ருபத்தாறு வயதான அமோல் சந்தோஷ்ராவ் சம்பாரே, 2015-ம் ஆண்டு பி.எஸ்.சி கணித பட்டப்படிப்பை முடித்தார். தனது படிப்புக்கு ஏற்ற வேலையை கடந்த நான்கு ஆண்டுகளாக தேடி அலைந்து தோற்றுப்போன அவர், தற்போது மகாராட்டிர அரசின் கேண்டீனில் வெயிட்டர் பணிக்காக  தயராகிவருகிறார்.

மகாராட்டிரத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு சமீபத்தில் மாநில அரசின் கேண்டீனில் பணியாற்ற 13 பேரை தேர்வு செய்தது. தேர்வானவர்களில் 12 பேர் பட்டதாரிகள், ஒருவர் 12-ம் வகுப்பை முடித்தவர்.  ஆனால், இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 4-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

45 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக உள்ளது என தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் எடுத்த வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ள காலத்தில்தான் மேற்கண்ட செய்தியும் வெளியே வருகிறது.

பாஜகவினர் அவர்களுடைய துதிபாடிகளும் அப்படியொரு நிலைமை இல்லவே இல்லை என சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களும் ஆளும் மாநிலத்திலிருந்தே வேலையில்லாத் திண்டாட்டம் உச்சநிலையில் இருப்பது தெரிகிறது.

13 வெயிட்டர் பணியிடங்களுக்கு 7000 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பது அம்மாநில அரசே தெரிவித்த தகவல். “நான்காம் வகுப்புக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தோம். ஆனால், சில பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது” என்கிறார் அரசு அதிகாரி ஒருவர்.

அரசு விளம்பரத்தின் படி, அரசு அதிகாரிகளுக்கு உதவி செய்வதும், அதிகாரியின் கட்டளைக்கு ஏற்ப, கேண்டீனில் காய்கறிகளை கழுவுவது, வெட்டுவது, மேசையை துடைப்பது, பாத்திரம் துலக்குவதும், கேண்டீனை சுத்தம் செய்வதும் இந்தப் பணியின் தன்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு 100 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு வைக்கப்பட்டது. 50 கேள்விகளில் 10 கேள்விகள் மராத்தி மொழி அறிவை சோதிப்பதாகவும் 20 கேள்விகள் பொது அறிவை சோதிக்கும் வகையில் மீதமுள்ள 20 கேள்விகள் அறிவுத்திறனை சோதிப்பதாகவும் கேட்கப்பட்டன.

கடுமையான போட்டி நிலவிய இந்தத் தேர்வில் 522 பேர் 80 மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர்.  1310 பேர் 60 மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். இதில் 13 பேர் இறுதியாக தேர்வு பெற்றுள்ளனர். இவர்களுடைய மாத சம்பளம் ரூ. 4440 – ரூ. 7440 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

படிக்க:
வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் – மோடியின் அடுத்த ஜும்லா
மணிப்பூர் : ’பத்ம ஸ்ரீ’ யை தூக்கியெறிந்த சியாம் சர்மா | குடிமக்கள் மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு !

“என்னுடைய குடும்பத்திலிருந்து அழுத்தம் அதிகமாக இருந்தது. படிப்பை முடித்தவுடன் நான் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவேன் என பெற்றோர் எதிர்பார்த்தனர். ஆனால், போட்டி கடுமையாக இருந்தது” என்கிறார் அமோல்.  இவருடைய பெற்றோர் ஜல்னா மாவட்டத்தில் விவசாயிகளாக உள்ளனர்.

“முதலில் எனது படிப்புக்கு உகந்த வேலைகளாகப் பார்த்துதான் விண்ணப்பித்துக்கொண்டிருந்தேன். ஏராளமான நிராகரிப்புகளுக்குப் பிறகு, நான் குரூப் – டி பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கிவிட்டேன். ஏனெனில் எதுவும் இல்லாமல் இருப்பதற்கு ஏதோ ஒன்று பரவாயில்லை” என்கிற அமோல், வெயிட்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன் மகாராட்டிர பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை மூன்று முறை எழுதினார். காவலர் பணிக்கு எழுதியிருக்கிறார். அரசின் தொழிற்நுட்ப பிரிவு பணிகளுக்கும் விண்ணப்பித்திருந்தார். ஒவ்வொரு முறையும் மயிரிழையில் வாய்ப்பை தவறவிட்டதாக தெரிவிக்கிறார் அமோல்.

குறைந்த பணியிடங்களுக்கான தேர்வுக்கு அரசு விளம்பரம் செய்வதாக குற்றம்சாட்டுகிற விண்ணப்பதாரர்கள், குறைந்தது 1 பணியிடத்துக்கு 500 பேர் விண்ணப்பிக்கலாம் என்ற அளவை கடைபிடிக்க வேண்டும் என்கிறார்கள்.

நான்காவது முறையாக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுத படித்துக் கொண்டிருக்கும் உமேஷ் ஜாதவ், “2016-ம் ஆண்டு பி.ஏ. டிகிரியை முடித்தேன். வேலை கிடைப்பது இங்கு கடினமாக இருக்கும் சூழலில் எம். ஏ. படிக்க ஆரம்பித்தேன். ஆனாலும்கூட எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதே தெரிகிறது.  ஒருசில தனியார் வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். நிலையில்லாத, குறைந்த ஊதியத்துக்கு ஏராளமானவர்கள் விண்ணபித்திருப்பதைக் கண்டு எனக்கு ஏமாற்றமே ஏற்பட்டது”.

அமோலை போல, ஜாதவ் இப்போது குரூப் – டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பதாக தெரிவிக்கிறார்.

தோல்வி அடைந்த தனது ஜூம்லா திட்டங்களை மூடி மறைக்க, அனைத்து தில்லுமுல்லு வேலைகளையும் செய்து வருகிறது மோடி அரசு. ஒருபுறம் வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கும் தகவலை மறைக்கிறது. மற்றொரு புறத்தில் இளைஞர்களை பக்கோடா விற்கச் சொல்கிறது. வேலை வாய்ப்பு ஏன் இல்லை எனக் கேட்டால், இந்திய இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறிவிட்டனர் என்று கதை அளக்கிறார் மோடி. 

மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இது ஒருபுறத்தில் இதுபோன்ற படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலையை நோக்கி இளைஞர்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறது. அதுவும் கிடைக்காத இளைஞர்களின் கைகளில் சூலத்தைக் கொடுத்து அவர்களை மதவெறியர்களாக்கும் வேலையையும் செய்துள்ளது.


கட்டுரை: மானசி பட்கே
தமிழாக்கம்: கலைமதி
நன்றி : த பிரிண்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க