பேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !
மார்க்சிய பேராசான் எங்கெல்ஸ் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் முந்தைய தத்துவஞானிகள் இந்த உலகைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இவர்கள் இந்த உலகை மாற்றுவதற்கான தத்துவத்தைப் படைத்தனர்.
மார்க்சின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மார்க்சியம் என்பது மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரண்டு ஆளுமைகளின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்சியம் எனும் சமூக ஆய்வுமுறையை உருவாக்குவதிலும், அதனை சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தின் மீது பிரயோகித்து பாட்டாளி வர்க்கத்துக்கான சித்தாந்தத்தை படைப்பதிலும் இருவரின் பங்களிப்புகளும் ஒன்றுக்கொன்று பிரிக்கவொன்னாதவை !
மார்க்சின் மேதைமை, விசயங்களை ஆழமாகவும் இலக்கியச் செறிவுடனும் ஆய்ந்தறியும் திறன் ஆகியவற்றோடு, எங்கெல்சின் கூருணர்வும், அறிவியலின் அனைத்துத் துறைகளிலும் அகழ்ந்து ஆய்ந்தறியும் அவரது அறிவுத்திறனும் இணைந்ததன் விளைபொருள்தான் மார்க்சியத் தத்துவம். இதில் எந்த ஒரு அம்சம் குறைந்திருந்தாலும், மார்க்சியம் ஆழமானதாகவும் செறிவுமிக்கதாகவும் இருந்திருக்காது என்பதை உறுதிபடக் கூறமுடியும்.
படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
♦ கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?
“மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால், தாங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட ‘சூழ்நிலைமை‘களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த காலத்திலிருந்து கைமாற்றித் தரப்பட்ட, குறிப்பிட்ட ‘சூழ்நிலைமை‘களில்தான் அதை உருவாக்குகிறார்கள்” என்றார் மார்க்ஸ்.
இது மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருக்குமே பொருந்தும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் இருவரும் ஐரோப்பாவில் எதிர்கொண்ட மற்றும் அவர்களது கடந்த காலத்திலிருந்து அவர்களுக்குக் கைமாற்றிக் கொடுக்கபட்ட சமூகச் சூழலிலிருந்துதான் அவர்கள் இருவருமே “மார்க்சியவாதிகளாக” பரிணமிக்கிறார்கள்.
“மார்க்ஸ் பிறந்தார்” எனும் நூலில் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் வளர்ந்த ஜெர்மானிய சூழல் குறித்த தெளிவான சித்திரத்தைக் கொடுக்கிறார் அதன் ஆசிரியர் ஹென்றி வால்கோவ்.
மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் பிறந்த ரைன் பிரதேசத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் அங்கு சில அரசு அதிகாரிகள் கூட மிதவாத மற்று தீவிரவாதக் கருத்துக்களை இயல்பாகப் பேசுவது குறித்துக் குறிப்பிடுகிறார் அவர். அண்டை நாடான பிரான்சை உலுக்கிய புரட்சிப் புயல்களின் தாக்கம், ரைன் பிரதேசத்திலும் இருந்தது. பிரெஞ்சு பொருள்முதல்வாத, அறிவியக்கக் கருத்துக்கள் ஜெர்மனிக்குள் நுழையும் நுழைவாயிலாக ரைன் பிரதேசம் இருந்தது. மேலும் ரைன் பிரதேசம் ஜெர்மனியிலேயே தொழிற்துறையில் முன்னேறிய பிரதேசமாகவும் இருந்தது.
இத்தகைய சூழலில் வளர்ந்த எங்கெல்ஸ், தனது தந்தையின் நெருக்குதல் காரணமாக 17 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, பிரெமென் நகரில் ஒரு வர்த்தக நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். பிரெமென் நகரம் எங்கெல்சுக்கு ஹெகலின் தத்துவத்தை அறிமுகம் செய்தது. அங்கு பல்வேறு தத்துவவியல் மாணவர்களுடனும் ஹெகலியவாதிகளுடனும் விவாதிக்கிறார் எங்கெல்ஸ்.
ஹெகலிய தத்துவங்களை நடைமுறையோடு பொருத்திப் பார்த்து படிப்படியாக பொருள்முதல்வாதக் கருத்துக்களை முன்னெடுக்கிறார். கடவுள் மறுப்பு உள்ளிட்ட சமூகத்திற்கு ‘அன்னியப்பட்ட’ கொள்கைகளைப் பேசும் எங்கெல்சைக் கண்டு அஞ்சியது அவரது குடும்பம்.
1842-ம் ஆண்டில் 22 வயதான எங்கெல்சை மான்செஸ்டருக்கு அனுப்புகிறது அவரது குடும்பம். தங்களது மகன், தொழிற்சாலைகள் நிரம்பிய மான்செஸ்டர் நகருக்குச் சென்றால் ‘வழி’க்கு வந்துவிடுவார் என்று எண்ணினார்கள். ஆனால் நேரெதிராக மான்செஸ்டர் எங்கெல்சை ஒரு மார்க்சியவாதியாக வளர்த்தெடுத்தது.
தொழிற்துறை வளர்ச்சியடைந்த இங்கிலாந்தில் எங்கெல்ஸ் தங்கியிருந்தபோது அவர் மீது அங்கிருந்த தொழிலாளர்களின் இயக்கமான சார்ட்டிஸ்ட் இயக்கம் பெரும் செல்வாக்கு செலுத்தியது. அதில் உத்வேகத்துடன், பகிரங்கமாகவே செயல்பட்ட எங்கெல்ஸ், அந்த இயக்கத்தின் பலவீனங்களைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. சட்டப்பூர்வமாக புரட்சியைக் கொண்டுவர விரும்புகின்றனர் என்று அவர்களை விமர்சித்தார்.
1843-ம் ஆண்டில் “அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனத்தின் உருவரை” என்ற தனது முதல் பொருளாதாரக் கட்டுரையை வெளியிடுகிறார் எங்கெல்ஸ். தனது மூலதனம் நூலில் பல இடங்களில் இதிலிருந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் மார்க்ஸ்.
தனது தந்தை பங்குதாரராக இருந்த ஆலையில் பொறுப்புமிக்கப் பணியில் இருந்தாலும் தனது ஓய்வு நேரங்களை ”வியர்வைக் கூடங்கள்” என்றழைக்கப்பட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளில் செலவிடுகிறார் எங்கெல்ஸ். தொழிலாளர்களின் வாழ்நிலைமை, குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மார்க்ஸ் நடத்தி வந்த பத்திரிகைக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதி அனுப்பினார் எங்கெல்ஸ்.
“சமூக ஒழுங்கின் எந்த ஒரு நலனும் கிடைக்கப் பெறாது, அனைத்துக் கேடுகளையும் தாங்கிக் கொள்ளும் ஒரு வர்க்கம்” என தொழிலாளர் வர்க்கத்தை விளிக்கும் எங்கெல்ஸ், “அத்தகைய ஒரு வர்க்கம் சமூக ஒழுங்கை மதிக்க வேண்டும் என யாரால் கோர முடியும் ?” என்று தனது பாட்டாளிவர்க்க நிலைப்பாட்டில் இருந்து முதலாளிவர்க்கத்தை நோக்கிக் கலகக் குரலை எழுப்பினார்.
1844-ம் ஆண்டில் மார்க்சை இரண்டாம் முறை சென்று சந்திக்கும் முன்னரே, எங்கெல்ஸ் ஒரு முழுமையான பொருள்முதல்வாதியாக, விஞ்ஞான சோசலிஸ்டாக மாறியிருந்தார். தனது அயராத உழைப்பின் மூலம், “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை” என்ற நூலை 1845-ம் ஆண்டில் வெளியிட்டார். தொழிலாளர்களின் வாழ்நிலையைப் பிரதிபலிக்கும் அற்புதமான படைப்பு என அதனைப் புகழ்ந்தார் மார்க்ஸ்.
அந்த சந்திப்பிலேயே மார்க்சும் எங்கெல்சும் இணைபிரியா நண்பர்களாகினர். ஒருவரை மற்றொருவர் கலந்தாலோசித்துவிட்டுதான் தங்களது படைப்புகளைக் கொண்டு வருகின்றனர். ஜெர்மன் தத்துவஞானம், புனித குடும்பம் உள்ளிட்ட படைப்புகளை இருவரும் இணைந்து படைத்தனர்.
மார்க்சின் எழுத்துக்களின் முதல் விமர்சகராக எங்கெல்ஸ் இருந்தார். அதாவது மார்க்ஸ் எனும் மாமேதையின் எழுத்துக்கள் அனைத்துமே எங்கெல்சின் கரங்களால் செழுமைப்படுத்தப்பட்ட பின்னர்தான் நூலாக வெளிவந்திருக்கிறது. அந்த அளவிற்கு மார்க்சிய சிந்தனையில் மார்க்சுடன் ஒன்றியவராக இருந்தார் எங்கெல்ஸ். ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.
எங்கெல்ஸ் பல்வேறு தனித்திறன்களை தன்னகத்தே கொண்டவராக இருந்தார். தத்துவத்தில் மட்டுமல்ல, வரலாறு, மொழி, இலக்கிய விமர்சனம், அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் வல்லுனராக இருந்தார்.
அறிவியலின் மீது தீராக் காதல் கொண்டவராக இருந்தார் எங்கெல்ஸ். இயற்பியல், இரசாயனவியல், உயிரியல், இயற்கை விஞ்ஞானம், வானவியல், மருத்துவம், புவியியல், மானுடவியல் என அனைத்துத் துறைகளிலும் பேரார்வம் கொண்டவராகவும், அறிவியலுலகின் கண்டுபிடிப்புகளைப் பொருத்திப் பார்த்து தனது தத்துவ அறிவை செழுமைப்படுத்துபவராகவும் இருந்தார்.
அறிவியலின் துணை கொண்டு கிடைக்கும் எதார்த்த உலகின் பருண்மையான, நுண்ணியமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கியல் பொருள்முதல்வாதத்தை செழுமைப்படுத்தினார் எங்கெல்ஸ்.
மார்க்சும் எங்கெல்சும் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை சமூகத்திற்குப் பொருத்தியதும் அறிவியலின் துணை கொண்டுதானே அன்றி, தங்களது மூளையில் தோன்றிய கற்பனைகளைக் கொண்டு அல்ல. மார்க்சும் எங்கெல்சும் மானுடவியலாளர் மார்கன் மற்றும் இயற்கை அறிவியலாளர் டார்வின் உள்ளிட்டவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளில் இருந்துதான் தனது தத்துவத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.
1849-ம் ஆண்டு மார்க்சும் ஜென்னியும் ஜெர்மனிலிருந்து வெளியேறி இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தனர். அங்கு அவர்களது வாழ்க்கைக்கு உதவி புரிவதற்காகவே, தனது தந்தையின் மான்செஸ்டர் ஆலையில் எழுத்தராக பணிக்கு சேர்கிறார்.
மார்க்சின் சமூக ஆய்வுக்கு உதவி செய்யும் நோக்கிற்காகவே தனது வாழ்வின் 20 ஆண்டுகாலத்தை எழுத்தராகவே கடந்தார். இந்தக் காலகட்டங்களில் தொடர்ச்சியாக மார்க்சின் படைப்புகளுக்கு உதவி புரிந்ததோடு, பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். களத்தில் தொழிலாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொள்கிறார் எங்கெல்ஸ்.
இந்தக் காலகட்டத்தில் தான் முதலாளித்துவ மூலதனத்தின் சுரண்டலையும், குரூரத்தையும், கயமைத்தனத்தையும் அம்பலப்படுத்தும் மாபெரும் படைப்பான மூலதனத்தை மார்க்ஸ் எழுதிக் கொண்டிருக்கிறார். பிற்போக்குத் தத்துவங்களைத் தோலுரித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த மார்க்சின் பார்வையை, அரசியல் பொருளாதாரத்தின் பக்கம் மடைமாற்றிவிட்டவர் எங்கெல்ஸ். மார்க்ஸ் தனது நூலுக்கான தயாரிப்பின் போது சந்தித்த அனைத்து கடுமையான பிரச்சினைகளையும் எங்கெல்சுடன் விவாதித்தார். மார்க்சின் மனசாட்சியாக, மார்க்சின் எழுத்துக்களுக்கு கூரிய விமர்சகனாகத் திகழ்ந்தார் எங்கெல்ஸ்.
மார்க்சின் ஆய்வுக்காக தனது சொந்த ஆய்வுகளின் மீதான அக்கறைகளை ஒதுக்கி வைத்தார் எங்கெல்ஸ். மார்க்ஸ் இதை நினைத்து பலமுறை வருத்தமடைந்தார். 1867-ம் ஆண்டில் தனது மூலதனம் நூலின் முதல் தொகுதியின் அச்சுப்படிகளை திருத்திய பின்னர், மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடித்ததில், “ இந்தத் தொகுதியின் வேலை முடிந்துவிட்டது. உங்கள் உதவியினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. உங்களுடைய தியாகம் இல்லையென்றால் மூன்று தொகுதிகளையும் எழுதுவதற்கு அவசியமான ஏராளமான வேலையை என்னால் ஒருபோதும் செய்து முடித்திருக்க இயலாது. நன்றிப் பெருக்குடன் உங்களை நெஞ்சாரத் தழுவுகிறேன்.” என்று எழுதுகிறார்.
சுமார் இருபதாண்டுகள் மான்செஸ்டரில் தனது தந்தையின் ஆலைச் “சிறையில்” பணியாற்றிய பிறகு அங்கிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட எங்கெல்ஸ், லண்டனுக்குச் சென்று மார்க்ஸ் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே குடியேறினார்.
இதற்குப் பின்னான காலகட்டத்தில் எங்கெல்ஸ் தமது இயற்கை குறித்த தமது அறிவியல் ஆய்வையும், மானுடவியல் குறித்த ஆய்வையும் தொடர்ந்தார். இயற்கையின் இயக்கவியல் என்ற நூலை எழுதும் பணியில் ஈடுபட்டார். அப்போதும் மார்க்சின் படைப்புகளுக்கு உதவி புரிவது குறையவில்லை. மாறாக அதிகரித்தது.
மார்க்சியத்தைத் திரித்தும், அதனை முழுமையாகப் படிக்காமல் அதன் மீது விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சியை அள்ளி வீசிய சமகாலத்தவர்களுக்கு எங்கெல்ஸ் மார்க்சியத்தின் உச்சிமுகட்டில் நின்று சம்மட்டியடி கொடுத்தார். அவரது அத்தகையதோர் ஆகச் சிறந்த படைப்புதான் “டூரிங்குக்கு மறுப்பு” எனும் நூல். மார்க்சியத் தத்துவத்தை சகல துறைகளுக்கும் பொருத்தி, அதனை விரிவாக விளக்கினார். மார்க்ஸ் கூறியபடி அவரது “Alter Ego” தான் எங்கெல்ஸ் என்பதை அந்த நூல் நிரூபிக்கிறது.
மார்க்சுக்கு சற்றும் குறையாத அளவிற்கு மார்க்சியத்திற்கு பங்களிப்பு செய்துள்ள எங்கெல்ஸ், மார்க்ஸ் இருக்கும்போதும் சரி , மறைந்த பின்னும் சரி எப்போதும் தன்னடக்கத்துடனேயே இருந்துவந்தார் என்பது அவரது எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கும்.
படிக்க :
♦ மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !
♦ எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்
எங்கெல்ஸ் மீதும் அவரது மேதைமை மீதும் மார்க்ஸ் பெருமதிப்புக் கொண்டிருந்தார். ஒருமுறை மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில், “முதலாவதாக எல்லாமே எனக்குத் தாமதமாகத்தான் தெரிகிறது, இரண்டாவதாக, நான் எப்பொழுதும் உங்களுடைய காலடிகளைப் பின்தொடர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.” என்று குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறார் வால்கோவ். அந்த அளவிற்கு எங்கெல்சின் அறிவுக்கூர்மையை மதித்திருக்கிறார் மார்க்ஸ்.
”அறிவின் படைப்புச் சக்தியில், மென்மேலும் புதியனவற்றைத் தேடுகின்ற ஆராய்ச்சி சிந்தனையின் தகுதி மற்றும் ஆழத்தில், மேலான இயக்கவியல் ரீதியான நடையழகில், பொதுமைப்படுத்தல்களின் மணிச் சுருக்கச் செறிவில்” எங்கெல்சை மார்க்சுடன் ஒப்பிட முடியாது என்றாலும் வேறு சில விசயங்களில் எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் தகுதி மிக்கவராக இருந்தார். புதியனவற்றைத் தன்வயப்படுத்திக் கொண்டு திருத்தியமைப்பது, விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய மிகப் பல்வேறான துறைகளின் விவரங்களை மிகச் சுதந்திரமான முறையில் ஒருங்கிணைக்கக் கூடிய ஆற்றல்களில் தனிச்சிறப்பானவர் எங்கெல்ஸ்.
மார்க்ஸ் மரணமடையும் முன்னர், மூலதனம் நூலின் ஒரு பகுதியை மட்டுமே வெளியிட்டிருந்தார். மீதமுள்ள பகுதிகள் வெறும் கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தன. மார்க்சின் மரணத்திற்குப் பின்னர் அவற்றை நூலாகக் கொண்டுவரும் மாபெரும் பொறுப்பு எங்கெல்ஸின் தோள்களின் மீது இறங்கியது. ‘மூலதனம்’ எனும் மனிதகுலத்தின் விடிவெள்ளியை நூல் வடிவில் வெளிக் கொண்டு வருவதற்காக தனது இறுதிக்காலம் வரை உழைத்தார் எங்கெல்ஸ்.
இதற்காக தனது இயற்கையின் இயக்கவியல் குறித்த ஆய்வைக் கைவிட்டார். தனது நண்பருக்காக அல்ல. மனித குலத்திற்கு மார்க்சியத்தின் மிகப்பெரும் கொடையான ‘மூலதனம்’ நூலை கொண்டு வருதற்காகவே தனது தனிப்பட்ட ஆய்வைக் கைவிட்டார் எங்கெல்ஸ்.
மார்க்ஸ் மரணமடைந்த பிறகு சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எங்கெல்ஸ். மார்சியத்தைத் திரித்து பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை மழுங்கடிக்கத் துடித்த பல்வேறு முதாலாளித்துவ – ’சோசலிச’ காளான்களுக்கு எதிராகத் தொடர்ந்து போர் தொடுத்தார் எங்கெல்ஸ்.
சர்வதேச தொழிலாளிவர்க்க இயக்கத்தில், அவரே முழுப் பொறுப்பையும் வகித்தபோதிலும் அவர் முன்பிருந்த மாதிரியே அடக்கமானவராகவும், ஆர்ப்பாட்டமில்லாதவராக இருந்தார். “என்னுடைய காலஞ்சென்ற சமகாலத்தவர்களுக்கு, எல்லோரைக் காட்டிலும் மார்க்சுக்குக் கிடைக்க வேண்டிய கெளரவம் கடைசியாக எஞ்சியவன் என்ற முறையில் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விதி முடிவு செய்திருக்கிறது” என்றார் அடக்கத்துடன்.
மார்க்சும், எங்கெல்சும் சுட்டிக்காட்டிய, சமூகத்தின் மீதான, இயற்கையின் மீதான முதலாளித்துவ சுரண்டல்கள் இன்றும் நீடிக்கின்றன. அவ்விருவரும் படைத்துத் தந்த மார்க்சியம் எனும் ஆய்வுமுறையை சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தவல்லவர்களால் மட்டுமே இந்தச் சுரண்டலை ஒழிக்க ஒரு புரட்சியை நடத்த முடியும். அத்தகையதோர் பொன்னான கடமையை செய்துமுடிப்போமென தோழர் எங்கெல்ஸின் 200-ம் ஆண்டு நிறைவடையும் தருணத்தில் உறுதியேற்போம்.
வினவு
மார்க்சின் சமூக ஆய்வுக்கு உதவி செய்யும் நோக்கிற்காகவே தனது வாழ்வின் 20 ஆண்டுகாலத்தை எழுத்தராகவே கடந்தார். இந்தக் காலகட்டங்களில் தொடர்ச்சியாக மார்க்சின் படைப்புகளுக்கு உதவி புரிந்ததோடு, பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். களத்தில் தொழிலாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொள்கிறார் எங்கெல்ஸ்.
ஏங்கெல்ஸ் அவர்கள் மார்க்ஸ் அவர்களுக்காக 20 வருடம் வேலைக்கு சென்றார். அதை பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டு சென்றது போல் தெரிகிறது.
எங்சல்ஸ் சிறந்த தொழிலாளர் படை தலைவர் அதை பற்றி ஏன் கூறவில்லை.
அதற்கான தரவுகள் திரட்டுவது போன்றவற்றில் ஏற்பட்ட சில கால தாமதங்கள் காரணமாக இந்தக் கட்டுரையில் ஒரு வரியில் கடந்து போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
விரைவில் அது குறித்து தனிக் கட்டுரை ஒன்றை வெளியிடுகிறோம்.
தொடர்ந்து வினவோடு இணைந்திருங்கள் !