மார்க்ஸ் பிறந்தார்

மார்க்ஸ் பிறந்தார் – 16
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

  1. உண்மையான போர் முழக்கத்தைத் தேடல்

…..நாம் ஒரு புதிய கொள்கையுடன், இதுதான் உண்மை, இதற்கு முன்னால் மண்டியிடுங்கள் என்று வறட்டுக் கோட்பாட்டுத்தனமான முறையில் உலகத்தை நோக்கிச் சொல்லவில்லை. உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம். – கார்ல் மார்க்ஸ்(1)

வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தை விரித்துரைப்பதை நோக்கி மார்க்ஸ் எந்த வழிகளில் முன்னேறினார்?

மார்க்ஸ் 1842-ம் வருடத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய கட்டுரைகளில் ஒன்றில் நாத்திகவாதம், பொருள்முதல்வாதம், மனிதாபிமானத்தின் அகத்தூண்டுதலான அறிவிப்பாளரான லுத்விக் ஃபாயர்பாஹை “நம் காலத்தின் பாவம் போக்குமிடம்”, சுதந்திரம் மற்றும் உண்மைக்குப் பாதையில் இருக்கின்ற “நெருப்பு ஆறு” என்று பிரகடனம் செய்தார்.(2)

அவர் “ஊக முறையில் சிந்திக்கின்ற இறையியலாளர்களுக்கும் தத்துவஞானிகளுக்கும்”, அதாவது இறையியலாளர்களுக்கும் கருத்துமுதல்வாதிகளுக்கும் பின்வரும் வேண்டுகோளை விடுத்தார்: “விஷயங்கள் யதார்த்தத்தில் மெய்யாக எப்படி இருக்கின்றன என்பதை நீங்கள் அறிய விரும்பினால் பழைய ஊக முறைத் தத்துவஞானத்தின் கருத்தமைப்புகள் மற்றும் தப்பெண்ணங்களிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.”(3)

லுத்விக் ஃபாயர்பாஹ்

லுட்விக் ஃபாயர்பாஹ் எழுதிய கிறிஸ்துவ சமயத்தின் சாராம்சம் என்ற நூலை மார்க்ஸ் 1841-ம் வருடத்தின் கோடைகாலத்தின் போது படித்தார். அந்தச் சமயத்தில் இளம் ஹெகலியவாதிகள் மீது இந்நூல் ஏற்படுத்திய தாக்கத்தை எங்கெல்ஸ் அழகாக வர்ணித்துள்ளார். இளம் ஹெகலியவாதிகள் சிக்கிக் கொண்டிருந்த எல்லா முரண்பாடுகளையும் இந்நூல் “ஒரேயொரு அடியில்” ஒழித்து பொருள்முதல்வாதத்தின் வெற்றியை நேரடியாகப் பிரகடனம் செய்தது. “எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை. அதன் அடித்தளத்திலே தான் மனித இனத்தவராகிய நாம் – நாமும் இயற்கையின் உற்பத்திப் பொருட்கள்தாம் – வளர்ந்து வந்திருக்கிறோம். இயற்கைக்கும் மனிதனுக்கும் அப்பாற்பட்டதாய் எதுவும் இல்லை.

நம்முடைய சமய வழிப்பட்ட கற்பனைகள் படைத்துள்ள கடவுளர்கள் எனப்பட்டவர்கள் நம் சாராம்சத்தின் விசித்திரமான பிரதிபலிப்பே ஆகும். மந்திரம் என்பது உடைத்தெறியப்பட்டது; ‘அமைப்புமுறை’ தகர்க்கப்பட்டு விட்டது; முரண்பாடு என்பது நம் கற்பனையில் மட்டுமே இருப்பது என்று காட்டப்பட்டுக் கலைக்கப்பட்டது. அறிவுக்கு விடுதலை அளிப்பது போன்ற இந்நூலின் பாதிப்பை அனுபவித்தவர்களுக்குத்தான் அதைக் கற்பனை செய்து பார்க்க முடியும். எங்கும் உற்சாகம் கரைபுரண்டோடியது: நாங்கள் அனைவரும் உடனே ஃபாயர்பாஹ் வாதிகளாகிவிட்டோம்.”(4)

இந்தப் பகுதியை எங்கெல்ஸ் உணர்ச்சியுடன் எழுதியிருக்கிறார். ஆனால் மார்க்ஸ் ஃபாயர்பாஹை ஒரு முறை படித்தவுடனே முன்னாள் கருத்துமுதல்வாதியும் இளம் ஹெகலியவாதியும் குட்டிக்கரணம் போட்டுப் பொருள் முதல்வாதியாகிவிட்டார் என்று சொல்கின்ற முறையில் மேற்கூறிய பகுதியை மார்க்சின் ஆன்மிக வளர்ச்சிக்கு மிகை எளிமையான முறையில் கையாளக் கூடாது.

மார்க்ஸ் தன்னுடைய இளமைப் பருவத்தில் கூட மிகவும் ஆழமான, சுதந்திரமான சிந்தனையாளராக இருந்தபடியால் அவருடைய அடிப்படையான தத்துவ நம்பிக்கைகளில் மாற்றத்தைத் திடீரென்று ஏற்பட்டதாகவோ அல்லது முற்றிலும் அந்நியத் தாக்கத்தினால் ஏற்பட்டதாகவோ கருதிவிட முடியாது.

மார்க்ஸ் பிறந்தார்புதிய கோட்பாடுகளை – அவை நம்பக் கூடிய விதத்திலும் அகத்தூண்டுதலான முறையிலும் விளக்கப்பட்டாலும் கூட – உடனடியாக நம்பிக்கையின் பேரில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற நபர்களில் மார்க்ஸ் ஒருவர் அல்ல. மெய்யான தத்துவ விஞ்ஞானியைப் போல அவர் “மற்றவர்களுடைய” நம்பிக்கைகளை இரவல் பெறவில்லை; தன்னுடைய சொந்த நம்பிக்கைகளைப் படைப்பதற்கு அவற்றை அடிப்படையாகப் பயன்படுத்தினார்.

அவர் ஒரு புதிய தத்துவக் கருத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு தன்னுடைய விமர்சனச் சிந்தனை – அது அதனிடத்தும் இரக்கமில்லாதது – என்ற சோதனைக்கு உட்படுத்துவார். மேலும் புதிய கோட்பாடுகளைப் பழையவற்றோடு அப்படியே “சேர்த்துக் கொள்ளமாட்டார்”. திரட்டப்பட்ட மொத்த ஆன்மிகச் செல்வத்தையும் மறுமதிப்பீடு செய்வார். உலகக் கண்ணோட்டத்தின் மொத்த அமைப்பில் அவை தமக்குரிய இடத்தை அடைய வேண்டும். அவை முற்றிலும் “பொருந்தியிருக்க வேண்டும்” என்பதற்காக அமைப்பும் கோட்பாடுகளும் மறுபடியும் திருத்தியமைக்கப்படும்.

ஒவ்வொரு சிந்தனைச் சாயலுக்கும் – மிகவும் அற்பமானவற்றுக்கும் கூட – இத்தகைய அணுகுமுறை மார்க்சின் குறியடையாளமாக இருந்தது. எனவே அவருடைய தத்துவஞான நம்பிக்கைகளில் மிகவும் முக்கியமான திருப்புமுனையை மதிப்பீடு செய்கின்ற பொழுது இதை நினைவிலிறுத்துவது இன்னும் அவசியமானதாகும்.

மார்க்ஸ் பொருள்முதல்வாதத்தை அடைந்த பாதை எளிமையாக இருக்கவில்லை. அதில் தீர்மானமான பாத்திரத்தை வகித்தவர் ஃபாயர் பாஹ் மட்டுமே என்றும் கூறிவிட முடியாது. மார்க்ஸ் ஒரு நீண்ட, பல்தொகுதியான ஆன்மிக வளர்ச்சியின் மூலமாகவும் முற்காலத்திய அனைத்துத் தத்துவஞானக் கலாச்சாரத்தின் சாதனைகளையும் விமர்சன ரீதியாகத் தன்வயப்படுத்திக் கொள்வதன் மூலமாகவும் மதம் சார்ந்த உலகக் கண்ணோட்டத்துடன் போர் தொடுத்தும் ஹெகலின் கம்பீரமான அமைப்புடன் – முதலில் அதை நவீனப்படுத்துகின்ற நோக்கத்துடனும் பிறகு அதை முறியடிக்கின்ற நோக்கத்துடனும் – தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாகவும் பொருள்முதல்வாதத்தை நோக்கி முன்னேறினார்.

ஹெகலியத் தத்துவஞானத்தின் “ஊக இயல்புடன்” அதிருப்தி, தத்துவஞானத்துக்கும் “உலகத்துக்கும்” இடையில் இன்னும் நெருக்கமான இணைப்பைத் தேடல், தன்னுடைய நாத்திக நம்பிக்கைகளுக்கு முரணில்லாத் தத்துவ அடிப்படையைத் தேடல் – இவை அனைத்தும் ஏற்கெனவே டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில் மார்க்ஸ் பொருள்முதல்வாதத்தை நோக்கித் தன்னுடைய கவனத்தைத் திருப்பும்படி செய்தன. எனினும் இங்கே பண்டைக்கால கிரேக்கப் பொருள்முதல்வாதத்திடம் அவர் காட்டிய அனுதாபம் இன்னும் தத்துவ ரீதியில் நிறுவப்படவில்லை.

ஃபாயர்பாஹ் எழுதிய கிறிஸ்துவ சமயத்தின் சாராம்சம் என்ற நூலும் மற்ற புத்தகங்களும் மார்க்சின் சிந்தனை ஏற்கெனவே முன்னேறிக் கொண்டிருந்த திசையில் கூடுதலான, வன்மையான தூண்டுதல்களாக இருந்தன என்பதில் ஐயமில்லை.

ஆனால் Rheinische Zeitung பத்திரிகையில் மார்க்சின் தீவிரமான கட்டுரைப் பணிகள், ஒடுக்கப்பட்ட மக்களைத் தீவிரமாக ஆதரிப்பவர் என்ற முறையில் அவர் மேற்கொண்ட நிலை, அரசியல் மற்றும் சமூக சக்திகள், வர்க்க விருப்பார்வங்கள் மற்றும் பொருளாயத நலன்களின் சிக்கலான மோதலையும் இடைச் செயலையும் புரிந்து கொள்ள வேண்டுமென்ற அவருடைய விருப்பம் ஆகியவையே இத்திசையில் அவர் முன்னேறுவதற்கு மிகப் பெரிய தூண்டுதலாக ஒருக்கால் இருந்திருக்கக் கூடும்.

இதில் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானம் எப்படிச் சிறிதளவும் உதவவில்லையோ அப்படியே ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதமும் உதவவில்லை. மார்க்ஸ் எல்லாவற்றுக்கும் மேலாக எந்தத் துறையைப் பகுப்பாய்வு செய்வதற்கு விரும்பினாரோ அந்தத் துறையில், சமூக உறவுகள் துறையில் ஃபாயர்பாஹ் ஒரு கருத்துமுதல்வாதியாகவே இருந்தார். இங்கே அவர் ஹெகலுக்கும் தாழ்ந்தவராகவே இருந்தார்.

சமூக உறவுகளைப் பற்றிய விளக்கத்தை நோக்கிச் சென்ற மார்க்சின் சிந்தனை உண்மையின் மணிகளை எப்படிப் பொறுக்கியெடுத்தது என்பதை ஆராய்வது சுவாரசியமானதாகும்.

“பொருளின் மொழியில்” பேசுவது, “ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அதன் சாராம்சத் தன்மைக்கு ஏற்ப(5) புரிந்து கொள்வது அவசியம், பொருள்கள் “அவை மெய்யாகவே இருக்கின்ற முறையில்”(6) புரிந்து கொள்வதில்தான் உண்மை இருக்கிறது என்று மார்க்ஸ் 1842ம் வருடத்தின் தொடக்கத்தில் எழுதினார்.

இக்கூற்றுகளில் பொருள்முதல்வாதப் போக்கு அடங்கியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது மிகவும் சூக்குமமான வடிவத்தில்தான் இருக்கிறது, மேலும் அது சமூகப் பிரச்சினைகளைத் தொடவில்லை.

மார்க்ஸ் 1842ம் வருடத்தின் இலையுதிர் காலத்தில் விறகு திருடப்படுவதைப் பற்றிய கட்டுரையை எழுதிய பொழுது உடைமைக்கும் சட்டத்துக்கும் இடையிலுள்ள உறவைப் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். தனிச் சொத்துடைமை தனிநபர் மீது அதிகாரம் செலுத்துகின்ற உரிமையை, உடைமை இல்லாதவர்கள் மீது சட்டவியல் மற்றும் அரசு-நிர்வாக அதிகாரங்களைப் பிரயோகிக்கின்ற உரிமையைக் கொடுப்பதால் அரசியல் மற்றும் சட்டவியல் அமைப்புகளை நிர்ணயிக்கின்ற காரணி அது தானா? இதற்கு ஆமாம் என்பதே பதில் என்பது வெளிப்படையாகத் தோன்றினாலும் மார்க்ஸ் இன்னும் அதை வெளிப்படையாக வகுத்தளிக்கவில்லை.

1843ம் வருடத்தின் ஆரம்பத்தில் மார்க்ஸ் சமூக உறவுகளின் பொறியமைவைப் பற்றிய உண்மையான விளக்கத்தை இன்னும் திட்டவட்டமான முறையில் நெருங்குகிறார். மோஸெல் பிராந்தியத்தின் திராட்சை பயிரிடுபவர்களை ஆதரித்து எழுதுகின்ற பொழுது சமூக அநீதிகள் தனிப்பட்ட நபர்களுடைய நடவடிக்கைகளினால் ஏற்படவில்லை, இந்த நபர்கள் “தம் காலத்திய உறவுகளின் கொடுமைகள் அனைத்தின்” உருவகமாக இருக்கிறார்கள், இந்த உறவுகள் “பொதுவான பார்க்கவியலாத மற்றும் நிர்ப்பந்திக்கின்ற சக்திகள்”(7) என்று மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார்.

தனிப்பட்ட நபர்களின் சித்தத்துக்கும் “சுவாசித்தலுக்கும்” சம்பந்தமில்லாததைப் போலவே இந்த உறவுகளும் சுதந்திரமானவை. நாம் அதிகாரிகளின் தரப்பில் அல்லது ஏழை மக்களின் தரப்பில் நல்லெண்ணம் அல்லது தீய எண்ணத்தைத் தேடக் கூடாது, ஆனால் “புறநிலை உறவுகளின் விளைவுகளைக் காண வேண்டும்”.(8)

இரசாயன விஞ்ஞானி இரசாயனப் பொருட்களுக்கிடையில் நடைபெறுகின்ற “மோதல்களை” எவ்வளவு துல்லியமாக நிர்ணயிக்க முடியுமோ அப்படி உத்தேசமாகவாவது சிக்கலான சமூக மோதல்களைப் புரிந்து கொள்வதற்கு இத்தகைய அணுகுமுறை உதவும் என்ற கருத்துக்கு மார்க்ஸ் வந்து கொண்டிருக்கிறார். “இருக்கின்ற உறவுகள் ஒரு நிகழ்வை அவசியப்படுத்துகின்றன என்பதை நிரூபித்து விட்டால் எத்தகைய வெளிப்புற சந்தர்ப்பங்கள் அதை மெய்யாகவே தயாரிக்கின்றன என்பதையும் ஏற்கெனவே அது தேவையாக இருந்தாலும் அதைத் தயாரிக்க முடியாதிருக்கின்ற சந்தர்ப்பங்களையும் கண்டறிவது இனியும் கஷ்டமான காரியம் அல்ல.”(9)

பத்திரிகைச் சுதந்திரம் இல்லாதிருப்பது சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பெரிய தடை என்பதை மார்க்ஸ் சிறிது காலத்துக்கு முன்பு கண்டார் என்றால் இப்பொழுது அவர் புதிதாக ஏற்றுக்கொண்டுள்ள பொருள்முதல்வாத அணுகுமுறைக்கு ஏற்றபடி மோஸெல் பிராந்தியத்தின் துன்பகரமான நிலைமையின் பிரத்யேகத் தன்மையிலிருந்து பத்திரிகைச் சுதந்திரத்தின் அவசியம் பிறக்கிறது என்று எடுத்துரைக்கிறார்.(10)

இப்பொருள்முதல்வாத நிலையிலிருந்து மார்க்ஸ் ஹெகலின் “பல கடவுளைக் கொண்ட இறைஞானத்தை” விமர்சித்தார்; அங்கே “சிந்தனை அரசின் தன்மையுடன் பொருந்துவதில்லை, ஆனால் அரசு முன்னரே தயாரிக்கப்பட்ட சிந்தனை முறையுடன் பொருந்துகிறது.”(11) பல்வேறு வடிவங்களைப் பெறுகின்ற அரசின் உள்ளடக்கத்தை அதன் மூலமாக, “அரசு என்ற கருத்தின் மூலமாக” விளக்கமளிக்கக் கூடாது, ஆனால் குடும்பம் மற்றும் “சிவில் சமூகம்” என்ற பொருளாயத உறவுகளின் துறையிலிருந்து விளக்கமளிக்க வேண்டும் என்று மார்க்ஸ் வலியுறுத்துகிறார்.

சமூக உறவுகளை விளக்கக் கூடிய, நெடுங்காலமாகத் தேடப்பட்ட திறவுகோல் அகப்பட்டுவிட்டது. ஹெகல், ஃபாயர்பாஹ் ஆகிய இருவருடனும் ஒப்பிடுகின்ற பொழுது மாபெரும் காலடி முன்னே எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றும். சமூக சக்திகள், அகநிலையான விருப்பார்வங்கள், தனிப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் கருத்துக்களின் போராட்டம் என்ற குழப்பத்துக்கு நடுவில் புறநிலையான தர்க்கவியலின் விளிம்புகளை மார்க்சின் கண்கள் பார்க்கத் தொடங்கிவிட்டன.

ஆனால் அவை விளிம்புகள் மட்டுமே; அதன் உருவரைகள் தெளிவில்லாதவை, திட்டவட்டமாக இல்லாதவை. மக்களுடைய வறுமைக்குக் காரணம் புறநிலையான உறவுகளில் இருக்கின்றது என்று அவர்களிடம் கூறுவது போதுமானதல்ல, அவற்றின் இயல்பையும் வெளிப்படுத்த வேண்டும், சுதந்திரத்துக்கு வழியைச் சுட்டிக்காட்ட வேண்டும், “உண்மையான போர் முழக்கத்தைக்” கொடுக்க வேண்டும். இப்போர் முழக்கம் என்றால் என்ன? “ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினர்” ஆதாரமாகக் கொள்ள வேண்டிய சக்தி எங்கே இருக்கிறது?

மார்க்சின் அறிவு சமூகப் பிரச்சினைகளை விளக்குகின்ற கடமையுடன் தொடர்ந்து போராடுகிறது; ஆனல் ஒரு “உச்சவரம்பு” தடுக்கிறது. அரசியல் பொருளாதாரம், வரலாறு மற்றும் சமூக உறவுகளின் தத்துவம் ஆகிய துறையில், கற்பனாவாத சோஷலிஸ்டுகள் மற்றும் கற்பனாவாதக் கம்யூனிசத்தின் பிரதிநிதிகளுடைய போதனைத் துறையில் அறிவில் இடைவெளிகள் இருப்பதை உணர்கிறார்.

குறிப்புகள்:

(1) Ibid., p. 144.
(2) ஜெர்மன் மொழியில் “ஃபாயர்பாஹ்” என்ற சொல்லை “ஃபாயர்” (நெருப்பு), பாஹ் (ஆறு) என்று பிரிக்க முடியும். மார்க்ஸ் இச்சொல்லின் நேர்ப் பொருளை இங்கே சிலேடையாகக் கையாள்கிறார்.
(3) Marx, Engels, Werke, Bd. 1, Berlin, 1969, S. 27.
(4) பிரெடெரிக் எங்கெல்ஸ், லுத்விக் ஃபாயர்பாகும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும், முன் னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1977, பக்கங்கள் 25-26.
(5) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 113.
(6)Marx, Engels, Werke, Bd. 1, S. 27.
(7) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 354.
(8) Ibid., p. 337
(9) Ibid.
(10) Ibid.
(11) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 19.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க