மார்க்ஸ் பிறந்தார் – 24
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
மார்க்சியத்தின் உருவாக்கத்தில் மார்க்சும் ஏங்கெல்சும் ஆற்றிய வரலாற்றுப் பணிகளை கூர்மையோடும் உணர்ச்சிகரமாகவும் எடுத்து வைக்கிறது இப்பகுதி. இரு மகத்தான மனிதர்களும் ஒருவருக்கொருவர் இணைந்தும், ஆதரவளித்தும், பகிர்ந்தும் எப்படி மார்க்சிய தத்துவத்தை வளர்த்தெடுத்தார்கள் என்பதை அறிய உதவுகிறார் நூலாசிரியர். ஏங்கெல்சின் பல்துறைத் திறமைகள், பல மொழிகளை அறிந்திருந்தது, தனது நண்பருக்காக சலீப்பூட்டும் வர்த்தகப் பணிகளை ஏற்றது, புரட்சியின் எதிர்காலத்தை மேதாவிலாசத்துடன் கணித்தது அனைத்தையும் சுருக்கமாக அறியத் தருகிறார் நூலாசிரியர். இறுதியில் இரண்டு மாபெரும் மனிதர்களின் வரலாற்றுப் பயணத்தை வியப்போடும், தோழமையோடும் அறிந்து கொண்ட உற்சாகத்தை பெறுகிறோம்.
– வினவு
10. மேதையின் அருகில் மற்றொரு மேதை – 1
நான் மார்க்சையும் எங்கெல்சையும் இன்னும் “நேசிக்கிறேன்”, அவர்களைத் திட்டுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. இல்லை, அவர்கள் உண்மையான மனிதர்கள்! நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையை நாம் விட்டுவிடக் கூடாது. வி. இ. லெனின்(1)
1880-களின் தொடக்கத்தில் மேற்கு ஐரோப்பா பாரிஸ் கம்யூன்வாதிகள் ஏற்படுத்திய புரட்சிகரமான கொந்தளிப்புக்களின் தாக்கத்தில் இன்னும் குமுறிக் கொண்டிருந்தது. ருஷ்யப் பேரரசு மிதவாதத்துடன் சல்லாபித்த பிறகு அதன் வாழ்க்கையிலேயே மிகக் கடுமையான, பிற்போக்குவாதப் பத்தாண்டுகளில் ஒன்றில் நுழைந்து விட்டது.
அங்கே “கலகம் செய்பவர்களையும்” “மிதவாதிகளையும்” களையெடுக்க வேண்டும், பண்ணையடிமை முறையை மறுபடியும் ஏற்படுத்த வேண்டும் என்ற பேச்சுக்கள் ஆரம்பமாயின; ருஷ்யாவின் முற்போக்கான அறிவுப் பகுதியினருடைய இதயங்களில் நம்பிக்கை முறிவும் ஆதரவற்ற நிலைமையும் குடியேறின.
புரட்சிகர இயக்கத்தின் மையம் ருஷ்யாவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது, புரட்சிகர இயக்கத்தில் புதிய எழுச்சி மற்றும் சோஷலிஸச் சீரமைப்புக்குரிய எல்லா நம்பிக்கைகளுமே இனி ருஷ்யாவுடன்தான் இணைக்கப்பட்டிருக்கின்றன என்று இந்தக் காலகட்டத்தில் சில ஐரோப்பிய அறிஞர்கள் கூறினார்கள். அவர்களில் பிரெடெரிக் எங்கெல்சும் ஒருவர். எங்கெல்ஸ் ருஷ்யப் புரட்சிக்காரரும் சோஷலிஸ்டுமான ஹேர்மன் லபாதினை 1883 மார்ச்சில் லண்டனில் சந்தித்த பொழுது பின்வருமாறு கூறினார்:
“பீட்டர்ஸ்பர்கில் அண்மை எதிர்காலத்தில் என்ன செய்யப்படும் என்பதைப் பொறுத்தே இப்பொழுது எல்லாம் இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள சிந்திக்கின்ற, தொலைநோக்குடைய, நுண்ணறிவுடைய மனிதர்கள் அனைவருடைய கண்களும் அதையே உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன.”
பின்னர் அவர் இன்னும் அதிகத் திட்டவட்டமாகக் கூறினார்:
“ருஷ்யாதான் இந்த நூற்றாண்டின் பிரான்ஸ். ஒரு புதிய சோஷலிசப் புனரமைப்புக்கான புரட்சிகர முன்முயற்சி நியாயமாகவும் சட்ட ரீதியாகவும் ருஷ்யாவுக்கு உரியது.”(2)
ருஷ்யாவின் கடைசி ஜாரான இரண்டாவது நிக்கலாயைப் பற்றியும் அவருடைய ஆட்சியின் முடிவைப் பற்றியும் எங்கெல்சின் வர்ணனை மதிநுட்பம் நிறைந்தது:
“அவர் அறிவிலும் உடலிலும் பலவீனமான அரை முட்டாள். ஒருவருக்கொருவர் எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றவர்களிடம் வெறும் விளையாட்டு பொம்மையாக மட்டுமே இருக்கின்ற ஒரு நபருடைய தீர்மானமில்லாத ஆட்சிக்கு இதுதான் காரணம்: ருஷ்யாவின் எதேச்சாதிகார அமைப்பை வேரோடு ஒழித்துக் கட்டுவதற்கு இது அவசியமானதே.”(3)
படிக்க :
♦ மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
♦ மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
எங்கெல்சின் இந்த முன்னறிவிப்பு சிறப்பானது என்றபோதிலும் அதில் எங்கெல்சின் அசாதாரணமான அறிவுக் கூர்மையைத் தவிர வேறு தெய்விகமான ஆரூடம் ஏதுமில்லை.
எங்கெல்சின் மதிநுட்பம் அவருடைய நண்பர்களைக் கூட அடிக்கடி ஆச்சரியப்படச் செய்வதுண்டு. 1848-ம் வருடப் புரட்சியின் போது மார்க்ஸ் வெளியிட்ட Neue Rheinische Zeitung, ஹங்கேரியில் நடைபெற்று வந்த புரட்சிகர யுத்தத்தைப் பற்றி சில சமயங்களில் கட்டுரைகளை வெளியிட்டது. அக்கட்டுரைகள் வளமான விவர ஞானத்தையும் இராணுவ நடவடிக்கைகளின் வளர்ச்சியைப் பற்றித் துல்லியமான முன்னறிவிப்பையும் கொண்டிருந்தபடியால் அவற்றை ஹங்கேரிய இராணுவத் தலைவர்களில் ஒருவர்தான் எழுதியிருக்க முடியும் என்று நம்பப்பட்டது. ஆனால் ஹங்கேரிக்கு ஒரு முறை கூடப் போகாத ஒரு இளைஞர் ஜெர்மனியில் இருந்து கொண்டு இக்கட்டுரைகளை எழுதினார். அந்த இளைஞருடைய பெயர் பிரெடெரிக் எங்கெல்ஸ்.
1870-ம் வருடத்தில் பிரெஞ்சு-பிரஷ்ய யுத்தத்தின் போது எங்கெல்ஸ் எழுதிய கட்டுரைகள் இராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தன; ஏனென்றால் அவர் ஸெடான் சண்டையையும் பிரெஞ்சு இராணுவத்தின் தோல்வியையும் முன்னரே அறிவித்திருந்தார். அன்று முதல் மார்க்ஸ் குடும்பத்தினர் அவருக்கு “ஜெனரல்” என்ற பட்டப்பெயரைக் கொடுத்தார்கள்.
எங்கெல்சின் கம்பீரமான இராணுவத் தோற்றமும் இதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். முதிர்ந்த வயதிலும் எங்கெல்சின் மிடுக்கான தோற்றம் அவருடைய நண்பர்களை பிரமிக்க வைத்தது. பிரெடெரிக் லெஸ்னர் அவரைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்: “எங்கெல்ஸ்…. ஒல்லியாக, உயரமாக இருந்தார், அவர் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கினார், அவர் பேச்சு சுருக்கமாகவும் உறுதியாகவும் இருக்கும், அவர் படைவீரரைப் போல விறைப்பாக நடப்பார்.”(4)
இராணுவப் போர்த்திற நுட்பங்களைப் பற்றி எங்கெல்சின் ஆராய்ச்சிகள் ஆழமானவை என்றாலும் அவை அவருடைய பல அக்கறைகளில் ஒன்றாக மட்டுமே இருந்தன. அவருடைய வளமான ஆளுமை அத்தகைய பல அக்கறைகளை வெற்றிகரமாக நிறைவேற்றக் கூடிய தகுதியைக் கொண்டிருந்தது.
எங்கெல்சின் பல்வகையான அக்கறைகளும் பரந்த அறிவும் திறமைகளும் அவருடைய தனியான குணாம்சங்களாகும். 19-ம் நூற்றாண்டு பண்பாட்டின் எல்லாத் துறைகளிலும் தலைசிறந்த மேதைகளை உருவாக்கியது. ஆனால் இந்தப் பின்னணியில் கூட எங்கெல்சின் கலைக்களஞ்சிய அறிவு (மார்க்சைப் போல) ஒப்புவமை இல்லாததாகும். இந்த அம்சத்தில் அவரை அரிஸ்டாட்டில், லியனார்டோ டாவீன்சி, கேதே, ஹெகல் ஆகியோருடன் ஒப்பிட முடியும். எங்கெல்ஸ் தத்துவஞானியாக, அரசியல் பொருளியலாளராக, வரலாற்றாசிரியராக, மொழியியலாளராக, இலக்கிய விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக, அரசியல் கட்டுரையாளராக இருந்தாரென்றல் இதைப் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் ஸ்தூலமான சமூகவியல் ஆராய்ச்சியை நிறுவியவர் என்று எங்கெல்சைக் குறிப்பிட முடியும்.
அவர் எழுதிய இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூல் அதற்குச் சிறந்த உதாரணமாகும். அவர் பெளதிகம், இயந்திரவியல், இரசாயனம், உயிரியல், கணிதம், வானியல் மற்றும் சில தொழில்நுட்பத் துறைகளில் ஆழமான புலமையைக் கொண்டிருந்தார். அதன் பலனாகத்தான் இயற்கையின் இயக்க இயல் என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில் இயற்கை விஞ்ஞானங்களின் மொத்த வளர்ச்சியையுமே தத்துவஞான ரீதியில் பொதுமைப்படுத்துவதற்கு அவரால் முடிந்தது. அவர் பல மொழிகளில் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார்; அவற்றின் கிளை மொழிகளைக் கூட அவர் நன்றாகப் பேசக் கூடியவர்.
“எங்கெல்ஸ் இருபது மொழிகளில் திக்குகிறார்” என்று ஒரு சோஷலிஸ்ட் வேடிக்கையாகக் கூறியதுண்டு (உணர்ச்சி வசப்படுகின்ற பொழுது எங்கெல்ஸ் சிறிதளவு திக்குவதுண்டு). அதே சமயத்தில் அவர் தந்தக் கோபுரத்தில் உட்கார்ந்திருக்கும் படிப்பாளி அல்ல, புத்தகப் புழுவும் அல்ல. அவர் விளையாட்டுக்கள் குதிரையேற்றம், வேட்டையாடுதல் ஆகியவற்றில் பங்கெடுப்பார்; அவர் கடை உதவியாளராக, வர்த்தகராக, வர்த்தகப் பயணியாக, தொழிலதிபராக, நிதியதிபராகவும் இருக்க வேண்டுமென்பது விதியின் முடிவு. அவர் அறிவின் எல்லாத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்-பிரசவ மருத்துவமும் அதில் அடங்கியிருந்தது.
இளமைப் பருவத்தில் எங்கெல்ஸ் கவிதைகளை எழுதுவதில் ஆர்வத்தோடு முயற்சி செய்தார், எதிர்காலத்தில் இலக்கியம் அல்லது கலைத் துறையில் சேவை புரிய வேண்டும் என்றும் தீவிரமாக நினைத்தார். அவர் கணிசமான கவிதை நூல்களை எழுதினார். இவை அக்காலத்திய பத்திரிகைகளில் வெளிவந்தன. அவற்றின் நகைச்சுவையையும் அங்கதத் திறமையையும் விமரிசகர்கள் பாராட்டினார்கள்.
1840-களின் தொடக்கத்தில் எங்கெல்ஸ் ஒரு ரெஜிமெண்டில் இராணுவ சேவை செய்தார். பிறகு பாடேன் எழுச்சியில் பங்கெடுத்தார். மூன்று சண்டைகளில் போராடினார். போர்க்களத்தில் அவரைப் பார்த்தவர்கள் அனைவரும் அவருடைய வீரத்தையும் நிதானத்தையும் நெடுங்காலம் வரை நினைவில் வைத்திருந்தார்கள்.
1830-களின் முடிவுக்குள்ளாகவே பிரெடெரிக் எங்கெல்ஸ் தன்னுடைய எதிர்கால நண்பருடைய சிறப்புமிக்க திறமை, வெல்ல முடியாத ஆற்றல், அஞ்சா நெஞ்சம் ஆகியவற்றைப் பற்றி ஏராளமாகக் கேள்விப்பட்டிருந்தார். அவர்களுடைய முதல் சந்திப்பு 1842 நவம்பரில் கொலோனில் நடைபெற்றது. எங்கெல்ஸ் இங்கிலாந்துக்குப் போகும் வழியில் கொலோனில் Rhenische Zeitung அலுவலகத்துக்கு வந்தார். அப்பொழுது மார்க்ஸ் அப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அச்சந்திப்பு அவர்களுக்கிடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தவில்லை. காரணங்கள் சாதாரணமானவையே. ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர்கள் பாரிசில் மீண்டும் சந்தித்த பொழுது தாங்களிருவரும் சமூக வளர்ச்சியைப் பற்றி அடிப்படையில் ஒரே மாதிரியான கருத்துக்களுக்கு வெவ்வேறு பாதைகளின் மூலமாக வந்திருப்பதைக் கண்டனர்; அது அவர்களுக்கு அதிகமான மகிழ்ச்சியைக் கொடுத்தது.
ஒரு முறை சந்தித்துவிட்ட பிறகு இருவருடைய பாதைகளும் மார்க்ஸ் மரணமடையும் வரை இணைந்தே சென்றன. மார்க்சியம் ஒரு மனிதருடைய பெயரைத் தாங்கியிருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்ஸ் ஒரு முறை எங்கெல்சைத் தன்னுடைய “alter ego” (“இரண்டாவது நான்”) என்று அறிமுகம் செய்தார்.
மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையிலிருந்த நட்பு மனிதர்களுக்கிடையில் நட்பைப் பற்றி தொன்மைக் காலத்தில் கூறப்பட்ட மிகவும் உணர்ச்சிகரமான கதைகளைக் காட்டிலும் கூட உயர்வானது என்று லெனின் ஒரு சமயத்தில் கூறினார்.
மார்க்சும் எங்கெல்சும் அறிவிலும் குணாம்சத்திலும் ஒத்த தன்மையுடையவர்கள் அல்ல; ஆனால் அதனால்தான் அவர்கள் ஒருவருக்கொருவர் மிகச் சிறப்பாகப் பொருந்தி உதவி செய்ய முடிந்தது.
நான் எப்பொழுதும் மார்க்சுக்குப் “பக்க வாத்தியமாகவே” இருந்தேன் என்று எங்கெல்ஸ் கூறிய சொற்களை எல்லோரும் வழக்கமாக மேற்கோள் காட்டுகிறார்கள். அது உண்மை தான். ஆனால் மார்க்ஸ் ஒரு சமயத்தில் தன் நண்பருக்குப் பின்வருமாறு எழுதினார்: “முதலாவதாக எல்லாமே எனக்குத் தாமதமாகத்தான் தெரிகிறது, இரண்டாவதாக, நான் எப்பொழுதும் உங்களுடைய காலடிகளைப் பின்தொடர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.”(5) மார்க்ஸ் எழுதியிருக்கும் சாட்சியத்தை நாம் மறக்கக் கூடாது.
எங்கெல்ஸ் அசாதாரணமான திறமைகளைக் கொண்டவரே என்றாலும் அறிவின் படைப்புச் சக்தியில், மென்மேலும் புதியனவற்றைத் தேடுகின்ற ஆராய்ச்சி சிந்தனையின் தகுதி மற்றும் ஆழத்தில், மேலான இயக்கவியல் ரீதியான நடையழகில், பொதுமைப்படுத்தல்களின் மணிச் சுருக்கச் செறிவில் அவரை மார்க்சுடன் ஒப்பிட முடியாது என்பது உண்மையே. ஆனால் சில விஷயங்களில் எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் தகுதி மிக்கவராக இருந்தார். புதியனவற்றைத் தன்வயப்படுத்திக் கொண்டு திருத்தியமைப்பது அவருக்குச் சுலபம், ஒரே பொருளைப் பற்றிய ஆராய்ச்சியில் நெடுங்காலம் மூழ்கிப் போய்விட மாட்டார், விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய மிகப் பல்வேறான துறைகளின் விவரங்களை அவர் மிகச் சுதந்திரமான முறையில் ஒருங்கிணைக்கக் கூடியவர்.
குறைவான ஆயுதங்களை வைத்திருந்த போர் வீரராகிய எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் அதிகமான வேகத்தோடு சென்றார், சூழ்ச்சி முறைத் திறத்தில் அதிகச் சுதந்திரமாக இயங்கினார், எதிரியின் கோட்டைகளை முன்னேறித் தாக்கினர் என்று எங்கெல்சைப் பற்றிச் சிறந்த ஆராய்ச்சிகளைச் செய்திருக்கும் சோவியத் அறிஞர் எம். செரெப்ரியக்கோவ் கூறியிருப்பது பொருத்தமானதே. விஞ்ஞான கம்யூனிச மூலவர்களின் ஆன்மிக வளர்ச்சியின் தொடக்கக் கட்டங்களில் கூட இது தெளிவாகத் தெரிந்தது.
படிக்க :
♦ மூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி ?
♦ இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம் ! சிறப்புக் கட்டுரை
எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் இரண்டு வயது இளையவர் என்றாலும் அவரைக் காட்டிலும் முன்பே பத்திரிகைகளில் – முதலில் கவிதையும் பிறகு கட்டுரைகளும் – எழுதத் தொடங்கினார். அன்றைக்கிருந்த சமூக அமைப்பை எதிர்ப்பதிலும் அவர் முந்தினார், மார்க்சுக்கு முன்பே அவர் புரட்சிகர ஜனநாயகவாதியாகவும் குடியரசுவாதியாகவும் மாறினார். அவர்களிருவரில் அவர்தான் முதலில் கற்பனாவாத சோஷலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் – அதன் அன்றைய வடிவத்தில் – மாறினார்; அரசியல் பொருளாதாரத்தை முதலில் விமர்சனம் செய்ததும் அவரே. அவருடைய முதல் “அடிச்சுவடுகளைப்” பின்தொடர்ந்தே மார்க்ஸ் இயற்கை விஞ்ஞானத்தின் சாதனைகளில் அக்கறை எடுத்துக் கொண்டார்.
ஆனால் எங்கெல்ஸ் மேதாவிலாசம் நிறைந்த உருவரைகளை எழுதிய அதே துறையில் மார்க்ஸ் சகாப்தத்தைப் படைக்கின்ற நூல்களை எழுதினார். ஒவ்வொருவரும் தனித்துவம் நிறைந்த நடை, திறமைகள் மற்றும் தமக்கே உரிய விஞ்ஞான விருப்பார்வங்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவர் மீதொருவர் கொண்டிருந்த ஈடுபாட்டை அதிகப்படுத்துவதற்கு இது உதவியது. எங்கெல்ஸ் ஒரு கலைக்களஞ்சியத்தைப் போன்றவர் என்று மார்க்ஸ் கருதினார். பகல் அல்லது இரவில் எந்த நேரத்திலும் வேலை செய்யக் கூடிய அவருடைய திறமையை, அவருடைய வேகமான எழுத்தை, அவர் “அரக்கத்தனமான” அறிவுக் கூர்மையைக் கொண்டிருந்ததை மார்க்ஸ் வியந்து போற்றினார்.
அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி அவர்களுடைய ஆராய்ச்சிகளை இன்னும் நுணுக்கமாக விவாதிப்பது அவசியம். அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்துக்கு உருவரைகள் என்ற தலைப்பில் எங்கெல்ஸ் எழுதிய கட்டுரை 1844-இல் Deutsch-Französische Jahrbücherஇல் வெளியாயிற்று. அதன் ஆசிரியருக்கு அப்பொழுது இருபத்துநான்கு வயதே ஆகியிருந்தது. ஆனால் அக்கட்டுரை நவீன சமூகத்தின் வாழ்க்கையைப் பற்றி அடிப்படையான கேள்விகளை மிகத் துணிவாகவும் ஆணித்தரமாகவும் எழுப்பியபடியால், அதுவரை யாரும் சந்தேகிக்கத் துணியாத மூலச்சிறப்பான அரசியல் பொருளாதாரத்தின் வறட்டுக் கோட்பாடுகளை முழுமையாக விமர்சித்தபடியால் எங்கெல்ஸ் அந்தத் துறையில் அறிஞர் என்று உடனடியாக அங்கீகரிக்கப்பட்டார்.
அந்தக் கட்டுரை அடிப்படையில் புதுமையான பல கருத்துக்களைக் கொண்டிருந்தது, மார்க்ஸ் பிற்காலத்தில் மூலதனத்தில் இவற்றை வளர்த்துக் கூறினார். அதுதான் விஞ்ஞான சோஷலிசத்தின் முதல் பொருளாதாரக் கட்டுரை என்பது உண்மை. மார்க்ஸ் மூலதனத்தில் இக்கட்டுரையை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.
இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு இங்கிலாந்தில் தொழிலாளிவர்க்கத்தின் நிலைமை என்ற நூலை எங்கெல்ஸ் வெளியிட்டார். அந்தப் புத்தகம் ஏராளமான மெய்விவரங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது, பாட்டாளி வர்க்கம் துன்பப்பட்டு நலிகின்ற வர்க்கம் மட்டுமல்ல, சமூகத்தில் புரட்சிகரமான பாத்திரத்தைக் கொண்டிருக்கின்ற வர்க்கம் என்ற முடிவுக்கு எங்கெல்ஸ் வருவதற்கு அவை ஆதாரமாக இருந்தன.
இப்புத்தகம் எவ்வளவு புதுமையான முறையில், உணர்ச்சி வேகத்தோடு எழுதப்பட்டிருந்தது என்று மார்க்ஸ் பிற்காலத்தில் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். அதன் துணிவான முன்னறிவை, கல்வி ரீதியான அல்லது விஞ்ஞான ரீதியான சந்தேகங்கள் இல்லாதிருத்தலை மார்க்ஸ் போற்றினார். லெனினும் இப்புத்தகத்தை மிகவும் உயர்வாகக் கருதினார். தொழிலாளி வர்க்கத்தின் துன்ப நிலையைப் பற்றி இவ்வளவு ஆணித்தரமான, உண்மையான சித்திரம் 1845-க்கு முன்னரோ அல்லது பின்னரோ எழுதப்படவில்லை என்பது அவருடைய கருத்தாகும்.
இவ்வளவு சிறப்பான அரங்கேற்றத்துக்குப் பிறகு அவருடைய அடுத்த பெரிய நூல் 1878-இல் வெளியாயிற்று. இந்த இரண்டு புத்தகங்களுக்கும் இடைவெளி முப்பத்துமூன்று வருடங்கள். ஆனால் இந்த நீண்ட காலத்தின் போது அவர் முற்றிலும் எழுதாமலிருந்து விடவில்லை. எங்கெல்ஸ் பத்திரிகைகளிலும் பிரசுரங்களிலும் எண்ணற்ற கட்டுரைகளை எழுதினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரால் பெரிய அளவில் ஒரு நூலை எழுத முடியவில்லை. இது அவருடைய வாழ்க்கையில் மிகவும் வருத்தமளிக்கின்ற அம்சங்களில் ஒன்றாகும்.
மார்க்சும் எங்கெல்சும் ஜெர்மனியின் புரட்சிகரமான சம்பவங்களில் மிகச் சுறுசுறுப்பான, நேரடியான பாத்திரத்தை வகித்த பிறகு 1849-இல் ஜெர்மனியிலிருந்து வெளியேறி இங்கிலாந்துக்கு வந்தனர். மார்க்ஸ் குடும்பம் இங்கிலாந்தில் வாழ்க்கை நடத்துவதற்கு எந்த வழியும் இல்லாமலிருந்தபடியால் எங்கெல்ஸ் அவர்களுக்கு உதவி செய்ய விரும்பினார். எனவே மாஞ்செஸ்டரில் அவருடைய தகப்பனார் பங்கு தாரராக இருந்த நெசவாலையில் எழுத்தராக வேலை செய்தார். இந்த “வர்த்தக அடிமைத் தனத்துக்கு” அவர் இருபது வருடங்களே தியாகம் செய்தார்!
இந்தக் காலம் முழுவதும் மார்க்சும் எங்கெல்சும் உற்சாகமான கடிதத் தொடர்பு வைத்திருந்தார்கள். எங்கெல்ஸ் மிகவும் வசதியான நிலைமையில் இருந்ததாகச் சொல்ல முடியாது, ஆனால் அநேகமாக ஒவ்வொரு கடிதத்திலும் மார்க்சுக்கு ஏதாவதொரு சிறு தொகைக்கு செக் வைத்திருப்பதாக அவர் எழுதுவதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்வதும் அதை ஏற்றுக் கொள்வதும் மிகவும் மேன்மையான மனிதர்களால் தான் முடியும் என்று ஃப்ரான்ஸ் மேரிங் எழுதியிருப்பது முற்றிலும் சரியே. அது வெறும் பொருளாயத உதவியைப் பற்றிய பிரச்சினை அல்ல.
New-York Daily Tribune stairs என்ற பத்திரிக்கை மார்க்சைக் கட்டுரைகள் எழுதும்படி கேட்டுக் கொண்ட பொழுது அவர் எழுதிய கட்டுரைகளை எங்கெல்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஏனென்றால் அவருடைய நண்பர் ஆங்கிலத்தில் இன்னும் போதிய சொல்வளம் பெற்றிருக்கவில்லை.
மார்க்ஸ் மூலதனம் நூலை எழுதிக் கொண்டிருந்த பொழுது தோன்றிய கடினமான எல்லாப் பிரச்சினைகளையும் எங்கெல்சுடன் விவாதித்தார். மேலும் எங்கெல்சினுடைய கருத்து மார்க்சுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. மார்க்ஸ் தன்னுடைய லண்டன் வாழ்க்கைக் காலகட்டத்தில் எங்கெல்சைக் கலந்து கொள்ளாமல் ஒரு நடவடிக்கை கூடச் செய்யவில்லை, ஒரு புத்தகம் கூட வெளியிடவில்லை.
அவர்கள் புனிதக் குடும்பம், ஜெர்மன் சித்தாந்தம் ஆகிய நூல்களைக் கூட்டாக எழுதினார்கள். அந்தப் படைப்பாற்றல் கொண்ட ஒத்துழைப்பில் தொடங்கிய நட்பு அவர்களுடைய புரட்சிகர நடவடிக்கையினால் பலமடைந்து காலப் போக்கில் மேலும் வலுப்பெற்றது. அவர்களுடைய ஆன்மிக உறவு மிகவும் பலமாக இருந்தபடியால் ஒருவரின்றி அடுத்தவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
குறிப்புகள்:
(1)V. I. Lenin, Collected Works, vol. 35, p. 281.
(2) Reminiscences of Marx and Engels, p. 205.
(3) Marx, Engels, Werke, Bd, 39, Berlin, 1968, S.313.
(4) Reminiscences of Marx and Engels, p. 174.
(5) Marx, Engels, Werke, Bd. 30, S. 418.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.
முந்தைய 23 பாகங்களை படிக்க: