மார்க்ஸ் பிறந்தார் – 28 – இறுதி பகுதி
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

முடிவுரை

வருடைய பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும்! – பிரெடெரிக் எங்கெல்ஸ்(1)

ஜென்னி மார்க்ஸ் மரணமடைந்து ஒரு வருடத்துக்குப் பிறகு, 1883 மார்ச் 14-ம் தேதியன்று கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை”(2) என்று எங்கெல்ஸ் எழுதினார்.

மார்க்சின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருடைய இலட்சியம், அவருடைய கருத்துக்கள் மனிதகுலத்துக்குப் பெரு நிதியாகும். அதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூற இயலாது.

லண்டனில் உள்ள காரல் மார்க்சின் நினைவிடம்.

மனிதகுலக் கலாச்சாரத்தின் மொத்த வரலாற்றிலுமே மார்க்சியத்துடன் எந்த அளவிலாவது ஒப்பிடக் கூடிய ஒரு நிகழ்வு ஏற்பட்டதில்லை. அது வரையிலும் தத்துவஞானிகள் உருவாக்கிய தத்துவங்கள் ஒரு சிறு குழுவின் உடைமையாக மட்டுமே இருந்தன. அத்தத்துவங்கள் யதார்த்தத்தின் தனித்தனியான அம்சங்களை விளக்கின, அல்லது உலகத்தைக் கருத்தியலாக எடுத்துக்காட்டின.

அவர்கள் தமது உறுதியான நம்பிக்கைகளுக்கு ஏற்ப இதுவரையிலும் உலகத்திலிருந்த எல்லாவற்றையும் விளக்க முற்பட்டார்கள். தாங்கள் கூறுவதே முடிந்த முடிவு, மற்றவர்கள் இவற்றை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். இத்தத்துவ ஞானிகளின் ஊகங்கள் எத்தகைய சாயலைக் கொண்டிருந்தாலும் வரலாற்று உணர்வின்மையும் வறட்டுக் கோட்பாட்டுவாத அணுகுமுறையும் அவை அனைத்துக்கும் பொதுவான குறைபாடுகளாகும்.

இச்சிந்தனையாளர்களின் தத்துவங்கள் யதார்த்தத்தின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இயக்கவியல் விதிகளுக்கு ஏற்ப வாழ்க்கை தடுக்க முடியாதபடி முன்னேறிக் கொண்டிருந்த பொழுது உலகத்தை வெல்லப் போகின்றன என்று எதிர்பார்த்த கோட்பாடுகள், தோன்றிய உடனே காலாவதியாகிவிட்டன.

“தத்துவம் என் நண்பரே நரை கண்டது, வாழ்க்கை எனும் கற்பகத்தரு பசுமையானது!” (கேதே ஃபாவுஸ்டு)

இது கேதேயின் மணிமொழி. யதார்த்தத்தின் மெய்விவரங்களை, யதார்த்தத்தின் தற்காலிக நிகழ்வின் ஏதாவதொரு அம்சத்தைப் பிரதிபலிக்காமல் யதார்த்தத்தின் மெய்யான வளர்ச்சியை, அதன் நிரந்தரமான, தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் பிரதிபலிக்கின்ற தத்துவம் தோன்றிய பொழுது இந்த மணிமொழி தன்னுடைய உறுதியான தன்மையை இழந்தது.

படிக்க:
மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
♦ மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !

கண்களை மூடியிருந்த துணிகள் அகற்றப்பட்டன, வறட்டுக் கோட்பாட்டுச் சிந்தனையின் தப்பெண்ணங்கள் கைவிடப்பட்டன. முதன்முறையாக உலகம், விசும்பிலும் காலத்திலும் அதன் நிரந்தரமான வளர்ச்சியின் பல்தொகுதி மற்றும் முரண்பாடுகள் அனைத்துடனும் துல்லியமாக அப்படியே பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. இத்தத்துவத்தின்படி இயற்கையின் வளர்ச்சியின் ஆக உயர்ந்த கட்டமாக மனித சமூகம் தோன்றுகிறது, திட்டவட்டமான, அறியப்படக் கூடிய இயற்கை – வரலாற்று விதிகளின் அடிப்படையில் அது முன்னேற்றமடைகிறது.

யதார்த்தத்தை அறிகின்ற முறையியலின் நோக்கிலிருந்து மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக வரையறுப்பதென்றால் அதன் முரணில்லாத வறட்டுச் சூத்திரவாத எதிர்ப்பையும் முரணில்லாத வரலாற்றுணர்வையுமே குறிப்பிட வேண்டும்.

மார்க்சியத்தின் இந்தச் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் மார்க்சும் எங்கெல்சும் இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றைப் பற்றித் தங்களுடைய கருத்துக்களின் அமைப்பை முழுமையாக விளக்குகின்ற நூல்களை, “மார்க்சியத்தைப் பற்றிய வினாவிடை” நூல்களை எழுதவில்லையே என்று வியப்படைகிறார்கள். அவர்களில் சிலர் இத்தகைய “வினாவிடை நூல்களை” எழுதுவதற்கு முயற்சியும் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியின் பலன் கொச்சையான மார்க்சியமே.

ஏனென்றால் மார்க்சியம் என்பது எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்கெனவே தயாரித்த பதில்களைத் தருகின்ற தத்துவமல்ல, பிரபஞ்சத்தைப் பற்றிய தத்துவ ரீதியான மாதிரிப்படிவமல்ல, “கட்டாயமான” வரலாற்றுத் திட்டமல்ல. நிரந்தரமான வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் உட்படுகின்ற ஒன்றை அறிகின்ற முறையே மார்க்சியம். அது சமூக உறவுகளைப் புரட்சிகரமாகத் திருத்தியமைக்கும் செயல்திட்டம், அத்தகைய சீரமைப்புப் போராட்டத்துக்கு அது ஆயுதம்.

மார்க்சுக்கு முன்பே கூட மனிதனுடைய அறிவு பல இயற்கை நிகழ்வுகளையும் விதிகளையும் விஞ்ஞானரீதியாக விளக்கியிருக்கிறது; ஆனால் சமூக உறவுகளின் துறையில் கடந்தகாலச் சிந்தனையாளர்கள் இருட்டில் அலைந்து கொண்டிருந்தார்கள். எல்லாச் சமூக நிகழ்வுகளையும் முற்றும் விளக்கிக் கூற முடியும் என்ற பொய்யான கோரிக்கைகளை மார்க்சியம் நிராகரித்தது. ஆனால் அவற்றை ஆராய்வதற்கு நம்பகமான, சரியான வழியைக் காட்டியது.

ஆகவே சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சி முதன்முறையாக முற்றிலும் விஞ்ஞான அடிப்படையில் அமைக்கப்பட்டது. மனிதகுலத்தின் வரலாற்றில் புரட்சிகரமான கொந்தளிப்புக்கள் ஏராளமாக இருந்திருக்கின்றன; ஆனால் மார்க்சுக்கு முன்பு உண்மையிலேயே புரட்சிகரமான உலகக் கண்ணோட்டம் என்பது கிடையாது. இப்பொழுது பெருந்திரளான மக்களின் புரட்சிகரமான இயக்கமும் புரட்சிகரமான சிந்தனையும் ஒன்றாகச் சேர்ந்தன. மார்க்சியம் வரலாற்றின் “உந்துவிசையாக” மாறி, அதனை வேகப்படுத்தியது.

மார்க்சியக் கருத்துக்கள் பரவிய வேகத்தைப் பற்றி வியப்படையாதிருக்க இயலாது. கம்யூனிஸ்டு அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் ‘கம்யூனிஸ்டு சங்கத்தில்’ சில டஜன் உறுப்பினர்கள் இருந்தார்கள். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முதல் வெகுஜன, போர்க்குணமிக்க அமைப்பாகிய சர்வதேசத் தொழிலாளர் சங்கம் 1864-ல் நிறுவப்பட்டது. கம்யூனிசம் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச இயக்கமாக மாறத் தொடங்கியது. 1871-ல் பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நடத்திய புரட்சிகரமான போராட்டத்தின் மூலம் கம்யூனிசக் கருத்துக்களை அமுலாக்குகின்ற முதல் வீரமிக்க முயற்சியைச் செய்தது. அது ஏற்படுத்திய பாரிஸ் கம்யூன் மூன்று மாத காலம் நீடித்தது.

முதலாவது அகிலத்தின் குழந்தையான பாரிஸ் கம்யூனின் அனுபவத்தைப் பொதுமைப்படுத்திய மார்க்ஸ் அதை ஒரு புதிய ரகத்தைச் சேர்ந்த அரசாக, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக, உழைப்பின் பொருளாதார விடுதலை தொடங்கக் கூடிய ஒரே அரசியல் வடிவமாகக் கண்டார். உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது பாட்டாளி வர்க்க அரசின் கடமை என்று மார்க்ஸ் வலியுறுத்தினார். கம்யூன் அதிகாரவர்க்க உணர்ச்சியை வேரோடு அகற்றுவதை, எல்லா அரசு ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளையும் பெருந்திரளான மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதை, கம்யூன் தன்னுடைய நடவடிக்கைகளுக்குப் பெருந்திரளான உழைக்கும் மக்களை ஆதாரமாகக் கொள்வதை மார்க்ஸ் வரவேற்றார்.

மார்க்சும் எங்கெல்சும் தங்களுடைய வாழ்க்கையின் இறுதியில் உலகப் புரட்சிகர இயக்கத்தின் கேந்திரமாக மாறிக் கொண்டிருந்த ருஷ்யாவை நோக்கி மென்மேலும் அதிகமான கவனத்தைச் செலுத்தினார்கள் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். மார்க்சின் மூலதனம் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட நாடு ருஷ்யா. பாட்டாளி வர்க்கம் வெற்றியடைந்த முதல் நாடும் ருஷ்யாவே.

ஐரோப்பிய வரலாற்றில் புதிய திருப்புமுனை ருஷ்யாவில் நடைபெறுகின்ற சம்பவங்களுடன் இணைந்திருக்கும் என்று மார்க்ஸ் ஸோர்கேக்கு எழுதினார். “ருஷ்யாவிலுள்ள நிலைமைகளைப் பற்றி அதிகாரபூர்வமல்லாத மற்றும் அதிகாரபூர்வமான ஆவணங்களை (இவை வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடியவை, பீட்டர்ஸ்பர்கிலிருக்கும் நண்பர்கள் மூலம் இவை எனக்குக் கிடைத்தன) நான் ஆராய்ந்திருப்பதன் அடிப்படையில் ருஷ்யா ஒரு மாபெரும் கொந்தளிப்பின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது, அதற்குரிய எல்லாக் கூறுகளும் தயாரிக்கப்பட்டுவிட்டன எனக் குறிப்பிடுவேன்”(3) என்று மார்க்ஸ் எழுதினார்.

ருஷ்ய சமூகத்தின் அதிகாரபூர்வமான பகுதிகள் அனைத்தும் பொருளாதார மற்றும் அறிவுரீதியாக முற்றிலும் நசிவு நிலையில் இருக்கின்றன என்று எழுதிய மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: “இதுகாறும் எதிர்ப்புரட்சியின் உடைக்கப்படாத அரணாகவும் சேமப்படையாகவும் இருந்து வந்திருக்கும் கிழக்கில் இம்முறை புரட்சி தொடங்குகிறது.”(4)

ருஷ்யப் புரட்சியைப் பார்க்கின்றவரை தான் உயிரோடிருக்க இயலும் என்று மார்க்ஸ் நம்பினார். பாட்டாளி வர்க்க வெற்றிகள் ஏற்படப் போகின்ற தருணத்தையும் அவை எவ்வளவு அண்மையில் இருக்கின்றன என்பதைப் பற்றியும் மதிப்பிடுங்கால் மார்க்சும் எங்கெல்சும் சற்றுத் தவறு செய்திருக்கலாம். ஆனால் இத்தவறுகள் புரட்சியைத் “துரிதப்படுத்த வேண்டும்” என்ற எண்ணத்தினால் ஏற்படவில்லை. அத்தகைய பிளான்கிவாத அணுகுமுறை அவர்களுக்கு முற்றிலும் அந்நியமாகும். “இத்தகைய தவறுகள், புரட்சிகரச் சிந்தனை மேதைகள் செய்த தவறுகள்…. அதிகாரபூர்வமான மிதவாதத்தின் அலுத்துப்போன அறிவைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக மேன்மையானவை, மகத்தானவை, வரலாற்று ரீதியில் அதிகமான பயனுள்ளவை, உண்மையானவை”(5) என்று லெனின் முற்றிலும் சரியாக மதிப்பிட்டார்.

விளதிமிர் இலியிச் லெனின் (உலியானவ்) சிறுவயது புகைப்படம்.

மார்க்ஸ் மரணமடைந்த வருடத்தில் நெடுந்தொலைவுக்கு அப்பால், ஸிம்பீர்ஸ்க் என்ற ருஷ்ய நகரத்தில் விளாதிமிர் உலியானவ் என்ற பதின்மூன்று வயதுப் பள்ளி மாணவன் ஏற்கெனவே புரட்சிகர ஜனநாயக நூல்களைப் படிக்கத் தொடங்கியிருந்தான். அவன் பதினைந்தாம் வயதில் மார்க்சின் மூலதனத்தைப் படித்து முடித்தான். அவன் சீக்கிரத்தில் ருஷ்யாவில் மார்க்சியத்தை எழுச்சியுடன் பரப்புவோனாகவும் புரட்சிகரத் தொழிலாளர் கட்சியின் அமைப்பாளனாகவும் மாறினான்.

மார்க்சியக் கருத்துக்களைப் படைப்புத் தன்மையுடன் வளர்ப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஒரு புதிய சகாப்தம், அதே சமயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையிலும் கம்யூனிஸ்டு அறிக்கையில் எடுத்துக் கூறப்பட்ட புதிய உலகத்தை நிர்மாணிப்பதிலும் புதிய சகாப்தம் விளதிமிர் இலியிச் லெனின் (உலியானவ்) பெயருடன் இணைந்திருக்கிறது.

19-ம் நூற்றாண்டு விஞ்ஞானக் கம்யூனிசத்தின் தத்துவம் பிறந்த நூற்றாண்டு என்றால் 20-ம் நூற்றாண்டு ஒரு புதிய சமூகத்தின், “பரிபூரணமான மனிதாபிமானம் என்ற கம்யூனிச சமூகத்தை” நிர்மாணித்துக் கொண்டிருக்கும் நாடுகளின் குடும்பம் பிறந்த நூற்றாண்டாகும்.

நமது யுகத்தில் சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல. சோவியத் யூனியனைச் சுற்றித் திரண்டிருக்கின்ற பல நாடுகளில் சோஷலிசம் யதார்த்தமாகிவிட்டது. அங்கே ஒரு புதிய சமூகம் உருவாக்கப்பட்டது. அந்தச் சமூகத்தில் சுரண்டலும் சமூக ஏற்றத்தாழ்வும் மனிதனுடைய தகுதியைக் குறைக்கின்ற எல்லா வடிவங்களும் ஒழிக்கப்பட்டுவிட்டன. அங்கே நெருக்கடிகள் இல்லாத பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது, உழைக்கும் மக்களின் பொருளாயத சுபிட்சம் தொடர்ச்சியாக முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது, அதனைத் தொடர்ந்து அவர்களுடைய கலாச்சார நிலையும் ஆன்மிக வளமும் அதிகரிக்கின்றன. அங்கே விஞ்ஞான, மார்க்சிய-லெனினிய உலகக் கண்ணோட்டத்தை வழிகாட்டியாகக் கொண்ட உழைக்கும் மக்கள் சமூக நிகழ்வுப் போக்குகள் அனைத்தையும் தாமே இயக்குகிறார்கள். தனிமனிதனுடைய சர்வாம்ச, வரம்பற்ற வளர்ச்சியே, “முன்பே முடிவு செய்யப்பட்ட மட்டங்களுக்குச் சம்பந்தமில்லாமல் அனைத்து மனித சக்திகளின்”(6) வளர்ச்சியே அந்தச் சமூகத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

சோஷலிச நாடுகளின் வளர்ச்சி, பலத்தின் முன்னேற்றம், அவை பின்பற்றுகின்ற சமாதானம் மற்றும் பதட்டத்தணிவுக் கொள்கைகளின் ஆக்கபூர்வமான விளைவு மனிதகுலத்தின் சமூக முன்னேற்றத்தின், உலகப் புரட்சிகர நிகழ்வுப் போக்கின் முக்கியமான போக்காக இருக்கின்றன. ஏகாதிபத்தியம், ஏகபோகங்கள், காலனியாதிக்க எச்சமிச்சங்கள் ஆகியவற்றை எதிர்த்து சமாதானம், தேசிய சுதந்திரம் மற்றும் சோஷலிசத்துக்காக நடைபெறும் போராட்டத்தில் எல்லா நாடுகளிலும் உழைக்கும் மக்கள் மென்மேலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்போராட்டத்தில் அவர்களுடைய பாதையில் ஒளி பாய்ச்சுவது மார்க்சிய-லெனினியத் தத்துவமே. முதலாளிவர்க்க சித்தாந்திகள் மார்க்சியத்தை “மறுப்பதற்கும்” “அழிப்பதற்கும்” தங்கள் முழுச் சக்தியையும் தொடர்ந்து செலவிடுகிறார்கள். அவர்கள் மார்க்சியத்துக்குப் பதிலாக இன்றைய அற்பவாதிகள் விரும்புகின்ற வேறு தத்துவங்களை நிறுவுவதற்கு முயற்சி செய்கிறார்கள்; விஞ்ஞான சோஷலிசத்துக்குப் பதிலாக மார்க்சும் எங்கெல்சும் தம் காலத்தில் கூர்மையாகக் கிண்டல் செய்த “மிதவாத சோஷலிசத்தை” நிறுவப் பாடுபடுகிறார்கள்.

இம்முயற்சிகள் அனைத்தும் வீணாகி வருவதை நாம் பார்க்க முடியும். மார்க்ஸ் சுட்டிக்காட்டிய திசையில் வரலாறு தடுக்க முடியாதபடி முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகக் கம்யூனிஸ்டு இயக்கம் மென்மேலும் வலிமையடைந்து கொண்டிருக்கிறது.

நம் காலத்தில் சமூக மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகமான வேகத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாபெரும் முக்கியத்துவத்தைக் கொண்ட புதிய அரசியல் சம்பவங்களும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் நடைபெறுவதைப் பற்றிப் படிக்கிறோம். சமூக முன்னேற்றத்துடன் இணைந்து மார்க்சியத் தத்துவமும் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அது புதிய உண்மைகளைப் பொதுமைப்படுத்தி உலகத்துக்குப் புதிய வானங்களைக் காட்டுகிறது. தத்துவஞானமும் சமூக ஆராய்ச்சியும் தங்களுடைய சாதனைகளைப் பற்றித் திருப்தி கொண்டு வெகுஜன எளிமையை நோக்கமாகக் கொண்டால் அவை வறட்டுச் சூத்திரவாத, கோட்பாட்டுவாதப் படுகுழியில் விழுந்து விடும்.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
♦ கம்யூனிசம் வெல்லும்

மார்க்சிய-லெனினியம் வாழ்க்கையை விட்டு விலகுவதில்லை, குறுங்குழுவாதக் கோட்பாட்டின் வரையரைக்குள் தன்னை அடைத்துக் கொள்வதில்லை. மனிதகுலத்தின் மொத்தக் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பொதுமைப்படுத்தி விமர்சன ரீதியில் புத்தாக்கம் செய்வதை அடிப்படையாக கொண்ட மார்க்சியம் மனிதகுல மேதைகளின் மகத்தான சாதனைகளைத் தன்வயமாக்கிக் கொண்டு மேலும் வளர்ச்சி அடைகிறது.

மார்க்சின் துணிவு மிக்க, படைப்பாற்றலுடைய, புதியனவற்றைத் தேடுகின்ற சிந்தனை இன்றைய உலகத்தில் வாழ்கிறது, தொடர்ந்து போராடுகிறது. அது விஞ்ஞானி, தத்துவஞானி, அரசியல்வாதி ஆகியோரது பணியில் பங்கெடுக்கிறது. வாழ்க்கையிலும் சமூகப் போராட்டத்திலும் ஒவ்வொரு நபரும் தனக்குரிய இடத்தைப் பெறுவதற்கு அது உதவி செய்கிறது. அது சமூகத்திலிருந்து எல்லாவிதமான கசடுகளையும் அகற்றுவதற்கு, மனித குலத்தினருக்கு துன்பங்களையும் யுத்தங்களையும் வறுமையையும் பசியையும் அநீதியையும் ஒழிப்பதற்கு உதவி செய்கிறது.

இந்த பூமியில் மனிதனுடைய மாபெரும் தகுதிகளுக்கேற்ற சிறப்பான வாழ்க்கையை அமைப்பதற்கு அது உதவி செய்கிறது.

குறிப்புகள்:

(1) Karl Marx and friedrick Engles, SelectedWorks in 3 volumes, Vol. 3, Moscow,1976, p. 163.
(2) Marx, Engles, Selected correspondence, p. 340.
(3) Marx, Engles, Selected correspondence, p. 289
(4) Ibid.
(5) V. I. Lenin, Collected Works, Vol.12, p. 378.
(6) Karl Marx, Grundrisse der Kritik der Politischen Okonomie, Dietz Verlag, Berlin, 1953, s. 387.

– முற்றும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986-ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய 27 பாகங்களை படிக்க:

மார்க்ஸ் பிறந்தார் – வரலாற்றுத் தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க