பிரிட்டனை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு 11வது இடத்திலிருந்த இந்தியா, இன்று 5ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. மேலும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில், பிரிட்டனின் ஜி.டி.பி 816 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இந்தியாவின் ஜி.டி.பி மதிப்பு 854.7 பில்லியன் டாலராக உயர்ந்திருப்பதை ப்ளூம்பெர்க் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய உலக பொருளாதார வல்லரசுகளுக்கு அடுத்த படியாக இந்தியா திகழ்வதாக பா.ஜ.க.வினர் பெருமை பொங்கி வருகிறார்கள்.

“நம்மை ஆண்டவர்கள், நமக்குப் பின்னால் இருக்கிறார்கள்” என்று இந்தியா பிரிட்டனை முந்திச் சென்றது குறித்து டுவீட் செய்திருக்கிறார் பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா.

“காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற 75வது அமுதப் பெருவிழா ஆண்டில், இந்தியா பிரிட்டனை விஞ்சி உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்த முன்னேற்றம் சாதாரணமான சாதனையல்ல. இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும்” – என்று குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசினார் மோடி.

மோடி, பா.ஜ.க.வினர் மட்டுமல்ல, அனில் அகர்வால், உதய் கோட்டக், ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட இந்திய தரகு முதலாளிகளும் இச்செய்தியை ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

“பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது பொருளாதாரமாக இந்தியா வளர்ந்தது என்பது நமது இந்தியாவின் வேகமான வளர்ச்சியில் ஒரு மைல்கல். இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்தில் இருப்போம்” என்று ட்வீட் செய்திருக்கிறார் அனில் அகர்வால்.

***

படிக்க: இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான போரை தொடங்க வேண்டும் | அருந்ததி ராய் | மணிவேல்

பெருமளவில் அந்நிய முதலீடுகளை ஈர்த்தல், ஏற்றுமதி அதிகரிப்பு, பெரும் பொருளாதார நிலைத்தன்மை (Macro economic stability), தனிநபர் நுகர்வு அதிகரிப்பு ஆகியவற்றில் பிரிட்டனை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. இக்கூறுகளே இந்தியா 5வது பெரும் பொருளாதாரமாக முன்னுக்கு வரக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சி, அதனைத் தொடர்ந்து ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி ஆகியவற்றைக் கடந்து இந்தியா இச்சாதனையைப் படைத்துள்ளதாக ஆளும் வர்க்க ஊடகங்கள் சிலிர்கின்றன. பொருளாதாரத்தை மோடி அரசு மிகத் திறமையாக கையாண்டுள்ளதாகவும், இந்த அரசின் பொருளாதார சீர்திருத்தங்களே இந்தியாவை வளர்ச்சியை நோக்கி நெட்டித் தள்ளியுள்ளதாகவும் அவை கூறுகின்றன.

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, வங்கிகள் இணைப்பு, பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தேசிய பணமாக்கல் திட்டம், புதிய திவால் சட்டம், தொழிலாளர் சட்டத் திருத்தம் மற்றும் ரியல் எஸ்டேட் முறைப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட பொருளாதார சீரமைப்புகளால் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்திருப்பதாக ‘மோடினாமிக்ஸ்’ (Modinomics) அறிஞர்கள் கூறுகிறார்கள்.

மேலும், மோடி அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்தால், 2014ல் மோடி கூறியதைப் போல 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி வெகுதூரமில்லை என்றும் அவர்கள் வியக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு உறுப்பினரான ஆஷிமா கோயல், மென்மேலும் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகர தனியார்மயக் கொள்கைகளை தீவிரமாக அமலாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

இதே வளர்ச்சி வீதம் தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் ஜப்பானையும், ஜெர்மனியையும் பின்னுக்குத்தள்ளி இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறும் என்கிறார், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனஹாரியா.

***

ஒரு நாட்டின் வளர்ச்சியை எதை வைத்து நாம் தீர்மானிப்பது. அந்நாட்டின் ஆகப் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதோ, அதை வைத்துத்தான் மதிப்பிட முடியும். அதை நீக்கிவிட்டு பார்க்கும் எந்த புள்ளிவிவரங்களும் நம்மை ஏமாற்றுபவையே.

மோடி அரசால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பும், ஜி.எஸ்.டி வரி விதிப்பும் இந்திய வேலைவாய்ப்பில் பெரும்பங்காற்றுகிற சிறுகுறு தொழில்களை பெருமளவில் அழித்துவிட்டது. பல சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வேலைநாட்களும், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருக்கின்றன. குற்றுயிரும் குலையுயிருமாக இத்தொழில் நிறுவனங்கள் போராடி வருகின்றன. ஒரு காலத்தில் திருப்பூர் சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலைமை ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு பிறகு தலைகீழாக மாறியிருக்கிறது.

கடந்த ஜூன் மாத கணக்கின்படி, புதிதாக 4 மில்லியன் உழைப்புச் சக்தி நாட்டில் உருவாகியிருக்கிறது. ஆனால், ஜூலையில் 397 மில்லியனாக இருந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 2 மில்லியன்கள் குறைந்து 394.6 மில்லியனாக இருக்கிறது. அந்நிய முதலீடுகள் அதிகரித்து தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் நாளுக்கு நாள் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதக் கணக்கீட்டின்படி, இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 8.3 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. 12 மாதங்களில் இதுவே அதிகபட்சமாகும். குறிப்பாக, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் 34 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

வேலையில்லா திண்டாட்டத்திற்கு போட்டியாக பணவீக்கமும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் உயர்ந்திருக்கின்றன. கடந்த ஜூலையில் பணவீக்கம் 7.7 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதனால், காய்கறிகளின் விலை 10.90 சதவிகிதமாகவும், பருப்பு வகைகளின் விலை 6.09 சதவிகிதமாகவும், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகளின் விலை 7.52 சதவிகிதமாகவும் அதிகரித்திருக்கிறது. எனவே எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை பலமடங்கு உயர்ந்திருக்கிறது.

வேலையின்மையும், விலைவாசி உயர்வும் இந்தியாவின் உழைக்கும் மக்களை வறுமைப் படுகுழிக்குள் தள்ளியிருக்கிறது. உலக வறுமை கடிகாரம் (World Poverty Clock) என்ற அமைப்பு ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில் அதீத வறுமை நாடான நைஜீரியாவை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது இந்தியா. 2021-ஆம் ஆண்டின் உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில், இந்தியா 101- வது இடத்தில் இருக்கிறது.

உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022-ன் படி, உலகளவில் அதீத ஏற்றத்தாழ்வு கொண்ட நாடாக இந்தியா வளர்ச்சியடைந்திருக்கிறது. பெரும் பணக்காரர்களைக் கொண்ட ஏழை நாடு என்று இந்தியாவைக் குறிப்பிடுகிறது இந்த அறிக்கை. இந்திய நாட்டின் வருமானத்தில் 57 சதவிகித மதிப்புள்ள சொத்து வெறும் 10 சதவிகித பணக்காரர்களிடம்  இருக்கிறது என்றும், அதிலும் இந்த சொத்தில் 22 சதவிகித சொத்து மதிப்பை வெறும் 1 சதவிகித பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது.

இந்திய மக்கள் தொகையில் 1 சதவிகிதமான சிறு கும்பல் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க, 50 சதவிகித மக்களோ தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றனர் என்கிறது மேற்படி அறிக்கை.

அம்பானியின் மனைவி 3 லட்சம் மதிப்புள்ள டீ குடிக்கிற நாட்டில்தான், போதிய ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால், பிறந்த ஒரு ஆண்டிற்குள் ஆயிரத்தில் 20 குழந்தைகள் பலியாகின்றன. ஒரு நாளைக்கு ரூ.1612 கோடிகள் சம்பாதிக்கும் அதானி வாழ்கிற நாட்டில்தான் ஒரு நாளைக்கு ரூ.178 (2022-ன் குறைந்தபட்ச சம்பளம்) சம்பாதிக்கிற கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். நெஞ்சை வாட்டுகிற இந்த அவலநிலையே இந்தியாவின் உண்மை முகம்.

***

படிக்க: இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !

இந்திய உழைக்கும் மக்களைப் பட்டினிக்கும், வேலையில்லா திண்டாட்டத்திற்கும் தள்ளிய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளை கொழுத்து பருக்க வைத்துள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார் அதானி.

சுரங்கங்கள், துறைமுகங்கள், எரிவாயு, அனல் மற்றும் சூரிய மின்சாரம் உற்பத்தி உள்ளிட்டவற்றை அதானிக்குத் தாரை வார்த்துவருகிறது மோடி அரசு. ஏர் இந்தியாவை டாடாவிற்கு கொடுத்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி சேவையைக் கூட வழங்காத மோடி அரசு, முகேஷ் அம்பானிக்கு 5ஜி சேவையை வழங்கி தொலைத் தொடர்பு துறையில் ஏகபோகமாக்கியிருக்கிறது.

மோடியின் வெளிநாட்டு பயணம் என்பதே, அம்பானிக்கும் அதானிக்கும் சர்வதேச அளவில் ‘தொழில் ஏற்பாடு’ செய்துகொடுப்பதாக இருக்கிறது. மோடியின் தலையீட்டால்தான் இலங்கையில் காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து புதிய ஜனநாயகம் இதழில் எழுதியிக்கிறோம்.

அதானியின் உள்நாட்டு – வெளிநாட்டு முதலீடுகள் எதையும் தன் சொந்த பணத்தில் செய்யவில்லை, மாறாக பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கியே பல துறைகளிலும் முதலீடு செய்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் அதானி வாங்கிய சுரங்கத்திற்கு 7,500 கோடி, பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ கொடுத்திருக்கிறது.

அதானி இதுவரை வைத்துள்ள கடன் மதிப்பு மட்டும் 30 பில்லியன் டாலருக்கும் அதிகம் என்கிறது 2015-ல் வெளிவந்த கடன் நிறுவன (House of Dept) அறிக்கை. அம்பானிக்கும் பொதுத்துறை வங்கிகள் எண்ணற்ற கடன்களை வாரிவழங்கியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய கடன்களில், 9 இலட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் முதலாளிகளை உலக முதலாளிகளோடு போட்டிபோடும் அளவிற்கு பேணி வளர்த்துள்ளது. அதற்காக நாட்டிலுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கையை நரகத்தில் தள்ளியுள்ளது. ‘பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா வல்லரசாகிவிட்டது’ என்ற செய்திக்கு 99 சதவிகித உழைக்கும் மக்களாகிய நாம் தேச பக்தியால் சிலிர்க்க முடியுமா என்ன, இங்கு தேசம் என்பதே பாசிஸ்டுகளின் பொருளில் அம்பானியும் அதானியும் அல்லவா!


அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க