ந்தியாவின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் மே 23-ல் முடிந்த வாரத்தில் 14.7 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட தரவில் தெரிய வந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, எதேச்சதிகாரமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த ஆண்டு ஜூன் 2020 காலகட்டத்தில் வேலையின்மை விகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், அதையும் விட அதிகமாக இந்த ஆண்டு வேலை வாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை மே 23-ல் முடிந்த வாரத்தில் 17.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்தில் 14.7 விழுக்காடாக இருந்தது. இதே காலக்கட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக, ஊரக வேலைவாய்ப்பின்மை 13.5 விழுக்காடாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரம் ஊரக வேலைவாய்ப்பின்மை 14.3 விழுக்காடாக உயர்ந்திருந்ததாகவும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.

படிக்க:
♦ தடுப்பூசி வணிகம் : மக்களின் மரணத்தில் நடத்தப்படும் கொள்ளை !
♦ கொரோனா : ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்புக்குள் மூச்சுத் திணறும் மனித சமூகம் !

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதம் வேலையின்மை விகிதம் 6.5 விழுக்காடாகவும் ஏப்ரல் மாதம் 8 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு விகிதம் மார்ச் மாதம் 37.6 விழுக்காடாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதம் 36.8 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது.

வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டு ஏப்ரல் 2020-ல் 23.5 விழுக்காடாக உயர்ந்து உச்சம் தொட்டநிலையில், மே 2020-ல் 21.7 விழுக்காடாக இருந்தது.

தோராயமான வாராந்திர வேலையின்மை விகிதம் ஜூன் 2020 நடுப்பகுதிக்குப் பின் ஒற்றை இலக்கத்தில் நிலைகொண்டது. அதன்பின் திடீரென 8.67 விழுக்காட்டிலிருந்து உயர்ந்து, மே 9ல் முடிந்த வாரத்தில் 14.4 விழுக்காடாகவும் மே 16-ல் முடிந்த வாரத்தில் 14.7 விழுக்காடாகவும் உயர்ந்தது.

பகுப்பாய்வு அறிக்கைகளின் அடிப்படையில், மாநிலம் தழுவிய ஊரடங்கு அமலாக்கப்பட்டிருப்பதால் வேலையின்மை விகிதம் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

“கடந்த ஆண்டு ஏப்ரல் – மே 2020 காலக்கட்டத்தில் தேசிய அளவில் ஊரடங்கு அமலாக்கப்பட்டதால் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்துக்கு உயர்ந்தது. அதுபோன்ற எதேச்சதிகார ஊரடங்கு தற்போது இல்லையென்றாலும் உள்ளூர் அளவில் இயங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் வேலைவாய்ப்பின்மையை அதிகரித்துள்ளது தெரிகிறது” என்கிறார் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் இயக்குனர் மகேஷ் வியாஸ்.

கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பது சமீபத்திய நிகழ்வு எனவும், வாராந்திர இரட்டை இலக்க கிராமப்புற வேலையின்மை எண்ணிக்கை கவலைக்குரியது எனவும் அவர் கூறுகிறார்.

அதுபோல, தொழிலாளர் பங்கேற்பு 40.5 விழுக்காட்டிலிருந்து 39.4 விழுக்காடாக உள்ளதாக மற்றொரு ஆய்வு கூறுகிறது. மே மாதத்தில் தொழிலாளர் பங்கேற்பு மிக மோசமான நிலைக்கு செல்லும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தொழிலாளர்கள் பங்கேற்பு குறைந்தது, ஊரக வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது மட்டுமின்றி மோடியின் ஆட்சியில் ஒயிட் காலர் வேலைகளும் குறைந்துள்ளதாக மிண்ட் நாளிதழ் செய்தி கூறுகிறது. இந்தியாவில் ஒயிட் காலர் பணிவாய்ப்பு ஏப்ரல் 2020 முதல் 4.3 மில்லியனாக குறைந்துள்ளது. ஏப்ரல் 2020-ல் 18.1 மில்லியனாக இருந்த ஒயிட் காலர் வேலைவாய்ப்பு, ஏப்ரல் 2021க்குள் 13.8 மில்லியனாகக் குறைந்துள்ளது.

மான்ஸ்டர் வேலைவாய்ப்பு குறியீட்டின் தரவை மேற்கோள் காட்டி, நுழைவு நிலை பணிகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக மிண்ட் செய்தி கூறுகிறது. வேலைவாய்ப்பு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் 5 விழுக்காடு குறைந்துள்ளது. ஒரு சாதாரண ஆண்டில், உதாரணத்துக்கு 2019 ஏப்ரல்-மே மாதங்களில், பணியமர்த்தல் 4 விழுக்காடாக உயர்ந்திருந்தது எனவும் அந்தச் செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியாவின் பெருந்தொற்றாக பீடித்துள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு, கோவிட் பெருந்தொற்றை கையாளத் தெரியாமல் கைவிரித்ததில் கொத்து கொத்தாக மக்கள் செத்து மடிகிறார்கள். இன்னொரு பக்கம் மோசமான பொருளாதார நடவடிக்கைகளால் நடுத்தர மக்கள் முதல் பரம ஏழைகள் வரை வேலையில்லாமல் தெருவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். நிலைமையை உணர்ந்து பெருமுதலாளிகளை வாழ வைக்கும் மதவாத அரசுக்கு எதிராக திரளும் வரை, சுரண்டல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

கலைமதி
நன்றி:
த வயர்

1 மறுமொழி

  1. *கொரானா தொற்றுக்கு எதிராக கைதட்டவும் விளக்கேற்றவும் கோமியத்தில் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் சொல்லிவிட்டு நைசாக தடுப்பூசியை கார்ப்பரேட் இலாபத்திற்காக ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்ட RSS-BJP மோடி-ஷா செயலால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து பேரழிவை சந்தித்து விட்டது, இந்தியா!*

    27.5.2021,
    2 pm.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க