பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! – பாகம் 2

முந்தைய பாகத்துக்கு >>

னிப்பட்ட காற்றடைத்த பைகளின் கதம்பக்கூட்டாக இல்லாமல் நமது கட்சியானது தலைவர்களின் அமைப்பாக செயல்பட்டு, தனது மையக்குழு மூலமாகப் பாட்டாளி வர்க்கப் படையை முன்னோக்கி வழிநடத்துமானால் மேலே சொன்ன அனைத்தையும் விளக்கத் தேவையில்லை.

அடுத்ததாக உள்ளதையும் குறித்துக் கொள்ள வேண்டும். இதுநாள் வரை நமது கட்சியானது தன் மீது அனுதாபம் கொண்டுள்ள யாரையும் எடுத்துக்கொள்ள அணியமாக உள்ள ஒரு விருந்தோம்பல் தன்மை வாய்ந்தத் தந்தைவழி ஆதிக்கக் குடும்பத்தை ஒத்திருந்தது. ஆனால் தற்போது நமது கட்சியோ தனது தந்தைவழி ஆதிக்கக் கூறைத் தூக்கியெறிந்து, ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பாகவும், அனைத்து அம்சங்களிலும் ஒரு கோட்டையாகவும் மாறியுள்ளது. இக்கோட்டையின் கதவுகள் மதிப்பானவர்கள் யாரோ அவர்களுக்கு மட்டுமே திறக்கப்படுகிறது என்பது நமக்கு முக்கியக்துவம் வாய்ந்ததாகும்.

பாட்டாளி வர்க்கத்தின், வர்க்க உணர்வை “தொழிற்சங்கவாதம்”, தேசியவாதம், மதவாதம் மற்றும் இதுபோன்றவற்றால் கறைப்படுத்த எதேச்சதிகாரம் முயற்சித்த போது மற்றொரு புறம் தாராளவாத அறிவுஜீவிகள் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தை ஒழித்துக்கட்டி தமது பாதுகாப்புக்கு உட்பட்ட நிலைக்கு அவர்களைக் கொண்டுவர தொடர்ந்து முயற்சித்தனர். – அச்சமயத்தில் நாம் நமது கட்சியானது ஒரு கோட்டையைப் போல, சோதிக்கப் பட்டவர்களுக்கு மட்டும்தான் தனது கதவைத் திறந்து ஏற்றுக் கொள்ளும் தன்மையுடன் திகழ்ந்தது என்பதை எப்போதும் மறக்காமல் நினைவிற்கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நாம் கட்சி உறுப்பினராவதற்கு இன்றியமையாத இரண்டு நிபந்தனைகளை (கட்சித்திட்டத்தை ஏற்பது மற்றும் கட்சி அமைப்பு ஒன்றில் செயல்படுவது) உறுதிப்படுத்துகிறோம். இதனுடன் மூன்றாவது நிபந்தனையாக அத்தகைய கட்சி உறுப்பினர் கட்சிக்கு நிதி ஆதரவு வழங்க வேண்டும் என்பதைச் சேர்த்துக் கொண்டால், பின்பு கட்சி உறுப்பினர் என்ற பட்டத்துக்கான உரிமையை ஒருவருக்குக் கொடுக்கும் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததாகிவிடும்.

எனவே, ரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் ஓர் உறுப்பினர் என்பவர் இக்கட்சியின் திட்டத்தை ஏற்றுக் கொள்பவராகவும், கட்சிக்கு நிதி ஆதரவு வழங்குபவராகவும், கட்சி அமைப்பு ஒன்றில் செயல்படுபவராகவும் இருக்க வேண்டும். தோழர் லெனின்(1) எழுதிய கட்சி விதிகளின் முதல் பத்தி இவ்வாறாக வகுக்கப்பட்டுள்ளது.

தோழர் லெனினுடன் மார்ட்டோவ்.

நமது கட்சியானது ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பேயன்றி, தனிநபர்களின் கதம்பக்கூட்டு அல்ல என்ற கொள்கையில் இருந்து இச்சூத்திரம் முழுமையாக முகிழ்த்துள்ளதை நீங்கள் காணலாம். இதில்தான் இச்சூத்திரத்தின் தலை சிறந்தத் தன்மை உள்ளது.

ஆனால் சில தோழர்களோ லெனினின் இச்சூத்திரம் ‘குறுகியதாகவும்’, ‘வசதியற்றதாகவும்’ உள்ளதென்றுச் சொல்லி நிராகரிக்கின்றனர். பின்பு அவர்கள் தாம் முன்மொழியும் சூத்திரம் குறுகியதாகவும் இல்லாமல், வசதியற்றதாகவும் இல்லாமல் சரியானதாக இருக்கும் என்றும் நம்பிக் கொள்ளச் சொல்கின்றனர். நாம் இங்கு ‘மார்ட்டோவ்’(2) அவர்களின் சூத்திரத்தை குறிப்பிடுகிறோம். அதை தற்போது பகுத்தாய்வோம்.

“இரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் என்பவர் அதன் திட்டத்தை ஏற்பவராகவும், கட்சிக்கு நிதி ஆதரவு வழங்குபவராகவும், அதன் அமைப்புகள் ஒன்றின் வழிகாட்டுதலின்கீழ் கட்சிக்கு முறையாகத் தனிப்பட்ட உதவி வழங்குபவராகவும் இருக்க வேண்டும்” என்பதே மார்ட்டோவ் அவர்களின் சூத்திரமாகும். இச்சூத்திரமானது கட்சி உறுப்பினராக இருப்பதற்கான மூன்றாவது அத்தியாவசியமான நிபந்தனையாக இருக்கும், கட்சி உறுப்பினர்கள் கட்சி அமைப்புகள் ஒன்றில் செயல்படவேண்டும் என்பதைத் தவிர்த்துவிட்டு இருப்பதையும் நீங்கள் காணலாம்.

தெளிவானதாகவும் இன்றியமையாததாகவும் உள்ள இந்நிபந்தனையை மார்ட்டோவ் மேம்போக்கானதாகக் கருதுகிறார் என்று தோன்றுகிறது. அவர் தனது சூத்திரத்தில், “கட்சி அமைப்புகள் ஒன்றின் வழிகாட்டுதலின் கீழாகத் தனிப்பட்ட உதவி” என்று தெளிவற்றதாகவும் இரண்டகமாகவும் பொருள்தரும் சொற்களைப் போட்டுள்ளார். எந்த கட்சி அமைப்பிலும் இல்லாமலே ஒருவர் கட்சி உறுப்பினராக இருக்க முடியும், (நிச்சயமாகவே ஓர் அருமையான ‘கட்சிதான்’ ) மேலும் கட்சியின் விருப்பத்துக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்ற எண்ணமும் இன்றி (நிச்சயமாகவே அருமையான “கட்சிக் கட்டுப்பாடுதான்” ) இருக்கலாம் எனத் தோன்றுகிறது. சரிதான். இவ்வாறு கட்சி அமைப்பு எதிலும் இல்லாத நபர்களை, அதிலும் கட்சிக் கட்டுப்பாட்டுக்குப் பணிந்து செல்லும் கட்டுப்பாடு பற்றிய சிந்தனையே இல்லாத நபர்களை கட்சியால் எவ்வாறு “முறையாக” இயக்க முடியும்?

படிக்க:
தேசிய கல்விக் கொள்கை – 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | இணைய வழிக் கூட்டம்
தொழில்துறைப் புரட்சி | பொருளாதாரம் கற்போம் – 62

மார்ட்டோவ் சூத்திரத்தின் அடிப்படையிலான கட்சி விதிகளின் முதலாவது பத்தியை இதே கேள்விதான் நொறுக்கித்தள்ளுகிறது. லெனினது சூத்திரமோ இதே கேள்விக்கு சிறந்த முறையில் விடையளிக்கிறது. கட்சி உறுப்பினராக ஒருவர் வரவேண்டுமெனில் மூன்றாவதாக தவிர்க்க முடியாத நிபந்தனையாக அவர் கட்சி அமைப்பு ஒன்றில் செயல்பட வேண்டும் என்று தெளிவாகவும் தனிச்சிறப்பான பாணியிலும் வரையறுக்கிறார்.

தெளிவற்றதாகவும் பொருளற்றச் சூத்திரமாகவும் உள்ள “கட்சி அமைப்புகள் ஒன்றின் வழிகாட்டுதல் கீழ் தனிப்பட்ட உதவி” என்ற மார்ட்டோவின் சூத்திரத்தை நாம் அனைவரும் தூக்கியெறிய வேண்டும். இந்நிபந்தனை நீக்கப்பட்ட பின்பு, மார்ட்டோவில் இரு நிபந்தனைகள் மட்டுமே எஞ்சியுள்ளன (திட்டத்தை ஏற்பது மற்றும் நிதி ஆதரவு). ஆனால் ஒவ்வொரு வெற்றுவாய் வீரரும் கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்டு நிதி ஆதரவு வழங்க முடியும் என்பதால் இந்நிபந்தனைகள் தாமே முற்றுமுழுதாக மதிப்பற்றவையாக உள்ளன. ஆனால் அது ஒருவருக்கு சாதாரணமாகக் கட்சி உறுப்பினர் தகுதியை வழங்கிவிடாது.

நாம் இதை ஒரு ‘வசதியான’ சூத்திரம் என்றே சொல்ல வேண்டும்!

கட்சித் திட்டத்தை வெறுமனே ஏற்றுக் கொண்டு உண்மையான கட்சி உறுப்பினர்களால் சும்மா இருக்க முடியாது, ஆனால் அவர்கள் தாம் ஏற்றுக் கொண்ட திட்டத்தை அமல்படுத்தத் தவிர்க்காமல் தீவிர முயற்சியெடுக்க வேண்டும் என்றே நாங்கள் சொல்கிறோம். நீங்கள் மிகவும் கெடுபிடியானவர்களாக உள்ளீர்கள், ஏனெனில் ஒரு கட்சி உறுப்பினர் தான் ஏற்றுக் கொண்ட கட்சித் திட்டத்தை அமல்படுத்துவது ஒன்றும் அவசியமானதல்ல என்றும் அவர் கட்சிக்கு நிதி ஆதரவு வழங்க விருப்பமாக உள்ளதைப் போன்று ஏதோ ஒன்றை செய்கிறார் என்றும் மார்ட்டோவ் விடை அளிக்கிறார். மார்ட்டோவ் சில ‘சமூக-ஜனநாயகவாத’ காற்றடைத்தப் பைகளுக்குப் பரிவு காட்டி, கட்சியின் கதவுகளை அவர்களுக்காக மூட விரும்பாமல் உள்ளதாகக் தோன்றுகிறது.

மேலும் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்றால் போராட்டம் என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது எனும்போது ஒற்றுமையின்றி போராடுவது சாத்தியமற்றது என்கிறோம். எனவே, ஒவ்வொரு வருங்கால உறுப்பினரும் கட்சி அமைப்பு ஒன்றில் இணைந்து, கட்சியின் நோக்கங்களுடன் தனது நோக்கத்தை ஒன்று கலக்க வேண்டும். இவ்வாறு கட்சியுடன் ஒத்திசைவான முறையில் செயல்பட்டுப் போராடும் பாட்டாளி வர்க்கப்படையை வழிநடத்த வேண்டும். அதாவது, ஒவ்வொரு வருங்கால உறுப்பினரும் ஒரு மையப்படுத்தப்பட்டக் கட்சியின் நன்குக் கட்டியமைக்கப்பட்ட படைப்பிரிவில் தன்னை அமைப்பாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு மார்ட்டோவ் இவ்வாறு விடையளிக்கிறார்: நன்கு கட்டியமைக்கபட்ட படைப்பிரிவில் கட்சி உறுப்பினர்கள் அமைப்பாவது மிக அத்தியாவசியமானது இல்லை; தனித்தனியே போராடுவதே போதுமானது.

நாங்கள் கேட்கிறோம், அப்படியென்றால் நமது கட்சி என்பது என்ன? திடீரென்று தோன்றும் தனிநபர்களின் கதம்பக் கூட்டா அல்லது தலைவர்களைக் கொண்ட கட்டுக்கோப்பான அமைப்பா? ஒருவேளை அது தலைவர்களின் அமைப்பாக இருந்தால், அதைச் சாராதவரையும், மேலும், அதன் விளைவாக, அதன் கட்டுப்பாட்டுக்குப் பணிந்து செயல்படுவது தனது கட்டுப்பாடான கடமை என்ற அக்கறையில்லாதவரையும் எவ்வாறு அதன் உறுப்பினராகக் கருத முடியும்? கட்சி என்பது ஒரு அமைப்பு அல்ல, அல்லது அதைவிட, அக்கட்சி என்பது ஓர் அமைப்பாக்கப்படாத அமைப்பு (நிச்சயமாகவே! நேர்த்தியான “மத்தியத்துவம்”) என்று மார்ட்டோவ் விடையளிக்கிறார்!

( தொடரும் )

அடிக்குறிப்புகள் :

(1) லெனின், புரட்சிகர சமூக-ஜனநாயகத்தின் தலைசிறந்த கோட்பாட்டாளரும், நடைமுறைத் தலைவரும் ஆவார்.
(2) மார்ட்டோவ் ‘இஸ்க்ரா’ பத்திரிக்கை ஆசிரியர்களில் ஒருவர்.

***

நூல் : ஜே. வி. ஸ்டாலின் படைப்புகள், தொகுதி ஒன்று
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்.
விலை : ரூ. 450/-
கிடைக்குமிடம் :
5/1 ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089.
தொடர்பு : 98417 75112.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க