Saturday, December 7, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விபொறியியல் கல்வியின் சீரழிவும் ! கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும் !!

பொறியியல் கல்வியின் சீரழிவும் ! கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும் !!

பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களில் 85% பேர் திறமையற்றவர்கள் என FICCI, CII, NASSCOM போன்ற தரகு முதலாளிகள் பேசி வருகின்றனர். உண்மையில் பொறியியல் கல்வி தரமற்று போக காரணம் என்ன?

-

டந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகம் தன் கட்டுப்பாட்டிலுள்ள தன்னாட்சி பெறாத (non autonomous) பொறியியல் கல்லூரிகளுக்கான டிசம்பர் 2017 பருவத்தில் நடந்த தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தை வெளியிட்டது. அதில் டிசம்பர் 2017 பருவத்தில் தேர்வேழுதிய 5.25 லட்சம் மாணவர்களில் 2.25 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏறத்தாழ 57% மாணவர்கள் தேர்ச்சியடைவில்லை.

டிசம்பர் 2017 பருவ தேர்வில் பங்கு பெற்ற 497 பொறியியல் கல்லூரிகளில் (non autonomous colleges) 115 கல்லூரிகள் மட்டுமே 50% -க்கு மேல் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மீதமுள்ள 382 கல்லூரிகளில் 50% -க்கும் குறைவான தேர்ச்சியே பெற்றுள்ளது. இதில் 60 கல்லூரிகள் 10% தேர்ச்சியும் 83 கல்லூரிகள் 10-20% தேர்ச்சியையும் மட்டுமே பெற்றுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக இதே நிலையே தொடர்கிறது.

தகுதியற்ற போராசிரியர்கள், மிகவும் குறைந்த ஊதியம், குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள், போதிய உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகள் இல்லாமை போன்றவைகள் தான் இந்த மோசமான தேர்ச்சி விகிதத்திற்கு முக்கிய காரணமென கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மோடி அரசோ பொறியியல் கல்வியின் தரத்தை இன்னும் மோசமாக்குவதற்கு மாணவர்-ஆசிரியர் விகிதத்தை (1:15-ல் இருந்து 1:20 என) அதிகரித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (All India council for technical education – AICTE) சில மாதங்களுக்கு முன்பு தனியார் கல்லூரிகளுக்கான ஆசிரியர்-மாணவர் விகிதத்தை அதிகரித்தற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதன் படி தனியார் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வழங்கும் B.E/B.Tech/B.Arch/MBA/MCA மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 1:15 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதத்தை 1:20 எனவும் டிப்ளமோ படிப்புகளுக்கு 1:20 என இருந்ததை 1:25 எனவும் உயர்த்தியுள்ளது. இந்த புதிய விகிதம் வரும் கல்வியாண்டிலிருந்து (2018-19) அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

இந்நடவடிக்கைகளின் காரணமாக பல ஆயிரக்கனக்கான ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற்ற வாய்ப்புள்ளது. மொத்தமுள்ள 6,60,380 பேராசிரியர்களில் 1,78,809 பேராசிரியர்கள் பணியிலிருந்து வெளியேற்ற வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 16,500 பேராசிரியர்கள் வேலையிழப்பார்கள்.

மோடி அரசின் இப்புதிய விதியை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கம் மற்றும் தெலுங்கானா மாநில தனியார் கல்லூரி ஆசிரியர்கள் இணைந்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் தனியார் கல்லூரி நிர்வாகமோ இப்புதிய விதியை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதுவரை 765 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவை PSG Tech கல்லூரியிலிருந்து 90 பேராசிரியர்களும் சென்னையிலுள்ள ஜெருசலம் கல்லூரியிலிருந்து 50 பேராசிரியர்களும் அடங்குவர்.

பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதினால் உயர் கல்வியின் தரம் மேலும் மோசமாகும் எனத்தெரிந்தே தான் அரசு இப்புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே இந்திய தரகு முதலாளிகள் உயர்கல்வியின் தரத்தை குறித்து நீலிக்கண்ணீர் வடித்து வருகின்றனர்.

உயர் கல்வியின் தரம் குறைந்து விட்டது; மாணவர்களுக்கு பொறியியலின் அடிப்படை கூட தெரிவதில்லை; திறன் இடைவெளி (skill gap) அதிகமாக உள்ளது; மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான படிப்புகள் சொல்லிதரவேண்டும் என FICCI, CII, NASSCOM போன்ற தரகு முதலாளிகளின் கூட்டமைப்புகளும் UGC அல்லது AICTE போன்ற உயர்கல்வி ஆணையங்களும் பேசி வருகின்றனர். ஆனால் இவர்கள் தான் கல்வியின் தரத்தை மேலும் நாசமடையச் செய்யும் மேற்சொன்ன விதிமுறைகளை கொண்டுவந்தவர்கள்.

பேராசிரியர்களை குறைப்பதன் மூலம் தனியார் கல்லூரிகள் அதிகம் கொள்ளையடிக்க முடியும். பொதுவாக தனியார் கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்காக பொய்யான தகவல்களையே அரசிடம் சமர்பிக்கின்றனர். குறிப்பாக பேராசியர்களின் எண்ணிக்கை அவர்களின் கல்விதகுதி மற்றும் ஊதிய விவரங்கள் பற்றிய பொய்யான தகவல்களையே பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (University grant commission-UGC) சமர்பித்து அங்கீகாரம் பெறுகின்றனர்.

இது அரசாங்கத்திற்கு தெரிந்தே தான் நடக்கிறது. 80,000 போலி பேராசிரியர்களை கல்லூரிகள் கணக்கு காட்டியிருப்பதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகமே சமீபத்தில் ஒப்புக்கொண்டது. இந்நிலையில் 1:20 என்ற விகிதம் கல்லூரி நிர்வாகத்திற்கு இன்னும் சாதகமாக அமையும். தனியார் சுயநிதி கல்லூரிகள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றே மோடி அரசு மேற்சொன்ன முடிவை எடுத்துள்ளது.

16.11.2017 அன்று சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சுயநிதி தொழில்நுட்ப பயிலகங்களின்  கூட்டமைப்பின் கூட்டம்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அகில இந்திய சுயநிதி தொழில்நுட்ப பயிலகங்களின் கூட்டமைப்பு (All India federation for self financing technical institutions) என்ற அமைப்பை தனியார் கல்லூரி முதலாளிகள் உருவாக்கினர். இக்கூட்டமைப்பு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு சில கோரிக்கைகளை வைத்தது. அதில் ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:25 ஆக உயர்த்த வேண்டும். குறைந்த பட்சமாக 1:20 ஆக மாற்றவேண்டும் என்று கோரியிருந்தது.

இதையே, 2015 -ல் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவை (All India council for technical education) சீரமைப்பு செய்வதற்காக மோடியால் அமைக்கப்பட்டிருந்த காவ் கமிட்டியும் (Kaw committee) பரிந்துரையாக மத்திய அரசுக்கு கூறியிருதது. கல்வியின் தரம் மோசாமாவதை பற்றியும் லட்சக்கனக்கான பேர் வேலையிழப்பதை பற்றியும் கவலையில்லாமல் கல்வி கொள்ளையர்கள் லாபமடைவதற்காகவே இத்திட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது வெளிப்படை.

சந்தையில் போதிய வேலைவாய்பின்மையால் பொறியியல் படிப்பின் மீதான மோகம் வெகுவாக குறைந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கனக்கான கல்லூரிகளை மூட UGC அனுமதி அளித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 4.26 லட்சம் பொறியியல் இடங்கள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டில் மட்டும் 1.67 லட்சம் பொறியியல் இடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

பொறியியல் கல்வியின் தரம், பாடத் திட்டம், போராசிரியர்களின் கல்வி தகுதி, ஆய்வக கட்டமைப்பு, அங்கீகாரம் வழங்குவது என ஒட்டு மொத்த பொறியியல் கல்வியையுமே UGC மற்றும் AICTE போன்ற ஆணையங்களே கட்டுப்படுத்துகின்றன. தமிழ்நாட்டிலுள்ள 550 பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழத்தின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது.

பல பொய்யான வாக்குறுதிகளை அளித்தும் வளாக நேர்முகத்தேர்வில் (campus interview) வேலைவாய்ப்பு என்று கூறியும் கட்டமைப்பு வசதிகளே இல்லாத இப்பொறியியல் கல்லூரிகள் லட்சக்கனக்கான ரூபாயை கல்வி கட்டணமாக மாணவர்களிடமிருந்து கொள்ளையடிக்கின்றனர்.

இக்கொள்ளை UGC, AICTE அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தெரிந்தே தான் நடக்கிறது. மறுபுறமோ பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களில் 85% பேர் திறமையற்றவர்கள் என முத்திரை குத்துகிறது தரகு முதலாளி வர்க்கம்.

தொடர்ந்து நான்கு வருடங்களாக பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகள் 50% -க்கு குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்றிருப்பதற்கு யார் காரணம்? மாணவர்களா? அல்லது லாபத்தை மட்டும் நோக்கமாக கொண்ட கல்லூரி நிர்வாகமா? பொறியியல் கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் திறன் (skill) குறைந்தற்கு யார் காரணம்? வேலைகிடைக்கும் என்ற கனவோடு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தும் மாணவர்களா அல்லது கல்வியை வியாபாரமாக்க கங்கனம் கட்டி அலையும் UGC, AICTE, அண்ணா பல்கலைக்கழகமா?

அதிக வரதட்சனை வாங்கி திருமணம் செய்த ஒருவன், தன்னுடைய உடல்குறையினால் குழந்தை பெற முடியாதை மறைத்து மனைவிக்கு மலடி பட்டம் கட்டி அப்பாவி பெண்ணை குற்றவாளியாகுவதைப் போல, “தரமான கல்வியை வழங்குகிறேன்!” என கூறி பல நூறு கோடிகளை கொள்ளையடித்த கல்வி நிறுவனங்கள், அக்கொள்ளைக்கு துணையான UGC, AICTE, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளடக்கிய இந்த அரசு கட்டமைப்பு தங்களுடைய தோல்விகளை மறைப்பதற்காக மாணவர்களை திறமையற்றவர்கள் என குற்றஞ்சுமத்துகிறது.

இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அரசாங்கத்திற்கும் தரமான உயர்கல்வியை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது. உயர்கல்வி சந்தையை முற்றிலும் கொள்ளையடிப்பதையே இவர்கள் லட்சியமாக கொண்டுள்ளனர். இவர்களை ஒழிக்காமல் தரமான உயர்கல்வியை நாம் பெற சாத்தியமே இல்லை.

  • விக்ரம்

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க