லகம் முழுவதும் கொரோனாவால் இலட்சக் கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இப்போதும் இரண்டாம் அலையால் கொத்து கொத்தாக மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவோ மூச்சே விட முடியாமல் பிணக்காடாக பற்றி எரிகிறது, இந்த மரண ஓலத்திற்கு மத்தியிலும் இலாப வேட்டையாடும் ஏகபோக கும்பலும் உலக மேலாதிக்க வெறியும் மனித சமூகத்தின் கழுத்தை நெறித்துக் கொண்டு இருக்கிறது.

கொரோனா தொற்றிலிருந்து உலகைப் பாதுகாக்க வேண்டுமானால் ஊரடங்கு, புதிய கட்டுபாடுகள் போன்ற நடவடிக்கைகளைத் தாண்டி தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்துவதும், அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதுமே முதன்மையானது என மருத்துவ வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறி வருகின்றனர். ஆனால், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளைத் தவிர மற்ற பெரும்பாலான பின் தங்கிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் முதன்மையான பிரச்சனை தடுப்பூசி பற்றாக்குறைதான்.

படிக்க :
♦ சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்
♦ கொரோனா படுகொலைகள் : முதன்மைக் குற்றவாளி மோடியும் பா.ஜ.க. அரசுமே !

இந்தியாவில்  இதுவரை முதல் டோஸ் 10.8 சதவீதம் பேருக்கும், 2-வது டோஸ் 2.8 சதவீதம் பேருக்கும்தான் போடப்பட்டுள்ளது. மூன்றாவது அலை வருவதற்குள் 60 சதவீதம் மக்களுக்குத் தடுப்பூசிப் போட்டாக வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில் மூன்றாவது அலை வரக் கூடிய சூழலில் இன்னும் கால் பகுதி  மக்களுக்குக்  கூட தடுப்பூசிப் போடப்படாத நிலைதான் இருக்கிறது. ஒருபுறம் இந்த நெருக்கடியான அவல நிலைக்கு தடுப்பூசி உற்பத்தியிலும், அதன் விநியோகத்திலும் மோடி அரசு கொண்டிருக்கும் கார்ப்பரேட்  நலக்கொள்கையே முக்கியமான காரணம். மறுபுறம் உலகம் சந்தித்து வரும் இந்த நெருக்கடிக்கு தடுப்பூசி உற்பத்தியும், அதற்கான மூலப்பொருட்களும் அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் ஏகபோகங்களின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்தின் பிடியில் சிக்கி கொண்டுள்ளதே முதன்மையான காரணம் ஆகும்.

(உதாரணமாக அறிவுசார் சொத்துரிமையினால் இந்தியாவில் உள்ள “சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா” என்ற நிறுவனம் தான் காப்புரிமை பெற்ற ஜெர்மனியின் “அஸ்டஜெனேகா” நிறுவனத்திற்கு, தான் உற்பத்தி செய்த 6 கோடியே 63 லட்சம் தடுப்பூசிகளில் 5 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகளைக் காப்புரிமை வாங்கும் போதும், மூலப்பொருட்கள் வாங்கும் போதும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளி நாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறியுள்ளது.)

ஏகபோகங்களின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளை சுரண்டுவதற்கும் இரண்டாம் உலகப்போருக்கு பின் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் வரிசையில் உருவாக்கப்பட்ட உலக வர்த்தக கழகத்தின் (WTO – world trade organization) மேற்பார்வையில் இருக்கும் 60 ஒப்பந்தங்களில், TRIPS (Trade-Related Aspects of intellectual property rights) ஒப்பந்தம் என்பது அறிவுசார் சொத்துரிமையின் வணிகம் சார்ந்த நோக்கங்களுக்கான ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தில் உள்ள வர்த்தகம் தொடர்பான சில அம்சங்களையும் ,அறிவுசார் சொத்துரிமையையும்  தற்காலிகமாகத் தளர்த்தக் கோரி இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் 2020 அக்டோபர் மாதம் உலக வர்த்தக அமைப்பிடம் முன்மொழிந்தது.

இந்த முன்மொழிவை ஆதரிக்க வேண்டாமென குடியரசு கட்சியின் 12 செனட் உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகத்தை அப்போதே வலியுறுத்தினர். பைடனும் அன்றைக்கு அந்த முன்மொழிவு குறித்து வாய்திறக்கவில்லை.

ஆனால், தற்போது மே 5 அதனை ஆதரிப்பாதாக பைடன் கூறியதை தொடர்ந்து பத்திரிக்கைகள், போப் பிரான்ஸ் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்கள், இந்திய அரசு எனப் பலரும் பாரட்டுவதின் வாயிலாக பைடனுக்கு “மனித முகம்” தரிக்க முயற்சிக்கிறார்கள். அக்டோபர் 2020-இல் வாய் திறக்காத பைடன் 2021 மே ஆதரிப்பதாக சொல்வதற்கான காரணத்தையும் அதன் பின்னணியையும் அறிய வேண்டுமானால், அமெரிக்கவினுள் பைடனுக்கு எழுந்த அழுத்தம், சர்வதேச அளவில் சீனாவின் நகர்வுகள் ஆகியவற்றோடு சேர்த்துப் புரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது.

சீனா இந்த குறிப்பிட்ட காலங்களில் இந்தியா உட்பட வளர்ந்து வரும் 100 நாடுகளுக்கு தடுப்பூசி, நன்கொடை, மானியம் மற்றும் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் “சினோபார்ம்” தடுப்பு மருந்துதான் செர்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் 80 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதிலும் இந்தியாவிற்கு ஏராளமாக தொற்று நோய்க்கு எதிரானப் பொருட்களை சீனா வழங்கியது. (ஏப்ரல் மாதமே 5,000 வெண்டிலேட்டர், 21,569 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், 21.48 மில்லியன் முகக்கவசம், 3,800 டன் மருந்துகள்) அமெரிக்கா இந்தியாவை நோக்கி தும்மினாலே, பக்கம் பக்கமாக ஆண்டவன் அருள் பாலித்ததாகவும், மோடியின் சாதனை என்றும் எழுதுகின்ற ஆளும் வர்க்க ஊடகங்கள், சீனாவின் ‘உதவிகள்’ தொடர்பான செய்திகளை பெரிய அளவில் எழுதுவதில்லை.

ஆனால் சீனாவின்  இந்த நடவடிக்கையை ஆதரித்து இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் சீன வெளியுறவு அமைச்சரான வாங் யி (Wang Yi) என்பவரிடம் தொலைபேசியில் “சீனாவின் நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமைக்கு நன்றி எனவும், நோய்த் தொற்றுக்கு எதிரான சீனாவுடனான ஒத்துழைப்பை மேலும், வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளது” என்றும் கூறினார். சீனாவின் தரப்பிலிருந்து எந்த ஒரு பூகோள அரசியலின் நலனுக்காகவும் இந்த உதவிகள் செய்யப்படவில்லை முழுக்க நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் என்று பதிலளிக்கப்பட்டது. ஆனாலும் இந்த நகர்வுகளின் ’நல்லெண்ணம்’ நாம் அறிந்ததுதான்.

சீனாவின் நகர்வுகள் உலக அளவில் ஒரு ஆதரவை பெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் சட்டமியற்றும் செனட் உறுப்பினர்கள் 100 பேர் பைடனுக்கு இந்தியாவின் முன்மொழிவை ஆதரிக்குமாறு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இவர்களுக்கும் இந்தியா உட்பட பலரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிகிறது. ஆனால், அந்தக் கடிதத்தை வாசித்தால் அந்த “நல்லெண்ணம் படைத்தோரின்” கவலை என்னவென்று உண்மையில் புரிந்துக் கொள்ள முடியும். “உலகின் சில பகுதிகளில் மட்டுமே தடுப்பூசி போட்டால் உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க முடியாது” என்றும் “ட்ரெம்ப் நிர்வாகம் நமது நாட்டின் உலகலாவிய நற்பெயருக்கு ஏற்படுத்திய சேதத்தை மாற்றவும், அமெரிக்காவின் பொதுச் சுகாதார தலைமையை உலக அரங்கில் மீட்டெடுக்கவும் உங்கள் நிர்வாகத்துக்கு வாய்ப்பு உள்ளது” என்றும் கூறியுள்ளனர்.

அதாவது, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் அதனை தக்க வைக்கவும், மீட்டெடுப்பதும் தான் இவர்களின் பதற்றமாக இருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளே மே 5 அன்று அமெரிக்கா, இந்தியாவின் முன்மொழிவை ஆதரிப்பதற்கான அவசியமாகவும், அழுத்தமாகவும் அமைந்த்திருக்கிறது.

ஏனென்றால், அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு இந்திய நிகழ்வில் பேசும் போது, நாங்கள் இந்த ஆதரவை இந்தியாவின் நண்பராகவும் ஆசிய QUAD உறுப்பினராகவும் செய்கிறோம் என்றார். அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் டாய் எங்கள் (பைடன்) நிர்வாகம் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதை உறுதியாக நம்புகிறது. ஆனால், கோவிட்-19 தடுப்பூசிக்கான அந்த பாதுகாப்புகளை தற்காலிகமாகத் தளர்த்துவதை ஆதரிக்கிறது என்றார். செனட் உறுப்பினர்கள் முதல், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதி டாய் வரை எல்லோரும் அமெரிக்க மேலாதிக்கம் என்ற நிலையிலிருந்தே ஒற்றைக் குரலாக ஒலிக்கிறார்கள்.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் இந்திய பத்திரிக்கைகள் மற்றும், சமூக வலைதளங்களில் ஏதோ ஐ.பி.ஆர் (IPR – Intellectual Property Rights) ‘தள்ளுபடி’ செய்யப்பட்டது போலப் புகழ்ந்து பேசப்படுகிறது. ஆனால், உண்மையில் இது ஒரு தற்காலிகத் தளர்வு இல்லை. ஐ.பி.ஆர்ரை எளிதாக்குவதற்கான நகர்வுகளுக்கு அமெரிக்கா அளித்துள்ள ஆதரவு மட்டும்தான். உலக வர்த்தக கழகம், இந்த 7 மாதங்களில் பத்து முறை கூடியும் இந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்கப்படவில்லை.

இதுவரையிலும் 120 நாடுகளின் ஆதரவைப் பெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் இந்த முன்மொழிவு உலக வர்த்தக கழகத்தின் ஒப்புதலை அவ்வளவு எளிதாக பெற்று விட முடியாது. உலக வர்த்தகக் கழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஏகாதிபத்தியங்களின் ஒப்புதல் இல்லாமல் இது சாத்தியம் இல்லை.

இத்தகைய நடவடிக்கையெல்லாம் இதில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் யார் என்பதை அம்பலப் படுத்துகிறது என்பது தனிக்கதை. இதையெல்லாம் மீறி உலக வர்த்தக கழகம் இந்த முன்மொழிவின் மீது முடிவெடுத்து அமுல்படுத்த வேண்டுமானால் அதற்கு (உலக வர்த்தகக் கழகத்தில் விவாதிக்கப்ப்ட வேண்டிய நிகழ்ச்சி நிரலில் உள்ள பட்டியலின் படி) இரண்டாண்டுகள்  ஆகுமென்று கூறப்படுகிறது.

ஆக, இந்தத் தற்காலிகத் தளர்வு குறித்த அனைத்து நகர்வுகளும் மாயையே. இந்த மாயை ஒருபோதும் உலகம் சந்தித்துள்ள தற்போதைய நெருக்கடியைக் கடக்க உதவப்போவதில்லை.

“அறிவுசார் சொத்துரிமையைத் தளர்த்துவதை” எதிர்க்கும் ஏகபோகங்கள் !

கோவிட் தடுப்பூசி தயாரிப்பில் ஏகபோகங்களாக உள்ள அமெரிக்காவின் பைசர், பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான இந்த தற்காலிகத் தளர்வை எதிர்க்கின்றனர். இங்கிலாந்தில் இருக்கக் கூடிய பெரும் மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி பங்கு அமைப்புகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இணைந்து “கோவிட் 19 தடுப்பூசிகள் மீதான அறிவுசார் சொத்துரிமையைத் தளர்த்துவதை இங்கிலாந்து எதிர்ப்பது முற்றிலும் ஏற்கத்தக்கது” என்று கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த ஏகபோகங்கள் இதற்கு சொல்லக் கூடிய ‘நியாயவாதம்’, அறிவுசார் சொத்துரிமை நீக்கப்பட்டால் புதிய ஆராய்ச்சிகளுக்கான ஊக்கம் குறைந்து விடும் என்பதும், ஆராய்ச்சிக்காக ‘டன்’ கணக்கில் நாங்கள் பணத்தை செலவிட்டோம் என்பதும்தான். ஆராய்ச்சிகளுக்கான ஊக்கம் குறைந்து விடும் என்ற கதையே அறிவுசார் சொத்துரிமை ஏகபோகங்களின் இலாப நோக்கத்திற்குதான் அவை ஒரு போதும் சமூக நலணுக்கானதில்லை என்று அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.

மேலும், ‘டன்’ கணக்கில் பணத்தை ஆராய்ச்சிக்காக செலவளித்துள்ளோம் என்ற பாதி பொய்யையும் மீதி உன்மையையும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. இந்த ஏகபோக நிறுவனங்களின் தடுப்பூசி ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு நாட்டின் அரசும், அந்நாட்டு நிறுவனங்களும் உதவியாக பெரும் தொகையை அளித்துள்ளனர்.

உதராணமாக, ஐ-மேக் நிறுவனத்தின் நிறுவனரான தாஹிர் அமீன், எம்.ஆர்.என்.சி தடுப்பூசி உற்பத்தியை துரிதப்படுத்தியதில் மக்களின் பங்கு (பொது டாலர்களின் public dollar’s) அதிகம் உள்ளது என்பது ஆவணப் படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். மேலும் பயோஎன்டெக் நிறுவனம் அரை பில்லியன் யூரோக்களை ஜெர்மனிடம் இருந்தும், ஆக்ஸ்போர்ட் இங்கிலாந்து அரசாங்கத்திடமிருந்தும் ஆராய்ச்சிக்காக நிதி பெற்றுள்ளதை சுட்டிக் காட்டுகிறார். 2018-ஆம் ஆண்டு மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 4 பில்லியன் டாலர்களில் மருந்து நிறுவனங்கள் செய்த முதலீடு 17 சதவீதம் (650 மில்லியன்) மட்டும்தான், என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி உலகளவில் கடைப்பிடிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமை மற்றும் தடுப்பூசி கொள்கைகள் “ஆபத்தை சமூகமயமாக்கி லாபத்தை தனியார்மயமாக்கும்” நடவடிக்கையே என்று தாஹீர் அமீன் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்தப் பேட்டியில் கூறுகிறார். ஆகவே, இந்த ஏகபோக நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக முதலீடு செய்வதை காட்டிலும், வணிகம் சார்ந்த நடவடிக்கைகளுக்குத்தான் அதிகம் செலவிடுகின்றனர்.

அதற்கேற்றவாறு தடுப்பூசி உற்பத்தியில் இவர்களின் இலாபம் மலையளவு பெருக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தியில் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 3.5 பில்லியன் டாலர்கள் இலாபம் அடைந்துள்ளது. அமெரிக்காவின் மாடர்னாவிற்கான தடுப்பூசி வருவாய் 18.4 பில்லியன் டாலர்கள் வருமென எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார்கள். இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் தலைவர் பூனாவாலா “இந்தியாவில் இலாபம் கிடைக்கிறது, ஆனால் சூப்பர் இலாபத்தை ஈட்டவில்லை” என்கிறார்.

ஆகவே இந்த அறிவுசார் சொத்துரிமை மனித உயிர்களைக் குடித்து ஏகபோகங்களின் இலாபத்தை உறுதி செய்வதாகவே அமைகிறது. இப்படி தடுப்பூசி உற்பத்தியை அறிவுசார் சொத்துடைமை என்ற பெயரில் ஏகபோகங்கள் கட்டுப்படுத்துவதால்தான் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகள் தடுப்பூசி பற்றாக்குறையினாலும், தடுப்பூசியின் அதிகப்படியான  விலையினாலும் பேரழிவுகளை சந்திக்கின்றன.

தடுப்பூசி மற்றும் மூலப்பொருட்களை முடக்கும் அமெரிக்கா !

அறிவுசார் சொத்துரிமை தற்காலிகத் தளர்வு செய்வதைத் தாண்டி தடுப்பூசி உற்பத்தியில் ஏற்படும் நெருக்கடிக்கு தற்போதைய இன்னொரு முக்கியமன தடையாக இருப்பது தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் ஏற்றுமதியை அமெரிக்கா தடை செய்துள்ளது தான் என பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் முதற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெர்மன் ஆகியவை அமெரிக்காவைச் சாடுகின்றனர்.

இந்தியாவின் சீரம் நிறுவனம்  உட்பட உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மார்ச் மாத இறுதியில் வினியோக சங்கிலி சிக்கலை பற்றி விவாதிக்க கூடினார்கள். அதில் மூலப் பொருட்களின் பற்றாக்குறையை பற்றியும், அமெரிக்கா மூலப் பொருட்களை பதுக்குவதாகவும் விவாதித்தனர். இதில் சீரம் நிறுவனமும் உற்பத்தியை அதிகரிப்பதில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை பிரச்சனை இருப்பதாகத் தெரிவித்தது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 1954-இல் உருவாக்கப்பட்ட “பாதுகாப்பு உற்பத்தி சட்டம்” என்பதைப் பயன்படுத்தி தடுப்பூசிக்கான மூலப் பொருட்களின் ஏற்றுமதியை தடைசெய்தது ஒரு பக்கம் என்றால், உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியின் வினியோகத்தையும் நிறுத்தி வைத்துள்ளது அமெரிக்கா. இதற்கு பைடன் நிர்வாகம் சொல்லும் காரணம் அமெரிக்காவை முதலில் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.

ஆனால் உண்மை அமெரிக்காவைப் பாதுகாப்பதை தாண்டி அதன் மேலாதிக்க வெறிதான் முன்னிலையில் இருக்கிறது. அமெரிக்க ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் “நாங்கள் தற்போது கையிருப்பில் உள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 40 மில்லியனுக்கும் அதிகமான அளவுகளின் மேல் உட்கார்ந்திருக்கிறோம் என்றும் இது நாங்கள் பயன்படுத்தாத கையிருப்பு” என்றும் கூறுகிறார்.

டியூப் குளோபல் ஹெல்த் புதுமை மையத்தின் அறிக்கையின்படி ஜூலை மாதத்திற்குள் அமெரிக்கா 300 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசி அளவுகளை அடைந்து விடுவது மட்டுமில்லாமல் ஜூலை 5-க்குள் தனது நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டுமென இலக்கு வைத்துள்ளது. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் பல நாடுகள் பெரும்பான்மையான மக்களுக்குத் தடுப்பூசி போட பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். என்கிறது இந்த அறிக்கை.

இந்தியாவில் இறப்பு எண்ணிக்கையும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்த சூழலில் அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், புகழ்பெற்ற இந்திய-அமெரிக்கர்கள், அமெரிக்க வர்த்தக சபை மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் ஆகியோர் இந்தியாவிற்கு பாதுகாப்பு உபகரணங்களையும், தடுப்பூசியையும், அதற்கான மூலப் பொருட்களையும் ஏற்றுமதி செய்யுமாறு அழுத்தம் கொடுத்தனர்.

குறிப்பாக முன்னாள் அமெரிக்க உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் “இந்தியா எப்போதும் தேவைப்படும் மற்றவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது, இப்போது இந்தியாவுக்கு உதவ வேண்டிய நேரம்” என ட்வீட் செய்துள்ளார். இத்தகைய அழுத்தத்திற்கு பின்தான் ஏப்ரல் 25 அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் விரைவாக இந்தியாவிற்கு கூடுதல் ஆதரவை அனுப்புவதாக தெரிவித்தார்,

மேலும் மே 5-ஆம் தேதியன்று வெண்டிலேட்டரும் அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். இந்த தொடக்க நிலை ஆதரவை அடைவதற்கே இலட்சக்கணக்கான உயிர்களை இழக்க வேண்டியுள்ளது. ஆனால், அதுவும் உறுதியானதோ, நிரந்தரமோ கிடையாது.

படிக்க :
♦ RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE
♦ கொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்

ஏற்றுமதியை தடை செய்வது, வர்த்தகப் போர்களை நடத்துவது, காப்புவாதத்தில் ஈடுபடுவது, பொருளாதார தடைகளை விதிப்பது என தனது மேலாதிக்க வெறிக்காக இந்த பெருந்தொற்றுச் சூழலிலும் எரிக்கப்படும் மனித பிணங்களுக்கு இடையில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது அமெரிக்க மேல்நிலை வல்லரசு.

ஏகாதிபத்திய சிலந்தி வலைக்குள் சிக்கிக் கொண்டுள்ள எந்தவொரு நாடும் தன்னிறைவு அடைந்த சுயசார்பு நாடாக இருக்க முடியாதென்பது மட்டுமல்லாமல் ஏகாதிபத்தியத்தின் வேட்டைக் காடாக மாற்றப்பட்ட பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகள் இழக்கும் ஒவ்வொரு உயிரும் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க மற்றும் இலாப வெறியினால் பறிக்கப்படுபவைதான்.


பூபாலன்

உதவிய கட்டுரைகள் :
1.https://countercurrents.org/2021/05/covid-19-vaccines-politics-and-economics-of-the-ipr-waiver-ploy/
2.https://countercurrents.org/2021/05/political-economy-of-modi-governments-vaccination-policy/
3.https://m.timesofindia.com/home/sunday-times/look-at-the-number-of-pharma-covillionaires-motto-cant-be-socialise-risk-privatise-profit-says-i-mak-founder-tahir-amin/articleshow/82483061.cms
4.https://m.timesofindia.com/business/international-business/white-house-considering-intellectual-property-waiver-for-covid-19-vaccines/articleshow/82284519.cms|
5.https://www.cnbc.com/2021/02/02/covid-vaccine-pfizer-expects-about-15-billion-in-2021-sales-from-shots.html
6.https://science.thewire.in/health/the-least-the-centre-can-do-for-people-now-is-provide-free-covid-vaccines/
7.https://countercurrents.org/2021/04/vaccine-imperialism-now-led-by-biden-the-democrat-and-vaccine-compradors-now-led-by-modi-of-swadeshi/
8.https://www.google.com/amp/s/m.kalaignarseithigal.com/article/chinas-envoy-announces-rollout-of-covid-19-support-for-india-through-red-cross/2f97e422-2c8c-43c8-b6fa-b5eabcf995e4/amp
9.https://www.bbc.com/tamil/global-57036338

1 மறுமொழி

  1. “ஆபத்தை சமூகமயமாக்கி லாபத்தை தனியார்மயமாக்கும்” _ முதலாளித்துவ பயங்கரவாதத்தை கண்ணாடியாக காட்டும் இம்மேற்கோளையே கட்டுரையின் தலைப்பாக்கி இருக்கலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க