குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 1-அ

அமனஷ்வீலி

அத்தியாயம் ஒன்று

குழந்தைகள் – என் ஆசிரியர்கள்

கல்வியாண்டு துவங்கும் தருவாயில்(*) (ஆகஸ்டு 31) …

ஜார்ஜிய சோவியத் சோஷலிசக் குடியரசின் தலைநகரமாகிய திபிலீசியில் ஆகஸ்டு மாதக் கடைசியில் எப்போதும் வெப்பமாக இருக்கும். தார் உருகி ஓடும், மக்களுக்கு எதன் மீதுமே அக்கறையில்லாததைப்போல் தோன்றும்.

தெருக்களில் குழந்தைகள் அதிகமில்லை. இவர்களில் பெரும்பாலோரை பெற்றோர்கள் கோடை ஓய்விடங்களுக்கும், சொந்த கோடையில்லங்களுக்கும், பயனீர் முகாம்களுக்கும், குறிப்பாக கிராமங்களில் உள்ள தாத்தா, பாட்டி மற்ற உறவினர்களிடமும் அனுப்பி விட்டனர்.

கிராமத்திற்குச் செல்லவும் அங்கேயுள்ள கிராமச் சிறுவர் சிறுமியருடன் சேர்ந்து விளையாடவும் அவர்களோடு சேர்ந்து காடுகளுக்குச் சென்று பழங்களைச் சேகரிக்கவும் கூடை பின்னவும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். காஹேத்தியாவின் சமவெளிகளில் நான் கழித்த குழந்தைப் பருவம் என்னுள் இப்போது விழித்துக் கொண்டது. நான் கிராமக் குழந்தைகளோடு சேர்ந்து ஆற்றில் குளிக்க ஓடியதுண்டு, சமவெளியில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை மீதேறி அமர்ந்து களைப்பின்றி சவாரி செய்ததுண்டு; மக்காச்சோளமும் கோதுமையும் நிறைந்த மூட்டைகளைத் தோள்கள் மீது சுமந்து கொண்டு நீர் சக்தியால் இயங்கும் அரவை இயந்திரத்திற்கு எடுத்துச் சென்றதுண்டு;

தானியக் களஞ்சியத்தினுள் மணம் மிகு மாவைக் கொட்டியபடி தட்டையான பெரும்வட்டக் கற்கள் சுற்றுவதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும்; மல்யுத்தப் போட்டிகள் நடக்கும்போது அவற்றைக் கண்டு களிப்பதற்காக கிராமம் முழுவதுமே சிறு திறந்த வெளியில் கூடும். குழந்தைகளுக்கு கிராமத்திற்குச் செல்ல மிகவும் பிடிக்கும். இது எனக்கு நிச்சயமாகத் தெரியும், ஏனெனில் நானும் குழந்தையாக இருந்தவன், அங்கே நிறைய மகிழ்ச்சி கிடைக்கும், அதிக சுதந்திரம் உண்டு, ஆர்வமிக்க, ஆபத்தான அதிசாகசச் செயல்களுக்கு அங்கே பரவலான இடமுண்டு.

ஆகஸ்டில் திபிலீசியில் கடும் வெப்பம் நிலவும். செப்டெம்பர் 1-ம் தேதி விரைவிலேயே வரவிருக்கிறது. ஆனால் தெருக்களில் இன்னமும் குழந்தைகளின் ஆரவாரத்தைக் காணோம், குறைந்த அளவே குழந்தைகள் காணப்படுகின்றனர்.

கடும் வெப்பத்தின் காரணமாக கல்வியாண்டு இம்முறை செப்டெம்பர் 1-ம் தேதி துவங்கப் போவதில்லை, இரண்டு வாரமோ, ஒரு மாதமோ கழித்துதான் வகுப்புகள் ஆரம்பமாகும் என்றொரு வதந்தி மின்னல் வேகத்தில் பரவுகிறது. தம் கனவுகள் பலிக்கின்றன என்று குழந்தைகளுக்குத் தோன்றுகிறது.

பெற்றோர்களும் நம்புகின்றனர். ஏனெனில் வகுப்புகளை ஒத்திப் போடுவதற்கான காரணங்கள் நிறையச் சேருகின்றன.

ஆனால் ஆகஸ்டு மாதத்தின் கடைசி நாட்களில் இக்கனவுகள் கலைகின்றன. ”பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் கோடை விடுமுறைக்குப் பின் செப்டெம்பர் 1-ம் தேதி மீண்டும் துவங்கும்” என்ற பத்திரிகைச் செய்திகள் இதற்கு வழிகோலுகின்றன.

பள்ளி அழைக்கிறது! இது ஒரு புனிதமான அறைகூவல்.

பாடங்கள் விரைவில் ஆரம்பமாகும்! இரண்டு மூன்று நாட்களில் சூரிய வெப்பத்தால் தகித்துக் கொண்டிருக்கும் நகரம், மனதைக் கிறங்க வைக்கும் வாசனையுடன் கூடிய ஒரு பெரிய, அழகிய, பல வண்ண மலர் விரிவதைப் போல் காட்சியளிக்கிறது. இந்த மலரை உயரே, பறவைகள் பறக்கும் உயரத்திலிருந்து பார்த்தால் அது எவ்வளவு அழகிய, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் தெரியுமா!

குழந்தைகளுக்கு கிராமத்திற்குச் செல்ல மிகவும் பிடிக்கும். இது எனக்கு நிச்சயமாகத் தெரியும், ஏனெனில் நானும் குழந்தையாக இருந்தவன், அங்கே நிறைய மகிழ்ச்சி கிடைக்கும், அதிக சுதந்திரம் உண்டு, ஆர்வமிக்க, ஆபத்தான அதிசாகசச் செயல்களுக்கு அங்கே பரவலான இடமுண்டு.

நகரத்திற்கு உயிர் வருகிறது, உத்வேகம் வருகிறது, நகரம் தலையை உயர்த்தி, மெல்லிய காற்றில் ரோஜா செடியின் தண்டு ஆடுவதைப் போல் மெதுவாக ஆடத் துவங்குகிறது. ஒரு உண்மையை (இது ஒருவேளை இதுவரை தெரியாமலேயே இருந்திருக்கலாம்) நன்கு உணருகிறோம்: 1,500 ஆண்டுகட்கும் மேலாக நிலவிவரும் இந்நகரத்தில் இதன் மிகச் சிறு குடிமக்களாகிய குழந்தைகள் இல்லாவிடில் நகரமே வெறிச்சோடிக் களையிழந்து உள்ளது.

சத்தம்! தெருவில்தான் எவ்வளவு சத்தம், மகிழ்ச்சி, உற்சாகம்! குழந்தைகள் அவசர அவசரமாகப் போகின்றனர், ஓடுகின்றனர். பாதசாரிகளுக்கான இடங்களில் போவோர் வருவோர் மீது படாமல் வளைந்து வளைந்து மிதிவண்டி ஓட்டுகின்றனர். அமைதியாக, நிதானமாக நாம் தெருக்களில் நடப்பதற்கு அவர்கள் இடையூறு செய்கின்றனர், ”என்ன வெப்பம்” என்ற நமது வழக்கமான கோடைக்காலப் பேச்சின் போக்கை மாற்றுகின்றனர். வருவோர் போவோரின் முகங்களில் ஒருவிதக் களை, கவலை, மகிழ்ச்சி – குழந்தைகள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்!

வெப்பமானியில் வெப்பம் இறங்கவேயில்லை. ஆனால் குழந்தைகளுக்கு வெப்பமானியைப் பற்றி என்ன கவலை!

இன்று 38 டிகிரி. அவர்களுக்கு வெப்பமாக இல்லையா என்ன ?

இல்லை, குழந்தைகளுக்கு வெப்பமாயில்லை. அவர்களுக்கு வேறு கவலை – அவர்கள் பள்ளி செல்லத் தயாராகின்றனர். பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள், ஸ்கேல்கள், வரைபடச் சாதனங்கள், வண்ணப் பென்சில்கள் முதலியவற்றை வாங்க வேண்டும். இவற்றையெல்லாம் பள்ளிப் பையில் வைக்க வேண்டும். சீருடையை ஒழுங்குபடுத்த வேண்டும். அழகாகக் காட்சியளிக்க வேண்டும்….

ஆசிரியர்களாகிய நாங்களும் எம் அறைகளில் குழுமியிருக்கின்றோம். பரஸ்பரம் முகமன் கூறிக் கொண்டோம், கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். புதிய கல்வியாண்டிற்கான புதிய போதனை முறைத் திட்டங்களும் புதிய நம்பிக்கைகளும் நம்மிடமும் இருக்க வேண்டும், சிறுவர் சிறுமியரைச் சந்திக்கும் ஆர்வம் மிக்க எதிர்பார்ப்பு நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்க வேண்டும்.

மகிழ்ச்சியும் பதட்டமும் கலந்த ஒரு தெளிவற்ற நிலை ஒருவேளை உங்களை ஆட்கொள்ளக் கூடும்; கல்வி கற்பித்தல் எனும் விஞ்ஞானம் மற்றும் கலையின் சாரத்தை நம்மால் அறிய முடியுமா என்ற அச்சம்கூடத் தோன்றலாம்.

இத்தகைய உணர்வுகள் உண்மையிலேயே உங்களை ஆட்கொண்டால் அது நல்லது, நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் அன்பு, நம்பிக்கை எனும் மிக கெளரவமான பரிசு உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய எதிர்கால வகுப்புகளைப் பற்றிய எண்ணமே, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பாத இவர்களுடனான சந்திப்பைப் பற்றிய எண்ணமே உங்களைத் துன்புறுத்தினால் என்ன செய்வது?

அதுவரை விஷயம் போகாமலிருந்தால் நல்லது…. எப்படி நடந்து கொள்வதென நீங்களே முடிவு செய்யுங்கள்.

நான், ஆகஸ்டு மாதக் கடைசி நாட்களில் நள்ளிரவு வரை என் மேசையில் அமர்ந்து வேலை செய்கிறேன். நன்கு சிந்திக்கிறேன், திட்டமிடுகிறேன், மதிப்பிடுகிறேன், பொதுமைப் படுத்துகிறேன், என்னுடனேயே விவாதித்துக் கொள்கிறேன்; என் ஆசிரியர் பயிற்சி அனுபவத்தை யோசித்துப் பார்க்கிறேன். பல தலைமுறைகளைச் சேர்ந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய நான் என் குழந்தைகளோடு சேர்ந்து வளர்ச்சியடைய விரும்புகிறேன்.

அவர்களைவிட ஒரு நல்ல அனுகூலமான நிலையில் நான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எனது ஆறு வயதுக் குழந்தைகளுக்கு நான் ஒருவன்தான் ஆசிரியன், எனக்கோ முப்பத்தாறு அல்லது அதற்கும் அதிகமான ஆசிரியர்கள். இவர்கள் அனைவரும் எனது மிக விடாப்பிடியான ”ஆசிரியர்களாக” விளங்குவார்கள்.

படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சினை ?

நான் அவர்களுக்கு படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் வரையவும் பாடவும் சொல்லித்தர அவர்கள் எனக்கு மிக உயர்வான போதனை முறைக் கல்வியைத் தருவார்கள். குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட ஆசிரியர் வேண்டும் என்பதை அறிய தன்னை கல்வி கற்பவனாக, வளர்க்கப்படுபவனாக உணர வேண்டும். என் மேசை முன் அமர்ந்து, புதிய தயாரிப்பு வகுப்புடனான சந்திப்பைப் பற்றிச் சிந்திக்கும்போது ஒரு தாளில் பின்வருமாறு எழுதிக் கொள்கிறேன்:

குழந்தைகளுடைய மனதின் ரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி எனும் கலையையும், ஆசிரியனின் திறமையையும் அறிய முற்படுகையில், ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்.

இந்த வாசகத்தின் உண்மையை – பயனை இருபத்தொன்பது முறை நான் சோதித்து சரிபார்த்திருக்கிறேன். முப்பதாவது தடவையாக சரிபார்க்கப் போகிறேன்.

அடிக்குறிப்பு:
* சோவியத் நாட்டில், பள்ளியில் கல்வியாண்டு செப்டம்பர் 1-ம் தேதி ஆரம்பமாகும்.-(ப-ர்.)
(தொடரும்)

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க