மார்க்ஸ் பிறந்தார் – 26
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
11. “மூலதனத்தின்” தத்துவஞானம்
“மார்க்ஸ் தனக்குப் பின்னால் ஒரு தர்க்கவியலை (கொட்டை எழுத்துக்களில்) விட்டுச் செல்லவில்லை என்றாலும் அவர் மூலதனத்தின் தர்க்கவியலை விட்டுச் சென்றிருக்கிறார்… மார்க்ஸ் மூலதனத்தில் ஒரே விஞ்ஞானத்துக்கு தர்க்கவியலை, இயக்கவியலை மற்றும் ஹெகலிடம் மதிப்புள்ளதாக இருந்த ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு அதை மேலும் வளர்த்துச் சென்ற பொருள் முதல்வாதத்தின் அறிவுத் தத்துவத்தை (மூன்று சொற்கள் அவசியமல்ல, அது ஒரே பொருள் குறித்ததே) கையாண்டார்.” வி. இ. லெனின்(1)
மூலதனத்தின் தத்துவஞானம் என்ற தலைப்பு விசித்திரமான சொற்றொடராகத் தோன்றலாம். மூலதனம் முதலாளித்துவச் சமூகத்தில் பொருளாதார உறவுகளைப் பற்றிய ஆராய்ச்சி என்பது நமக்குத் தெரியும். சில மேற்கத்திய அறிஞர்கள் மூலதனத்தில் எந்தத் தத்துவஞானமும் இல்லை, மார்க்சும் ஒரு தத்துவஞானி அல்ல என்று மறுப்புரைக்கிறார்கள். ஒரு தத்துவஞானி என்பவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களின் அமைப்பு குறித்து விசேஷமான தத்துவஞான நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
மார்க்ஸ் அப்படிப்பட்ட புத்தகங்களை எழுதவில்லை. அவர் எந்தவொரு இடத்திலும் தத்துவஞானக் “கோட்பாட்டை” விசேஷமாக விளக்கவில்லை. எனினும் அவரே தலைசிறந்த தத்துவஞானியாக இருக்கிறார். மார்க்சின் தத்துவஞானம் – இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் – அவர் எழுதிய எல்லா நூல்களிலும் விளக்கப்படுகிறது. அத்தத்துவ ஞானத்தை அறிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய எந்த நூலைப் படிக்க வேண்டும் என்று கேட்டால், அவருடைய வாழ்க்கையின் முக்கியமான சாதனையாகிய மூலதனத்தைப் படியுங்கள் என்பதே சரியான பதிலாகும்.
சென்ற நூற்றாண்டின் கடைசியில் ருஷ்ய மிதவாதப் பிரமுகரும் சமூகவியலாளருமான நி. மிஹயிலோவ்ஸ்கிக்கு லெனின் தந்த பதில் இதுவே. மிஹயிலோவ்ஸ்கி மார்க்சியத்தை மறுத்து எழுதிய கட்டுரைகளில் ஒன்றில் இக்கேள்வியைக் கேட்டிருந்தார்: “மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை எந்த நூலில் எடுத்துக் கூறியிருக்கிறார்?” இக்கேள்விக்கு அவரே உடனடியாகக் கண்டுபிடிப்பவரின் சுயதிருப்தியோடு, அப்படி எந்த நூலையும் மார்க்ஸ் எழுதவில்லை, மார்க்சிய இலக்கியம் முழுவதிலுமே அப்படி எந்த நூலும் இல்லை என்று பதிலளித்தார்.
“மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை விளக்கிக் கூறாத நூல் ஒன்றுண்டா?” என்று லெனின் மிகச் சரியாக மறுப்புத் தெரிவித்தார். மார்க்ஸ் தனக்கு முந்திய சமூகவியலிலிருந்து, அதாவது சமூகத்தைப் பற்றிய போதனைகள் மற்றும் தத்துவங்களிலிருந்து அடிப்படையாகவே வித்தியாசமான ஒன்றைப் படைத்த காரணத்தினால் முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் மார்க்சிடம் சமூக வளர்ச்சி பற்றிய தத்துவஞானத்தைக் காணத் தவறுகிறார்கள் என்று லெனின் எடுத்துக் காட்டினார்.(2)
அக்காலத்திய முதலாளித்துவ அறிவுஜீவிகளின் வட்டாரங்களில் கெளரவம் நிறைந்த, மரியாதைக்குரிய சமூகவியலாளர் என்பவர், பொதுவாக சமூகம் என்றால் என்ன, அதன் நோக்கமும் சாரமும் எவை, “மனித இயல்புக்குப்” பொருந்துகின்ற சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பவற்றைப் போன்ற “கருத்தாழமிக்க பிரச்சினைகளை” விவாதித்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இச்சமூகவியலாளர்கள் இன்றைய அமைப்பு இயற்கைக்கு முரணானது, “மனித இயல்புக்கும்” நீதிக் கோட்பாடுகளுக்கும் பொருந்தாமலிருக்கிறது என்ற உண்மையைப் பற்றித் தங்களது மனப்பூர்வமான ஆத்திரத்தை வெளியிட்டு தார்மிக செல்வாக்கைப் பெற்று அநேகமாகப் புரட்சிக்காரர்களாகக் கூடத் தோன்றியிருக்கலாம்.
மார்க்சுக்கு முந்திய சமூகவியலாளர்கள் சமூகத்தின் நிகழ்வுப் போக்குகளை ஆழமாகப் பார்க்கத் தவறியதுடன் அவற்றை அந்தக் கணத்தில் நடைபெறும் சம்பவங்களின் ஒளியில் பார்த்தார்கள். சமூக உலகம் அரசர்கள், சக்கரவர்த்திகளின் முடிவுகளினால் இயக்கப்படுகிறது, சம்பவங்களின் வளர்ச்சி அவர்களுடைய சித்தத்தையும் பொதுமக்களிடம் தாக்கம் செலுத்திய சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் முற்றிலும் சார்ந்திருக்கிறது என்று நினைத்தார்கள்.
படிக்க:
♦ போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !
♦ நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?
இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டால் வரலாறு என்பது வலிமைமிக்க தலைவர்களின் உணர்ச்சிகளின் போராட்டத்தைச் சார்ந்திருக்கின்ற சம்பவங்கள், நிகழ்வுப் போக்குகள் மற்றும் மெய்விவரங்களின் கதம்பக் குவியலாகத் தோன்றும்; இக்கதம்பக் குவியலில் முக்கியமான நிகழ்வுகளை முக்கியத்துவமில்லாத நிகழ்வுகளிலிருந்து, அதிகச் சிறப்பானவற்றை குறைவான சிறப்புடையவற்றிலிருந்து ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியாது; இதில் எவ்விதமான விதிகளையும் பார்க்க முடியாது, சமூக வளர்ச்சிக்குப் பின்னே இருக்கின்ற பொறியமைவைப் புரிந்து கொள்ள முடியாது, அல்லது அவற்றின் மீது தாக்கம் செலுத்துவது எப்படி என்பதையும் அறிய முடியாது.
இவையனைத்தும் சமூகவியலில் அகநிலைவாதம், கருத்துமுதல்வாதம். பண்டைக்காலத் தத்துவஞானத்தில் இயற்கையைப் பற்றிய கருத்துக்களில் கருத்துமுதல்வாதம் தொடங்கிய வினாடியிலிருந்தே தீவிரமான எதிர்ப்பு (அதாவது பொருள்முதல்வாதிகள்) இருந்தது என்றால் சமூகத்தைப் பற்றிய கருத்துக்களில் கருத்து முதல்வாதம் மார்க்ஸ் காலம் வரையிலும் ஆட்சி செலுத்தியது.
மார்க்ஸ்தான் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பொருள்முதல்வாதக் கருத்தை முதலில் கையாண்டவர். இது அவருடைய மேதாவிலாசத்தைக் காட்டுகிறது என்றார் லெனின். உணர்ச்சிகளும் கருத்துக்களும் நலன்களும் காரணமல்ல, அவை விளைவே, மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற மிகவும் ஆழமான காரணத்தின் விளைவு என்று மார்க்ஸ் கண்டார். எந்த ஒரு மனிதனுடைய ஏதாவதொரு கருத்து அல்லது நோக்கம் அவனுடைய சமூக வாழ்க்கையினால், சமூகத்தில் அவனுடைய நிலைமையினால் நிர்ணயிக்கப்படுகிறது.
கருத்துக்கள் முதிர்ச்சியடைந்த சமூகத் தேவைகளைச் சந்திக்க முடியுமானால், அவை சமூகத்தின் பெரும்பான்மையினரது நலன்களை, முதலாவதாகவும் முதன்மையாகவும் பொருளாயத நலன்களை வெளியிட முடியுமானால், அவை பெருந்திரளான மக்களை ஆட்கொண்டால் அப்பொழுது அவை சமூக வளர்ச்சியில் தாக்கம் செலுத்த முடியும்.
உதாரணமாக, பிரெஞ்சு முடியாட்சி 18-ம் நூற்றாண்டின் கடைசியில் வீழ்ச்சியடைந்தது ஏன்? பதினாறாம் லுயீ இந்த அல்லது அந்தத் தவறைச் செய்தது (அதுவும் கூட முக்கியமாக இருந்தபோதிலும்) அதற்குக் காரணமல்ல; எதேச்சாதிகார ஆட்சியும் நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளும் நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன, முதலாளித்துவம் மற்றும் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த முதலாளி வர்க்கத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தன, அந்த வர்க்கம் ஏற்கெனவே பொருளாதார சக்தியைக் கொண்டிருந்தது, ஆனால் அரசியல் அதிகாரம் இல்லாமலிருந்தது என்பவை அதற்குக் காரணமாகும்.
மனித உணர்விலிருந்து சுதந்திரமான முறையில் வளர்ச்சியடைகின்ற சமூக உறவுகள் கடைசியில் அவ்வக்காலத்திய சித்தாந்த, அரசியல், சட்டவியல் அமைப்புகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாகப் பார்க்குங்கால் கருத்துக்களின் வளர்ச்சி சமூக-பொருளாதார நிகழ்வுப் போக்குகளின் வளர்ச்சியைச் சார்ந்திருக்கிறதே தவிர அதன் எதிர்மறையை அல்ல. அப்படியானால் சமூக உறவுகள் பொருளாயதமானவை, புறநிலையானவை என்பது இதன் பொருளாகும்! மார்க்சுக்கு முந்திய சிந்தனையாளர்கள் அடையத் தவறிய முடிவு இதுவே.
ஆனால் சமூக உறவுகள் மிகவும் பலவிதமாக இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை உற்பத்தி நிகழ்வுப் போக்கில் தோன்றுபவை; அவை உற்பத்தி உறவுகள் எனப்படும். அவை முதலாவதாகவும் முதன்மையாகவும் உற்பத்தி செய்பவருக்கும் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளருக்கும், அதாவது அடிமைக்கும் அடிமை உடைமையாளருக்கும், பண்னையடிமைக்கும் நிலப்பிரபுத்துவ நிலவுடைமையாளருக்கும், தொழிலாளிக்கும் முதலாளிக்கும் உள்ள உறவுகள்.
இந்த மூன்று உறவுகளும் சுரண்டல் உறவுகளின் வடிவங்கள். இவற்றுக்கு இடையிலுள்ள அடிப்படையான வேறுபாட்டை எளிதில் காண முடியும். ஆகவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவு என்ற முறையில் ஒன்று மற்றொன்றாக இயற்கையாக வளர்ச்சியடைந்த மூன்று சமூக-பொருளாதார அமைப்புகளையும் நாம் எடுத்துக் கொள்வோம்.
சமூக வளர்ச்சி இயற்கையான வரலாற்று நிகழ்வுப் போக்கு, அது மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற ஆனால் அறியப்படக் கூடிய விதிகளுக்கு உட்பட்டிருக்கிறது என்று மார்க்ஸ் கண்டார்.
இக்கருத்துக்கள் அனைத்தையும் மார்க்சிய மூலவர்கள் மிக முந்திய காலமான 1840-கள் மற்றும் 1850-களிலேயே கூறினார்கள். ஆனால் மூலதனத்துக்கு முன்பு இவை விஞ்ஞான ஆதாரத்தைக் கொண்டிருந்தாலும் வெறும் கருதுகோள் என்ற அளவிலேதான் இருந்தன என்று லெனின் கூறினார். “மூலதனம் எழுதப்பட்ட பிறகு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வெறும் கருதுகோளாக இனியும் இல்லை, அது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மையாயிற்று;”(3) சமூகவியல் விஞ்ஞானமாக மாறியது.
மூலதனம் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை உருவாக்குவதிலும் அதை நிறுவுவதிலும் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தது ஏன்? ஏனென்றால் மார்க்ஸ் சமூகம் எப்படி அமைக்கப்படுகிறது என்ற ஊக முறையான பொது விவாதங்களுடன் தன்னை நிறுத்திக் கொள்ளவில்லை, அவர் முதலாளித்துவ அமைப்பை உதாரணமாகக் கொண்டு அதன் செயல்முறை மற்றும் வளர்ச்சிப் பொறியமைவை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தார். ஆகவே வாசகர் இந்த அமைப்பு முழுவதையும் அதன் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற பல்தொகுதியான இயக்கவியல், முதலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்கங்களின் முரணியல்பு, தொழிலாளியைச் சுரண்டுவதற்கு முதலாளியின் உரிமையைப் பாதுகாக்கின்ற அரசியல், சட்டவியல் மற்றும் சித்தாந்த அமைப்புகளையும் ஒரு வாழ்கின்ற தொகுதியாகக் காண்கிறார்.
நிலப்பிரபுத்துவம் தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவத்துக்கு வழி விட்டதைப் போலப் பிந்தியதும் அதன் வளர்ச்சியின் புறநிலையான விதிகளின் விளைவாகத் தன்னுடைய சொந்த அழிவை நோக்கி, ஒரு வர்க்கமில்லாத சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை மார்க்ஸ் மறுக்க முடியாத தர்க்கவியலின் மூலம் நிரூபித்தார்.
“ஏகபோக மூலதனம், அதனுடனும் அதன் கீழும் தோன்றியதும் வளர்ச்சியடைந்ததுமான உற்பத்தி முறைக்குத் தளையாக மாறுகிறது. உற்பத்திச் சாதனங்களை ஒருமுனைப்படுத்துவதும் உழைப்பு சமூகமயமாதலும் எந்த அளவுக்கு முனைப்படைகின்றன என்றால் அவை முதலாளித்துவ மேலோட்டுக்கு முற்றிலும் முரணானதாகின்றன. இந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமைக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது, உடைமை பறித்தோர் உடைமை பறிக்கப்படுகின்றனர்.”(4)
படிக்க:
♦ தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்
♦ மூலதனத்தின் தத்துவஞானம் !
கம்யூனிஸ்ட் சமூகம் கனவுகாண்பவர்களின் கற்பனாவாத இலட்சியமல்ல, பொருளாதார வாழ்க்கையின் மொத்த இயக்கமுமே அதை நோக்கிச் செலுத்தப்படுகிறது என்பதைச் சந்தேகமில்லாதபடி மார்க்ஸ் விளக்குகிறார். மூலதனம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியலின் வளர்ச்சியை, எல்லா உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைக் கட்டுப்பாடில்லாமல் துரிதப்படுத்துவதன் மூலம் ஒரு புதிய சமூகத்தின், ஒரு புதிய சமூக-பொருளாதார அமைப்பின் பொருளாயத முன்நிபந்தனைகளைத் தயாரிக்கிறது. மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினரைச் சுரண்டப்படுகின்ற கூலித் தொழிலாளர்களாக மாற்றி, பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களை ஒன்றுசேர்த்து, பழைய சமூகத்தின் அடிமை விலங்குகளை நொறுக்கக் கூடிய, அதைப் புனரமைப்பதைத் தொடங்கக் கூடிய புரட்சிகர சக்தியை மூலதனம் தயாரிக்கிறது.
உழைப்பாளர்கள் அனைத்துப் பொருளாயத மற்றும் ஆன்மிக செல்வத்துக்கு உடைமையாளர்களாக இருக்கின்ற, மனிதன் சமூக உற்பத்திக்குச் சாதனமாக இல்லாமல் அவனே மிக உயர்ந்த மதிப்பாகவும் குறிக்கோளாகவும் இருக்கின்ற, ஒவ்வொருவருடைய சுதந்திரமான, பல்துறையான வளர்ச்சி எல்லோருடைய சுதந்திரமான வளர்ச்சிக்கும் நிபந்தனையாக இருக்கின்ற சமூகமே கம்யூனிஸ்ட் சமூகமாகும்.
மார்க்ஸ் இந்தப் புதிய சமூகத்தின் உருவரையை கற்பனாவாதச் சுவடு இல்லாமல், எதிர்காலத்தில் “பொற்காலம்” என்ற இலட்சியச் சித்திரத்தை மனம் போனபடி வரைவதற்கு மிகச் சிறிதளவு கூட முயற்சி செய்யாமல் தயாரித்தார். கம்யூனிசத்தை வரலாற்று ரீதியில் தவிர்க்க முடியாதபடிச் செய்கின்ற போக்குகளையும் விதிகளையும் அவர் தர்க்கவியல் ஆராய்ச்சியின் வன்மையோடு வெளிப்படுத்துகிறார், பாட்டாளி வர்க்கப் புரட்சி, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் புதிய சமூகத்துக்குச் செல்கின்ற உண்மையான வழியை எடுத்துக்காட்டுகிறார். இப்படி முதலாளித்துவ உற்பத்தியைப் பற்றிக் கடுமுயற்சி கொண்ட பொருளாதார ஆராய்ச்சியின் போக்கில் மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோளைத் தயாரிக்கிறார். அது போல மூலதனம் மார்க்சியத் தத்துவஞானத்தின் உட்கருவான இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையை உள்ளடக்கியிருக்கிறது.
இயக்கவியல்-பொருள்முதல்வாத முறை விசேஷமான சொற்களில் வர்ணிக்கப்படவில்லை, அது செய்முறையில், முதலாளித்துவச் சமூகத்தின் பொருளாதாரத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்குச் செய்முறையில் கையாளப்படுவதன் மூலம் தரப்படுகிறது. மார்க்ஸ் இந்த முறையை எப்படி உபயோகித்தார், எப்படிக் கையாண்டார் என்பதை மூலதனத்தை ஆராய்வதன் மூலம் அறிய முடியும். ஆகவே சமூகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இந்த இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையை ஒருவர் எப்படிக் கையாள முடியும், எப்படிக் கையாள வேண்டும், தத்துவச் சிந்தனையில் இந்த வன்மையான கருவியைக் கையாளுவதில் எப்படி முழுத் திறமையைப் பெற முடியும் என்பனவற்றை மூலதனத்தின் வாசகர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
குறிப்புகள்:
(1)V.I.Lenin, collected works, Vol. 38, p. 319.
(2)V.I.Lenin, collected works, Vol. 1, p. 143.
(3)Ibid., p.142.
(4)Karl marx, capital, vol. 1, Moscow, 1974, p. 715.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.
முந்தைய 25 பாகங்களை படிக்க: