஞானத்தைப் பற்றி அவருடைய ஆக்கபூர்வமான அணுகு முறையையும் உண்மையான தத்துவஞானச் சிந்தனையின் கடமைகளையும் பாத்திரத்தையும் பற்றி அவருடைய கருத்தையும் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தத்துவஞானம் வறட்டுக் கோட்பாட்டுடன், நிர்ணயிக்கப்பட்ட, கெட்டிப்பட்டுவிட்ட ஆய்வுரையுடன் பொருந்தாது. ஹெகலிய அமைப்பின் முடிவான, முழுமையான, தனிமுதலான மற்றும் “ஊகமான” தன்மையே மார்க்சுக்கு அதிருப்தியளித்தது. அவர் தன்னுடைய டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையிலேயே ஹெகலியத் தத்துவஞானம் “உலகத்துடன்”, யதார்த்தத்துடன் முறித்துக் கொண்டிருப்பதைப் பற்றி மிகவும் வன்மையாக விமர்சனம் செய்தார் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.

மார்க்சின் தொடக்க காலத் தத்துவஞான நிலை வெடிகுண்டுத் திரியைக் கொண்டிருந்தது. சீக்கிரத்தில் மார்க்ஸ் தத்துவஞானத்தைப் பற்றி பரந்த செயல் விளைவுடைய முடிவுகளுக்கு வந்தார்.

இயற்கை விஞ்ஞானங்கள் போதிய வளர்ச்சி அடையாமலிருந்தபடியால் துல்லியமான விஞ்ஞானங்களுக்கு மாற்றீடாக இருக்கும்படி தத்துவஞானம் நிர்ப்பந்திக்கப்பட்டது. அது உலகத்தின் சர்வாம்சத் தத்துவஞானம், விஞ்ஞானங்களின் அரசி நானே என்று கோரியது. இக்கோரிக்கை அதன் முழு அளவுக்கு ஹெகலியத் தத்துவஞானத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அதனால் தான் ஹெகலிய அமைப்பு பழைய கருத்தில் புரிந்து கொள்ளப்பட்ட தத்துவஞானத்தின் பரிபூரண வடிவமாக, அதன் மகுடமாக, ஆகவே அதன் முடிவு நிலையாகக் கருதப்பட்டது.

எளிதில் நுழைய முடியாத ஆன்ம உலகங்களில் ஆட்சி செய்கின்ற “விஞ்ஞானங்களின் அரசியான’’ தத்துவஞானம் பூமிக்கு வர வேண்டிய அவசியத்தைச் சந்திக்கும் என்பதை மார்க்ஸ் தன்னுடைய மாணவப் பருவத்தின் பிற்காலத்தில் கூட முழுமையாக உணர்ந்திருந்தார். ஆனால் அந்தச் சமயத்தில் அவர் இன்னும் ஒரு கம்யூனிஸ்டு அல்லது புரட்சிகரமான ஜனநாயகவாதியாகக் கூட இருக்கவில்லை, அரசியலில் தன்னுடைய நிலையை அவர் தெளிவாக வரையறுத்துக் கொள்ளவில்லை. “உலகத்தைப்” பற்றியும் தத்துவஞானத்தை “உலகத்துடன்” இணைக்கின்ற வடிவங்களைப் பற்றியும் அவருடைய கருத்துக்கள் இன்னும் சூக்குமமாகவே இருந்தது இயற்கையே.

இதற்கு மூன்று வருடங்களுக்குப் பிறகு மார்க்ஸ் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்துக்கு விமர்சனம் முகவுரை என்ற நூலை எழுதினார். அதில் “உலகத்துடன்” தத்துவஞானத்தின் உறவைப் பற்றிய ஆய்வுரையை உலகத்தைப் பற்றிய புரட்சிகரக் கண்ணோட்டத்தின் அனைத்து முழுமையோடும் உறுதியோடும் அவர் வகுத்துக் தந்தார்.

புரட்சி “தத்துவஞானியின் மூளையில் ஆரம்பமாகிறது”, அது முதிர்ச்சியடைகின்ற முரண்பாடுகளைப் பிரதிபலிக்கிறது என்கிறார் மார்க்ஸ். ஆனால் தத்துவ விமர்சனம் என்னும் ஆயுதம் “ஆயுதங்களின் விமர்சனத்துக்கு” மாற்றீடாக முடியாது. தத்துவம் பெருந்திரளான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் பொருளாயதச் சக்தியாக மாறுகிறது.(4) ஆகவே தத்துவஞானம் பொருளாயதச் சக்தியாக மாற வேண்டுமென்றால் அது புரட்சிகரமான வர்க்கத்தின், அதாவது பாட்டாளி வர்க்கத்தின் தத்துவஞானமாகச் செயலாற்ற வேண்டும்.

“தத்துவஞானம் தன்னுடைய பொருளாயத ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்திடம் காண்பதைப் போல, பாட்டாளி வர்க்கம் தன்னுடைய ஆன்மிக ஆயுதங்களைத் தத்துவஞானத்தில் காண்கிறது. கூர்மதியுடையவரிடம் இந்த மண்ணில் சிந்தனையின் மின்னல் தாக்கிவிட்டால் ஜெர்மானியர்கள் மனிதப் பிறவிகளாக விடுதலை பெறுவது நடக்கும்.”(5)

எனினும், “அன்றைக்கிருந்த தத்துவஞானம், அதாவது ஹெகலியத் தத்துவஞானம் அகற்றப்பட வேண்டிய யதார்த்தத்தின் குறைகளைத் தன்னிடம் கொண்டிருக்கிறது. எனவே “அதை அகற்றாமல் தத்துவஞானத்தை யதார்த்தமாக்க முடியாது”(6) முந்திய தத்துவஞானம் உண்மையில் மார்க்ஸ், எங்கெல்சினால் அகற்றப்பட்டது. இந்த “அகற்றுதல்” சாதாரணமான நிராகரிப்பாக இருக்கவில்லை. அது ஒரு புரட்சியாக இருந்தது; மூலச்சிறப்பான தத்துவஞானத்தின் மொத்த அடிப்படையிலும் முதலாவதாகவும் முதன்மையாகவும் ஹெகல் மற்றும் ஃபாயர்பாஹின் பாரம்பரியத்தைக் கொண்டும் பொருள்முதல்வாத இயக்கவியல் முறை என்ற “நிபெலுங்குகளின் வாள்” தயாரிக்கப்பட்டது.

இம்முறை விஞ்ஞானக் கம்யூனிசத் தத்துவத்தில் அதன் மிகச் சிறப்பான பண்புருவத்தைப் பெற்றது. அந்த விஞ்ஞானக் கம்யூனிசம் பாட்டாளி வர்க்கத்தின் “உண்மையான போர் முழக்கமாக” மனிதகுலத்தை விடுவிப்பதற்கும் மனிதனுக்குத் தகுதியான சமூகத்தை நிர்மாணிப்பதற்கும் அது நடத்தும் போராட்டத்தில் வலிமையான ஆயுதமாக இருக்கிறது.

மார்க்சின் முன்னறிவிப்புக்கு முற்றிலும் பொருத்தமான முறையில் இருபதாம் நூற்றாண்டுப் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்பட்டிருக்கின்ற, நலிவுற்ற வர்க்கம் என்ற அதன் நிலையை அகற்றிக் கொண்டிருக்கிறது, மார்க்சியத் தத்துவஞானத்தை எதார்த்தமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

*****

நாம் இளம் மார்க்சுக்குத் திரும்பி பெர்லின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுகின்ற வரை அவருடைய ஆன்மிக வளர்ச்சியைச் சுருக்கமாகக் கூறுவோம்.

டாக்டர் பட்டத்துக்காக மார்க்ஸ் எழுதிய ஆய்வுக் கட்டுரை அவருடைய நாத்திகவாதத்தை நிரூபிக்கிறது. முரணற்ற நாத்திகவாதம் கருத்து முதல்வாதத்துடன் பொருந்தாது என்பது நமக்குத் தெரிந்ததே. அது தவிர்க்க தனது ஆய்வுக் கட்டுரையில் இன்னும் கருத்துமுதல்வாதத் தத்துவஞானப் பாரம்பரியத்துடன் முறித்துக் கொள்ளவில்லை, ஆனால் அவர் ஏற்கெனவே பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞானத்தின் பொருள்முதல்வாதத்தையும் அறிவியக்க மனிதாபிமானத்தையும் நோக்கித் தன்னுடைய கவனத்தைத் திருப்பிவிட்டார்.

ஹெகல்

மார்க்ஸ் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையைப் பிரசுரிக்கின்ற உத்தேசத்தைக் கொண்டிருந்தார், எனவே அன்றைய தணிக்கை முறையின் விளைவாக அவர் பல பிரச்சினைகளைப் பற்றி முற்றிலும் திறந்த மனத்துடன் தன் கருத்துக்களை எழுத முடியவில்லை என்பதை நினைவிலிறுத்த வேண்டும்.

மார்க்சின் ஆன்மிக வளர்ச்சி இளம் ஹெகலியவாதிகளை விஞ்சிவிட்டது. அவர் ஒரு இளம் அறிஞர், ஒரு ஆராய்ச்சி நூலைக் கூட இன்னும் வெளியிடாதவர்; எனினும் அவருடைய அறிவின் சிறப்பை இளம் ஹெகலியவாத இயக்கத்தின் மிகவும் தலைசிறந்த அறிவாளிகள் கூட அங்கீகரித்தார்கள்.

பிற்காலத்தில் “இயக்கத்திலிருந்த மோஸஸ் ஹேஸின் கருத்து இங்கே குறிப்பிடத்தக்க அக்கறையைக் கொண்டிருக்கிறது. 1841-ம் வருடத்திலேயே மோஸஸ் ஹேஸ் கட்டுரையாளராகவும் தத்துவஞானியாகவும் பிரபலமடைந்திருந்தார். அக்காலத்திலேயே அவர் ஹெகலியத் தத்துவஞானத்தைப் பிரெஞ்சு சோஷலிசத்துடன் இணைப்பதற்கு முற்றிலும் ஒத்திசைவாக இல்லாத, ஆனால் முற்றிலும் உறுதியான முயற்சியைச் செய்திருந்தார். இயேசுநாதரின் வருகையைப் போல கம்யூனிஸ்ட் புரட்சி வரப் போகிறது என்று தெளிவில்லாத, அரை மாயாவாத முறையில் பிரகடனம் செய்திருந்தார். எனினும் மோஸஸ் ஹேஸ் சமீபத்தில் பட்டம் பெற்றிருந்த கார்ல் மார்க்ஸ் தத்துவஞான வளர்ச்சியில் தன்னைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர் என்று கருதினார், மார்க்சுக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்று மதிநுட்பத்துடன் ஆரூடம் கூறினார்.

மோஸஸ் ஹேஸ் தன்னுடைய நண்பர் ஆவு யெர்பாஹுக்கு 1841 செப்டெம்பர் 2-ந் தேதியன்று எழுதிய கடிதத்தில் பின்வருமாறு எழுதினார்: “நம்முடைய நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஒருவருடன் பழகுவது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவர் பானில் வசிக்கிறார், சீக்கிரத்தில் அங்கேயே ஆசிரியராகப் போகிறார்….. இது ஒரு அசாதாரணமான நிகழ்வு என்பேன்; நானும் அதே துறையில்தான் ஈடுபட்டிருக்கிறேன் என்ற போதிலும் அவர் என்னிடம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். சுருக்கமாகச் சொல்வதென்றால் மிகச் சிறந்த, ஒருவேளை தற்பொழுது வாழ்கின்ற தத்துவஞானிகளில் ஒரே ஒரு மெய்யான தத்துவஞானியைத் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். சீக்கிரத்தில் அவர் பொது அரங்கத்தில் (புத்தகத்தின் மூலம் அல்லது மேடைச் சொற்பொழிவின் மூலம்) தோன்றும் பொழுது ஜெர்மனியின் கவனம் முழுவதையும் தன்னிடத்தில் திருப்பப் போகிறார், அவர் தன்னுடைய தத்துவஞானப் போக்கு, கல்வி இரண்டிலுமே ஷ்டிராவுசை மட்டுமின்றி ஃபாயர்பாஹையும் விட உயர்ந்தவராக இருக்கிறார் – இரண்டாவது எவ்வளவு முக்கியமானது என்பது உங்களுக்கே தெரியும் அவர் தர்க்க வியலைப் பற்றிச் சொற்பொழிவாற்றுகின்ற பொழுது நான் பானில் இருக்க முடியுமானுல் அவர் சொற்பொழிவை மிகவும் கவனமாகக் கேட்பேன்.

தற்பொழுது வாழ்கின்ற தத்துவஞானிகளில் ஒரே ஒரு மெய்யான தத்துவஞானியைத் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு நபர் என் தத்துவஞான ஆசிரியராக இருக்க வேண்டு மென்று நான் எப்பொழுதுமே விரும்பியிருக்கிறேன். மெய்யான தத்துவஞானத் துறையில் நான் எவ்வளவு சிறுதிறமாகச் செயலாற்றினேன் என்பதை இப்பொழுது உணர்கிறேன்! பொறுமை! நான் இனியும் எதையேனும் கற்றுக் கொள்ள வேண்டும் நான் போற்றுகின்ற மனிதர் டாக்டர் மார்க்ஸ் என்ற பெயருடையவர்; அவர் மிகவும் இளைஞராகவே இன்னும் இருக்கிருர் (அதிக மாகப் போனல் இருபத்து நான்கு வயதே இருக்கும்);

மத்திய கால தத்துவஞானத்துக்கும் அரசியலுக்கும் அவர் இறுதியான அடியைக் கொடுப்பார்; அவர் மிகக் கூர்மையான நகைச் சுவையை மிகவும் ஆழமான தத்துவஞானச் செறிவுடன் இணைக்கிருர் ரூஸோ, வொல்தேர், ஹோல்பாஹ், லேஸ்ஸிங், ஹேய்னெ, ஹெகல் ஆகியோர் ஒரே நபராக இணைந்திருப்பதை – இணேந்திருப்பது என்று நான் கூறினேன், கலந்திருப்பதாகச் சொல்லவில்லை – கற்பனை செய்யுங்கள். அவர்தான் டாக்டர் மார்க்ஸ்.

ஒருவேளை இன்று நமக்குக் கிடைத்திராத இளம் மார்க்சின் எழுத்துக்களை ஹேஸ் படித்திருக்கலாம் அல்லது மார்க்சுடன் நடத்திய உரையாடல்களின் அடிப்படையில் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனல் அவருடைய முன்னறிவிப்பு குறிப்பிடத்தக்க அளவுக்குத் துல்லியமாக இருந்தது. மார்க்ஸ் புரட்சிகரமான உலகக் கண்ணுேட்டத்தைப் படைப்பதற்காகத் தன்னை உள்முகமாகத் தயாரித்துக் கொண்டிருந்தார். தத்துவச் சிந்தனையின் மேதாவிலாசம் அவரிடம் வேகமாக வளர்ச்சியடைந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

குறிப்புகள்:

 • (1) Ibid., p. 44. கிரேக்கர்கள் மத்தியில் கலைக்களஞ்சியப் பரப்பைக் கொண்ட முதல் அறிவாளி டெமாக்கிரிடசே. அவர் அணுவாதத் தத்துவஞானத்தை நிறுவியவர்களில் ஒருவர். அணுக்கள், சூனியம் என்ற இரண்டு மூலத் தொடக்கங்கள் உள்ளன என்பது டெமாக்கிரீடசினுடைய கருத்தாகும். அறிதலுக்கான எல்லாப் பொருட்களையும் புலன்கள் கொடுத்த போதிலும் அவை பொருள்களைப் பற்றி “மங்கலான’ அறிவை மட்டுமே தருகின்றன. இது வேறொரு அறிவினால், “ஒளிமிக்க”, அதிக நுட்பமான அறிவினால், பகுத்தாராயும் அறிவினால் கடக்கப்படுகிறது. இந்த அறிவு அதன் ஆராய்ச்சியின் மூலம் அணுக்களையும் சூனியத்தையும் கண்டுபிடிக்கிறது.
 • (2) Ibid., pp. 468-69.
 • (3)Marx, Engels, Collected Works, Vol. 6, pp. 313, 317, 321.
 • (4)Marx, Engels, Collected Works, Vol. 3, p. 182.
 • (5)Ibid., p. 187.
 • (6) Ibid., p. 181.

* Marx/Engels, Gesamtausgabe, Bd. 1, Halbband, 2, S. 260-61.

தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

 1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
 2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
 3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
 4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
 5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
 6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
 7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
 8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
 9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
 10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
 11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க