வேலை வாய்ப்பின்மை குறித்த மத்திய அரசின் புள்ளிவிவரம் வெளியாகி, பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை சதவீதம் 2017-18 ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக மோடி அரசின் இழி சாதனையை வெளிவந்திருக்கும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

பட்ஜெட்டுக்கு முன்பாக, வழக்கமாக மத்திய புள்ளி விவரம் மற்றும் அமலாக்கத் துறை அமைச்சகம் இந்த புள்ளி விவரங்களை வெளியிடும். ஆனால், இந்த அறிக்கை டிசம்பர் 2018-ன் போதே தயாராகிவிட்ட நிலையில் மத்திய அமைச்சரகம் இதை நிறுத்தி வைத்தது.  தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் தயார் செய்யும் இந்த புள்ளிவிவரத்தை  சரிபார்த்து மத்திய புள்ளிவிவர ஆணையம் மத்திய அமைச்சகத்திடம் அனுப்பி வைக்கும். ஒப்புதல் கையொப்பமிட்டு, வெளியிடுவது மட்டுமே மத்திய அமைச்சகத்தின் பணி. இதுதான் இதுநாள் வரை நடைமுறையில் உள்ளது.

ஆனால், ‘ஜனநாயக’ சர்வாதிகாரத்துக்கு முன்னுதாரணமாக இருக்கும் மோடி அரசு, அனைத்து சுதந்திரத் தன்மை வாய்ந்த அமைப்புகளையும் விழுங்கி விட்டதைப் போல, மத்திய புள்ளிவிவர ஆணையத்தையும் விழுங்கப் பார்க்கிறது. விளைவாக, வெளியிடப்பட வேண்டிய புள்ளிவிவரங்கள் வெளியாகவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு அதிகாரிகள் பதவி விலகுகிறார்கள். புள்ளிவிவர அறிக்கை ஊடகங்களில் கசிந்து மோடி அரசு, அறிக்கையை நிறுத்தி வைத்திருப்பதற்கான காரணத்தை சொல்லிவிடுகிறது.

புள்ளிவிவர அறிக்கை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான, நிதி ஆயோக் மோடி அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது.  தற்போது ஊடகங்களில் வெளிவந்திருக்கும் வேலை வாய்ப்பின்மை புள்ளி விவரம், வரைவு அறிக்கை என்றும் அது இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றும் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக்கின் துணை தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

45 ஆண்டுகளில் இல்லாத வேலையிழப்பு நடந்துள்ளது பெரும்பாலான ஊடகங்களில் தலைப்பு செய்தியாகியுள்ள நிலையில், தி இந்து (ஆங்கிலம்) இதழின் முகப்பு செய்தியின் தலைப்பு ‘வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரம் வரைவு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது; நிதி ஆயோக் அதிகாரிகள் ஊடக செய்தியான 6.1 சதவித வேலையிழப்பை மறுக்கிறார்கள்’ என வந்துள்ளது.

அதாவது, இது முழுமையான அறிக்கையல்ல, வரைவு அறிக்கை. இது ஏற்கத்தக்கதல்ல என்கிற மோடி அரசின் அதிகாரிகள் சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்திருக்கிறது இந்தச் செய்தி. ஆனால், அதே செய்தி டெலிகிராப் இந்தியாவின் முகப்பில் வந்துள்ளது.

நிதி ஆயோக்கின் துணை தலைவர் ராஜீவ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் முகப்பில் இடம்பெற்றுள்ளன. மோடி அரசின் பித்தலாட்டங்களை நிதி ஆயோக் எப்படி மூடி மறைக்கிறது என்பதை அது வெளிக்காட்டுகிறது.

கேள்வி: புள்ளி விவரம் அரசால் கொண்டுவரப்பட்டது. அதை எப்படி ஒப்புதல் அளிக்கவில்லை என்று சொல்வீர்கள்? யார் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்?

ராஜீவ் குமார்: மன்னிக்கவும், யார்?

கேள்வி: யார் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்?

ராஜீவ் குமார்: அரசு.

கேள்வி: தேசிய புள்ளிவிவர ஆணையம் இந்த அறிக்கைக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டதாகச் சொல்கிறது. வேறு யார் ஒப்புதல் அளிக்க வேண்டும்?

ராஜீவ் குமார்: வேறு யார் ஒப்புதல் அளிக்க வேண்டும்? நிச்சயம், அமைச்சகம்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கேள்வி: அமைச்சகமா, சார்?

ராஜீவ் குமார்: எனக்குத் தெரியாது… ஆனால், என்ன சொல்ல வருகிறேன் என்றால்…

கேள்வி: தேசிய புள்ளிவிவர ஆணையம் போன்ற தன்னிச்சையான அமைப்புகள், புள்ளிவிவரங்கள் மீது அரசு எந்த விதமான இடையூறும் செய்யக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் தயாரித்த புள்ளி விவர அறிக்கையில் தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செயல் தலைவர் கையொப்பமிட்டு, டிசம்பர் 19 தேதி வெளியிட இருந்த அறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் என்ன நடந்தது?

ராஜீவ் குமார்: அதாவது என்ன நினைத்தோம் என்றால்… இந்த அறிக்கைக்கு முன்பு எடுத்த இரண்டு காலாண்டு அறிக்கைகள் இருந்தன. அது வெளியிடப்படும். அதுவரை 2011-12 ஆண்டையும் 2017-18 ஆண்டையும் ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது.

செய்தியாளரின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலை கூற இயலாத நிலையில், என்ன சொல்லித்தரப்பட்டதோ அதை சொல்லியிருக்கிறார் ராஜீவ் குமார்.

படிக்க:
மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !

தி இந்து நாளிதழை ‘அரசாங்க கெஜட்’ என சொல்வதுண்டு. அதாவது, அரசு தரப்பில் சொல்லப்படுவதை அச்சு பிசகாமல் அப்படியே சொல்வார்களாம்.  மக்கள் நலனை தூக்கி குப்பையில் போடும் அரசுகள் தொடர்ந்து நீடிக்க ‘ஊடகம்’ என்ற பெயரில் செயல்படும் ‘அரசு கெஜட்டுகள்’ ‘பி.ஆர். ஏஜெண்டுகளே’ காரணம். அந்தப் பணியை தி இந்து சிறப்பாகவே செய்து வருகிறது. அதற்கொரு உதாரணம் வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரம் குறித்த செய்தி கவரேஜ்.

ஒரு வெகுஜென ஊடகம் (அதற்கே உரிய பலவீனங்களுடனும்கூட) எப்படி அரசின் பொய்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்கு உதாரணமாய் டெலிகிராப் இந்தியா இருக்கிறது. ஆனால், இத்தகைய ஊடகங்கள் மிகக் குறைவு என்பதே மோடி போன்ற ஜும்லா தலைவர்கள் உருவாகக் காரணம்.

வினவு செய்திப் பிரிவு
கலைமதி
நன்றி: டெலிகிராப் இந்தியா

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

 1. அப்புடி போடு அரிவாள !!!!!!!!!

  இவுங்க அறைஞ்ச சிலுவையில அவரு
  இன்னும் தொங்கிக்கிட்டுதான் இருக்காரு.
  இருந்தும்
  ஏசு சீவிக்கிறார் சீவிக்கிறார்-ன்னு கத்துறாங்க அதிகப் ”பிரசங்கிங்க”

  ஆனா நம்ம பாரத தேசத்து மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவைப் பாத்தேளோ…
  நான் ஜீவிக்கிறேன் நான் ஜீவிக்கிறேன்னும் அடிக்கடி
  சந்தேகத்துக்கு இடமில்லாம ரூபிச்சிண்டே இருக்கார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க