மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கியிருக்கிறது. எம்.டெக் படித்த பட்டதாரிகள் தமிழக தலைமை செயலக துப்புரவு பணிக்கு விண்ணப்பித்திருப்பதும் மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் அரசு கேண்டீனில் மேசை துடைக்கும் பணிக்கு விண்ணப்பித்திருந்ததும் கடந்த வாரம் வெளியான செய்திகள்.  பி.எஸ்ஸி. பி.எல் பட்டதாரி ஒருவர் விவசாயம் செய்து கடனாளி ஆன யதார்த்த கதையும்கூட வெளியானது. நாட்டின் தலைநகரான டெல்லியில் ஒரு பட்டதாரி, ‘படித்தும் முட்டை விற்கிறேன் எனில், பட்டப் படிப்பினால் என்ன பயன்?’ என கேட்கிறார். அல்ஜசீரா வெளியிட்டுள்ள இந்த சிறப்பு கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம் மோடி அரசின் வேலைவாய்ப்பற்ற ‘வளர்ச்சி’யை தோலுரிக்கிறது.

*****

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியின் அமைதியான குடியிருப்புப் பகுதியில் கடுமையான முகத்துடன் முட்டையை வைத்து திண்பண்டம் தயாரித்துக் கொண்டிருக்கிறார் அந்த இளைஞர். அவ்வப்போது, தனது வாடிக்கையாளர்களிடம் தன்னுடைய பண்டத்தின் ருசி எப்படி இருக்கிறது எனவும் விசாரிக்கிறார்.

இந்தி பேசும் மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலமான உத்திர பிரதேசத்தை ஒட்டி அமைந்துள்ள நொய்டாவில் உள்ள திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம்  படிக்கும் 21 வயது சாகர் குமார், கோபத்துடன் இருக்கிறார்.

படித்தும் முட்டைக் கடைதான் வைக்க வேண்டுமெனில் பட்டப் படிப்பு எதற்கு ?

தனது சகோதரர்களின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டவும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு டயாலிசிஸ் செய்யவும் சாலையோரங்களில் உணவுகளை விற்றுக்கொண்டிருக்கிறார் இவர்.   அரசு வேலை கிடைக்கும் என்பதில் இவருக்கு நம்பிக்கை இல்லை.

“இரவில் படிப்பேன். மற்ற நேரங்களில் இந்த தள்ளுவண்டி உணவுக்கடை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 500 சம்பாதிக்கிறேன். பட்டம் படித்துவிட்டு, சாலையோரத்தில் முட்டையை விற்கிறேன். நான் வாங்கிய வணிகவியல் பட்டத்துக்கு என்ன பயன்?” என கேட்கிறார் சாகர்.

டெல்லியின் துக்ளகாபாத் பகுதிகளில் பகுதி நேரமாக சமையல் பணி செய்யும் 24 வயதான சீமா, அலுவலக செயலாளர் பணி கிடைக்கும் என காத்திருக்கிறார்.

“என்னுடைய தட்டச்சு வேகம் மிகவும் சிறப்பாக உள்ளது. உ.பி.யின் பாதாயூன் பகுதியிலிருந்து என் பெற்றோர் டெல்லிக்கு வந்துவிட்டார்கள். அரசு அலுவலகத்தில் எழுத்தர் பணி செய்ய விருப்பம். ஆனால், எனக்கு இதுவரை அந்த அதிருஷ்டம் கிடைக்கவில்லை. இங்கே பெண்ணாக வேலை தேடுவதும்கூட பாதுகாப்பற்றதாகவே உள்ளது” என்கிறார் சீமா.

எங்களுக்கு வேலை வேண்டும்

முன்னதாக, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்திலிருந்து ஊடகங்களில் கசிந்த, மோடி அரசால் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்பு புள்ளிவிவரத்தில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் 2017-18 ஆண்டுகளில் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.

இந்த ஆய்வறிக்கை மட்டுமல்லாது, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு கடந்த டிசம்பரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை 42 சதவீதமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

படிக்க:
♦ ஓடும் ரயிலில் மோடியை விமர்சித்தால் என்ன தப்பு ? | பக்தாளை சுற்றி வளைத்த பொதுமக்கள் !
♦ நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

இதே அமைப்பு மார்ச் 2018-ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் 31 மில்லியன் இந்தியர்கள் வேலை தேடிக்கொண்டிருப்பது தெரியவந்தது.

அதற்குப் பின் வெளியான அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை 2016-ல் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, 3.5 மில்லியன் வேலை இழப்புகள் ஏற்பட்டதாக சொன்னது.

இந்த பணி இழப்புகளின் பின்னணியில் இந்தியாவில் அரசு வேலைகளின் மீது கவனம் திரும்பியது. இந்திய ரயில்வே சமீபத்தில் 63 ஆயிரம் பணிகளுக்கு 19 மில்லியன் விண்ணப்பங்களைப் பெற்றது. இந்த விண்ணப்பங்கள் துப்புரவு மற்றும் ரயில்வே தண்டவாளங்களை தூய்மையாக்கும் பணிகளுக்காக விநியோகிக்கப்பட்டது.

மோடி பரிந்துரைக்கும் சுய தொழில் / வேலைவாய்ப்பு

பீகார் மாநிலத்தின் மாதேபுராவிலிருந்து குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த சாகர், ஏராளமான அரசு பணிகளுக்கு விண்ணப்பித்ததாக தெரிவிக்கிறார். அதில், பட்டப்படிப்பு அவசியமில்லாத ரயில்வே பணியும் அடங்கும்.

வாக்களிக்கும் வயதில் உள்ள அவர், ‘யார் அடுத்து அரசு அமைக்க இருக்கிறார்களோ அவர்கள் எங்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும்’ என்கிறார்.

“எங்களுக்கு வேலை வேண்டும். அது முடியவில்லை என்றால், சம்பாதிக்க உதவுங்கள். தொழில் முனைவோருக்கான கடன் வாங்கி தொழில் செய்யவும் முயற்சித்தேன். ஆனால், அதுவும் கொடுங்கனவாக இருக்கிறது. எங்கு போகவும் எங்களுக்கு வழியில்லை. வேலையும் கிடைக்கவில்லை; சிறுதொழில் தொடங்க கடன் கிடைப்பதும் எளிதாக இல்லை” என்கிறார் சாகர்.

இப்போது ஏற்பட்டிருக்கும் நிலையை பொருளாதார நிபுணர்கள் ‘வேலையற்ற வளர்ச்சி’ என்கிறார்கள்.

“வேலையில்லா பிரச்சினை மோசமான நிலையில் உள்ளது. நடுத்தர மற்றும் சிறு தொழிற் துறையினரும் விவசாயிகளும்தான் நம் நாட்டின் அதிகமான தொழில்வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறவர்கள். தவறாக செயல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டியாலும் 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்தாலும் இந்தத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  முறைசாரா தொழில்களையும் இவை நொறுக்கின” என்கிறார் பொருளாதாரவியலாளர் பிரசன்ஜித் போஸ்.

படிக்க:
♦ வேலை வாய்ப்பின்மை புள்ளி விவரத்தை மறைத்து மோடி அரசுக்கு ஜிஞ்சக்க போடும் தி இந்து !
♦ கல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் !

மேலும் அவர்,  “இந்த அரசின் கீழ் அமைப்பு சார்ந்த தொழில்களும்கூட வளர்ச்சியடையவில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகள் இருந்தபோது, அது வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை” என்கிறார்.

“உண்மை என்னவென்றால் பொருளாதார வளர்ச்சி தகவல் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையிழப்பு இருக்கும் போது ஜிடிபி 7 % எப்படி சாத்தியமாகும்? இந்த முரண்பாட்டிற்கு வேறு எந்த விளக்கமும் தேவையில்லை”.

வேலையில்லாத் திண்டாட்டம் சமத்துவமின்மையை ஏற்படுத்துகிறது!

உலகிலேயே மக்கள் தொகையில் பாதியளவை எட்டக்கூடிய நிலையில் 25 வயதுக்குக் குறைவான இளைஞர்களைக் கொண்ட நாட்டில், வேலைவாய்ப்பின் அளவு குறைந்து  வருகிறது.

சாகர், சீமாவின் விசயத்தில் நிலையற்ற தொழிலாளர் சந்தையும் சமூக பொருளாதார காரணிகளும் அரசு வழங்கும் சேவைகளின் குறைபாடும் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன.

வறுமைக்கு காரணமாக உள்ள வருமான குறைவினால், சமத்துவமின்மை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.  வேகமான அதேசமயம் சீரற்ற பொருளாதார வளர்ச்சியால், கடந்த பத்தாண்டுகளில் கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்குமான எல்லைகள் மங்கலாகிவிட்டன. அதே நேரத்தில் குடிபெயர்வு, மொபைல் போன்கள், தொலைக்காட்சி போன்றவற்றின் மூலம் தங்களைக் காட்டிலும் மற்றவர்களின் வாழ்க்கைத்தரம் வேகமாக மேம்படுகிறது என்பதையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

மகாராட்டிரம், குஜராத், அரியானா மற்றும் ராஜஸ்தானில் நில உரிமையாளர்களாக உள்ள உயர் சாதியினர் அரசு பணிகளில் இடஒதுக்கீடு கேட்டு பெரும் போராட்டங்களை நடத்தினர்.

எங்கும் வேலையில்லா திண்டாட்டம்

வேலையில்லா இளைஞர்களை சமாளிக்க வேண்டிய அழுத்தம் காரணமாக, உயர் சாதியினருக்கு அரசு பணிகளிலும் கல்வியிலும் 10 % இடஒதுக்கீட்டை அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது அரசு.

வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருளாதாரத் திறன் இல்லாத நிலையில் மக்கள் தொகை பெருகிக் கொண்டிருக்கிறது. தனியார் துறைகளில் போதுமான வேலை உருவாக்கமும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

“Demonetisation and the Black Economy” என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் அருண்குமார், ‘2011-12 ஆண்டுகளில் இருந்ததைவிட இந்திய பொருளாதாரத்தில் முதலீடுகள் தேக்கமடைந்திருக்கின்றன. மேலும், முறைசாரா தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளது’ என்கிறார்.

“வேளாண் துறையில் இருக்கும் நெருக்கடிகளை அரசு எதிர்கொள்ள வேண்டும். முறைசார தொழில்துறைக்கு ஊக்கம் தேவைப்படுகிறது, அவர்களுக்கு கடனும் வழிகாட்டுதலும் தேவை. முறைசாரா தொழில்துறை புத்துணர்வு பெறும்போது, அது தானாகவே தேவைகளை உருவாக்கும்” என்கிறார் அருண்குமார்.

வேலைவாய்ப்பின்மை (unemployment) மற்றும் வேலையின்மைக்குமான (under-employment) வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறார் அருண் குமார். “இந்தியாவில் நமக்கு சமூக பாதுகாப்பு இல்லை. ஒருவர் வேலையை இழக்கும்போது, இனி வேலை செய்ய மாட்டேன் என அவரால் சொல்ல முடியாது. எல்லோரும் ஏதோ வேலை பார்க்கிறார்கள். பட்டதாரிகள்கூட தள்ளுவண்டிகளை தள்ளிக்கொண்டிருப்பதை பார்க்க முடியும். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையைக் காட்டிலும் வேலையின்மை  அதிகம். என்ன பிரச்சினை எனில், முறைசாரா தொழில் துறையைச் சார்ந்த பணியாளர்களில் 93% பேர், பணிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, இந்த துறை நெருக்கடிகளில் உள்ளதால் 93% பேர் வேலையிழக்கிறார்கள்”.

தேர்தல் முக்கியத்துவம் பெறக்குடிய விசயம் இது!

இதனால்தான் ஆளும் பாஜக அரசு, தேர்தலை எதிர்கொள்ள திணறிக்கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் மோடி, ‘பக்கோடா விற்பதுகூட ஒரு வேலைதான். அந்த வேலையில் நாள் ஒன்றுக்கு ரூ. 200 சம்பாதிக்க முடியும்’ என்றார்.

படிக்க:
♦ எழுத்தாளர் அருந்ததி ராய் பங்கேற்கும் “எதிர்த்து நில் !” – மக்கள் அதிகாரம் | திருச்சி மாநாடு | பிப் 23
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு | பிப் 23

இந்தப் பேச்சு சர்ச்சைகளை உருவாக்கியது. மக்கள் வேலை வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கும்போது, மோடி கொஞ்சம் கூட உணர்வற்று பேசிக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். தேர்தல் நெருங்கும் நிலையில், வேலை தருவேன் என மோடி சொன்ன வாக்குறுதி என்ன ஆனது என அனைத்து தரப்பிலும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் என அறிவித்துள்ளது.

இந்தியாவின் உடைந்திருக்கிற அரசியல் பரப்பில், டசனுக்கும் மேலான மாநில கட்சிகளும் சாதி கூட்டணிகளும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

சாகர், சீமா போன்றவர்களின் பொருளாதார எதிர்பார்ப்புகளைக் காட்டிலும், மாநில மற்றும் சாதி அரசியல் வாக்களிப்பதில் பெரிய தாக்கத்தை செலுத்தும்.  அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்துக்கும் அதன் கருத்தியல் உறவைக் காட்டிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதே முக்கியமான பணியாக இருக்கும்.

கட்டுரை: ஜீனத் சப்ரின்
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : கலைமதி
நன்றி: அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க