மார்க்ஸ் பிறந்தார் – 27
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

  1. மூலதனத்தின்தத்துவஞானம் – பாகம் 2

றிதலைப் பற்றிய இயக்கவியல் முறையை மார்க்சுக்கு நெடுங்காலத்துக்கு முன்பே பல தத்துவஞானிகள் வளர்த்துக் கூறினார்கள். “இயக்கவியல்” என்ற சொல் இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனையின் உண்மையான நிகழ்வுப் போக்குகளின் முரண்பாடான தன்மையை, நெகிழ்வுத் தன்மையை, எதிர்நிலைகளின் ஒருமை மற்றும் மோதலின் மூலமாக எளிமையானவற்றிலிருந்து சிக்கலானவற்றுக்கு மாறிய வளர்ச்சியைக் குறிக்கிறது.

முதல் பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞானிகளான ஹெரக்லீடஸ், அனாக்ஸகோரஸ், பார்மெனீடஸ், ஸெனோன், டெமாக்கிரீடஸ், சாக்ரடீஸ் மற்றும் பிளாட்டோ திறமை மிக்க இயக்கவியல்வாதிகளாக இருந்தனர். அவர்கள்தான் இயக்கவியலை உணர்வு பூர்வமாகக் கையாளப்படுகின்ற சிந்தனை முறையாக, நம்மைச் சுற்றிலுமுள்ள உலகத்தை அறிவதற்குரிய முறையாக மாற்றினார்கள். அவர்களுடைய மதிநுட்பம் நிறைந்த தத்துவஞானக் கருத்துக்கள் தம்முடைய முக்கியத்துவத்தை, இக்காலத்துக்குத் தம்முடைய ஒட்டுறவை இழக்கவில்லை. பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞானிகள் மிக முக்கியமான, சர்வாம்சமான காரண காரிய உறவுகளை உள்ளுணர்ச்சியின் மூலம் புரிந்து கொண்டு பிரபஞ்சத்தைப் பற்றிய ஒருங்கிணைந்த சித்திரத்தைத் தந்தார்கள்.

சாக்ரடீஸ்

அவர்கள் விவரங்களின் உலகத்துக்குள் ஆழமாகப் போவதில்லை – இதில்தான் பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞானத்தின் குறை அடங்கியிருக்கிறது. இதன் காரணமாகவே அத்தத்துவ ஞானம் பிற்காலத்தில் மற்ற கண்ணோட்டங்களுக்கு இடமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் எங்கெல்ஸ் வலியுறுத்தியதைப் போல சில வரையறுக்கப்பட்ட கருத்தமைப்புகளுடன் இயற்கை விஞ்ஞானங்கள் இன்றளவிலும் கூட இவற்றை முழுமையாக அகற்றிவிடவில்லை – ஒப்பிடுகின்ற பொழுது அதன் உயர்வும் இதில் தான் அடங்கியிருக்கிறது.

பண்டைக்காலத் தத்துவஞானம் ஒரு வளர்ச்சியடைந்த, இயக்கவியல் ரீதியில் நெகிழ்ச்சியான கருத்தமைப்புகள் மற்றும் கருத்தினங்கள் என்ற அமைப்பை நமக்குத் தந்திருக்கிறது, உலகத்தை விளக்குவதற்கும் புரிந்து கொள்வதற்கும் இந்த அமைப்பு இன்றும் வெற்றிகரமாக உபயோகிக்கப்படுகிறது. அதன் பிரதிநிதிகள் பல துணிகரமான, மதிநுட்பமிக்க கருதுகோள்களைக் கூறினார்கள்; இவை பிற்காலத்தில் பரிசோதனையின் மூலம் விஞ்ஞான ரீதியாக நிறுவப்பட்டிருக்கின்றன.

பண்டைக்கால கிரேக்கத்துக்குப் பக்கத்தில் மார்க்சுக்கு முந்திய இயக்கவியலின் மற்றொரு வடிவத்தை, மூலச்சிறப்புடைய ஜெர்மன் தத்துவஞானத்தின் இயக்கவியலை – அது இயற்கை விஞ்ஞானத்துக்கு உபயோகமாக இருந்தது – எங்கெல்ஸ் சுட்டிக்காட்டினார். அந்த இயக்கவியல் ஹெகலின் தத்துவஞானத்தில் தன்னுடைய சிகரத்தை எட்டியது.

ஹெகல் ஒன்றிலிருந்து மற்றொன்று வளர்ச்சியடைகின்ற, ஒன்றோடொன்று மோதுகின்ற கருத்துக்களின் தற்சிந்தனையான அமைப்பை உருவாக்கினார். அவை இந்த வளர்ச்சியிலும் போராட்டத்திலும் இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனையின் எல்லா நிகழ்வுகளையும் தோற்றுவிக்கின்றன என்று அவர் கூறினார். அவர் யதார்த்தத்தைத் தலைகீழாகத் திருப்பியதைப் போலச் சிந்தித்தார். கருத்துக்கள், கருத்தமைப்புகள் மற்றும் தர்க்க ரீதியான கருத்தினங்கள் உலகத்தைப் பிரதிபலிக்கவில்லை, அவையே உலகத்தைப் படைக்கின்றன என்று கருதினார். இதன் விளைவாக ஹெகல் தன்னுடைய தத்துவஞானத்தை அநேகமாகப் படைப்பின் சிகரமாகவே கருதினார், ஏனென்றால் அது இறுதி நிலையான, தனிமுதலான உண்மையை எட்டுகிறது என்றார்.

ஹெகலியத் தத்துவஞானத்தின் கருத்துமுதல்வாதமும் வரையறைகளும் எப்படி இருந்தாலும் உலகத்தைப் பற்றிய விளக்கத்தில் அது முன்னே எடுத்து வைக்கப்பட்ட மாபெரும் காலடியாக இருந்தது.

படிக்க:
துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
♦ மார்க்சியம் ஒரு மனிதரின் பெயரில் இருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பணியாகும்

ஹெகல் தத்துவஞானம், கலை, இயற்கை விஞ்ஞானத்தில் மனிதனுடைய சாதனைகள் அனைத்தையும் தொகுத்துரைப்பதற்குக் குறிப்பிடத்தக்க முயற்சி செய்தது அவருடைய மிகச் சிறப்பான அம்சமாகும். அவர் இயற்கை, வரலாற்று, ஆன்மிக உலகம் முழுவதையுமே தொடர்ச்சியான மாற்றம், மாற்றியமைக்கப்படுதல் மற்றும் வளர்ச்சி என்ற வடிவத்தில் பிரதிநிதித்துவம் செய்தார். இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனை அதே இயக்கவியல் கோட்பாடுகளில் உறைந்திருப்பது அறியப்பட்டது. மனிதகுலச் சிந்தனையின் வரலாற்றில் இத்தகைய கம்பீரமான, அனைத்தையும் தழுவிய அமைப்பு ஒருபோதும் படைக்கப்படவில்லை.

இருக்கின்ற அனைத்துமே எளிமையானவற்றிலிருந்து பல்தொகுதியானவைக்கு, பகுதியிலிருந்து முழுமைக்கு வளர்ச்சியடைந்த பாதையையும் அதன் பொறியமைவையும் வெளிப்படுத்தியது அவருடைய மாபெரும் சாதனையாகும். அவர் இதைச் சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றை நோக்கிய முன்னேற்றத்தின் முறை என்று கூறினார். அது அவருடைய இயக்கவியலின் எல்லா அம்சங்களையும் விதிகளையும் கூறுகளையும் கொண்டிருக்கிறது. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேறுகின்ற ஹெகலிய முறையின் உதவியினால் புறப்பொருள் என்பது இடைச்செயல் விளைவினைக் கொண்டது மட்டுமல்ல, அது வரலாற்று ரீதியில் வளர்ச்சியடைந்து, முன்னேற்றமடைந்து கொண்டிருப்பதென்று எடுத்துக்காட்டப்பட்டது.

ஹெகலின் “சுத்தமான” உய்த்துணர்தலில் கருத்தினங்கள் ஒன்றுக்குள்ளிருந்து மற்றொன்று வருவிக்கப்படுகின்றன, இது உலக வரலாற்றின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு இணையாகச் செல்கிறது. உண்மையான நிலைமை இறையியல் தன்மையுடன் தலைகீழாக்கப்பட்டது, அதன் விளைவாக முழுமையான சிந்தனை என்பது ஹெகலிடம் உண்மையான வரலாற்றைப் படைக்கின்ற செயலாக இருந்தபோதிலும் இந்தச் சிந்தனை முறை வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தின், சமூக நிகழ்வுப் போக்குகள், நிகழ்வுகள் மற்றும் அவற்றின் தத்துவ ரீதியான மாதிரிப்படிவத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்கு விஞ்ஞான ரீதியான அணுகுமுறையின் முன்நிபந்தனையைக் கொண்டிருந்தது.

இதற்குப் பிறகு என்ன நடைபெற்றது? ஒருவர் இந்த முறையை முழுமையாகக் கற்றுக் கொண்டு அதை உபயோகிக்கத் தெரிந்திருந்தால் போதும்; அவர் விஞ்ஞானத்தின் ஸ்தூலமான துறைகள் எல்லாவற்றிலுமுள்ள மிகச் சிக்கலான தத்துவ ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவி செய்யக் கூடிய அறிவின் வன்மையான ஆயுதத்தைக் கொண்டவராகிறார் என்று தோன்றியது, இல்லையா?

ஆனால் ஹெகலியத் தத்துவஞானத்தின் மாபெரும் சாதனையான இயக்கவியல் உபயோகிக்கப்படாமற் கிடந்தது விசித்திரமே. ஹெகலின் வாழ்நாளிலும் அவர் மரணமடைந்து நெடுங்காலம் வரையிலும் அது எவ்விதத்திலும் உபயோகிக்கப்படவில்லை. ஹெகலிய இயக்கவியல் முறையைக் கையாள்வதற்கு ஒருவர் கூட முயற்சி செய்யவில்லை. அது விமர்சனத்துக்கு உட்படுத்தப்படவில்லை, அதை அப்படியே மறந்து விட்டார்கள். ஹெகலிய “டயடோஹிகள்”(5) அலெக்சாந்தர் மாசிடோனின் வாரிசுகளைப் போலவே தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மகத்தான பாரம்பரியத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அணுவளவு கூட ஒன்றும் தெரிந்திராமல் தமக்கிடையே அற்பமான சச்சரவு செய்து கொண்டார்கள்.

இதன் காரணம் என்ன? அதற்குப் பிரதானமான காரணம் அந்த முறையிலிருந்த குறைகள் எனத் தோன்றுகிறது. சந்ததியினருக்கு விட்டுச் செல்லப்பட்ட வடிவத்தில் அதைப் பயன்படுத்த முடியாது. அது இயக்கமறுப்பியல் சூக்குமக் கருத்தாக்கங்கள் என்ற செயற்கையான, போலியான சூழ்நிலையில் வளர்க்கப்பட்டிருந்தது. தனக்குள்ளாகவே தன்னுடைய வளர்ச்சியை முடித்துக் கொண்டிருந்த கருத்து முதல்வாதத் தத்துவஞான அமைப்பின் தேவைகளுக்கு மட்டுமே அது தகுதியாக இருந்தது.

ஹெகல் தன்னுடைய தத்துவஞானத்தில் உலகத்தைத் தலைகீழாகத் திருப்பிவைத்திருந்தார், அது அந்த ஆபத்தான நிலைமையிலேயே நின்று கொண்டிருந்தது, முன்னே போக முடியவில்லை. இப்படி ஆடிக்கொண்டிருக்கும் அடிப்படையின் மீது இயக்கவியல் முறை வளர்ச்சியடைய முடியவில்லை.

தத்துவஞானம் தனிமுதலான கருத்துமுதல்வாதம் என்ற ஹெகலிய அமைப்பை முன்வைத்த பொழுது அது செய்ய வேண்டிய அனைத்தையும் ஏற்கெனவே நிறைவேற்றிவிட்டது. அது அறியக் கூடிய அனைத்தையும் ஏற்கெனவே அறிந்துவிட்டது. அது சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டது. தனிமுதலான உண்மை அறியப்பட்டுவிட்டது.

பூமி சூரியனைச் சுற்றிச் சுழல்வதை நிறுத்திக் கொள்ளலாம். நட்சத்திரங்கள் பிரகாசிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். மனிதகுலம் யுத்தங்களையும் புரட்சிகளையும், ஆர்வங்களையும் அக்கறைகளையும் கைவிட்டு துணிகரமான ஜெர்மானியச் சிந்தனையின் சாதனைகளை நிரந்தரமாகப் போற்றிக் கொண்டு மெய்மறந்திருக்கலாம். இனிமேல் கண்டுபிடிப்பதற்கு ஒன்றுமில்லை. போவதற்கும் ஒரு இடமுமில்லை. இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனையின் மொத்த வரலாற்று இயக்கத்தின் மகுடமும் இலட்சியமும் ஹெகலியத் தத்துவஞானம்தான்.

இயக்கவியல் முறையை அறிவின் மற்ற துறைகளுக்குக் கையாள்வதைப் பற்றிய பிரச்சினையே பழமைவாத ஹெகலியவாதிகளுக்கு அபச்சாரமாகத் தோன்றியது.

கருத்துமுதல்வாத மேல் ஓட்டைக் கைவிடுகின்ற பிரச்சினை மட்டுமல்ல அது. இயக்கவியலுக்குக் கருத்துமுதல்வாதம் ஏதோ வெளியிலுள்ள ஒன்றல்ல. ஏனென்றால் அந்தக் கருத்து முதல்வாதத்தின் மடியில்தான் இயக்கவியல் வளர்ந்தது. அது தன்னுடைய மரண முத்திரையை இயக்கவியலிடம் விட்டுச் சென்றிருந்தது, அதன் நோய்கள், பலவீனங்களினால் இயக்கவியல் நலிவடைந்தது.

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல, ஹெகலியத் தத்துவஞானம் தனிமுதலான, இறுதியான உண்மைக்கு உரிமை கொண்டாடிய பொழுது அது இயக்கவியலை முரட்டுத்தனமாக நிராகரித்தது. அதன் உரிமைகள் சிந்தனைத் துறைக்கு மட்டுமே குறுக்கப்பட்டிருந்தன. இயற்கை மற்றும் சமூகத்தைப் பொறுத்தமட்டில் மிக அதிகமான நிலையில் கூட இயக்கவியலின் சூசகம் மட்டுமே, அக்காலத்திலிருந்த தனிப்பட்ட இயற்கை விஞ்ஞானங்களின் சாதனைகளில் இயக்கவியல் தோற்றமளித்த அளவுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.

இது அதற்குரிய தர்க்கவியலைக் கொண்டிருந்தது. பருப்பொருள் அறிதலின் மறு வாழ்நிலை மட்டுமேயானால் (பருப்பொருளை அறிதல் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயக்கவியல் வரை முன்னேறவில்லை) பருப்பொருள் வளர்ச்சியடைந்த இயக்கவியலுக்கு அடிப்படையில் அந்நியப்படுகிறது என்று அர்த்தம், ஆகவே அதில் இயக்கவியலைத் தேடுவதில் பயனில்லை. எனவே மேலும் தத்துவ ரீதியில் தேடலுக்குரிய பாதை அநேகமாக மூடப்பட்டுவிட்டது, சிந்தனை சுய திருப்தியடைந்து ஓய்வெடுத்துக் கொண்டது. ஹெகலினுடைய தத்துவஞான அமைப்பின் எல்லைகளுக்கு அப்பால் இயக்கவியல் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை, அது தன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்துவிட்டது.

“தூய சிந்தனைத்” துறையில் கூட கருத்து முதல்வாதம் ஹெகலிய இயக்கவியல் முறையைப் பாதித்தது. அவருடைய கருத்தினங்களின் முக்காலிகள் பெரும்பாலும் தன்னிச்சையானவை என்பதால் அவை உண்மையான தர்க்கத்துக்கும் கருத்தமைப்புகளின் உள்ளடக்கத்துக்கும் பொருந்தவில்லை. முன்னரே தயாரிக்கப்பட்ட திட்டத்துக்குள் அடக்குவதற்காக ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்துக்கு வலிந்து பெறப்பட்ட மாற்றங்கள் ஏட்டுப்புலமை மற்றும் மாயாவாதத்தை மிகவும் நினைவுபடுத்துகின்ற சொற் பிரயோகங்கள் மற்றும் தந்திரங்களுடன் அதிகமாகக் காணப்பட்டன.

எனினும் ஹெகல் தூய சிந்தனைத் துறையில் மாபெரும் விஷயங்களைச் சாதித்தார் என்றால், முந்திய காலத்தின் தர்க்கம் மற்றும் இயக்க மறுப்பியல் முழுமைக்கும் அநேகமாக விளையாட்டாகவே முடிவு கட்டினார் என்றால், உலக வரலாற்றின் வளர்ச்சி மற்றும் உள் இணைப்புகளைக் (கருத்துமுதல்வாத வடிவத்தில் என்ற போதிலும்) காட்டினார் என்றால், அவர் தொட்ட அறிவின் எல்லாத் துறைகளிலும் ஒரு சகாப்தத்தைப் படைத்தார் என்றால் அவருடைய இயக்கவியல் முறையில் மிகவும் வளமான-ஆனால் உபயோகிக்கப்படாத – வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதே பொருளாகும்.

இயக்கவியல் என்ற வாளை அமைப்பு என்ற உறையிலிருந்து வெளியே எடுத்து அதன் மீதிருந்த கருத்துமுதல்வாதம் என்ற துருவைச் சுத்தப்படுத்தக் கூடிய, கருத்தமைப்புகள் என்ற உடலில்லாத நிழல்களை மட்டும் குத்துவதுடன் நின்றுவிடாமல் பொருளாயத யதார்த்தத்தை, மிகவும் பல்தொகுதியான சமூக மற்றும் இயற்கை நிகழ்வுப் போக்குகளை அறிவதற்கு ஆயுதமாக அதை மாற்றக் கூடிய ஒரு நபர் தேவைப்பட்டார் என்பது இதன் பொருள். அந்த நபர்தான் கார்ல் மார்க்ஸ்.

ஹெகலியவாதத்திலிருந்து மார்க்சியத்துக்கு முன்னேறிய எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதியது முற்றிலும் நியாயமே: “ஹெகலின் தர்க்கவியலிலிருந்து இந்தத் துறையில் ஹெகலின் உண்மையான கண்டுபிடிப்புகளைக் கொண்ட கருவைப் பிரித்தெடுப்பதற்கும் இயக்கவியல் முறையின் மீதுள்ள கருத்துமுதல்வாதப் போர்வைகளை நீக்கி அதன் எளிமையான வடிவமே கருத்தின் பரிணாமத்துக்கு ஒரே சரியான முறை என்பதை நிறுவுவதற்கும் மார்க்ஸ் ஒருவர் மட்டுமே இருந்தார், இன்னும் அவர் ஒருவர்தான் இருக்கிறார். அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய மார்க்சின் விமர்சனத்துக்கு ஆதாரமான இந்த முறையை உருவாக்கியது அடிப்படையான பொருள்முதல்வாதக் கருதுகோளுக்கு எந்த விதத்திலும் முக்கியத்துவத்தில் குறைந்ததல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.”(6)

படிக்க:
இயற்கையைக் காக்க சுவீடன் பழங்குடியினரின் போராட்டம் ! – படக் கட்டுரை
♦ குழந்தைகள் என் ஆசிரியர்கள் , ஆசான்கள் என்கிறார் ஒரு ஆசிரியர் !

ஸ்தூலமான விஞ்ஞான ஆராய்ச்சியில் இயக்கவியல் முறையைக் கையாளுதல் என்பதன் பொருள் என்ன? முன்னரே தயாரிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட இயக்கவியல் வடிவங்களை எடுத்துக் கொண்டு அவற்றினுள் தனிப்பட்ட விஞ்ஞானங்களின் பரிசோதனை உள்ளடக்கத்தைப் போடுவதா? ஹெகலின் சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேற்றத்தின் எல்லா முடிச்சுக்களையும் திடீர் மாற்றங்களையும் தொடர்ந்து சென்று அதன் பிறகு பெளதிகம், இரசாயனம், உயிரியல் சமூகவியல் மற்றும் அரசியல் பொருளாதாரத்தை அதனுடன் கறாராகப் பொருந்துகின்ற முறையில் விளக்கிக் கூறுவதா? ஹெகல் எழுதிய தத்துவஞான விஞ்ஞானங்களின் கலைக்களஞ்சியம் என்ற நூலின் சிறப்புச் சொற்கள், கருத்தினங்கள் மற்றும் கருத்தமைப்புகளைச் சிறப்பான முறையில் கற்றுத் தேர்ந்து ஆராயப்படுகின்ற யதார்த்தத்தின் நிகழ்வுகளையும் விதிகளையும் இந்த மொழியைப் பேசுமாறு செய்வதற்கு முயற்சிப்பதா? இயக்கவியலின் விதிகளையும் கூறுகளையும் கற்று இயற்கை விஞ்ஞானங்களின் துறையில் அவற்றுக்கு மென்மேலும் புதிய எடுத்துக்காட்டுகளையும் நிரூபணங்களையும் தேடுவதா? ஒரு விஞ்ஞானி இயக்கவியலைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிப்பதே போதும், விஞ்ஞானத்தின் ஸ்தூலமான துறைகளில் மேதா விலாசமான கண்டுபிடிப்புகளைச் செய்வதற்கு அவை உத்வேகமளிக்கும் என்ற வெகுளித்தனமான நம்பிக்கை இன்றும் கூட உள்ளதே, அதன் ஆதாரம் இதுதானா?

பொருளாதார ஆராய்ச்சியில் இயக்கவியல் முறையை உபயோகப்படுத்துகின்ற பிரச்சினையை மார்க்ஸ் முற்றிலும் வேறுவிதமாக அணுகினார். அவர் யதார்த்தத்தின் மீது இயக்கவியல் வடிவங்களைத் திணிப்பதற்கு மறுத்தார். ஹெகல் செய்ததைப் போல முன்னரே தயாரிக்கப்பட்ட இயக்கவியல் அமைப்புகளுக்குள் யதார்த்தத்தைப் பொறுத்துவதற்கு அவர் முயற்சி செய்யவில்லை, ஆனால் பொருளாதார நிகழ்வுகள் தோன்றுவதையும் முன்னேற்றமடைவதையும், அவற்றின் போக்குகளையும், ஒரு பொருளாதார அமைப்பு முரண்பாடுகளின் வளர்ச்சியின் மூலமாக முன்னேற்றமடைவதின் உள் தர்க்கத்தையும், அந்த முரண்பாடுகள் தமது சொந்த எதிரிடையாக மாறுவதையும், அதாவது உண்மையில் ஆராயப்படுகின்ற பொருளின் இயக்கவியலே அவர் விருப்புவெறுப்பற்ற முறையில் ஆராய்ச்சி செய்தார்; தன்னுடைய முறை ஹெகலின் முறைக்கு முற்றிலும் எதிரானது என்று மார்க்ஸ் கூறியதற்குக் காரணம் இதுவே.

முதலாளித்துவச் சமூகத்தின் முன்னேற்றத்தின் பொருளாதார விதியைக் கண்டுபிடிப்பது என்னுடைய இறுதியான நோக்கம் என்று மார்க்ஸ் கூறினார். ஆனால் மூலதனத்தில் எந்த ஸ்தூலமான சமூகம் சித்திரிக்கப்படுகிறது? அது ஜெர்மனியல்ல, பிரான்ஸ் அல்ல, (மார்க்ஸ் மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கிலாந்தைக் குறிப்பிட்ட போதிலும்) இங்கிலாந்தும் அல்ல. அவர் முதலாளித்துவத்தை அதன் கலப்பற்ற வடிவத்தில் சித்திரிக்கிறார். அது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தத்துவ ரீதியான மாதிரிப்படிவம், அங்கே அது செத்துப் போன, மாற்றமடையாத ஒன்றாகத் தோன்றவில்லை; ஆனால் “மாற்றமடையக் கூடிய, தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கின்ற அமைப்பாகத்”(7) தோன்றுகிறது.

இந்த அமைப்பைக் கருத்துக்களில் பிரதிநிதித்துவம் செய்வது எப்படி? அதன் அசாதாரணமான சிக்கல் மற்றும் பல் அடுக்கை சிந்தனையில் எடுத்துக் கூறுவது எப்படி? அதன் அம்சங்களின் உள் காரணகாரியத் தன்மையை, அதாவது கட்டமைப்பைச் செயல்படுகின்ற நிகழ்வுப் போக்கில் மட்டுமல்லாமல் அதன் வரலாற்று ரீதியான வளர்ச்சியில் புரிந்து கொள்வது எப்படி? முதலாளித்துவ உறவுகளின் மேல்மட்டத்தில் எல்லோரும் பார்க்கின்ற விதத்தில் தோன்றுவதற்கும் அவற்றின் மறைக்கப்பட்ட சாராம்சத்துக்கும் உள்ள தொடர்பை நிறுவுவது எப்படி? முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மொத்த மனப்போக்கான கட்டுமானத்தைக் கருத்தினங்களின் அமைப்பில் பிரதிபலிப்பது எப்படி?

ஹெகல்

இது மிகக் கடினமான வேலை; குக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேறுகின்ற இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையின் உதவியுடன் மார்க்ஸ் இதை நிறைவேற்றினார். இம்முறை ஹெகலிய முறையிலிருந்து நேரடியாகத் தோன்றியபோதிலும், மனிதனில் முடிவடைகின்ற உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் இயற்கை-வரலாற்று நிகழ்வுப் போக்கு கேதேயின் ஃபாவுஸ்டு நாடகத்தில் சித்திரிக்கப்படுகின்ற கண்ணாடி வடிகலத்தில் ஹோமுன்குலஸ் படைக்கப்படுகின்ற மாயாவாத, இரசவாதப் படைப்பிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறதோ அவ்வளவுக்கு இதுவும் வேறுபட்டிருக்கிறது.

முன்பிருந்த ஹெகலைப் போலவே, முதலாளித்துவப் பொருளாதார அமைப்பைத் தத்துவ ரீதியில் மறுபதிப்புச் செய்வதை எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வி மார்க்சை எதிரிட்டது. இதற்குச் சரியான பதிலளிக்க நம்பகமாக ஏராளமானவை இருந்தன. ஏனென்றால் தவறான முதற் கருதுகோள் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும், ஆடிக் கொண்டிருக்கும் அடிப்படையின் மீது உறுதியான தத்துவ மாளிகையை நிறுவ முடியாது.

அரசியல் பொருளாதாரத்தை மெய்யான, ஸ்தூலமான, உதாரணமாக மக்கள்தொகை, நாடு, அரசு ஆகிய ஏதாவதொன்றிலிருந்து தொடங்குவது மிகவும் இயற்கையானதாகத் தோன்றும். 18ம் நூற்றாண்டுப் பொருளியலாளர்கள் இதைத்தான் செய்தார்கள்.

ஆனால் அரசு என்பது மிகவும் சிக்கலான கருத்தமைப்பு. அரசுப் பொறியமைவு என்பது என்ன, அது எப்படி இயங்குகிறது, அதன் நடவடிக்கையை நிர்ணயிக்கின்ற அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகள் எவை என்பவற்றைத் தெரிந்து கொள்ளாமல் அரசைப் புரிந்து கொள்ள முடியாது.

அரசிலிருந்து, மக்கள்தொகையிலிருந்து தொடங்குவதென்றால் அது மிகத் தெளிவில்லாத, குழப்பமான மொத்த சித்திரத்தைக் கொடுக்கும்; இன்னும் நுணுக்கமான வரையறுப்புக்களின் மூலமாகவே இக்கருத்தமைப்புகளின் பல்வேறு தனிப்பட்ட அம்சங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். ஆகவே அதே பாதையில் மறுபடியும் திரும்பிச் சென்று மக்கள் தொகைக்கு, அரசுக்குப் போக வேண்டியிருக்கும். ஆனால் இந்தத் தடவை அது குழப்பமான சித்திரமாக இருக்காது, எண்ணற்ற வரையறுப்புக்கள் மற்றும் உறவுகளின் வளமான கூட்டுத் தொகையாக அது இருக்கும்.

ஆகவே ஒருவர் தனிப்பட்ட, தொடக்க நிலையான, சூக்குமமான கருத்தமைப்பிலிருந்து தொடங்க வேண்டும். எந்தக் கருத்தமைப்பிலிருந்து? முதலாளித்துவ உற்பத்தி என்ற ஒருங்கிணைந்த முழு அமைப்பும் இயற்கையாக வளர்ச்சியடைகின்ற முதல் உயிரணு, கரு எது?

மார்க்ஸ் பண்டத்தின் மீது தன்னுடைய கவனத்தைக் குவிக்கிறார். அவர் மூலதனத்தின் முதல் பாராவில் பின்வருமாறு எழுதுகிறார்: “முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவுகின்ற சமூகங்களின் செல்வம் ‘பண்டங்களின் மாபெரும் திரட்டாகத் தோன்றுகிறது. அதன் அலகு ஒரு தனிப் பண்டமாகும். ஆகவே நம்முடைய ஆராய்ச்சி பண்டத்தைப் பற்றிய பகுப்பாய்விலிருந்து தொடங்க வேண்டும்.”(8)

மார்க்ஸ் மூலதனத்தைப் பொருளாதாரத்தின் ஆரம்ப வாழ்க்கையிலிருந்து, பண்டம், பண்டப் பரிவர்த்தனையிலிருந்து தொடங்குகிறார். இது கற்பனையில் தோன்றவில்லை, அது புலன்களால் அறியப்பட்ட ஒன்று, பொருளாயதமானது. ஒவ்வொருவரும் நாள்தோறும் அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார், முழுப் பொருளாதார அமைப்பின் எல்லாப் பகுதிகளிலும் இடுக்குகளிலும் அது ஊடுருவியிருக்கிறது, வரலாற்று ரீதியில் அதன் தொடக்க நிலையாக இருக்கிறது.

அதே சமயத்தில் பண்டப் பரிவர்த்தனை முதலாளித்துவ (பண்ட) சமூகத்தின் மிகவும் எளிமையான, மிகச் சாதாரணமான… உறவு, இந்த உறவை நாம் பல கோடித் தடவைகள் சந்திக்கிறோம்.”(9) அது சூக்குமக் கருத்தாக்கம், ஆனால் முதலாளித்துவம் தோன்றிய காலத்திலும் வளர்ச்சியடைந்த காலத்திலும் அதன் மிகப் பொருளாயதமான வாழ்க்கையில் வளர்க்கப்பட்ட சூக்குமக் கருத்தாக்கம். ஹெகலின் சூக்குமக் கருத்தாக்கங்களைப் போல அது வெறும் சிந்தனை நடவடிக்கையின் விளைவு அல்ல. பொருளாயத ரீதியில் இருக்கின்ற அமைப்பின் ஒரு பகுதி என்ற முறையில் அது பொருளாயத ரீதியில் தரப்படுகிறது, ஆகவே இந்த அமைப்பின் தத்துவ ரீதியான மாதிரிப்படிவத்தில் அதற்குரிய இடத்தை அது பெற முடியும், பெற வேண்டும்.

பண்டப் பரிவர்த்தனை என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது? பயன் மதிப்புக்கும் பரிவர்த்தனை மதிப்புக்கும் உள்ள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த எதிரிடைகளின் போராட்டத்தையும் அதன் விளைவாக சூக்கும உழைப்புக்கும் ஸ்தூலமான உழைப்புக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாட்டையும் மார்க்ஸ் ஆராய்கிறார், இன்னும் அதிகச் சிக்கலான கருத்தாகிய மதிப்பின் எக்காலத்துக்கும் உரிய வடிவத்துக்கு, அதிலிருந்து பணவியல் வடிவத்துக்கு வந்து சேருகிறார். அவருடைய சிந்தனை முன்னரே முடிவு செய்யப்பட்ட விதிகளின் அடிப்படையில் முன்னே செல்லவில்லை, ஆராயப்படுகின்ற பொருளின் தர்க்கம், இயக்கவியலின் அடிப்படையில் முன்னேறுகிறது. அது பயனுள்ள முடிவுகளை அடைவதற்குத் துல்லியமான காரணம் இதுவே.

மூலதனத்தில் மார்க்சின் முறையை எங்கெல்ஸ் பின்வருமாறு வர்ணிக்கிறார்: ”ஜெர்மானிய இயக்கவியல் முறையை அதன் இன்றைய வளர்ச்சிக் கட்டத்தில் பழைய, மேலெழுந்தவாரியான, வெறும் சொல்லோட்டமுள்ள இயக்கமறுப்பியல் முறையோடு ஒப்பிடும் பொழுது மத்திய காலப் போக்குவரத்துச் சாதனத்தோடு ஒப்பிடுகையில் ரயில்வேயைப் போன்று முன்னது உயர்வானது. இந்த உண்மைக்கு யாரேனும் குறிப்பிட்ட எடுத்துக்காட்டைப் பார்க்க விரும்பினால் அவர் ஆடம் ஸ்மித் அல்லது வேறு அதிகாரபூர்வமான, புகழ் பெற்ற பொருளியலாளர் எவராவது எழுதிய புத்தகத்தை எடுத்துப் படிக்கட்டும், பரிவர்த்தனை மதிப்பும் பயன் மதிப்பும் இந்தக் கனவான்களுக்கு எவ்வளவு துன்பத்தைக் கொடுத்தன; இந்த இரண்டையும் சரியான முறையில் வேறுபடுத்துவதிலும் அவை ஒவ்வொன்றுக்கும் உரித்தான வரையறுக்கப்பட்ட வடிவத்தை எடுத்துரைப்பதிலும் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதைப் பார்க்கட்டும். பிறகு மார்க்ஸ் எழுதிய தெளிவான, எளிமையான விளக்கத்தை அவற்றோடு ஒப்பிடட்டும்.”(10)

முதலாளித்துவ உற்பத்தியின் கட்டமைப்புக்கு முற்றிலும் பொருந்தக் கூடிய விதத்தில் ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்துக்கு, ஒரு கருத்தினத்திலிருந்து மற்றொரு கருத்தினத்துக்கு முன்னேறிச் சென்று மார்க்சின் ஒருங்கிணைந்த தத்துவ மாளிகை நிர்மாணிக்கப்படுகிறது. அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு கருத்தினமும் முந்திய கருத்தினத்திலிருந்து அவசியமாகப் பெறப்படுகிறது, அது புதிய உள்ளடக்கத்தைப் பெற்றுச் செழுமையடைந்து நிகழ்வுகளின் பரந்த வட்டத்தை மென்மேலும் அதிகமாக உள்ளடக்குகிறது, அதாவது ஸ்தூலமடைகிறது. பண்டப் பரிவர்த்தனையில் உள்ளுறையாக இருக்கும் ஆரம்ப முரண்பாட்டைப் பற்றிய பகுப்பாய்வு முதலாளித்துவச் சமூகத்தின் வளர்ச்சியடைந்த முரண்பாடுகளை-அவற்றின் ஸ்தூலமான வெளிப்பாட்டில்-சுட்டிக்காட்டுவதற்கு இட்டுச் செல்கிறது, ஆகவே இந்தச் சமூகம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற புரட்சிகரமான முடிவுக்கு இட்டுச் செல்கிறது.

முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்குச் செல்கின்ற இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையைப் பெற்று விஞ்ஞானம் வளமடைகிறது.

விஞ்ஞான அறிதலில் தன்னால் செய்யக் கூடியதை இயக்கவியல் முறை இன்னும் எடுத்துக் காட்ட வேண்டியிருக்கிறது. இயற்கை விஞ்ஞானங்கள் திரட்டப்பட்ட விவரங்களைப் பொது மைப்படுத்துவதற்கு, ஒழுங்குபடுத்துவதற்கு, அவற்றை இயக்கவியல் ரீதியில் பரிசீலிப்பதற்கு, ஒரு புதிய கருத்தியல் மற்றும் முறையியல் அமைப்பின் உதவியுடன் வெவ்வேறு துறைகளில் விஞ்ஞானங்களின் உதிரியான சாதனைகளை ஒருங்கிணைப்பதற்கு நிர்ப்பந்தமான அவசியத்தை உணர்கின்றன.

தத்துவச் சிந்தனையின் உயர்மட்டத் துறைகளுக்குள் இயற்கை விஞ்ஞானம் இங்கு தான் நுழைகிறது. சாதிக்கப்பட்ட முடிவுகள் அனைத்தையும் திட்டவட்டமான அமைப்பில் ஒழுங்குபடுத்துகின்ற, ஒற்றைத் தத்துவத்தின் சுற்றுவட்டத்துக்குள் அவற்றை விளக்கிக் கூறுகின்ற கடமை தவிர்க்க முடியாதபடி அதை எதிர்நோக்குகிறது. நவீன பெளதிகம், உயிரியல், மற்றும் புறச்சூழல் துறைகளில் இந்தக் கடமை அவசரமாகிவிட்டது என்பது ஏற்கெனவே நாம் அறிந்ததே. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேறுகின்ற இந்த முறையைத் தவிர இதை நிறைவேற்றுவதற்கு வேறு வழி இல்லை.

ஆராய்ச்சியாளருக்கு இயக்கவியல்-பொருள்முதல்வாத முறை ஒரு வலிமையான ஆயுதமாகும். அவர் சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு, இசையளவுகளை இழந்து விடாமலிருப்பதற்கு, வழி தவறி முட்டுச் சந்துக்குள் போய்விடாமலிருப்பதற்கு அது உதவி புரிகிறது. பரிசோதனையும் கணித ஆராய்ச்சியும் பிரச்சினையைக் கண்டுபிடிக்காமல் இருக்கின்ற இடங்களில் அதைக் கண்டுபிடிப்பதற்கு அது உதவுகிறது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் ஆராய்ச்சியாளர் தத்துவஞானக் கோட்பாடுகளை அறிந்திருப்பது மட்டும் போதாது, அவர் இந்த முறையில் முழுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாகும்.

படிக்க:
போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !
♦ நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?

பொதுமைப்படுத்தல்களின் மிக உயர்ந்த மட்டங்களில் உள்ள படைக்கின்ற, தேடுகின்ற, சம்பிரதாயமற்ற சிந்தனை முறைகளை விரித்துரைப்பதற்கு மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் அவசியம். தத்துவச் சிந்தனையின் முன்னேற்றத்திற்குப் புதிய சாதனங்களை, பிரபஞ்சத்தின் சாராம்ச, சர்வாம்ச உறவுகளை மென்மேலும் ஆழமான முறையில் ஊடுருவுவதுடன் பொருந்துகின்ற புதிய சிந்தனை முறைகளை அது கண்டுபிடிக்க வேண்டும். மார்க்சியம் முழுவதையும் போலப் பொருள்முதல்வாத இயக்கவியலும் “உயிரில்லாத வறட்டுக் கோட்பாடல்ல… அது நடவடிக்கைக்கு ஜீவனுள்ள வழிகாட்டி” (லெனின்).

*****

மூலதனத்தின் தத்துவஞானத்தைப் பற்றி மேலே எழுதப்பட்டிருப்பவை அனைத்தும் உருவரை மட்டும்தான் என்பது உண்மையே. அறிவார்ந்த நடவடிக்கைக்கு மிகவும் கிளர்ச்சியூட்டுகின்ற, சுவாரசியமான துறை இங்கே இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதுதான் என்னுடைய நோக்கம். இது ஆழம் காண முடியாதது, அதில் ஒருவர் குதிப்பது பயனுள்ளதே. நாம் எவ்வளவு ஆழமாகக் குதிக்கின்றோமோ, அவ்வளவு ஆன்மிக வளத்தை நாம் அடைய முடியும்.

குறிப்புகள்:

(5)“டயடோஹிகள்”(“Diodochi”) – ஹெகலிய மரபின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகளாக ஜெர்மன் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய பேராசிரியர்களை எங்கெல்ஸ் கிண்டலாக இப்படிக் குறிப்பிடுகிறார்.
(6) கார்ல் மார்க்ஸ், அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1982, பக்கம் 344.
(7) Karl marx, capital, vol. 1, p. 21.
(8) Karl marx, capital, vol. 1, p. 43.
(9) V.I.Lenin, collected works, Vol. 38, p. 358.
(10) கார்ல் மார்க்ஸ், அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1982, பக்கங்கள் 347-48.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986-ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய 26 பாகங்களை படிக்க:

மார்க்ஸ் பிறந்தார் – வரலாற்றுத் தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க