பொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்

''இந்த முடிவு பல இலட்சம் பொறியியல் படித்த மாணவர்களின் எதிர்காலத்தைப் பறித்துவிடும் அபாயம் உள்ளது'' என்கிறார், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்.

பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு கேட் ( GATE – Graduate Aptitude Test in Engineering ) எனப்படும் திறனறித் தேர்வை நடத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE). ”இந்த முடிவு பல இலட்சம் பொறியியல் படித்த மாணவர்களின் எதிர்காலத்தைப் பறித்துவிடும் அபாயம் உள்ளது” என்கிறார், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்.

தோழர் த.கணேசன்.

இதுகுறித்து, மேலும் அவர் பேசும்பொழுது, ‘’ஏற்கெனவே மருத்துவப் படிப்பில் ஏழை – தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நுழைய முடியாதவாறு நீட் தேர்வை கொண்டு வந்து அவர்களின் மருத்துவக் கனவை பறித்துவிட்டார்கள். அவ்வாறு இன்னல்களை எதிர்கொண்டு மருத்துவம் படித்துவிட்டு வெளியேறிவிடலாம் என்றால், அதற்கும் ஒரு திறனறித் தேர்வை நடத்தி, மருத்துவராகும் தகுதியைப் பறித்துவிடுகிறார்கள். சட்டக்கல்வி பயிலும் மாணவர்களும் திறனறித் தேர்வை எதிர்கொண்டால்தான் வழக்கறிஞராகப் பதிவு செய்ய முடியும். அதேபோலதான், தற்போது பொறியியல் பயிலும் மாணவர்கள் இறுதியாண்டில், கேட் தேர்வை எழுதி அதில் தேர்ச்சிப் பெற்றால்தான் அவர் பொறியாளராக வெளியில் பணியாற்ற முடியும் என்ற சூழலை கொண்டுவந்துள்ளது.

இந்தியா முழுவதும் 3000 பொறியியல் கல்லூரிகள், தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றது. ஆண்டுக்கு 7 இலட்சம் மாணவர்கள் படித்து வெளியே வருகிறார்கள். அவர்களுடைய எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக் குறியாகிவிடும்.

நான்காண்டுகளில் அந்த மாணவனின் திறமையை சோதித்தறிய முடியாதவர்கள், அந்த ஒரு தேர்வில் அவனது திறமையை சோதித்துவிடப் போகிறார்களா?

இதெல்லாம் பொய். ஏமாற்று. உண்மையான காரணம், படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திரிகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் நாடுமுழுதும் பெருகியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்னேகால் கோடி பேர் வேலையின்றி இருக்கிறார்கள். இதில் கணிசமானோர் பொறியியல் பட்டதாரி மாணவர்கள்.

கடந்த 15 ஆண்டுகளில் பொறியியல் படிப்பின் மீது ஒரு கவர்ச்சியை உருவாக்கி, பல தனியார் பொறியியல் கல்லூரிகளை உருவாக்கி, பல இலட்சம் மாணவர்களிடம் பல கோடி ரூபாய் கொள்ளையடித்து, கல்வியை வியாபாரமாக்கி இவர்கள் சம்பாதித்துவிட்டார்கள்.

படிக்க:
பொறியியல் கல்வியின் சீரழிவும் ! கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும் !!
கல்வி வியாபாரம் : வாங்க சார்… வாங்க ! மின்னூல்

ஆனால், பொறியியல் படித்து வெளியில் வந்த மாணவர்கள் வேலையின்றி  தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஐந்தாண்டுகளில் நாட்டை வல்லரசாக்கிவிடுகிறேன் என்று சொன்னவர்கள் இன்று அனைத்திலும்  தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். இளைஞர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் கேட் தேர்வு கொண்டுவரப்படுகிறது.’’ என்கிறார்.

இதன் பின்னுள்ள அரசியல் உண்மைகளை உணர்ந்து, கேடான நோக்கத்தோடு கொண்டுவரப்படும் இத்தகைய திறனறித்தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் இளைஞர்கள் போராட முன்வரவேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறார், தோழர் த.கணேசன்.

அவரது உரையின் முழு காணொளி…

பாருங்கள் ! பகிருங்கள் !!

வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.